Published:Updated:

கடிதம் எழுதியும் கனியாத ஸ்டாலின்... யோசிக்காமல் சேர்த்துக்கொண்ட ஜெயலலிதா...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கடிதம் எழுதியும் கனியாத ஸ்டாலின்... யோசிக்காமல் சேர்த்துக்கொண்ட ஜெயலலிதா...
கடிதம் எழுதியும் கனியாத ஸ்டாலின்... யோசிக்காமல் சேர்த்துக்கொண்ட ஜெயலலிதா...

‘கானா’ கட்சி மாறிய கதை!அரசியல்

பிரீமியம் ஸ்டோரி
கடிதம் எழுதியும் கனியாத ஸ்டாலின்... யோசிக்காமல் சேர்த்துக்கொண்ட ஜெயலலிதா...

தொடங்கிய இடத்திலேயே போய் கரைந்துவிட்டார் ‘கானா’. தி.மு.க தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன், கடந்த 6 மாதங்களாக மீண்டும் தி.மு.க-வில் சேரப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே அ.தி.மு.க-வில் சேருவதற்கும் தூதுவிட்டார். ‘அது இல்லாட்டி இது’ என்ற அவரது அரசியல் யுக்தி இந்த முறையும் அவருக்குக் கைகொடுத்திருக்கிறது. இப்போது ‘கானா’ எனப்படும் கருப்பசாமி பாண்டியன் மீண்டும் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டார். 

அவரது அரசியல் பாதை தொடங்கியது அ.தி.மு.க-வில்தான். எம்.ஜி.ஆர் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக அ.தி.மு.க-வில் சேர்ந்த இவர், 25-வது வயதில் ஆலங்குளம் எம்.எல்.ஏ ஆனார். ஒருங்கிணைந்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராகக் கோலோச்சிய அவர், பாளையங்கோட்டை, தென்காசி தொகுதிகளின் எம்.எல்.ஏ-வாகவும் இருந்திருக்கிறார். அ.தி.மு.க-வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அவர், திடீரென தி.மு.க-வில் சேர்ந்தார். மு.க.ஸ்டாலினின் தீவிர விசுவாசியாக கருப்பசாமி பாண்டியன் இருந்தார். தி.மு.க-வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக மு.க.அழகிரி நியமிக்கப்பட்டதும் அவர் ஓரங்கட்டப்பட்டார். அழகிரிக்கும் கருப்பசாமி பாண்டியனுக்கும் ஒத்துப்போகவில்லை. அழகிரி நெல்லைக்கு ‘விசிட்’ அடிக்கும்போதெல்லாம் இவர் கண்டுகொள்ளமாட்டார். ஸ்டாலின் வருகையின் போது ஏற்பாடுகளைத் தடபுடலாகச் செய்துவிடுவார். இதனால் வெறுப்பான அழகிரி, ஒருமுறை கட்சியினர் முன்பாகவே கருப்பசாமி பாண்டியனை திட்டியதுடன் அவர் கொடுத்த சால்வையைக்கூட வாங்கவில்லை. அழகிரி கட்சியைவிட்டு ஓரங்கட்டப் பட்டதும் ‘கானா’ நிம்மதி அடைந்தார். 

கடிதம் எழுதியும் கனியாத ஸ்டாலின்... யோசிக்காமல் சேர்த்துக்கொண்ட ஜெயலலிதா...

ஆனால், இந்த நிம்மதி நீடிக்கவில்லை. அவர் மீது தி.மு.க-வின் பாரம்பர்யக் குடும்பத்தைச் சேர்ந்த நாலடியார் என்பவரின் மகள் தமிழரசி பாலியல் குற்றச்சாட்டைக் கூறினார். வழக்கும் தொடர்ந்தார். இந்தச் சூழ்நிலையில், கட்சியிலும் கருப்பசாமி பாண்டியனுக்குப் பின்னடைவு தொடங்கியது. கட்சியைப் பலப்படுத்த மாவட்டங்களைப் பிரித்துப் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. நெல்லை மாநகரம், நெல்லை கிழக்கு, நெல்லை மேற்கு என நெல்லை மாவட்டம்  மூன்றாகப் பிரிக்கப்பட்டது. இதனால் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும் என நினைத்தார் கருப்பசாமி பாண்டியன். கட்சித் தலைமையிடம் பேசிப் பார்த்தும் எந்தப் பலனும் இல்லை. 

