Published:Updated:

இரண்டு எம்.பி-க்கள்... இரண்டு கட்சிகள்... இரண்டு தலைவர்கள்!

இரண்டு எம்.பி-க்கள்... இரண்டு கட்சிகள்... இரண்டு தலைவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
இரண்டு எம்.பி-க்கள்... இரண்டு கட்சிகள்... இரண்டு தலைவர்கள்!

ப.திருமாவேலன்

இரண்டு எம்.பி-க்கள்... இரண்டு கட்சிகள்... இரண்டு தலைவர்கள்!

ப.திருமாவேலன்

Published:Updated:
இரண்டு எம்.பி-க்கள்... இரண்டு கட்சிகள்... இரண்டு தலைவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
இரண்டு எம்.பி-க்கள்... இரண்டு கட்சிகள்... இரண்டு தலைவர்கள்!
இரண்டு எம்.பி-க்கள்... இரண்டு கட்சிகள்... இரண்டு தலைவர்கள்!

`அரங்கமும் அந்தரங் கமும்’ என்று ஒரு நாவல் எழுதினார் கவிஞர் கண்ணதாசன். அரசியல்வாதி, தொழிலதிபர், போலீஸ் அதிகாரி, நீதிபதி ஆகிய நால்வரும் நண்பர்கள். பகலில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள், இரவில் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் நாவலின் தொடக்கமும் முடிவும். திருச்சி சிவா-சசிகலா புஷ்பா விவகாரம், நாவல் அல்ல; அரசியலில் புரையோடிப்போன கழிசடைத் தனத்தின் முற்றிப்போன துர்நாற்றம்!

சிவாவுக்கும் சசிகலாவுக்கும் பெருமையாகச் சொல்லிக் கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. அதை மறுக்கவில்லை; மறைக்கவும் விரும்பவில்லை. தி.மு.க., இளைஞர் அணியை உருவாக்கிய காலத்தில் இருந்து நாடு அறிந்த பேச்சாளர், தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைபெற்றவர், எழுத்தாளர், எவரையும் பாராட்டிப் பழக்கம் இல்லாத முரசொலி மாறனே, ‘சிவா போன்றவர்களை நாடாளு மன்றத்துக்கு அனுப்பிவையுங்கள்’ என கருணாநிதியிடம் தி.மு.க பொதுக்குழுவிலேயே கோரிக்கைவைத்தார். ஈழத் தமிழர் பிரச்னை முதல் திருநங்கைகள் கண்ணீர் வரை சிவா நாடாளுமன்றத்தில் நெக்குருகப் பேசிய காட்சிகள் நிழலாடுகின்றன. இது அவர் பக்கம்...

அ.தி.மு.க-வில் சசிகலா புஷ்பாவின் வளர்ச்சி என்பதும் அபரிமிதமானது. ஐ.ஏ.எஸ் ஆவதற்காக தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. தன்னால் முடியாவிட்டாலும் அதற்கான ஆர்வம் உள்ளவர்களை உருவாக்க ‘டீம்’ என்ற ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனத்தை நடத்திவந்தார். பின்னர் அதை வேறு ஒருவருக்குக் கொடுத்துவிட்டார். தூத்துக்குடியில் ஜெ.ஜெ கட்டணம் இல்லா ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் தொடங்கினார்.  பின்னர் அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் ஆக்கப்பட்டார். சசிகலா என்ற பெயருக்காகவே ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி 2011-ம் ஆண்டு  தரப்பட்டது. ஆனால், கூட்டணிக்குத் தொகுதி போனதால் இவருக்கு வாய்ப்பு பறிபோனது.

தூத்துக்குடி மாநகராட்சித் தலைவர் ஆனார். அப்படி இருக்கும்போதே அ.தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் பதவி கிடைத்தது. மாநிலம் முழுவதும் சென்று அவர் தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் பேசவும் தலைமைக்கழகம் வாசல் வைத்துக் கொடுத்தது. அ.தி.மு.க-வில் ஒரு பதவியைத் தக்கவைப்பதே சிரமம். ஆனால், இவர்  மாநகராட்சித் தலைவராக இருக்கும்போதே அந்தப் பதவியைவிட்டு விலக்கிவைக்கப்பட்டு, நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆக்கப்பட்டார். இவை எல்லாவற்றையும்விட அவருக்குக் கிடைத்த கெளரவம்... அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஜெயலலிதாவுக்கு மாலை அணிவிக்கும் மகத்தான வாய்ப்பு இவருக்குத் தரப்பட்டது. இவ்வளவு உச்சத்தை அடுத்தடுத்து அ.தி.மு.க-வில் பெற்றவர் எவரும் இல்லை. அதுவும் எந்தப் பெண்ணும் இல்லை. உச்சிக்குப் போனால் இறங்கித்தானே ஆகவேண்டும். ஆனால், உருட்டித் தள்ளப்பட்டுவிட்டார் சசிகலா புஷ்பா. காரணம், அவரேதான்!

‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்’ என எம்.ஜி.ஆர். பாட்டை ரெக்கார்டு தேயும் வரை போடுகிறார்கள். ஆனால், யாரும் அப்படி நடப்பது இல்லை. தன்னையே சசிகலாவாக நினைத்துக்கொண்டார்போலும். போயஸ் கார்டனின் நிழல்கள் தொடங்கி, போலீஸ் அதிகாரிகளில் சிலர் வரை சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தார்கள். அதாவது, தன்னைப் பற்றி எந்தப் புகார் வந்தாலும் அது கார்டன் வாசலை எட்டாதவாறு, அந்த போலீஸ் அதிகாரி மூலமாக தடுப்புச் சுவர் எழுப்பியும், அப்படியே கார்டனுக்குள் போய்விட்டால் அம்மா கவனத்துக்கு போய்விடாதவாறு தடுக்க அந்த நிழல் மனிதரைப் பழக்கியும் வைத்திருந்தார். ஆனால், இவற்றை எல்லாம் தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு பலவீனமான நெட்வொர்க் கொண்டவரா ஜெயலலிதா?

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆடியோ வெளியானது. அடுத்து சில படங்கள் வெளியாகின. தி.மு.க-வைச் சேர்ந்த திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் இணைந்து இருக்கும் காட்சிகள் கொண்டவையாக அந்தப் படங்கள் இருந்தன. அவை ஒட்டுப் படங்கள் எனவும் செய்திகள் வந்தன. இருவருக்கும் பரஸ்பர நட்பு இருந்ததைத் தெரிந்துகொண்டு எதிரிகள் உருவாக்கிய ஆதாரங்களாக அவை இருந்தன.

இரண்டு எம்.பி-க்கள்... இரண்டு கட்சிகள்... இரண்டு தலைவர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போது அப்படிப்பட்ட ஆதாரம் தேவைப்படாத அளவுக்கு விமானநிலையத்தில் திருச்சி சிவாவைப் பார்த்ததும், அவரது சட்டையைப் பிடித்து நான்கு அறை விட்டுள்ளார். அந்த இடத்தில் நிலைகுலைந்துபோயிருக்கிறார் சிவா. ‘ஜெயலலிதாவை அநாகரிகமாகத் திட்டி ஏன் பேசினாய்?’ என்று சொல்லி அடித்ததாக சிவா சொல்கிறார். சசிகலா அதற்காக அடிக்கவேண்டுமானால் எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், விவகாரம் வேறு. நாகரிக வார்த்தைகளாகச் சொல்ல முடியாதவை.

டெல்லி விமானநிலையத்தில் நடந்த இந்த மோதலைக் கேள்விப்பட்டதும் திருச்சி சிவாவைவிட அதிர்ச்சி அடைந்தவர் ஜெயலலிதாதான். போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்ட சசிகலா புஷ்பா, மிகக் கடுமையாக எச்சரித்து அனுப்பிவைக்கப்பட்டார். அப்போதும் அவர் குற்றத்தை உணர்ந்தவராக இல்லை. மாநிலங்கள் அவையில் மறுநாள் பேசிய சசிகலா புஷ்பா, ‘ இரண்டு நாட்களாக என்னைப் பற்றியும் திருச்சி சிவாவைப் பற்றியும் ஒரு செய்தி பரவிவருகிறது. திருச்சி சிவாவை ஏதோ உணர்ச்சிவசப்பட்டு அடித்துவிட்டேன். அதற்காக திருச்சி சிவாவிடமும் அவர் சார்ந்த கட்சித் தலைமையிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். என்னை ராஜினாமா செய்யச் சொல்லி என் கட்சித் தலைமை வலியுறுத்துகிறது. நான் ராஜினாமா செய்ய மாட்டேன். நேற்று எனது கட்சித் தலைவரைச் சந்தித்தேன். அவர் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் என்னை அடித்தார். தமிழ்நாட்டில் எனக்குப் பாதுகாப்பு இல்லை. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனக்கு அரசு சார்பில் பாதுகாப்பு தர வேண்டும்' என்று அழுதபடி சசிகலா புஷ்பா பேசினார்.

ஜெயலலிதா சட்டமன்றத்துக்குள் நுழைந்த நேரத்தில் சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தார். காலை 11:20 மணிக்கு சசிகலா புஷ்பா பேசி முடித்தார். 11:28 மணிக்கு அவரை நீக்கினார் ஜெயலலிதா. சசிகலா-சிவா சமாசாரங்களின் உண்மை, பொய்மை எந்த அளவு என்பது இருக்கட்டும். ஜெயலலிதா அடித்தாரா இல்லையா என்பதும் அவர்கள்  மட்டுமே அறிந்தது. ஆனால், ஒரு சம்பவம் நடந்ததும் சசிகலாவை அழைத்து விசாரணை செய்து கண்டித்து அனுப்பினார் ஜெயலலிதா. இதை வெளியில் சொல்லிவிட்டார் என்பதால், சசிகலா புஷ்பாவை உடனடியாக நீக்கவும் செய்தார் ஜெயலலிதா. அதுதான் ஜெயலலிதா. தன் மனதுக்குத் தவறு எனப்பட்டதும் அதை உடனடியாகச் செய்யும் தீர்க்கம் அவரிடம் இருக்கிறது.

இதே பிரச்னையில் தி.மு.க பக்கம் என்ன நடந்தது தெரியுமா? திருச்சி சிவாவை அழைத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியிருக்கிறார். ‘இப்படியா நடந்துக்கிறது?’ என்ற தொனியில் பேசி அனுப்பியிருக்கிறார்.

இரண்டு எம்.பி-க்கள்... இரண்டு கட்சிகள்... இரண்டு தலைவர்கள்!

செங்கோட்டையன் மீது, ரமணா மீது, எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீது புகார்கள் எழும்போது ஜெயலலிதா எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் - கருப்பசாமிப் பாண்டியன் மீது, பெரிய கருப்பன் மீது, திருச்சி சிவா மீது புகார்கள் வரும்போது கருணாநிதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் இருக்கும் வித்தியாசம்தான் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்குமான பெரிய வித்தியாசம்!

ஜெயலலிதாவிடம் இருந்து எதையும் மறைக்கலாம். ஆனால் அவருக்குத் தெரியவந்தால், நடவடிக்கை உறுதி. கருணாநிதியிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது. அவருக்கு எல்லாம் தெரியும். தெரிந்தாலும் யார் மீதும் அவரால் நடவடிக்கை எடுக்க முடியாது. இதுதான் இரண்டு கட்சிகளுக்குமான நடைமுறைச் சிக்கல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism