Published:Updated:

மிஸ்டர் கழுகு : தாது... தூது... சசிகலா புஷ்பா!

மிஸ்டர் கழுகு :  தாது... தூது... சசிகலா புஷ்பா!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு : தாது... தூது... சசிகலா புஷ்பா!

மிஸ்டர் கழுகு : தாது... தூது... சசிகலா புஷ்பா!

மிஸ்டர் கழுகு :  தாது... தூது... சசிகலா புஷ்பா!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து பறந்து வந்தார் கழுகார்.

‘‘உச்ச நீதிமன்றத்தில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதில் எப்போது தீர்ப்பு வரும் என்பது சஸ்பென்ஸாக நீடித்து வருகிறது. இந்த நேரத்தில் அந்த வழக்குக்காக பெங்களூரு நீதிமன்றத்தில் ஏறி இறங்கிய வழக்கறிஞர்களுக்கு வரிசையாகப் பதவிகள் கொடுக்கப்பட்டு உள்ளன” என்றபடி கழுகார் தொடங்கினார்.

‘‘அரசு வழக்கறிஞர் மாற்றம் பற்றிக் கடந்த இதழில் சொல்லி இருந்தீர். இப்போது நியமனம் பற்றிச் சொல்லப் போகிறீரா?” என்றோம். தலையாட்டியபடி தொடங்கினார்.

‘‘ஆம். புதிய அரசாங்கம் அமைந்தவுடன் அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்படுவார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்போல், இதுவும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால், தொடர்ந்து இரண்டாவது முறையும் அ.தி.மு.க ஆட்சியே அமைந்ததால், பெரிதாக மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரத்தில் அதிரடியாக அரசு வழக்கறிஞர் பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 90 அரசு வழக்கறிஞர்களில், 45 பேரிடம் திடீரென ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டது. அவர்களில்  அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் உட்பட 45 அரசு  வழக்கறிஞர்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டது. அதற்கடுத்து ஒருசில நாட்களில் புதிதாக அந்த இடங்களுக்கு 45 புதிய வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.”

மிஸ்டர் கழுகு :  தாது... தூது... சசிகலா புஷ்பா!

‘‘அரசு வழக்கறிஞர் நியமனங்களில் யார் கை ஓங்கி உள்ளது?”

‘‘தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரும் ராஜ்யசபா உறுப்பினருமான நவநீதகிருஷ்ணன், பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், நாமக்கல் செந்தில் ஆகியோர் கைகாட்டியவர்கள்தான் இந்த முறை அரசு வழக்கறிஞர் பொறுப்புக்கு வந்துள்ளனர். எப்போதும், அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்களும், அவர்கள் சொல்லும் வழக்கறிஞர்களும்தான் இந்த நியமனத்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால், இந்த முறை அதெல்லாம் அடிபட்டுப்போனது. அதுபோல, கடந்தமுறை மனோஜ் பாண்டியனின் ஆதரவாளர்கள் நிறையப் பேர் அரசு வழக்கறிஞர்களாக இருந்தனர். இந்தமுறை அதுவும் நடக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் நடந்தபோது, தொடர்ந்து பெங்களூரு நீதிமன்றத்துக்கு விசிட் அடித்த வழக்கறிஞர்களுக்கு அதிக வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணனின் பரிந்துரைப்படி, எம்.கே.சுப்பிரமணியன் அரசு பீளிடராகக் கொண்டுவரப்பட்டு உள்ளார். ஆனால், மாநில வழக்கறிஞர் அணித் தலைவர் சேதுராமனின் ஆதரவாளர்களுக்கு இந்தப் புதிய பட்டியலில் பெரிதாக இடம் இல்லை. ஆனால், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக இருந்தவர்களில் கோமதிநாயகம், செல்லப்பாண்டியன், அரவிந்த் பாண்டியன் என அனைவரையும் ராஜினாமா செய்யச் சொல்லி உத்தரவு வந்தது. அதில் தப்பித்தது, மாநில வழக்கறிஞர் அணித் தலைவர் சேதுராமன் மட்டும்தான். அவர் இப்போதும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக நீடிக்கிறார்.”

‘‘ஓஹோ!”

‘‘தற்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ள மணிசங்கர், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு ஆஜரானவர். அய்யாதுரை, மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியின் ஜூனியர். ஓ.பி.எஸ் உறவினர் செல்லப்பாண்டியனுக்குப் பதிலாக மதுரையைச் சேர்ந்த புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.டி.எஸ்.மூர்த்தி சிறப்பு அரசு பீளிடராக இருந்தவர்.”

‘‘ம்!”

