Published:Updated:

அம்மாவின் திட்டங்கள் என்னை ஈர்த்தன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அம்மாவின் திட்டங்கள் என்னை ஈர்த்தன!
அம்மாவின் திட்டங்கள் என்னை ஈர்த்தன!

அ.தி.மு.க-வுக்குப் போன ஞானசேகரன் உருக்கம்...பேட்டி

பிரீமியம் ஸ்டோரி

மிழ் மாநில காங்கிரஸில் இருந்த முக்கியமான தலைவர்கள் எல்லாம் வரிசையாக அ.தி.மு.க முகாமுக்குச் சென்று வருகிறார்கள். இந்தப் பட்டியலில் இப்போது புதிதாக இணைந்திருப்பவர் வேலூர் ஞானசேகரன். ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க-வில் ஐக்கிய மானவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

அம்மாவின் திட்டங்கள் என்னை ஈர்த்தன!

“மூப்பனார் காலத்தில் இருந்து த.மா.கா உடன், வாசனுடன் இணக்கமாக இருந்தவர் நீங்கள். தற்போது ஏன் இந்த முடிவு?”

“இந்த முடிவை நானாக வலிய வந்து எடுக்கவில்லை. மூப்பனார் ஐயாவின் உண்மையான தொண்டனாக இருந்திருக்கிறேன். அதற்குக் காரணம் அவருடைய ஆளுமைத்திறனும், அதிரடி அரசியலும்தான். தான் இருக்கும்போதும் சரி, தனக்குப் பின்னும் சரி தன்னுடைய குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வரக் கூடாது என்று நினைத்தவர் அவர். ஆனால், அவருக்குப் பின் வந்த வாசன் அப்படி இல்லை. அவருடைய மைத்துனர் சுரேஷ் பேச்சை மட்டும்தான் அவர் கேட்கிறார். தேர்தல் கூட்டணி முடிவில் எங்கள் கருத்துகளைக்  கேட்கவில்லை. அவராக முடிவெடுத்தார். ஆபத்துகளை எடுத்துச் சொல்லியும் எதையும் கேட்பதாக இல்லை. இப்போதும் அந்த முடிவு களுக்காக அவர் வருந்தவும் இல்லை. இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாட்களில் த.மா.கா மூழ்கிவிடும்.”

“மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்த முடிவை எதிர்த்ததாகச் சொல்கிறீர்கள். அப்படி இருந்தும் ஏன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டீர்கள்?”

“மக்கள் நலக் கூட்டணியில் சேருவதைப் பற்றி கடைசிவரை அவர் எங்களிடம் பேசவில்லை. அ.தி.மு.க-வில் சேர வேண்டும் என்று சொன்னபோது அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தல் போட்டி என்று வருகிறபோது, மூத்த தலைவர்களே போட்டியிடாமல் விலகிவிட்டால் சரியாக இருக்காது என்பதால்தான் நான் போட்டியிட்டேன். த.மா.கா போட்டியிட்ட தொகுதிகளிலேயே நான் போட்டியிட்ட இடத்தில்தான் அதிக ஓட்டுகள் வாங்கினோம். தேர்தலுக்குப் பிந்தைய கூட்டங்களில்கூட மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகும்படி சொல்லியும் அவர் கேட்கவில்லை. இந்த விஷயத்தில் வாசன் தெளிவாக இல்லை.”

அம்மாவின் திட்டங்கள் என்னை ஈர்த்தன!

“உங்கள் தாய் கட்சியான காங்கிரஸில் இணைந்தி ருக்கலாமே? ஏன் அ.தி.மு.க-வைத் தேர்ந்தெடுத்தீர்கள்?”

“தமிழ்நாட்டில் காங்கிரஸ் எங்கு இருக்கிறது? காங்கிரஸ் கட்சி, அதனுடைய பலங்கள் அனைத்தையும் இழந்திருக்கிறது. தமிழகத்தில் பல கட்சிகள் இருந்தாலும் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருப்பது அ.தி.மு.க மட்டுமே. அம்மா தலைமையிலான அரசு, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துகிறது.”

“உங்கள் சம்பந்தி தம்பிதுரைதான் மாற்றுக் கட்சியினரை அ.தி.மு.க-வில் இணைப்பதில் தீவிரமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”


“நான் அவருடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்மாவின் திட்டங்கள்தான் என்னைப் போன்றோரை அ.தி.மு.க-வை நோக்கி ஈர்த்து இருக்கிறது. இன்னமும் பலர் இணைய உள்ளார்கள். இதற்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவருக்கு நான் கட்சியில் இணைந்ததே தெரியாது.”

- மா.அ.மோகன் பிரபாகரன்
படம்: சு.குமரேசன்

த.மா.கா-வில் குடும்ப ஆதிக்கமா?

அம்மாவின் திட்டங்கள் என்னை ஈர்த்தன!

த.மா.கா-வின் இளைஞர் அணித் தலைவர் யுவராஜாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘ ‘த.மா.கா-வில் ஜி.கே.வாசனின் குடும்ப ஆதிக்கம் அதிகம் ஆகிவிட்டது’ என்று வேலூர் ஞானசேகரன் குற்றம் சாட்டி இருக்கிறாரே?”

‘‘தமிழகத்தில் இருக்கும் கட்சிகளில் குடும்ப ஆதிக்கம் இல்லாத ஒரே கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் மட்டும்தான். முடிவெடுக்க வேண்டிய அதிகாரத்தில் ஜி.கே.வாசன் மட்டுமே இருக்கிறார்.”

“ஜி.கே.வாசன் அமைச்சராக இருந்தபோது போர்ட் டிரஸ்ட் உறுப்பினர்கள் பதவியைத் தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கொடுத்தார் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதே?”

‘‘மாநிலப் பொதுச்செயலாளர், மாவட்டத் தலைவர் எனப் பலரும் இந்தப் பதவியில் இருந்தார்கள். வேலூர் மாவட்டத்தில் அனைத்துப் பதவிகளையும் தீர்மானித்தது ஞானசேகரன்தான். இப்போது அவர் போனதால் இளைஞர் களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அவர் ஏன் போனார் என்பதன் பின்னணி வேலூர்​வாசிகளுக்குத் தெரியும். அவர் மீதான வழக்கில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. எனவே தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவர் சென்றுள்ளார்.”

- வீ.மாணிக்கவாசகம்
படம்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு