Published:Updated:

மிஸ்டர் கழுகு: பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சறுக்கல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மிஸ்டர் கழுகு: பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சறுக்கல்!
மிஸ்டர் கழுகு: பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சறுக்கல்!

மிஸ்டர் கழுகு: பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சறுக்கல்!

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சறுக்கல்!

‘‘போயஸ் கார்டனில் ரஜினியின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது” என்றபடி கழுகார் நம்முன் ஆஜரானார்.

‘‘ஜெயலலிதாவின் வீட்டில் ‘கபாலி’ ரஜினி ஆதிக்கமா?” என்றோம்.

‘‘இது ‘கபாலி’ ரஜினி அல்ல. கன்னியாகுமரியைச் சேர்ந்த ரஜினி. சசிகலாவின் உதவியாளராகச் சேர்ந்துள்ள ரஜினி என்ற இந்தப் பெண்,  கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழியைச் சேர்ந்தவர். பி.எஸ்சி அக்ரி படித்தவர். சிறுதாவூர் மற்றும் போயஸ் கார்டனில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்க வந்தவர். சசிகலாவின் நம்பிக்கையைப் பெற்று, போயஸ் கார்டனிலேயே தங்கவைக்கப்பட்டார். ரஜினியிடம், சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் அப்படி ஒரு பாசம். இவருடைய கணவர், ரவீந்திரன் ஜெயா டி.வி-யின் மார்கெட்டிங் அதிகாரி.”

‘‘ஓஹோ!”

‘‘ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் முதல்வர் கோட்டாவில் ரஜினியின் மகளுக்கு எம்.டி படிக்க சீட் பெறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் ரஜினி மலேசியா சென்றுள்ளார். அங்குள்ள தொழிலதிபர்கள், ரஜினியின் செல்வாக்கை அறிந்து, அவரை நன்கு கவனித்து அனுப்பி இருக்கிறார்கள். பலரும் அவரால்தான் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டோம் என்று தகவல்களைக் கிளப்பி வருவதால், அவரைப் பிடித்தால் வேலை ஆகும் என்று, பலரும் நம்பிச் சில காரியங்களைச் செய்து வருகிறார்களாம். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆட்கள் இன்னும் துடிப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவரது வட்டாரத்தைக் கேட்டால், ‘அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் பல வருடங்களாக அவரைத் தெரியும். அதனால் தங்கள் உதவிக்காக கார்டனில் தங்க வைத்துள்ளார்கள்’ என்று பட்டும் படாமலும் சொல்கிறார்கள். மொத்தத்தில் ரஜினியின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது!”

‘‘அ.தி.மு.க-வில் ஆள்சேர்ப்பு படலம் வேகமாக நடக்கிறதே?”

‘‘தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கும் ஆட்கள் போவதும் வருவதும் எப்போதும் நடப்பதுதான். யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள் பக்கம் ஆட்கள் போய்ச் சேர்வது அதிகமாக நடக்கும். அந்தவகையில்தான், தற்போது தி.மு.க-வில் இருந்து கருப்பசாமி பாண்டியன், த.மா.கா-வில் இருந்து ஞானசேகரன் ஆகியோர் அ.தி.மு.க-வில் சேர்ந்துவிட்டனர். விரைவில், ம.தி.மு.க-வில் இருந்து ரெட்சன் அம்பிகாபதி போக இருக்கிறார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால், முன்பெல்லாம் ஆட்களைச் சேர்ப்பதில் ஜெயலலிதா ஆர்வம் காட்ட மாட்டார். இப்போது ஆர்வம் காட்டுகிறார்.”

மிஸ்டர் கழுகு: பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சறுக்கல்!

‘‘ஆமாம்.”

‘‘சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை என்பது ஜெயலலிதாவின் வருத்தம். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் கோட்டை விட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறார் ஜெயலலிதா. அதனால் முடிந்த அளவு லோக்கல் வி.ஐ.பி-க்களைக் கட்சிக்குள் சேர்ப்பதை ஊக்குவிக்க ஆரம்பித்து உள்ளார். யார் யாரெல்லாம் அ.தி.மு.க-வில் சேர ஆர்வமாகக் கடிதம் கொடுத்துள்ளார்களோ அவர்கள் அனைவரையும் சேர்க்கவும், அதுவும் தன் முன்னிலையில் சேர்க்கவும் முடிவெடுத்துள்ளார் ஜெயலலிதா.”

‘‘அ.தி.மு.க வழக்கறிஞர்கள் ராஜினாமாவின் பின்னணி என்ன?”