‘‘ஆனால், இந்த நியமனங்களைவிட, சர்வ அதிகாரம் படைத்த தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் (தமிழ்நாடு முழுவதற்கும்) பொறுப்புக்கும், அரசுத் தலைமை வழக்கறிஞர் பொறுப்புக்கும் யார் வருவார்கள் என்பதில் கடும் எதிர்பார்ப்பும் சஸ்பென்ஸும் இருக்கிறது. இதில், தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் பொறுப்புக்கு தமிழக அரசு, மூத்த வழக்கறிஞர் ராஜரத்தினத்தின் பெயரை சிபாரிசு செய்துள்ளது. அது தற்போது நீதிபதிகள் பரிந்துரையில் உள்ளது. இந்த ராஜரத்தினம், பி.குமாரின் ஜூனியர். பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில், பி.குமாருக்கு வலதுகரமாகச் செயல்பட்டவர். அதுபோல, தற்போது அரசுத் தலைமை வழக்கறிஞராக உள்ள சோமையாஜியிடம் ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டுவிட்டது. அவர் இடத்துக்கு மூத்த வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்துக்குமாரசுவாமி தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இவரைக் கொண்டுவருவதில் அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் முனைப்பாக உள்ளார். மற்றவர்கள் யாரும் இந்த இடத்துக்குப் பெரிதாக முயற்சிக்கவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனால், அடுத்த அரசுத் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமிதான் என்கிறது நீதித்துறை வட்டாரம்.”

மிஸ்டர் கழுகு :  தாது... தூது... சசிகலா புஷ்பா!

‘‘யார் வந்தால் என்ன..? தொடர்ந்து நீதிமன்றத்தில் குட்டு வாங்கிக்கொண்டே இருக்கிறது அரசு. அதைத் தடுக்கக் கூடியவர்களாக இவர்கள் இருக்க வேண்டும்” என்றபடி சசிகலா புஷ்பா மேட்டருக்கு வந்தார் கழுகார்.

‘‘சசிகலா புஷ்பா அனல்,

அ.தி.மு.க-வை இன்னும் சூடாகவே வைத்துள்ளது. ‘எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. என்னை மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தினார்கள். என் தலைவர் என்னை அடித்தார். பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே இருக்கிறது?’ என்று சசிகலா புஷ்பா கிளம்புவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ஜெயலலிதா. இந்த அளவுக்குத் துணிச்சல் சசிகலா புஷ்பாவுக்கு எங்கிருந்து வந்தது? இவ்வளவு நாள் யாருக்கும் வராத தைரியம் இப்போது மட்டும் அவரிடம் இருந்து எப்படி வெளிப்பட்டது? அவரைப் பின்னால் இருந்து யாராவது இயக்குகிறார்களோ என்கிற சந்தேகம் கலந்த அதிர்ச்சி அ.தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல, அனைத்துக் கட்சியினருக்கும் இருக்கிறது.”

‘‘இருக்கத்தானே செய்யும்?”

‘‘சசிகலா புஷ்பா புகாருக்குப் பின்னணியில் தாதுமணல் விவகாரம் இருக்கலாம் என்று சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள் தென் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர்கள். தாதுமணலை அள்ளி அதில் உள்ள தாதுக்களைப் பிரித்து எடுத்து அரசே விற்பனை செய்யும் என அண்மையில் தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. ஆளுநர் உரையில் இதுபற்றிக் குறிப்பிட்டு இருந்தார்கள். பட்ஜெட் விவாதங்களுக்குப் பதில் அளித்துப் பேசிய நிதி அமைச்சர்

மிஸ்டர் கழுகு :  தாது... தூது... சசிகலா புஷ்பா!

ஓ.பன்னீர்செல்வம், ‘தாது மணலைப் பிரித்து எடுக்கும் ஆலையை தமிழக அரசே நிறுவி இந்தத் தொழிலில் ஈடுபடும்’ என அறிவித்தார். தாது மணல் ஆலையை அரசு அமைத்தால் இந்தத் தொழிலில் பல வருடங்களாகக் கோலோச்சிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் நிச்சயமாகப் பாதிக்கப்படும். அதனால், தமிழக அரசைப் பணிய வைக்கும் முயற்சியாக தாதுமணல் பிசினஸ் புள்ளிகள் சிலர், சசிகலா புஷ்பாவை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்களோ என்கிற சந்தேகத்தை சிலர் கிளப்புகிறார்கள்.”

‘‘வைகுண்ட ராஜனுக்கும் ஜெயலலிதாவுக்கும் சில வருடங்களாக மோதல் நடக்கிறதே?”

