
அதிரடி

வெகு விமரிசையாக வெற்றிலை பாக்குவைத்து அழைத்து வரப்பட்ட ஆனந்திபென் படேல், முதல் அமைச்சர் பதவியில் இருந்து திடீரென விலகிவிட்டார். அவராக விலகினாரா, பதவி விலக வற்புறுத்தப்பட்டாரா என்பதுதான் குஜராத் மாநிலத்தையும் தாண்டி நடக்கும் விவாதம்.
குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் ஆனந்திபென் படேல். ஆசிரியராகப் பணிபுரிந்து பின்னர், அரசியலுக்கு வந்தவர். ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில், ஒருமுறை பள்ளிக் குழந்தைகளைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார் ஆனந்திபென். அப்போது, சர்தார் சரோவர் அணையில் இரண்டு மாணவர்கள் தவறி விழ, உடனே அணையில் குதித்து அவர்களைக் காப்பாற்றினார் ஆனந்திபென். அதற்காக அப்போது, குடியரசுத் தலைவரிடம் விருதும் பெற்றுள்ளார். பிறகுதான், அவரது அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. நரேந்திரமோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் ஆனந்திபென் இடம்பெற்றார். அப்போது, மோடியின் நம்பிக்கைக்கு உரியவராக அவர் இருந்தார்.
மோடிக்குப் பிறகு குஜராத் முதல்வராகப் போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தபோது, ஆனந்திபென்னுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. படிப்படியாக அரசியலில் உயர்ந்தவர் திடீரென இறங்கியதுதான் அதிர்ச்சிக்குரியது.

பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை 75 வயதைத் தாண்டியவர்கள் மத்திய அமைச்சர், மாநில முதல்வர் போன்ற பதவிகளில் இருக்க முடியாது என்ற நடைமுறை உள்ளது. ஆனந்திபென், இன்னும் சில மாதங்களில் 75 வயதை எட்ட இருக்கிறார். அதனால்தான், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று சிலர் சமாதானம் சொல்கிறார்கள். ‘‘ஆனந்திபென் தாமாக முன்வந்து ராஜினாமா செய்யவில்லை, மேலிட நிர்பந்தம் காரணமாகவே அவர் ராஜினாமா செய்தார்” என்று சிலர் சொல்கிறார்கள்.
‘‘ஆனந்திபென் ஆட்சிக் காலத்தில் பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிறைய சிறப்புத் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். கத்திஷீல் குஜராத் (Dynamic Gujarat) என்ற இயக்கத்தைத் தொடங்கி மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வந்தது இவரது அரசு. 100 நாட்களில் முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் எதிர்பார்த்த இலக்கைவிட சற்று அதிகமாகவே சாதித்துக் காட்டியது. கிராமப்புற மக்களுக்குச் சுகாதாரத்தைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக 5 லட்சம் கழிவறைகள் கட்டித்தரப்பட்டு உள்ளன. சுய உதவிக்குழுக்களையும் வங்கிகளையும் ஒருங்கிணைத்துப் பெண்கள் எளிதாகக் கடன் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது” என்று இவரது சாதனைகளை குஜராத் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதுகின்றன.
அதேநேரத்தில், ஆனந்திபென் மீதான விமர்சனங்களையும் அதிகமாகப் பார்க்க முடிகிறது.

மோடி அமைச்சரவையில் ஆனந்திபென் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, தனது மகளின் நிறுவனத்துக்குச் சொற்ப விலைக்கு நிலத்தை ஆனந்திபென் வழங்கியதாகவும், அந்த நிலத்தைக் கோடிக்கணக்கான மதிப்பில் அவர் இன்னொரு நிறுவனத்துக்கு விற்றதாகவும் சர்ச்சை கிளம்பியது. படேல் இனமக்கள் இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு நடத்திய போராட்டம் குஜராத்தை உலுக்கியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. ஒரே நாளில் ஒன்பது உயிர்கள் பலியாகின. மத்திய, மாநில அமைச்சர்கள் ஆறு பேரின் வீடுகள், அலுவலகங்கள் தாக்கப்பட்டன. வன்முறைகளைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அப்போது, ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆனந்திபென், அந்தச் சம்பவம் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் இறங்கியதும் விமர்சனத்தைக் கிளப்பியது. கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி-யின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக ஆனந்திபென்னின் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டன.
உனா என்ற இடத்தில் இறந்த பசு மாட்டின் தோலை உரித்ததாக, தலித் சமூகத்தைச் சேர்ந்த 7 பேர், பசுக் காவலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் மிகமோசமாகத் தாக்கப்பட்டனர். அதைக் கண்டு கொந்தளித்த தலித் சமூகத்தினர் முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். தலித் மக்களின் நலனைக் காக்க குஜராத் அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இது, ஆனந்தி பென்னின் அரசியல் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாக மாறியது. இவரைப் பதவி விலகவைப்பதன் மூலமாக, அரசு மீதான எதிர்ப்பு அலையைக் குறைக்கலாம் என்று மோடியும் அமித்ஷாவும் நினைத்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆனந்திபென்னைப் பற்றி நாம் ஏன் அதிகம் பேச வேண்டியிருக்கிறது என்றால், தமிழக கவர்னராக அவரை நியமிக்கலாம் என்ற யோசனை டெல்லிக்கு இருப்பதால்தான்.
- நிவேதா சேகர்