Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

படங்கள்: எல்.ராஜேந்திரன், ஈ.ஜெ.நந்தகுமார்

கழுகார் பதில்கள்!

படங்கள்: எல்.ராஜேந்திரன், ஈ.ஜெ.நந்தகுமார்

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

ஜி.வி.மனோ, தூத்துக்குடி.

மணல்கொள்ளையால், குப்பைக்கழிவுகளால் தாமிரபரணி, வைகை நதிகள் மரணத்தின் விளிம்பில் இருப்பது தமிழக அரசுக்குத் தெரியாதா?

நதிகள் கமிஷன் தருவது இல்லை என்பது உமக்குத் தெரியாதா?

கழுகார் பதில்கள்!

க.பொன்முடி, விழுப்புரம்.

மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த சுவாதியின் கொலை வழக்கில் இதுவரையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது நிஜமானதுதானா?

எந்தவிதமான மாற்றத்தை நீங்கள் எதிர்பார்த்தீர்கள் எனத் தெரியவில்லை. சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்படும் ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் சில செய்திகளைச் சொல்லிவருகிறார். ராம்குமாரின் ஜாமீன் மனு விசாரணையின்போதோ அல்லது குற்ற வழக்கின் விசாரணையின்போதோ அதனை அவர் சொல்லலாம். அதற்கு போலீஸ் வைக்கும் பதிலைப் பொறுத்து மறுபடியும் பரபரப்பு உருவாகலாம்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

அவதூறு வழக்கை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னஉச்ச நீதிமன்றம், விஜயகாந்த் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதே?

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இவ்வளவு அவதூறு வழக்குகள் பதிவாகவில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்தை எதிர்த்து கருத்துச் சொன்னாலே அவதூறு வழக்குப் போடுவது தவறு என்றும், கண்ணை மூடிக்கொண்டு அரசு வழக்கறிஞர்கள் இத்தகைய வழக்குகளைப் பதியக் கூடாது என்றும் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகும் அவதூறு வழக்குகள் நிற்கவில்லை.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய பெயர்களைச் சட்டசபையில் சொன்னால் என்ன பிரச்னை?

என்ன குறைச்சல் என்று கேளுங்கள். இங்கேதான் தலைவர்கள் பெயரைச் சொன்னால் சாமி குத்தம் வந்துவிடும். சாமியையே பெயர் சொல்லித்தான் வணங்குகிறோம் என்று இந்த ஆசாமிகளுக்குப் புரிவது இல்லை.

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

ஒரு நாட்டில், எது வலிமையடைய வேண்டும்...எது செழுமையடைய வேண்டும்?

மக்களுக்கான சட்டப் பாதுகாப்பு வலிமையடைய வேண்டும்... மக்களின் வாழ்க்கைத்தரம் செழுமையடைய வேண்டும். நாடு என்பது மக்கள்தானே!

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

டீக்கடை, பெட்டிக்கடை, தள்ளுவண்டி, ஹோட்டல்கள், பிளாட்பாரக் கடைகளில் சில போலீஸ்காரர்கள் வசூல் வேட்டை செய்வதை காவல் துறை உயர் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

அவர்கள் செய்வதை இவர்கள் கண்டும் காணாமலும் இருப்பதற்காகத்தான்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

சபாநாயகர் என்பவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் செயல்பட வேண்டுமா?

சட்டசபையின் மாண்பு காப்பவராக மட்டும்தான் சபாநாயகர் செயல்பட வேண்டும். சபாநாயகரை அந்த ஆசனத்தில் முதன்முதலாக யார் கொண்டுவந்து உட்காரவைக்கிறார்கள் தெரியுமா? அவை முன்னவரும் எதிர்க் கட்சித் தலைவரும் மாப்பிள்ளையை அழைத்து வருவதுபோல இரண்டு கையையும் பிடித்து அழைத்துவந்து உட்கார வைக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? இரண்டு தரப்புக்கும் நீங்கள் நடுநிலையாக இருங்கள், இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆளும் கட்சி உறுப்பினர்களில் ஒருவர்தான் சபாநாயகர் ஆகிறார் என்பது உண்மைதான். ஆனால் ஒரு சபாநாயகர், ஆளும் கட்சியின் கூட்டங்களில் கலந்துகொள்வது இல்லை. அவர், ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தப் பதவி வகிக்கும் காலத்தில் கட்சி சார்பானவராக நடந்துகொள்ளக் கூடாது என்பதற்காகத்தான்.

ஆனால், சமீபகாலத்து சபாநாயகர்கள், தங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஆளும் கட்சிக்காரர்களாகவே தொடர்கிறார்கள். அதனால்தான் சபை, கொந்தளிப்பாகக் காட்சி அளிக்கிறது.

கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.

தி.மு.க-வில் அழகிரி மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவாரா?

ஸ்டாலினைப் பொறுத்தவரை அந்தப் பிரச்னைக்கு எப்போதோ முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

கவிஞர் ஞானக்கூத்தன் மறைவு..?

ஒரு கவிதை எழுதியதும்... ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டதும் பெரும் ஞானம் பெற்றுவிட்டதாகப் பலரும், நினைத்துவரும் இந்தக் காலத்தில் இயல்பு எழுத்தால், குத்தல் தமிழால் அரைநூற்றாண்டு காலத்தில் பல்வேறு படைப்புகளைத் தந்து அமைதியாய் வாழ்ந்து முடித்தவர் ஞானக்கூத்தன்.

கவிதை எழுதுவது மட்டுமல்ல... கவிஞனாய் வாழ்வதும் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

ஜெயதமிழண்ணா, உச்சனவலசு.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எப்போது?

இறுதிவாதம் வரை முடிந்துவிட்டது. ஆனால், ஏனோ தீர்ப்புத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சுப்பிரமணிய சுவாமி இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை அணுக இருப்பதாகத் தகவல்.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

வழக்கறிஞர்கள் போராட்டம் இழுத்துக்கொண்டே போகிறதே?

அவர்கள் எதிர்க்கும் சட்டம் முழுமையாக நீக்கப்படும் வரை இந்தப் போராட்டம் இழுத்துக்கொண்டேதான் போகும்.

திருப்பூர் அர்ஜுனன்.ஜி., அவினாசி.

அவைக்குறிப்பு என்றால் என்ன?

சட்டசபை நடவடிக்கைகளின் தொகுப்புத்தான் அவைக்குறிப்பு. ஓர் உறுப்பினர் பேசுவது, அதற்கு அமைச்சர் பதில் சொல்வது, அதற்கு எதிர் பதில் சொல்வது ஆகியவை ஒரு எழுத்து மாறாமல் பதிவு செய்யப்படும். இதற்காகவே சட்டசபை செயலக நிருபர்கள் உட்கார்ந்து அனைத்தையும் எழுதுவார்கள். சபாநாயகரின் உத்தரவுப்படி. 10, 20 ஆண்டுகள் கழித்து இவற்றை நாம் பார்க்கும்போது அன்று என்ன நடந்தது என்பதை முழுமையாக அறியலாம். இதன்மூலம் சட்டமன்ற விவாதங்களை, ஒரு மாநிலத்தின் அரசியலை, வளர்ச்சியை, புதிய திட்டங்களை அறியலாம். 

புதிய உறுப்பினர்களுக்கும், வரலாற்று மாணவர்களுக்கும் இது பொக்கிஷம்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!