‘‘ஜெயலலிதாவுடன் சமாதானம் ஆக முடியவில்லை. மத்திய அரசின் தயவை எதிர்பார்த்து இருந்தார். அவருக்கு டெல்லி லாபி செய்தவர்களில் முக்கியமானவராக சசிகலா புஷ்பா இருந்துள்ளாராம். திருச்சி சிவாவுடன் பழகியது மட்டுமல்ல, கனிமொழியையும் தொடர்ந்து சந்தித்துப் பேசியுள்ளாராம் சசிகலா புஷ்பா. அதன்பிறகுதான், அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. இப்போது கட்சியைவிட்டே நீக்கப்பட்டுள்ளார். ‘இது அவர்களது சொந்தக் கட்சி விவகாரம், இதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எங்களை ஜெயலலிதாவிடம் இருந்து முழுமையாகப் பிரிக்க எங்கள் அரசியல் எதிரிகள் சதி செய்கிறார்கள்’ என்று வைகுண்டராஜன் தரப்பினர் சொல்லி வருகிறார்கள்.”

‘‘சசிகலா புஷ்பாவின் எம்.பி பதவி பறிபோகுமா?”

‘‘அவராகவே கட்சி மாறியினால் பதவிபோகும். ஆனால், கட்சியைவிட்டுத் தலைமை நீக்கியதால் அவரது பதவி போகாது என்பதே சட்ட நிலைமை. இதை ஜெயலலிதா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இப்படித்தான் சமாஜ்வாடி கட்சியைவிட்டு அமர்சிங்கும் ஜெயப்பிரதாவும் நீக்கப்பட்டார்கள். உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவானது. அதற்குள் அவர்கள் பதவிக்காலம் முடிந்ததால் நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. எனவே, இதில் சிக்கல் தொடரவே செய்கிறது!”

‘‘சசிகலா புஷ்பா மீது வழக்குகள் பாயும் என்கிறார்களே?’’

‘‘அ.தி.மு.க-வில் கடந்த 5 ஆண்டுகளில் சசிகலா புஷ்பாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. நெல்லை மாவட்டத்தில் கோலோச்சிய முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ்பாண்டியன் ஆகியோரை ஓரம்கட்டி விட்டு,

மிஸ்டர் கழுகு :  தாது... தூது... சசிகலா புஷ்பா!

அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து பதவிகளைப் பெற்று மின்னல் வேகத்தில் அவர் முன்னுக்கு வந்தார். சசிகலா புஷ்பாவை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் எல்லாம் நெல்லை மாவட்ட அரசியல் களத்தில் டம்மி ஆனார்கள். ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியை குறிவைத்துதான் அரசியல் காய்களை நகர்த்தினார். அங்கும் ஒரு ஆதரவு கோஷ்டியை உருவாக்கி வைத்தார். அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள், கார்டனுக்குள் செல்வாக்கு உள்ளவர்கள் என்று பலர் சசிகலா புஷ்பா வளையத்துக்குள் இருந்துள்ளார்கள். அவர்கள்தான் இப்போது கிலி பிடித்துக் கிடக்கிறார்கள். சசிகலா புஷ்பாவோடு நெருக்கமாக இருந்த அ.தி.மு.க-வினர் பற்றிய விசாரணைகளுக்கு இடையே, சசிகலா புஷ்பா மீது ஏதாவது புகார்கள் இருக்கிறதா என்றும் உளவு போலீஸார் தூசி தட்டி வருகிறார்கள். சசிகலா புஷ்பா திருவான்மியூரில் 80 ஆயிரம் ரூபாய் வாடகையில், குடியிருக்கும் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோன

அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள் பட்டியலும் தயாராகி வருகிறதாம்.”

‘‘தூத்துக்குடி பிரமுகர் கொலை வழக்கை ஏதோ சொல்லி முடிச்சுப் போடுகிறார்களே?”

‘‘தூத்துக்குடி அ.தி.மு.க கவுன்சிலர் வெள்ளைப் பாண்டி கொலை அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. வெள்ளைப்பாண்டி மகள், ‘என் அப்பாவை கூலிப்படை ஏவி கொலை செய்தது சசிகலா புஷ்பாதான்’ என்று கிளப்பினார். சசிகலா புஷ்பாவின் செல்போன் உரையாடல்களைக் குறிப்பிட்டு அப்போது மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தார்.  ‘பழிக்குப்பழியாக இந்தக் கொலை நடந்தது’ என்று அப்போது இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அந்த வழக்கு மீண்டும் உயிர்பெறும் என்கிறார்கள். வெள்ளைப்பாண்டி கொலை வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.”

‘‘சசிகலா புஷ்பா கணவர், மகன்  முன் ஜாமீன் கேட்டுள்ளார்களே?”