‘‘ராஜினாமா செய்தவர்கள் ஆளும் கட்சி வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, ஆளும் கட்சியில் முக்கியப் புள்ளிகளுக்கும் நெருக்கமானவர்கள் என்பதுதான் கூடுதல் சுவாரஸ்யம்.  மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் செல்லப்பாண்டியன், கோமதிநாயகம், அரவிந்த் பாண்டியன், சுகுமாறன் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சம்பந்தி. முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் மகன்தான் அரவிந்த் பாண்டியன். இவர்களோடு அரசு பிளீடர்கள், அரசு வக்கீல்கள் என்று 15 பேர் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்து உள்ளனர்.”

‘‘ஏன் இந்த ராஜினாமா நடவடிக்கை?”

‘‘2011-ல் அ.தி.மு.க அரசு அமைந்​ததும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவரின் நேரடி மேற்பார்வையில்தான் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர், கூடுதல் அட்வகேட் ஜெனரல், பிளீடர், அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். நவநீத​கிருஷ்ணன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஆனதும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக சோமயாஜி நியமிக்கப்பட்டார். இப்போதும் அவர்தான் அட்வகேட் ஜெனரலாக இருக்கிறார். அரசு வழக்குகளின் தோல்வி, தேக்கம் என்று பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்து கொண்டிருந்ததுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள்.”

‘‘அரசியல் காரணங்கள் இருக்கின்றனவா?”

மிஸ்டர் கழுகு: பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சறுக்கல்!

‘‘செல்லப்பாண்டியன் மாற்றத்துக்கு அரசியல் பின்னணி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நிதி அமைச்சர் ஓ.பி.எஸ்-ஸின் சம்பந்தி என்கிற முறையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் கோலோச்சி வந்தார். நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், இப்போது நிதி அமைச்சராக மட்டுமே இருப்பதுபோல, கார்டன் கோபம் இப்போது பன்னீரின் சம்பந்தி மீதும் விழுந்துள்ளது என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள். ‘பன்னீரின் தம்பி ராஜா வழக்கில் அளவுக்கு மீறி தலையிட்டார்’ என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளதாம். ‘பன்னீரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். சின்ன மேட்டரில் சிக்கினாலும் அவர் பதவி காலியாகிவிடும். அதற்கான முன்னோட்டம்தான் இந்த செல்லப்பாண்டியன் பதவி பறிப்பு’ என்றும் சொல்லப்படுகிறது.  அரசியலில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருக்கும் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தார். அவருக்கு  மீண்டும் வாய்ப்புத் தரப்படவில்லை. அவரின் தம்பி அரவிந்த் பாண்டியன் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்தார். அவரும் ராஜினாமா செய்துள்ளார். நவநீதகிருஷ்ணனின் செல்வாக்கு அதிகமாகி வருவதாகவும் அதனால்தான் இவர்கள் பதவிகள் பறிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.’’

‘‘தமிழகத்தில் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்களே?’’

‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் மாற்றம் என்பது அடிக்கடி நிர்வாகக் காரணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக நடைபெறும். தற்போது நடைபெற்றுள்ள ஐ.ஏ.எஸ் டிரான்ஸ்ஃபர்கள்கூட மிகமிக முக்கியத்துவம் இல்லாத டிரான்ஸ்ஃபர்தான்.

ஆனால், ஐ.பி.எஸ் டிரான்ஸ்ஃபர் என்பதுதான் எப்போதும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது. அதில் அரசாங்கம், அரசியல், மேல்மட்ட கணக்குகள் எல்லாம் இருக்கும். இந்தமுறை  நடைபெற்றுள்ள ஐ.பி.எஸ் டிரான்ஸ்ஃபர்களுக்கு மிகமிக முக்கியக் காரணம், வடக்கு மண்டல
ஐ.ஜி-யாக இருந்தவரும், தற்போது சென்னை மாநகர போலீஸின் உளவுப்பிரிவு கூடுதல் கமிஷனராகவும் உள்ள தாமரைக்கண்ணன்தான். அவர்தான் இந்த டிரான்ஸ்ஃபர்களின் முக்கியத் துருப்புச்சீட்டு. மன்னார்குடி லாபியோடு எப்போதும் செல்வாக்கில் இருக்கும் தாமரைக்கண்ணன், வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு தன்னால் சிறப்பாகப் பணியாற்றிக் கொடுக்க முடியும் என்ற வாக்குறுதியைக் கொடுத்து, இந்த டிரான்ஸ்ஃபரை வாங்கி உள்ளார்.

பல அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டாலும், அனைவரையும வியப்பில் ஆழ்த்திய விவகாரம், உளவுப்பிரிவின் கூடுதல் ஆணையாளராக இருந்த வரதராஜு மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு தாமரைக்கண்ணன் வந்திருப்பதுதான். ஏனென்றால், இந்த இடத்தில் அவ்வளவு சர்வ சக்தி மிக்கவராக வரதராஜு இருந்தார். இன்னும் சொல்லப் போனால், அந்த இடம் அவருக்காகவே உருவாக்கி வைக்கப்பட்டு இருந்த இடம்.

