பிரீமியம் ஸ்டோரி

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

பிரியங்கா முழுநேர அரசியலில் இறங்கினால், அவரது பாட்டி இந்திராபோல் பேசப்படுவாரா?


எல்லாப் பேத்திகளும் பாட்டி ஆவார்கள். ஆனால், எல்லாப் பேத்திகளும் பாட்டிபோல் ஆகிவிடமாட்டார்கள்.

உமரி.பொ.கணேசன், மும்பை-37.

போராட்டம் நடத்துபவர்களை நடுரோட்டில் வெறித்தனமாக அடிக்கிறார்களே, தமிழக போலீஸார்?


அப்பாவிகள் போராடும்போதுதான் அடிப்பார்கள். மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை அற்றவர்கள் போராட்டம் நடத்தும்போது ஈவு இரக்கம் இல்லாமல் அடிப்பதை போலீஸார் வழக்கமாக வைத்துள்ளார்கள். பெரிய கட்சிகள் போராட்டம் நடத்தும்போது போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் கெஞ்சுவதை நீங்கள் பார்த்தது இல்லையா? காலில் விழாத குறையாகக் கெஞ்சுவார்கள். பலவீனமானவர்களை நோக்கித்தான் லத்தி பாயும்.

கழுகார் பதில்கள்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

புதுவை முதல்வர் நாராயணசாமிக்காக எம்.எல்.ஏ பதவியை விட்டுக்கொடுக்கும் பலிகடா யார் என்று முடிவாகிவிட்டதா?


பேரம் நடந்துகொண்டு இருக்கிறது. பேரத்தின் தொகையைக் கேட்டு நாராயணசாமி தலைசுற்றிக் கீழே விழுந்துவிட்டார். விரைவில் வெளிச்சத்துக்கு அது வந்துவிடும்.

அதனால், உங்கள் கேள்வியில் ஒரு திருத்தம்... நாராயணசாமிக்காக விட்டுக்கொடுப்பவரை பலிகடா என்று அப்பாவியாக விளிக்கவேண்டாம். ‘பலே’கடாவாக அவர் இருப்பார். அந்த நபர் நடத்தும் பேரம் அத்தகையது. பொதுவாக அரசியலில் பலிகடாக்கள் இப்போது அவ்வளவாக இல்லை.

எஸ்.பூவேந்தரசு, பெரியமதியாக்கூடலூர்.

நாவலர் நெடுஞ்செழியனைப் புறந்தள்ளி தனது 45-வது வயதில் முதல்வர் பதவியை எட்டிப்பிடித்த கருணாநிதி, தன் மகன் ஸ்டாலினுக்கு 63 வயதிலும் தமது நாற்காலியைவிட்டுத் தர மறுப்பது அவரது நெஞ்சுக்கு நீதியாகப் படுகிறதா?


நெடுஞ்செழியனைப் புறந்தள்ளும் சாமர்த்தியம் கருணாநிதிக்கு இருந்தது. ஸ்டாலினுக்கு அந்தச் சாமர்த்தியம் இன்னும் கைவரவில்லை. ஸ்டாலின் இன்னமும் யோசனையில்தான் இருக்கிறார். அவ்வளவுதான்.

மற்றபடி அரசியலில் நெஞ்சுக்கு நீதி என்பது, அவரவர் நெஞ்சுக்கு நீதிதானே தவிர, பொதுவான நீதி அல்ல. அதை இன்றைய அரசியலில் எதிர்பார்க்க முடியாது.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

அரசியல்வாதிகளின் அனுபவம் எப்போது பேசும்?

இனி நமக்கு எதிர்காலம் இல்லை என்று நினைக்கும்போது.

சம்பத்குமாரி, பொன்மலை.


‘‘அடுத்த காங்கிரஸ் தலைவர் வரும்வரை மெளனவிரதம் இருப்பேன்’’ என்று சொன்ன ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 20 நாட்களிலேயே மெளனம் கலைத்துவிட்டாரே?

பேசும் வாயால், பேசாமல் இருக்க முடியுமா? 20 நாட்களுக்குள் புதிய தலைவரை நியமித்துவிடுவார்கள் என்று நினைத்திருப்பார். இப்போதைக்குப் புதிய தலைவரை நியமிக்க மாட்டார்கள் என்பது இளங்கோவனுக்குத் தெரிய வந்திருக்கும். அதனால் மெளனம் கலைத்துவிட்டார்.

