Published:Updated:

எங்கே செல்லும் இந்தப் பாதை?

எங்கே செல்லும் இந்தப் பாதை?
பிரீமியம் ஸ்டோரி
எங்கே செல்லும் இந்தப் பாதை?

சட்டமன்றம், சட்டம் ஒழுங்கு, கடன், ஊழல், உடல் நலம்ப.திருமாவேலன், படம்: ஆ.முத்துக்குமார் ஓவியம்: ஹாசிப்கான்

எங்கே செல்லும் இந்தப் பாதை?

சட்டமன்றம், சட்டம் ஒழுங்கு, கடன், ஊழல், உடல் நலம்ப.திருமாவேலன், படம்: ஆ.முத்துக்குமார் ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
எங்கே செல்லும் இந்தப் பாதை?
பிரீமியம் ஸ்டோரி
எங்கே செல்லும் இந்தப் பாதை?
எங்கே செல்லும் இந்தப் பாதை?

புதிய ஆட்சிக்கு ஆறு மாதங்கள் ‘ப்ரீத்திங் பீரியட்' என்பார்கள். அந்தச் சலுகை எல்லாம் புதிதாக ஆட்சிக்கு வந்திருந்தால் மட்டும்தான். தமிழ்நாட்டு மக்களால் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார் ஜெயலலிதா.

இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தது என்பது சமீபத்திய தமிழக அரசியல் சரித்திரத்தில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவின் சாதனை (எம்.ஜி.ஆர் மூன்று முறை தொடர்ந்து (1977-80-84) வென்றவர்!). இந்தச் சரித்திரச் சாதனைக்குச் சொந்தக்காரரான ஜெயலலிதா, இன்னமும் தனது விசித்திரமான நடவடிக்கைகளை விடாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறார். அவருக்கு ஆட்சி நடத்துவதி லேயே ஒருவிதச் சலிப்பு, அரசியலில் தொடர்வதிலேயே ஒருவிதத் துன்பம் ஏற்பட்டுவிட்டதோ என நினைக்கும் அளவுக்கு, அவரது நடவடிக்கைகள் இருக்கின்றன.

பாராட்டு மன்றமான சட்டமன்றம்!

நடப்பது மக்களாட்சியா... இல்லை மன்னராட்சியா எனச் சந்தேகம் வரும் அளவுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாராட்டுச் சாமரங்கள் வீசப்படுகின்றன.

‘அருளார்ந்த அன்னை, ஆன்றோர் போற்றும் அம்மா, இனத்தின் வழிகாட்டி, ஈதலில் முதுநிலை வள்ளல், உழைப்பில் இமயம், ஊக்கத்தின் உச்சாணி, எழுச்சிமிகு ஏந்தல், ஏழைகளின் அரண், ஐயமில்லா ஆளுமை, ஒப்பாரில்லா கருணைத்தாய், ஓய்வறியா ஒளிவிளக்கு, ஔவியமிலாத் தலைமை எல்லாம் சேர்ந்ததோ வடிவில்... எங்கள் அம்மா எனும் ஓர் உருவில்...’ என பாராட்டு மழை பொழிகிறார் செம்மலை. நல்லவேளை தமிழுக்கு உயிர்எழுத்து 12-ஆக இருந்தது. 234 உயிர் எழுத்துகள் இருந்தால், இதற்கே ஒருநாள் முடிந்திருக்கும்.

அடுத்து முருகுமாறன் எழுந்தார்... ‘மண்ணைப் போன்று எளிமை, மழை நீரைப் போன்று தூய்மை, கண்ணில் என்றும் கருணை, கருணை நிறைந்த தாய்மை, பொதுவாழ்வில் என்றும் எளிமை, எதிரிகளே அஞ்சுகிற ஆளுமை, எல்லோரும் வியக்கிற புதுமை, துயர் வரினும் கலங்காத பொறுமை, தொண்டுகளில் எப்போதும் உண்மை, ஒருநாளும் தவறாத கடமை, உயிராக மதிக்கிற நேர்மை, அம்மா நீங்கள் ஆள்வதோ தமிழ்நாட்டுக்குப் பெருமை...’ எனப் பொழிகிறார்.

`இந்தியாவே ஜெயலலிதாவைப் பார்த்து ஆட்சி நடத்துகிறது’ என்கிறார் ஒருவர். `எதிரி நாடான பாகிஸ்தானே ஜெயலலிதாவைப் பாராட்டுகிறது’ என்கிறார் மற்றொருவர். பட்ஜெட் படிக்கவந்த பன்னீர்செல்வத்துக்கு சொல்ல வேண்டியது இல்லை. பாதி கவிஞராகவே ஆகிவிட்டார். நமக்கு ஏனடா வம்பு என்று கவர்னர் உரையில் ரோசய்யா, ரோஜா மலர்களை அள்ளித் தூவுகிறார். இன்னமும் ஜெயலலிதா யதார்த்தத்துக்கு வரவில்லை என்பதை, ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம்!

சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்காவது, ஒழுங்காக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அதுவும் மூடநம்பிக்கைகளில் ஒன்று என நிரூபிக்கப்பட்டுவருகிறது. பச்சைப் படுகொலைகள் பட்டப்பகலில் நடக்கின்றன. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அதிகாலையில் கொலை; எழும்பூர் வழக்குரைஞர் ரவி பட்டப்பகலில் கொலை; தகவல் உரிமைப் போராளியும் பட்டப்பகலில் கொலை. ஜூலை 12-ம் தேதி ஒரே நாளில் மட்டும் தமிழ்நாடு முழுக்க 10 கொலைகள். இவற்றில் பெரும்பாலானவை கூலிப்படைகள் நடத்தியவை. கூலிப்படைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமாகி விட்டன என்பதைவிட, இந்த புரஃபெஷனலுக்குள் புதியவர்கள் நிறைய நுழைந்துவிட்டார்கள் என்பதுதான் அதிர்ச்சி. தஞ்சையில் நடந்த கொலையைக் கவனித்தால் இந்தப் புதியவர்கள், 18 வயதுக்குக் கீழேயும் அதிகமாகிவருகிறார்கள்.

அப்பாவிகளை அழைத்துவந்து, காவல் நிலையத்தில் இரவு பகலாக அடித்து உதைத்து, தன் கெத்தைக் காட்டும் போலீஸாரால் குற்றச் சம்பவங்களைத் தடுக்க முடியவில்லை. செயின் திருட்டும் பைக் திருட்டும் விடிவதும் இருட்டுவதும்போல நடக்கின்றன. தன்னைத்தானே ஒவ்வொருவரும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியதுதான் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். ஓர் அரசாங்கத்திடம் மக்களுக்கும் இருக்கும் முக்கிய எதிர்பார்ப்பு  நோக்கம் பாதுகாப்புதான். அதுவே அறுந்துபோகும்போது, ஆட்சி நடத்துபவரைப் பற்றிய கவலையே மக்களுக்கு அற்றுப்போகும்.

காசு இல்லை... கடன் இருக்கிறது!

பற்றாக்குறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட்டு, கைத்தட்டல்கள் வாங்கியிருக்கிறார் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம். 2016-17ம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என அவர் சொல்லியிருக்கிறார். கேட்டால், ‘நாங்கள் புதிய வரி எதுவும் போடவில்லை' என்ற விளக்கம் சொல்கிறார்கள். புதிய வரி எதுவும் போடாமலேயே விலைவாசி அத்தனையும் எகிறி நிற்பது அரசுக்குத் தெரியுமா? விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்தச் சூத்திரமும் இல்லை. உற்பத்தியைப் பெருக்கும் எந்தத் திட்டமும் இல்லை. பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்ற கனவும் இல்லை. ‘500 டாஸ்மாக் கடைகளை மூடுவதால், 1600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுமே' என்ற கவலை மட்டும் இருக்கிறது. நேர்மையான வழியில் இழப்பைச் சரிக்கட்டும் யோசனை, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் இல்லை; அவர்களை மேய்க்கும் முதலமைச்சருக்கும் இல்லை.

இந்த ஆண்டுக்கான வருவாய் வரவுகள் 1.48 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணக்கிட்டுள்ளார்கள். ஆனால் இருக்கும் கடன் எவ்வளவு தெரியுமா? 2.52 லட்சம் கோடி ரூபாய். இந்த அழகில் ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023' என்ற திட்டத்தை காகிதத்தில்தான் பார்க்க முடியும்!

இன்றைய அதிகாரிகளுக்கு, ஆட்சியாளர் களுக்கு எதைப் பற்றியும் உண்மையான புரிதல் இல்லை என்பதற்கு ஓர் உதாரணம்... இந்த நிதிநிலை அறிக்கையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைக்கு 652 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எதற்காகத் தெரியுமா? வனவிலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தவிர்த்து, மக்களுக்குப் பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துவதற்காகவாம்!
இரண்டே வாரங்களில் ஏழு யானைகள் கொல்லப்பட்டிருக்கும் நாட்டில், அடுத்தடுத்து மூன்று கோயில் யானைகள் உடல் நலமற்று இறந்ததால், அதுபற்றி ஆராய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நாட்டில் - ஓர் அரசு வனவிலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க நிதி ஒதுக்கீடு எனப் பீடிகை போடுகிறது.

ஊர் எல்லாம் லஞ்சம்!

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி, தான் ஓட்டி வந்த பைக்கைப் போட்டுவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு லஞ்சம் தாண்டவம் ஆடியது கடந்த காலத்தில். இப்போதும் அதில் எந்தக் குறையும் இல்லை. அரசு அதிகாரிகளில் பலர் அந்த வேதனையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பணி இடமாறுதல், பணிப்பதவி உயர்வு, புதிய பணிகள்... இவற்றில் நடக்கும் லஞ்சமும் ஊழலும் தறிகெட்டுப் போய்விட்டன. ஆசிரியர் பணிமாறுதலே மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது என்றால், லஞ்சம் வாங்க வசதியான மற்ற பணியிடங்களுக்கு எத்தனை லட்சம் ரூபாய் எனச் சொல்ல வேண்டியது இல்லை. உள்ளாட்சி, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பள்ளிக்கல்வி, சுகாதாரம் போன்ற ஐந்து துறைகளில் அஞ்சாமல் நடக்கிறது வார இலக்கு, மாத இலக்கு வைத்துச் சுருட்டுகிறார்கள். ஒருவருக்கு வழக்கமாக வரும் பதவி உயர்வுக்குக்கூட பணம் குறிக்கப்படுகிறது. இதைப் பச்சையாக தரகர் இல்லாமல் நேரடியாகவே கேட்கிறார்கள். செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வர வேண்டும். அது ஒன்றுதான் நிபந்தனை.

எங்கே செல்லும் இந்தப் பாதை?

விரும்பியோ விரும்பாமலோ பணம் கொடுத்து விட்டு பதவி பெறும், பதவி உயர்வு பெறும், பணி மாறுதல் பெறும் ஒருவர், அதை வசூல்செய்து எடுக்க நினைக்கவே செய்வார். ஊழல் வேகவேகமாக உற்பத்திசெய்யப்படுவது இப்படித்தான். இந்த லட்சணத்தில் ‘லோக் ஆயுக்தா' கொண்டுவரப்போவதாக தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருந்தார் ஜெயலலிதா!

மாறாத ஆட்சி... மாறாத காட்சி!

‘32 ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆளும் கட்சியை மீண்டும் தேர்ந்தெடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக மக்கள் அளித்துள்ளனர்' என கவர்னர் உரையில் ரோசய்யா துள்ளிக் குதித்துள்ளார். இந்தக் குதூகலம் ஜெயலலிதாவுக்கு இருப்பதுபோல தெரியவில்லை. அவர் முகத்தில் ‘மகிழ்ச்சி' இல்லை. 200 தொகுதிகள் தங்களால் வெல்ல முடியவில்லை என்ற வருத்தமா, 89 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றிவிட்டதே என்ற வருத்தமா?

இந்த இரண்டையும்விட உடல்நலக்குறைவே ஜெயலலிதாவை உபத்திரம் செய்கிறது. அதனால் சட்டமன்றத்தில், பொது இடங்களில் தோன்றும்போது உற்சாகம் குன்றியவராகவே காணப்படுகிறார்.
பெரும்பாலும் அவரது இருப்பு போயஸ் கார்டனாக மாறிவிட்டது. தலைமைச் செயலகம் வருகையும் தொடர்ச்சியாக இல்லை. வந்தாலும் சில மணி நேரங்களே. தலைமைச் செயலகம் செல்லத் தயாராகிவிட்டு, பிறகு வீட்டிலேயே இருந்துவிட்ட நாட்களும் உண்டு. சம்பிரதாய சந்திப்புக்கள் நீங்கலாக, அவசியமான ஆலோசனைக் கூட்டங்கள், விவாதங்கள் நடைபெறாமலேயே நாட்கள் நகர்கின்றன. இது அதிகாரிகள் மட்டத்தில், அமைச்சர்களிடம், அரசு நிர்வாகத்தில் ஒருவித மந்தநிலையை உருவாக்கிவிட்டது. இது புதிது அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, இன்னும் சொன்னால் பெங்களூரு சிறை நாட்களுக்குப் பிறகு இதுதான் நிலைமை.

எங்கே செல்லும் இந்தப் பாதை?

பிரிந்துநின்ற எதிர்க்கட்சிகள், பிரிக்கப்பட்ட கரன்சி கட்டுகள் எதுவாக இருந்தாலும் ஜெயலலிதாவின் வெற்றிக்கு அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் முக்கியக் காரணமாக இருந்தது. 32 ஆண்டுகளுக்குப் பின் நடந்துள்ள சாதனை என்று தானே சொல்லிக்கொண்டால் போதாது. காலம் சொல்ல வேண்டும். அதை இந்த மூன்றாவது மாத காலத்திலாவது உணர்ந்து செயல்பட வேண்டும்!