மிஸ்டர் கழுகு: பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சறுக்கல்!

இதற்கு முன்பு சென்னையில், உளவுப்பிரிவுக்கு துணை கமிஷனர் அந்தஸ்து மட்டும்தான் இருந்தது. அதற்குமேல், இணை கமிஷனர் அந்தஸ்து கிடையாது. மாநில போலீஸ் துறையில் அப்படி ஒரு பதவி இருந்தாலும், சென்னை நகரைப் பொறுத்தவரை அப்படி ஒன்று கிடையாது. ஆனால், துணை கமிஷனராக இருந்த வரதராஜுக்கு பதவி உயர்வு கொடுத்து, இணை கமிஷனராகவும் அதே இருக்கையில் அமரவைத்தனர். இடையில் சில காலம், நல்லசிவம் அந்த இடத்துக்குக் கொண்டு வரப்பட்டார். ஆனால், அவரால் சில மாதங்கள் கூட அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. மீண்டும் வரதராஜு அந்த இடத்துக்குக் கொண்டு வரப்பட்டார். அதன்பிறகும் கூடுதல் கமிஷனராக (ஐ.ஜி-யாக) வரதராஜு பதவி உயர்வு பெற்றபோதும், உளவுப் பிரிவிலேயே உட்காரவைக்கப்பட்டார். அந்த அளவுக்கு அவருக்குச் செல்வாக்கு இருந்தது.

மேலும், இந்த இடத்தில் இருப்பவர்கள் முதல்வர் அலுவலகத்துடன் நேரடியாகப் பேசக்கூடிய அதிகாரம் படைத்தவர்களாக இருப்பார்கள். மாநில அளவில் இருக்கக்கூடிய உளவுப்பிரிவுக்கு கே.என்.சத்திய மூர்த்தி ஐ.ஜி-க்கும், சென்னை நகரைப் பொறுத்தவரையில், வரதராஜுக்கும் அந்த அதிகாரம் இருந்தது. கமிஷனர், டி.ஜி.பி கொடுக்கும் தகவல்களைவிட இவர்கள் கொடுக்கும் தகவல்கள் மிக முக்கியமானவை என்பதால் இந்த அதிகாரம்.

இதையெல்லாம் தெரிந்துகொண்ட, வடக்கு மண்டல ஐ.ஜி  தாமரைக்கண்ணன் இந்த இடத்துக்கு வரவேண்டும் என்று  விரும்பி வந்துள்ளார். அதற்கு மன்னார்குடி லாபியின் உதவி மிகப் பெரியதாக இருந்தது. ஆனால், அவர் இந்த இடத்துக்கு வந்த இரண்டாவது நாளே, அவருக்குத் தலைவலி உருவாகிவிட்டது. உளவுப்பிரிவு டி.சி விமலாவை அழைத்து, பெரியளவில் நடக்கும் விஷயங்களை மட்டும் என் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். மற்றவற்றை என் கவனத்துக்குக் கொண்டுவராதீர்கள் என்று சொல்லிவிட்டார்.  தாமரைக்கண்ணன் இங்கு வருவதற்கு முன்பே, தனக்கு வேண்டிய இன்ஸ்பெக்டர், உதவி  கமிஷனர் போன்றவர்களைக் கேட்டு வாங்கி உள்ளார். ஒருங்கிணைக்கப்பட்ட தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் சரவணன் பல ஆண்டுகாலம் இருந்தார். அவர் அதே இருக்கையில் ஏ.சி, ஏ.டி.சி., டி.சி-யாக மூன்று பதவி உயர்வுகளையும் வாங்கியவர். ஆனால், தற்போது அவரை மாற்றிவிட்டு, சட்டம் - ஒழுங்குப் பிரிவில் டி.சி-யாக இருந்த சரவணனை தற்போது இங்கு மாற்றி உள்ளனர். அவரும் இதில் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாது என்கிறார்கள்.’’

“வரதராஜு என்ன ஆனார்?”

“மத்திய மண்டல ஐ.ஜி-யாக திருச்சிக்குப் போய்விட்டார்.”

‘‘ஒரு வழியாக வக்கீல்கள் போராட்டம் முடிந்து விட்டதே?”

‘‘முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்லமுடியாது. தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார்கள்.வழக்கறிஞர்கள் போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வராது.  அதை முடிவுக்குக் கொண்டு வருவதோ அல்லது தொடர்ந்து நீடிப்பதோ, வழக்கறிஞர்கள் கைகளில் இல்லை. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதியின் கையில் இருக்கிறது.”