கட்சியில் முக்கியத்துவம் குறைந்ததால் அதிருப்தி காரணமாகக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார். எனினும், அவரைச் சமாதானப்படுத்தும் வகையில் தி.மு.க-வில் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. ஆனாலும், அவர் சமாதானம் அடையாமல் இருந்தார். இதற்கிடையில், அ.தி.மு.க-வுக்குச் செல்ல தூது விடுவதாகப் பேச்சுக் கிளம்பியது. அவர் அதனை மறுக்கவும் இல்லை. தேர்தல் பிரசாரத்துக்கு நெல்லைக்கு ஜெயலலிதா வரும்போது சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப் பட்டது. ஒரு கட்டத்தில் சோர்வடைந்த அவர், தனது வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த அ.தி.மு.க கொடி வர்ணங்களை அழித்தார். மீண்டும் தி.மு.க-வில் இணையப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். தி.மு.க-வில் அவரைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. கடந்த 17-ம் தேதி தி.மு.க தலைமைக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார்.

கடிதம் எழுதியும் கனியாத ஸ்டாலின்... யோசிக்காமல் சேர்த்துக்கொண்ட ஜெயலலிதா...

‘எங்கள் குடும்பத் தலைவர், முத்தமிழ் அறிஞர், கழகத் தலைவர், மாண்புமிகு தலைவர் கலைஞர் அவர்கள்’ எனத் தொடங்கும் அந்தக் கடிதத்தில், ‘‘கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு தாய், தந்தையாக வாழ்வதற்கு வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு, தாங்கள் இடும் பணிகளை என்னால் இயன்ற அளவு செய்து வந்து உள்ளேன். இருப்பினும், அறிந்தும் அறியாமலும் சில தவறுகளுக்கு நான் காரணமாகி விட்டேன்.

நடந்த தவறுகளுக்கு தங்கள் உடன்பிறப்புகளில் ஒருவனான நான் வருந்துகிறேன். அதற்காகத் தங்கள் பொற்பாதங்களில் வணங்கி என் மீது கருணை கொண்டு மன்னித்து அருள வேண்டுகிறேன். எஞ்சி இருக்கிற என் வாழ்நாளில், தமிழகத்தில் மீண்டும் கலைஞர் ஆட்சி மலர அனைத்துத் தியாகத்துக்கும் தயாராக உள்ளேன் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விசுவாசத்துடனும் பணிவுடனும் தம்பி வீ.கருப்பசாமி பாண்டியன்’’ எனக் கடிதத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தக் கடிதம் மு.க.ஸ்டாலினுக்கு திருப்தி தரவில்லையாம்.

எனவே, அவர் அ.தி.மு.க-வுக்கான கதவுகளையும் திறந்தே வைத்திருந்தார். அந்த நேரத்தில் அ.தி.மு.க-வில் இருந்து அழைப்பு வந்துவிட்டதால் கடந்த 26-ம் தேதி ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் இணைந்துவிட்டார். 30-ம் தேதி நெல்லைக்கு வருகை தரவுள்ள அவருக்குச் சிறப்பான வரவேற்பு கொடுக்க அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகிறார்கள். அ.தி.மு.க-வில் அடுத்த இன்னிங்சை ‘கானா’ தொடங்கி இருப்பதால் நெல்லை அரசியல் களம் இனி சூடுபிடிக்கத் தொடங்கிவிடும்.  

- பி.ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு