Published:Updated:

விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்: வைகோ அறிவிப்பு

விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்: வைகோ அறிவிப்பு
விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்: வைகோ அறிவிப்பு
விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்லை மாவட்டம்- சங்கரன்கோவில் வட்டத்தில், வரகனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்ற 48 வயது விவசாயி, தான் மக்காச் சோளம் பயிர் செய்த 20 ஏக்கரும் வறட்சியால் பட்டுப்போய் கடன்வாங்கிப் போட்ட முதலீடு, உழைப்பு அனைத்தும் வீணாகி, கடனையும் கட்ட முடியாத நிலையில், மனமுடைந்து நேற்று வீட்டுக்குள்ளேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி மனதில் தாங்க முடியாத அதிர்ச்சியைத் தந்துள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் 12 விவசாயிகள் இதுபோலத் தற்கொலை செய்து, வாழ்வை முடித்துக் கொண்டனர். சிவகாசிக்கு அருகில் இருக்கின்ற புதுப்பட்டியில், பயிர்கள் கருகி பெரும் துன்பத்துக்கு ஆளான, பாண்டியன் என்கின்ற விவசாயி, விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இப்படி வறட்சியின் காரணமாக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு, மாநில அரசு பத்து லட்ச ரூபாய் நிவாரணம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.

##~~##
தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், பெரும்பாலான பகுதிகளில், வறட்சியின் கோர தாண்டவத்தால், விவசாயிகள் தாங்கமுடியாத நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். மத்திய அரசு விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயன உரங்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி, விவசாயிகள் தலையில் கல்லைப் போட்டது.
விவசாயிகள் அடிப்படைத் தேவைகள்கூட நிறைவுசெய்துகொள்ள முடியாத நிலையில், துயர்படுவது தாங்கமுடியாத அவலமாகும். ஆடு மாடுகள் குடிக்கத் தண்ணீர் கிடையாது. மாடுகளைப் பராமரிக்க முடியாமல், அடிமாட்டு விலைக்கு விற்கும் விபரீதம் ஏற்பட்டுவிட்டது. இப்படி ஒரு துக்ககரமான நிலைமை தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்டது இல்லை. உடனடியாக, விவசாயிகளையும், அவரது குடும்பங்களையும் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.
எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், பயிர் செய்து, தக்க விளைச்சல் இல்லாமல், செய்த முதலீட்டையும் இழந்து, கடனில் தவிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தொடக்கத்திலும் மழையே இல்லாததால், பாசனத்துக்கு வழி இல்லாததால், விவசாயம் செய்ய முடியாத துன்பத்துக்கு ஆளான விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் மாநில அரசு வழங்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள், பயிர்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் அசாதாரணமான இந்த நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். போர்க்கால நடவடிக்கைகளை தமிழகமெங்கும் மாநில அரசு மேற்கொள்ளாவிடில், இன்னும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய துயரங்களுக்கு விவசாயிகள் ஆளாவதும், அதனால் தற்கொலை போன்ற துன்பச் சம்பங்கள் தொடர்வதும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.
விவசாயிகளைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை மாநில அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் ஜனவரி 30 ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தலைநகர் சென்னையில் பிப்ரவரி 6 ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 11 மணி அளவில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஜனவரி 30 ஆம் தேதி அன்று திருநெல்வேலியிலும், பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று தலைநகர் சென்னையிலும் நடைபெறும் அறப்போரில் நான் பங்கேற்கிறேன். தொண்டர்களும், விவசாயப் பெருமக்களும் பெருமளவில் இந்த அறப்போரில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
உள்ளம் உடைந்து உயிரை முடித்துக்கொண்ட விவசாயி, ஜெகன்நாதனை இழந்து கண்ணீரில் பரிதவிக்கும் அவரது துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.