‘‘அப்படியா?”

‘‘புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வழக்கறிஞர் சட்டத் திருத்தம் அந்த அளவுக்கு, வழக்கறிஞர்களை அச்சுறுத்துகிறது. ‘நீதிபதிகள் முன்பு உரத்தக் குரலில் வாதாடக் கூடாது; நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக் கூறக் கூடாது; போராட்டங்கள் நடத்தக் கூடாது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இவை அனைத்தும் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதோடு, ஒரு சார்புடையது. தங்களுக்குப் பிடிக்காத வழக்கறிஞர்களை நீதிபதிகள் பழிவாங்கும் போக்கை சுலபமாக்கும்’ என்பது வழக்கறிஞர்களின் எண்ணம். இந்த ஷரத்துகள் வழக்கறிஞர் சட்டத்தில் இருந்து மாற்றப்படும் வரை வழக்கறிஞர்களின் போராட்டங்கள் தொடர்ந்துபடிதான் இருக்குமாம்.”

மிஸ்டர் கழுகு: பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சறுக்கல்!

‘‘சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, புதிய சட்டத் திருத்தத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படாது என்று வாக்குறுதி அளித்துள்ளாரே?”

‘‘5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தப் புதிய சட்டத் திருத்தம் பற்றி ஆய்வு செய்து வருகிறது. அதில் முடிவுகள் வெளிவரும்வரை, இந்தச் சட்டத்திருத்தத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் குறிப்பிடவில்லை; இந்தச் சட்டத்திருத்தத்துக்குத் தற்காலிகத் தடை என்றும் சொல்லவில்லை. மாறாக, தற்காலிகமாக இந்தச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளார். அப்படிக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியிலும் அவர் கையெழுத்தும் இல்லை. ‘தற்காலிகம் என்றால் எதுவரை?’ என்று கேட்கிறார்கள் வக்கீல்கள்.”

‘‘நியாயம்தான்.”

‘‘வழக்கறிஞர் போராட்டத்தை நிறுத்திவிட்டு, நீதிமன்றத்துக்குச் செல்லத் தொடங்கியதும், இவர் சட்டத்தை அமல்படுத்தினால் என்ன செய்வது? இவ்வளவு போராட்டங்களும் சர்ச்சைகளும் நடந்து கொண்டிருக்கும்போதே, 126 வழக்கறிஞர்களை ‘சஸ்பெண்ட்’ செய்கிறது அகில இந்திய பார் கவுன்சில். ஆகவே, சட்டத் திருத்தம் மாற்றப்படும் வரை, போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்கள் அறிவித்துள்ளன.”

‘‘இதைப் பற்றி அரசு கவலைப்படவில்லையே?”

‘‘வக்கீல்களையும் பகைத்துக் கொள்ள முடியாது, நீதிபதிகளையும் பகைத்துக் கொள்ள முடியாது என்று நினைக்கிறதாம் ஆட்சி மேலிடம். ஒரே ஒரு கட்டளைதான் போட்டுள்ளார்கள். ‘சட்டம் - ஒழுங்குப் பிரச்னை வருவது மாதிரி லத்தி சார்ஜ் போன்றவை செய்துவிட வேண்டாம்’ என்று ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளாராம்’’ என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

படங்கள்: சு.குமரேசன், உ.பாண்டி

‘புரட்சித் தலைவி’யை தவிர்த்த தமிழிசை!

மிஸ்டர் கழுகு: பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சறுக்கல்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிலை திறப்பு, கடந்த 27-ம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அப்துல் கலாமின்  முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அப்துல் கலாம் தேசிய நினைவகத்துக்கான அடிக்கல்லும் நடப்பட்டது. மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பாரிக்கர் இதில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய வெங்கய்ய நாயுடு, “கலாம் நினைவிடம் அமைக்கக் கூடுதல் நிலம் வேண்டும் என்று தமிழக முதல்வர் - புரட்சித்தலைவி - செல்வி ஜெயலலிதாவிடம் கேட்டேன். அவர் அதனை ஏற்றுக்கொண்டார். அவருக்கு என் நன்றிகள்” என ஆங்கிலத்தில் குறிப்பிட்டார். இதை மொழிபெயர்த்த தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், புரட்சித்தலைவி, செல்வி என்ற வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு, வெறுமனே “தமிழக முதல்வருக்கு நன்றி” என்று மட்டும் குறிப்பிட்டார்.  இது அங்கு கூடியிருந்த அ.தி.மு.க-வினர், தமிழக அமைச்சர்கள் நிலோஃபெர் கபில், மணிகண்டன் ஆகியோரை எரிச்சலடைய வைத்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு