Published:Updated:

கட்டண உயர்வில்லா ரயில்வே பட்ஜெட் 2011-12: முக்கிய அம்சங்கள்

கட்டண உயர்வில்லா ரயில்வே பட்ஜெட் 2011-12: முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி, பிப்.25,2011

நாடாளுமன்றத்தில் 2011-12 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார். ##~~##

இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தொடர்ந்து 8-வது ஆண்டாக பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் ரயில்வே பட்ஜெட் தாக்கலானது.

பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் உயர்த்தப்படாத இந்த பட்ஜெட்டில், ஏசி புக்கிங் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 9 புதிய துரந்தோ ரயில்களும், மூன்று புதிய சதாப்தி ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை புறநகர் ரயில்வே சேவையில் கூடுதலாக 9 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை - சென்னை, சென்னை - திருவனந்தபுரத்துக்கு புதிய துரந்தோ ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 56 ரயில்கள்...

இந்த பட்ஜெட்டில், ரே பரேலி- ஜான்பூர், சசாரம்-டெல்லி, நாக்பூர்-கோலாபூர், புனே-நந்தத், விசாகப்பட்டிணம்-கோலாபூர், ஹவுரா-செகந்திராபாத், மும்பை-சண்டிகர், பாட்மன்-ராம்புரத், ஹைதராபாத்-பர்பாலா, ஹவுரா-திருப்பதி, பூரி- லிமார், ராஞ்சி-புனே, அவுரா-மைசூர், திகா-விசாகப்பட்டிணம் உள்பட புதிய 56 ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும் ஜெய்பூர்-டெல்லி, ஆகமதபாத்-மும்பை ஆகிய இடங்களுக்கு இரண்டு அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

மூத்த குடிமக்களுக்கு சலுகை..

மூத்த குடிமக்களில் மகளிருக்கு சலுக்கைக்கான வயது வரம்பு 60-ல் இருந்து 58 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டணச் சலுகை 30-ல் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்துக்கு கூடுதல் சேவை...

அடுத்த இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள மேற்கு வங்க தேர்தலை கருத்தில் கொண்டு, அம்மாநிலத்துக்கு பல்வேறு புதிய சேவைகளும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கூரில் மெட்ரோ ரயில் பெட்டி தொழிற்சாலை, ஜெலிங்காமில் ரயில் தொழிற்சாலை பூங்கா, கோல்கத்தாவுக்காக ஒருங்கிணைந்த புறநகர் ரயில் நெட்வோர்க் மற்றும் கோல்கத்தா மெட்ரோவுக்கு 34 புதிய ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மம்தாவின் ரயில்வே பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்களாவன:

 * பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணங்களில் மாற்றமில்லை.

 * எப்போதும் இல்லாத வகையில் ரயில்வேக்கு ரூ.57,630 கோடி திட்ட ஒதுக்கீடு.

 * புதிய வழித்தடங்கள் ஏற்படுத்த ரூ.9,583 கோடி ஒதுக்கீடு.  2011-12 ஆம் ஆண்டு 1,300 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய இருப்புப்பாதை, 867 கிலோமீட்டர் இருப்புப்பாதை இருவழிப்பாதைகளாக மாற்றம். 1,017 கிலோமீட்டர் தூரம் இருப்புப்பாதை அகலவழிப்பாதையாக மாற்றம்.

 * 56 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், 3 புதிய சதாப்தி, 9 துரந்தோ ரயில்கள் அறிமுகம். 

 * ஜெய்பூர்-தில்லி, அகமதாபாத்-மும்பை மார்க்கங்களில் குளிர்சாதன வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகள் கொண்ட ரயில் சேவைகள் அறிமுகம்.

 * புதிய சூப்பர் குளிர்சாதனவசதி பெட்டிகள் அறிமுகம்.

 * கணினி முறை பயணச்சீட்டுப் பதிவுக்கு புதிய இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ஏ.சி வகுப்புகளுக்கு ரூ.10-ம், இதர வகுப்பு முன்பதிவுகளுக்கு ரூ.5-ம் வசூலிக்கப்படும்.

 * பான்-இந்தியா பல்முனை ஸ்மார்ட் கார்டு பயன்பாடு, கோ-இந்தியா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும்.

 * 236 ரயில் நிலையங்கள் மாதிரி ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்.

 * மும்பையில் 47 புறநகர் ரயில் சேவைகளும், கொல்கத்தாவில் 50 புதிய புறநகர் ரயில் சேவைகளும் அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன.

 * கேரளாவில் இரண்டு புதிய பயணிகள் ரயில் முனையங்களும், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு புதிய ரயில் நிலையம் அமைக்கப்படும்.

 * பாஸஞ்சர் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 முதல் 200 கிலோமீட்டர் அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

 * ஆண்டு முழுவதும் பிரச்சினைகள் இல்லாமல் ரயில்களை இயக்கிய மாநிலங்களில் இரண்டு புதிய ரயில்கள் மற்றும் இரண்டு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

 * 8 ரயில்வே மண்டலங்களிலும் மோதலைத் தடுப்பதற்கான கருவி அமைக்க ஒப்புதல்.

 * பனி மூட்டம் காரணமாக ஏற்படும் சேதத்தைத் தடுக்க கணினி முறையிலான பனிமூட்ட பாதுகாப்பு கருவி நிறுவப்படும்.

 * ஆளில்லாத 3 ஆயிரம் ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்படும். 

 * அகில இந்திய அளவில் பாதுகாப்பு உதவிக்காக ஒரே எண்ணைக்கொண்ட பாதுகாப்பு உதவி தொலைபேசி அமைக்கப்படும்.

 * அடுத்த 7 ஆண்டுகளில் சிக்கிம் தவிர அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்கள் ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்படும்.

 * ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் பாலங்களுக்கான தொழிற்சாலை ஒன்றும், ஜம்முவில் பாலம் மற்றும் குகை பாதைகள் அமைப்பதற்கான கழகம் ஒன்றும் அமைக்கப்படும்.

 * மணிப்பூரில் டீசல் என்ஜின்களுக்கான மையம் ஒன்று அமைக்கப்படும்.

 * ஜலிங்காம் மற்றும் நியூ பொங்கைகாம் ஆகிய இடங்களில் ரயில் தொழிற்சாலை பூங்காக்கள் அமைக்கப்படும்.

 * நாக்பூர், சண்டிகர் மற்றும் போபால் ஆகிய இடங்களில் துணிகளை தூய்மைப்படுத்துவதற்கான நிலையங்கள் அமைக்கப்படும்.

 * மகாராஷ்டிராவில் தக்குர்லி என்ற இடத்தில் 700 மெகாவாட் திறனுள்ள எரிவாயு மின்நிலையம் அமைக்கப்படும்.

 * 2011-12-ஆம் ஆண்டில் 18 ஆயிரம் ரயில் பெட்டிகள் வாங்கப்படும்.

 * பிரதம மந்திரி ரயில் விகாஸ் திட்டத்தின்படி, சமூகத்திற்கான பயனுள்ள திட்டங்கள் துவக்கப்படும்.

 * மும்பை, சீல்டா, சிலிகுரி, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் ரயில்பாதைகளுக்கு அருகே வசிப்பவர்களுக்காக 10 ஆயிரம் தங்குமிடங்கள் முன்னோடித் திட்டமாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 * உடல் ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் சலுகைகள் ராஜதானி, சதாப்தி ரயில்களிலும் விரிவுபடுத்தப்படும்.  

 * பத்திரிகையாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை அளிக்கப்படும் 50 சதவிகித சலுகைக் கட்டணம் இருமுறை வழங்கப்படும். 

 * மூத்த குடிமக்களுக்கான சலுகைக் கட்டணம் 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்படும்.

 * ரயில்வே பணியாளர்களை சார்ந்துள்ள பெற்றோர்களுக்கு மருத்துவ வசதிகள் விரிவுப்படுத்தப்படும்.

 * டி பிரிவு ரயில்வே ஊழியர்களின் பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகை மாதத்திற்கு 1,200 ரூபாயாக உயர்த்தப்படும்.

 * ரயில்வே பணியாளர்களின் குழந்தைகள் தங்கி படிக்க மேலும் 20 தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். 

 * நிரப்பப்படாமல் உள்ள எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான காலியிடங்கள் உட்பட சி மற்றும் டி பிரிவில் காலியாக உள்ள 1.75 லட்சம் பணியிடங்களை நிரப்பவும், 16,000 முன்னாள் ராணுவத்தினர் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்  சேர்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 * விளையாட்டுக்கான சிறப்பு பிரிவு ஒன்று அமைக்கப்படும்.

 * சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 2011-12 ஆம் ஆண்டை அனுசரிக்க ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது.

 * 2011-12 ஆம் ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை 6.4 சதவிகிதமாகவும்,  சரக்குகள் போக்குவரத்து 993 மெட்ரிக் டன்னாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 * போக்குவரத்து வருவாய் ரூ.1,06,239 கோடியாக உயரும் என்றும் முதல் முறையாக ரூ. ஒரு லட்சம் கோடி என்ற அளவை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 * நடைமுறை செலவுகள் ரூ.73,650 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையச் செய்திகள்..