Published:Updated:

தீவிரம் காட்டும் தி.மு.க... மிதப்பில் அ.தி.மு.க.!

தீவிரம் காட்டும் தி.மு.க... மிதப்பில் அ.தி.மு.க.!
பிரீமியம் ஸ்டோரி
News
தீவிரம் காட்டும் தி.மு.க... மிதப்பில் அ.தி.மு.க.!

கொங்கு மண்டல நிலவரம் எப்படி?

தீவிரம் காட்டும் தி.மு.க... மிதப்பில் அ.தி.மு.க.!

ட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெறுவதற்கு பெரிதும் கைகொடுத்த கொங்கு மண்டலத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளின் தலைமை கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கின்றன. ஆனால், கள நிலவரம் எப்படி இருக்கிறது?

சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொகுதிகளையாவது தி.மு.க கைப்பற்றியது. ஆனால், கொங்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே தி.மு.க வெற்றிபெற்றது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய தலைமைக் கழகத்தில் இருந்து சிலர் அனுப்பப்பட்டனர்.

‘‘சட்டமன்றத் தேர்தலில், சில வேட்பாளர்கள் செலவே செய்யவில்லை. ஒரு சில வேட்பாளர்கள் தேர்தல் வேலையில் ஆர்வம் காட்டவில்லை. என்.கே.கே.பி.ராஜாவின் ஆதரவாளர்கள் தேர்தல் வேலையில் ஈடுபடவில்லை என்கிற விவரங்களைச் சொல்லியிருக்கிறோம். அதன்பிறகுதான், கொங்கு மண்டலத்தை நோக்கி ஸ்டாலின் வரத்தொடங்கி இருக்கிறார்” என்றார் தி.மு.க நிர்வாகி ஒருவர்.

இன்னொரு தி.மு.க நிர்வாகியிடம் பேசியபோது, “சமீபகாலமாக மாற்றுக் கட்சியிலிருந்து பலர் தி.மு.க-வில் சேர்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஈரோட்டில் மாற்றுக்கட்சியில் இருந்து சேருவதற்குத் தேதி கேட்டபோது,  ‘நானே ஈரோட்டுக்கு வருகிறேன்’ என்று தேதி கொடுத்து ஸ்டாலின் இங்கு வந்துபோனார். தீரன் சின்ன மலையின் 211-வது நினைவுநாளை முன்னிட்டு கடந்த 2-ம் தேதி ஓடாநிலைக்கு வந்த ஸ்டாலின், ‘தீரன் சின்னமலைக்கு தி.மு.க-தான் சிலை நிறுவியது. அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துவிட்டுப் போயிருக்கிறார்” என்றார்.

கடந்த வாரம் திருப்பூர், இந்த வாரம் ஈரோடு, கோவை என கொங்கு மண்டலத்தைக் குறிவைத்து காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின். இதற்கெல்லாம் காரணம், சட்டமன்றத் தேர்தல் போல் இல்லாமல் வரும் உள்ளாட்சித் தேர்தலிலாவது அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்கிற எண்ணம்தான்.

தீவிரம் காட்டும் தி.மு.க... மிதப்பில் அ.தி.மு.க.!

‘‘இதுவரை, பல மாவட்டங்களில் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தலைமை, கொங்கு மண்டலத்தில் உள்ள நிர்வாகிகள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவேதான், இந்தப் பகுதிகளுக்கு நேரடியாக விசிட் அடித்து உண்மையான காரணங்களைத் தொண்டர்களிடம் கேட்டறிந்து, அதற்கு ஏற்றாற்போல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தளபதி நினைக்கிறார். மொத்தத்தில், கொங்கு மண்டலத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றியை அடைந்தே தீரவேண்டும் என்பதில் ஸ்டாலின் குறியாக இருக்கிறார்’’ என்கின்றனர் உடன்பிறப்புகள்.

கொங்கு மண்டலத்தின் கோட்டையை அ.தி.மு.க கைப்பற்றியபோதிலும், உட்கட்சிப் பூசலால் அ.தி.மு.க-வினர் சிதறிக்கிடக்கிறார்கள் என்கிறார்கள். அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் தோப்பு வெங்கடாசலம் இருக்கிறாராம். இப்போதைய மாவட்ட அமைச்சர் கருப்பண்ணனுக்கு அவர் சரியாக ஒத்துழைப்பது அளிப்பது இல்லையாம். அமைச்சர் பங்கேற்கும் விழாக்களுக்கும் தோப்பு வெங்கடாசலம் போவதில்லை என்கிறார்கள். முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கட்சிக் காரர்களைக் கண்டுகொள்வதே இல்லையாம். தனக்கு சசிகலாவின் ஆதரவு இருக்கிறது என்பதால், கட்சி நிர்வாகிகளைக்கூட அவர் மதிப்பதில்லை என்று சொல்கிறார்கள். இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் செயல்படுவதால், சட்ட மன்றத் தேர்தல்போல உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறுவது சந்தேகம்தான் என்கிறார்கள். தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, ஓடாநிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கருப்பண்ணன், வேலுமணி, தங்கமணி, எடப்பாடி பழனிச்சாமி, கரூர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். சட்டமன்றம் நடைபெற்றதால் தொகுதி எம்.எல்.ஏ சிவசுப்பிரமணியம் மட்டும் பங்கேற்ப தற்கு முதல்வர் அனுமதி அளித்து இருந்தாராம். எனவே, அவர் மட்டும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இருந்து கணிசமான வெற்றி பெற வேண்டும் என்பதில் தி.மு.க தீவிரம் காட்டுகிறது. அ.தி.மு.க தரப்பில் மிதப்பில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

- வீ.மாணிக்கவாசகம், படங்கள்: ரமேஷ் கந்தசாமி