‘‘சசிகலா புஷ்பாவின் தரப்பில் சென்னை அண்ணா நகர் திருமங்கலத்தில்,  ‘சசி லேடீஸ் ஹாஸ்டல்” நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி டெல்லியில் சசிகலா புஷ்பா ஜெயலலிதா மீது புகார் கூறிய நிலையில் அவரது ஹாஸ்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்தச் சமயத்தில் சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வரன் திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு ஆகஸ்ட் 3-ம் தேதி மனுத்தாக்கல் செய்தனர். அண்ணா நகர் காவல் நிலையத்தில் தங்கள் மீது கொலை மிரட்டல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அப்படி எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். சசிகலா புஷ்பா மீது வக்கீல் பாண்டியன் என்பவர் திருச்சி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவோம் என்று அந்த வக்கீல் சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது சசிகலா புஷ்பா கைது விரைவில் நடக்கலாம்” என்றபடி பறந்தார் கழுகார்!

‘‘பெஞ்ச் மேல ஏறுங்க!”

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் புதுமுக அமைச்சர். சட்டசபையில் அவர் துறை குறித்துத்தான் கேள்வி என்று தெரியாமல் அமர்ந்து இருக்க, அருகில் இருந்தவர்கள் அவரை எழுப்பிப் பேசவைத்தனர். பின்வரிசையில் இருந்த

தி.மு.க-வினர், ‘அமைச்சர் எங்கிருந்து பேசுகிறார் என்றே தெரியவில்லை. பெஞ்சின் மீது ஏறி நின்று பேசச் சொல்லுங்கள்’ என்று கமென்ட் கொடுக்க கடுப்பாகி விட்டார்கள் அ.தி.மு.க-வினர்!

ரஜினியின் தனிமை!

அமெரிக்கா சிகிச்சைக்குப் பிறகு பலரும் ரஜினியை சந்திக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், யாரையும் சந்திக்க ரஜினி விரும்பவில்லை. டெல்லியில் இருந்து பலமுறை அமித்ஷா தொடர்புகொண்டு கேட்டபோதும் மறுத்துவிட்டாராம். அதிக நேரம் பண்னை வீட்டில் ரஜினி தனிமையில் இருக்கிறார். குடும்ப உறுப்பினர்களைக்கூட அதிகம் சந்திப்பது இல்லை என்கிறார்கள்.

கார்டன் அதிரடி!

வேலூர், திருநெல்வேலி மேயர்களுக்குத் திடீர் சிக்கல். நடக்கப் போகும் உள்ளாட்சித் தேர்தலில் இவர்களுக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைக்காதாம்.

வேலூர் மேயர் மீது 18 புகார்கள் தெரிவிக்கப்​பட்டு அதுபற்றி விசாரிக்க தனி டீம் ஒன்று போடப்பட்டிருக்கிறதாம். உள்ளூர் அமைச்சர் வீரமணிதான் இதற்குக் காரணம்” என்றும் சொல்​கிறார்கள்.

பச்சைமாலுக்கு பச்சைக்கொடி?

மிஸ்டர் கழுகு :  தாது... தூது... சசிகலா புஷ்பா!

சட்டமன்றத் தேர்தலில் குமரியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்தபின், விஜயகுமார் என்பவரை மாவட்டச் செயலாளராக ஜெயலலிதா நியமித்தார். அதற்குப்பின் மாவட்ட மொத்த நிர்வாகிகளும் மாற்றப்பட்டனர். பலரும் பொறுப்புகளில் இருந்து தூக்கப்பட்டனர். இது குமரியில் அ.தி.மு.க-வை மேலும் பலவீனமாக்கியது. மாவட்டச் செயலாளர் யாரையும் அனுசரித்துப் போகவில்லை. அவருக்கு நிர்வாகத் திறன் இல்லை என அடுக்கடுக்கான புகார்கள் அ.தி.மு.க-வினர் கார்டனுக்கு அனுப்பிவைத்தனர். குமரியில் கட்சியைப் பலப்படுத்த மாவட்டத்தை கிழக்கு, மேற்கு எனப் பிரித்து நிர்வகிக்க ஜெயலலிதா முடிவு செய்திருந்தாராம். அதற்கிடையில் சசிகலா புஷ்பா விஷயம் பெரிதானதால் குமரியில் கைவைக்காமல் விட்டுவிட்டாராம் ஜெ. குமரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தால், மாவட்ட பால்வளத் தலைவர் அசோகன் அல்லது முன்னாள் அமைச்சர் பச்சைமாலுக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கலாம். மேற்கு மாவட்டத்துக்கு முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெங்கின்ஸ் நியமிக்கப்படலாம்.