Published:Updated:

131 கொத்தடிமைகள்... 89 பொம்மைகள்...

131 கொத்தடிமைகள்... 89 பொம்மைகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
131 கொத்தடிமைகள்... 89 பொம்மைகள்...

சட்டசபையில் விறுவிறு!அரசியல்

131 கொத்தடிமைகள்... 89 பொம்மைகள்...

ரோக்கியமான விவாதங்கள்... அந்த விவாதங்களின் முடிவால் உருவாகிய முத்தான திட்டங்கள் என்று வரலாற்றுப் பின்னணிகொண்ட தமிழக சட்டசபையின் நாகரிகம் இன்று கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆட்சியைப் பிடித்த அ.தி.மு.க-வில் இருக்கும் 133 சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், புதியவர்கள். எதிர்க் கட்சியாக அசுர பலத்தோடு அமர்ந்திருக்கும் 89 தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சட்டசபையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். இந்தப் பழையவர்களுக்கும் புதியவர்களுக்கும் நடைபெறும் வார்த்தை போர்தான் இன்றைய சட்டமன்றத்தின் பரபரப்பு நிலைக்குக் காரணமாகிவிட்டது.

தி.மு.க உறுப்பினர் சேகர்பாபு கடந்த வாரம் நிதி மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றபோது, அமைச்சரவையில் புதுமுகமாக யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களின் துறைகளில்தான் கேள்விகளைக் கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்கள் திணறுவதைப் பார்த்து தி.மு.க-வினர் நையாண்டி செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால் புதுமுக அமைச்சர்கள் துறை சம்பந்தமாகக் கேள்விகள் எழுப்பினால், அ.தி.மு.க-வின் முன்னணி அமைச்சர்களே அதற்குப் பதில் சொல்லிச் சமாளிக்கும் நிலை. தி.மு.க-வின் பி.டி.ஆர்.தியாகராஜன் அமெரிக்கன் இங்கிலீஷில் 10 நிமிடங்கள் தொடர்ந்து பேச, அதற்குப் பதில் சொல்ல முடியாமல் அமைச்சர்கள் அமைதிகாத்தனர். அதற்குப் பதில் சொல்லிய அ.தி.மு.க உறுப்பினர் மாஃபா பாண்டியராஜனை, ‘வருங்கால கேபினட் அமைச்சரா இவர்?’, என்று தி.மு.க-வினர் நக்கல் செய்யத் தொடங்கினர். வழக்கமாகச் சட்டசபையில் தி.மு.க உறுப்பினர்களில் அதிகமாக நையாண்டி செய்பவர் துரைமுருகன்தான். ஆனால், இந்த முறை பொன்முடி, ஜெ.அன்பழகன், ரங்கநாதன், சேகர்பாபு எனப் பலரும் அ.தி.மு.க-வினருக்கு எதிராக நக்கல்களும், நையாண்டிகளும் செய்ய, சபாநாயகர் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறார். சபாநாயகருக்கு எதிராக இவர்கள் புதிது, புதிதாக எழுப்பும் கோஷங்களால் அ.தி.மு.க-வினரே திக்குமுக்காடுகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து அதன் மீதான விவாதங்கள், அதன் தொடர்ச்சியாக துறைரீதியான மானியக் கோரிக்கைகள் தொடங்கி விட்டன. திங்கள்கிழமை கூட்டுறவு மானியக் கோரிகை தொடங்கியது. அவை தொடங்கியதற்குப் பின் அவைக்கு வந்த ஜெயலலிதா, ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என்ற பெயர் மாற்றுவதற்கான மசோதாவைத் தாக்கல்செய்ய, அதை வரவேற்று தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பேச, அவையில் அமர்ந்திருந்த ஜெ-வின் முகத்தில் ஏக மகிழ்ச்சி. வனத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்ற செவ்வாய்க்கிழமை அன்று மசோதாவைப் பற்றிப் பேச எழுந்தார் குன்னூர் தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் ராமு. ஜெயலலிதாவைப் புகழ்ந்துகொண்டே வந்தவர் ஒரு கட்டத்தில், “அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளின்டனை, மாண்புமிகு அம்மா சந்தித்த எதிரொலியே இன்று ஹிலாரி கிளின்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்” என்று பேசினார். அவையில் பெருத்த கரவொலி.

131 கொத்தடிமைகள்... 89 பொம்மைகள்...

எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வில்லிவாக்கம் ரங்கநாதன், “தி.மு.க ஆட்சியில்தான் பெரும்பாலான மின்துறை திட்டங்கள் செயல்படுத்தபட்டன” என்று கூற அதற்கு குறுக்கீடு செய்த முதல்வர், “உங்கள் ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தியதே நாங்கள்தான். இன்று தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது” என்றார். அதற்கு துரைமுருகன், “மின்சாரத் துறை மானியக் கோரிக்கை நடைபெறும்போது அந்தத் துறை அதிகாரிகள் யாருமே இங்கு இல்லை” என்று குண்டை போட, சபாநாயகர், “நான் அவர்களுக்கு டி.வி-யில் நேரடியாக ஒளிபரப்பு செய்துகொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன். அவர்கள் அறையில் இருந்தே

டி.வி-யில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றார். “டி.வி-யில் நேரடி ஒளிபரப்பு செய்வது சபை சட்டப்படி தவறுதானே” என்று துரைமுருகன் கேட்டதும், சபாநாயகர் ‘‘அது என் அதிகாரம்” என்றார். அருகில் இருந்த ஸ்டாலின் எழுந்து பேச...ஆனால், அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்பதால், அதைப் பற்றிப் பேசமுடியாது என்றதோடு, ஸ்டாலின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார் சபாநாயகர். இதைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தி.மு.க-வினர். மின்துறை மானியக் கோரிக்கையில் தி.மு.க-வினர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் ஜெயலலிதாவே பதில் அளித்தார்.

அடுத்து குண்டு வீசினார் பரமக்குடி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் முத்தையா. அவர் பேசியபோது, “89 வயக்காட்டு பொம்மைகளுக்குக் குருவிகள் பயப்படலாம். ஆனால், சீறும் சிங்கம் பயப்படாது” என்று சொல்ல, அனைத்து தி.மு.க உறுப்பினர்களும் எழுந்து சபாநாயகரை நோக்கி வந்தனர். தங்களைத்தான் வயக்காட்டுப் பொம்மைகள் என்று சொன்னதாகக் குற்றம்சாட்டினார்கள்.

அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தி.மு.க உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் சபாநாயகர் மறுத்துவிட்டார். அதே நேரம் முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் முத்தையாவின் பேச்சை ரசித்துக் கேட்டுகொண்டிருந்தார். தி.மு.க-வினர் கூச்சலிட்டதால், அதற்குப் பதில் அளிக்க எழுந்த முதல்வர், “வயக்காட்டுப் பொம்மை என்று அவர் யாரையும் தனிப்பட்டுக் கூறவில்லை. உங்களைச் சொன்னார் என்று ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள். வயக்காட்டுப் பொம்மை என்பது சபைக்குறிப்பில் இருந்து நீக்கும் அளவுக்கு ஒவ்வாத வார்த்தை அல்ல” என்று பதில் அளித்துவிட்டு, தி.மு.க-வினர் கூச்சலிட்டுக் கொண்டிருந்தபோதே, அவையில் இருந்து கிளம்பிவிட்டார் ஜெயலலிதா.

131 கொத்தடிமைகள்... 89 பொம்மைகள்...

“நீதிவேண்டும், நீதிவேண்டும். சபாநாயகர் சர்வாதிகாரம் ஒழிக” என்று தி.மு.க-வினர் முழக்கமிட்டுக்கொண்டே இருந்தனர். தொடர்ந்து தி.மு.க-வினர் சபைக் குறிப்பில் இருந்து அந்த வார்த்தையை நீக்காவிட்டால், உள்ளிருப்புப் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்தனர். சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் சபாநாயகரிடம் சென்று அவையை ஒத்திவைத்து விடுங்கள் என்று அறிவுறுத்த, அவையை ஒத்திவைக்கிறேன் என அறிவித்தார் சபாநாயகர்.

தமிழக சட்டமன்றத்தின் சமீபகால வரலாற்றில் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தது இப்போதுதான்.

சபாநாயகர் அவையைவிட்டுச் சென்றும், தி.மு.க-வினர் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து தொடர்ந்து முழக்கமிட்டுக்கொண்டே இருந்தனர். சில நிமிடங்கள் மட்டும் தி.மு.க உறுப்பினர்கள் உள்ளே உட்கார்ந்து இருந்துவிட்டு வெளியே வந்தார்கள். வெளியேறிய தி.மு.க உறுப்பினர்கள், ‘‘நாங்க நெருப்புடா... திரும்பி வந்துட்டோம்ல” என்று சொல்லியபடியே மீண்டும் சபைக்குள் போனார்கள்.

நிருபர்களிடம் பேசிய  ஸ்டாலின், “89 வயக்காட்டுப் பொம்மைகள் என்று அ.தி.மு.க உறுப்பினர்கள் பேசியது அவைக் குறிப்பில் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். 131 கொத்தடிமைகள், 131 சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று கூறியதை அவைக்குறிப்பில் இருக்க வேண்டும் என்று நான் பேசினேன். அதை, அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். சபாநாயகர் சர்வாதிகாரப் போக்கோடு செயல்படுகிறார். இது வெட்கப்பட வேண்டிய ஒன்று” என்று தெரிவித்தார்.

வியாழக்கிழமை அன்று சபைக்கு வந்த தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அனிந்து வந்தனர்.

சபை தனது அலுவல்களை முடிக்காமல் ஒத்திவைக்கப்பட்டதும், தி.மு.க-வினர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதும், சட்டமன்ற வரலாற்றில் முக்கிய நிகழ்வாக மாறிவிட்டது.

- அ.சையது அபுதாஹிர், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துக்குமார்