திருநாவுக்கரசரை தலைவர் ஆக்கத் தலைமை முடிவு எடுத்தது. மாவட்டத் தலைவர்கள் பலரும் அவரை எதிர்த்துக் கடிதம் அனுப்பிவிட்டார்கள். இதுவரை எதிரும் புதிருமாக இருந்த சிதம்பரமும் சுதர்சன நாச்சியப்பனுமே இதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துவிட்டார்கள். எனவே, தலைவர் யார் என்று தெரியாமல் தலைமை தள்ளாடுகிறது. இந்தக் கதை எல்லாம் இளங்கோவனுக்குத் தெரியாதா என்ன?

சங்கமித்ரா நாகராஜன், கோவை.

திருச்சி சிவா எம்.பி-க்கு, பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதி உள்ளாரே?


மோடிக்கு குஜராத் மொழியில் நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதி உள்ளார் திருச்சி சிவா. இருவருமே அடுத்தவர் தாய்மொழியை மதித்துப் போற்றி இருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கதுதானே? ஒருவிதத்தில், இதுதான் காந்திய வழி.

கும்பகோணம் வந்த காந்திக்கு ஆங்கிலத்தில் வாழ்த்து மடல் வாசித்துக் கொடுத்தார்கள். அதனை அவர் வாங்க மறுத்தார். ‘‘உங்களது தாய்மொழியான தமிழில் வாழ்த்து மடல் கொடுங்கள் அல்லது எனது தாய்மொழியான குஜராத்தியில் கொடுங்கள். அதை விட்டுவிட்டு நம் இருவருக்கும் அன்னிய மொழியான ஆங்கிலத்தில் ஏன் வாழ்த்து மடல் கொடுக்கிறீர்கள்?’’ என்று அப்போது சொன்னார் காந்தி.

தாய்மொழிப் பற்று என்பது நீட்டி முழங்குவது அல்ல... இப்படி அமைதியாகச் செயல்படுவதும்தான்.

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

‘‘வைகோவை நம்பிச் சென்றதால்தான் விஜயகாந்த்துக்கு வீழ்ச்சி ஏற்பட்டது’’ என்று ல.தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் சொல்லி இருக்கிறாரே?


அவருக்குத்தான் விஜயகாந்த்தைப் பிடிக்கவே பிடிக்காதே. அவர் என்ன முடிவு எடுத்தால் இவருக்கு என்ன?

பாரதி முருகன், மணலூர்பேட்டை.

‘‘தமிழகத்தில் பணம் இருந்தால்போதும். எம்.பி., எம்.எல்.ஏ ஆகிவிடலாம்’’ என்கிறாரே, இளங்கோவன்?

அவருடைய அனுபவம் பேசுகிறது. பொய்யா சொல்லப் பார்க்கிறார். பணம் இருப்பவர்களுக்குத்தான் எம்.பி., எம்.எல்.ஏ ஆகப் போட்டியிட கட்சித் தலைமைகளே வாய்ப்புத் தரும் என்பதையும் இளங்கோவன் சேர்த்துச் சொல்லி இருந்தால், முழு உண்மையைப் பேசுகிறார் என்று பாராட்டலாம்.

பன்னாள் தாயுமானவ மாணவன், கருப்பம்புலம்.

மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த தயாசங்கர் சிங்குக்கு, ‘‘பி.ஜே.பி அளித்துள்ள தண்டனை போதாது’’ என்கிறாரே, ஜெயலலிதா?


கட்சியைவிட்டு விலக்கிவைப்பது எல்லாம் ஒரு தண்டனையா என்ற தொனியில் ஜெயலலிதா கேட்டுள்ளார். ஓர் அரசியல் தலைவரை இப்படியா கொச்சையாக விமர்சனம் செய்வது? அரசியலில் இருக்கும் எந்தப் பெண்ணும் அனுபவிக்கும் கொடூரமாக இத்தகைய விமர்சனங்கள் மாறிக்கொண்டு வருகின்றன.

இளங்கோவன், ஜெயலலிதாவையும் மோடியையும் கொச்சைப்படுத்தினார். அப்போது, இந்த அளவு எதிர்ப்பு ஏனோ இருக்கவில்லை?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு