Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

படம்: அ.குரூஸ்தனம்

கழுகார் பதில்கள்!

டி.அந்தோனி துரைராஜ், மயிலாடுதுறை.

தமிழக ஆளுநராக கிரண்பேடியை நியமித்தால் எப்படி இருக்கும்?

தமிழகம், புதுச்சேரியும் அல்ல... ஜெயலலிதா, நாராயணசாமியும் அல்ல. இன்னும் சொன்னால் தமிழகம் வருவதற்கு கிரண்பேடியும் மறுத்துவிடலாம்.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

ஜெயலலிதாவும் ரஜினியும் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள்?

இருவரும் பரஸ்பரம் மனம்விட்டுப் பேசுபவர்கள் இல்லை. அதனால், சாதாரணமாக நலம் விசாரித்துக் கொள்வார்கள். அவ்வளவுதான். ஜெயலலிதா, ‘கபாலி’ பார்த்திருக்க மாட்டார். பார்த்திருந்தால், அதைப் பற்றிப் பேசிக்கொள்ளலாம்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தயாசங்கர் சிங் குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதாக மாயாவதி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதே?

மாயாவதியை தரக்குறைவாகப் பேசியதாக சர்ச்சையில் மாட்டியவர் தயாசங்கர் சிங். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைதான் எடுக்க வேண்டுமே தவிர, அவரது பாணியில் அவர் குடும்பத்தினரை விமர்சிப்பது சரியானது ஆகாது. மாயாவதி கட்சியினர் பேச்சு கண்டிக்கத்தக்கது. இதைத்தான் கிராமத்தில், ‘நாய் கடித்தால் திரும்பிக் கடிக்கக் கூடாது’ என்பார்கள்.

சம்பத்குமாரி, பொன்மலை.

நாடாளுமன்றத்தில் தூங்கிய தேவகவுடா, பிற்காலத்தில் பிரதமர் ஆனதுபோல ராகுல் காந்திக்கும் அந்த ராசி இருக்குமோ?

இப்படி எல்லாமா ராசி இருக்கும்? இதைப் படிக்கும் சிலர், தூக்கம் வராவிட்டாலும் நாடாளுமன்றத்தில் தூங்கிவிடப் போகிறார்கள்.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

இது வரியில்லாத பட்ஜெட் என்கிறார்களே?

வரி போட முடியாத அளவுக்கு விலை அதிகமாகிவிட்டது. எனவே, வரியில்லாத பட்ஜெட்தான்.

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

தமிழ் சினிமாவின் மார்க்கெட், ‘கபாலி’ படம் மூலம் சர்வதேச அளவில் உயர்ந்துவிட்டதா?

மார்க்கெட் அளவில் உயர்வது தனி மனிதர்களுக்குத்தான் நன்மை. சர்வதேச அளவில், தரத்தில் உயர வேண்டும். அப்போதுதான் தமிழகத்துக்குப் பெருமை.

துரை.முருகன், திருப்பாச்சேத்தி.

‘கபாலி’ எதிர்பார்த்த இலக்கை அடைந்துவிட்டதா?

என்ன இலக்கைக் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. வசூல், இலக்கைத் தாண்டிவிட்டது. ரஜினி, தனது இமேஜை தக்கவைத்துக் கொண்டார். பா.இரஞ்சித் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக வளர்ந்துவிட்டார். சோர்ந்து போயிருந்த ரஜினி ரசிகர் மன்றங்கள் துள்ளி எழ ஆரம்பித்து உள்ளன. மற்றபடி, ஒரு சினிமாவுக்கு என்ன இலக்கு இருக்க முடியும்?

தாமஸ் மனோகரன், புதுச்சேரி.

‘‘தமிழ்நாட்டின் உற்றநண்பர் வெங்கய்ய நாயுடு’’ என்று ஜெயலலிதா புகழ்கிறாரே?

மாதத்துக்கு இரண்டு தடவை சென்னைக்கு வந்துவிடுவார் வெங்கய்ய நாயுடு. அவர் மகள் வீடு இங்குதான் இருக்கிறது. எனவே, வெங்கய்ய நாயுடு தமிழ்நாட்டின் உற்றநண்பராகத்தானே இருக்க முடியும்?!

உமரி பொ.கணேசன், மும்பை-37.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை அரசியல் கட்சிகள் பயன்படுத்தத் தடையில்லை என்று தேர்தல் கமிஷன் சொல்லி இருக்கிறதே?

கலாம் குடும்பத்தினர் போட்ட வழக்கில்தான் தனது கருத்தைத் தேர்தல் கமிஷன் இப்படிச் சமர்ப்பித்திருக்கிறது. ஆனால், அப்துல் கலாம் குடும்பத்தினர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்கள். அப்துல் கலாம் பெயரையோ, அவரது படத்தையோ அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்பது அவர்களது வாதம்.

பொதுவாக மக்கள் மன்றங்கள், இளைஞர் அமைப்புகள் அப்துல் கலாம் பெயரைப் பயன்படுத்தினால் பரவாயில்லை. ஆனால் அரசியல் கட்சிகள், அதுவும் தேர்தலில் நின்று வாக்குகளை வாங்கும் கட்சிகள் அவர் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பது குடும்பத்தினர் வாதம். உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்புத் தரப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சிவபாக்யா கண்மணியப்பா, கருப்பம்புலம்.

தேர்தலில் தோற்ற வைத்திலிங்கத்துக்கு ஏற்றமும், நத்தம் விசுவநாதனுக்கு இறக்கமும் ஏன்?

வைத்திலிங்கம் எந்த ஊர், நத்தம் விசுவநாதன் எந்த ஊர் என்பதைக் கவனிக்கவும்.

எம்.வான்மதி, எடப்பாடி.

‘‘வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது’’ என்கிறாரே மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி?

அதுபற்றி வங்கிக் கடன் வாங்கி, திரும்பச் செலுத்தாதவர்கள்தானே கவலைப்பட வேண்டும்?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

 கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!