Published:Updated:

"அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற மாட்டார்கள்!"

"அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற மாட்டார்கள்!"
பிரீமியம் ஸ்டோரி
"அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற மாட்டார்கள்!"

பேட்டி

"அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற மாட்டார்கள்!"

பேட்டி

Published:Updated:
"அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற மாட்டார்கள்!"
பிரீமியம் ஸ்டோரி
"அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற மாட்டார்கள்!"
"அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற மாட்டார்கள்!"

ரண்டு திராவிடக் கட்சிகளின் பார்வையும் இப்போது கொங்கு மண்டலத்தின் மீது நிலைகொண்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தக்கவைக்க வேண்டும் என அ.தி.மு.க-வும் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற தி.மு.க-வும் முயற்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், மலேசியாவில் உலக கொங்கு மாநாட்டை நடத்தி இருக்கிறது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி. அதன் தலைவர் ஈஸ்வரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘திடீரென்று மலேசியாவில் மாநாடு நடத்தி இருக்கிறீர்களே?’’

‘‘இது திடீரென்று நடத்தப்பட்ட மாநாடு அல்ல. கடந்த ஒரு வருட காலமாக இதற்கான திட்டமிடல்களைச் செய்துகொண்டு தான் இருந்தோம். நடுவில் சட்டமன்றத் தேர்தல் வந்ததால், அதற்கான பணிகளில் இருந்தோம். மலேசியாவில் வசிக்கும் கொங்கு தமிழர்கள் சங்கத்தின் 60-வது ஆண்டு விழாவை கொங்கு தமிழர்களின் மாநாடாக நடத்தினோம். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் சிறப்புரையாற்றிய மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், ‘மலேசியாவின் இன்றைய நிலைக்கு கொங்குநாட்டுத் தமிழர்களின் உதவி மகத்தானது’ என புகழ்ந்து பேசினார். இதற்கு அடுத்த நாள், கொங்கு தொழிலதிபர்கள் கலந்துகொண்ட தொழில்வளர்ச்சி பற்றிய கலந்தாய்வு நடந்தது. இது வெளிநாடுகளில் தொழில் செய்யும் நபர்களுக்கு உதவும் வகையில் இருந்தது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தும் ஜெயலலிதாவும், ‘மேக் இன் இந்தியா’ என்று சொல்லும் மோடியும் செய்ய வேண்டியதை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தனியாகச் செய்திருக்கிறது.’’

‘‘நாடாளுமன்றத் தேர்தலின்போது பி.ஜே.பி கூட்டணியில் இருந்த நீங்கள், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டீர்கள். அது சரியான முடிவு என்று நினைக்கிறீர்களா?’’

‘‘தமிழ்நாடு சட்டமன்றத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி என்பது சாத்தியமில்லை என்பதை நாங்கள் எப்போதோ உணர்ந்துவிட்டோம். நாங்கள் முன்வைத்த சில கோரிக்கைகளை ஏற்காததால் மற்றக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க இயலவில்லை. கூட்டணி என்பது ஜெயிக்கும் கட்சியோடு கண்மூடித்தனமாக சேர்வது இல்லை. அதனால்தான் தனித்துப் போட்டி என்கிற முடிவை எடுத்தோம். அதிகாரமும், பணமும் விளையாடிய இந்தத் தேர்தலில் ஒரு கட்சி இரண்டு லட்சம் ஓட்டுகள் வாங்குவது என்பது சாதாரணமானது அல்ல; இந்த ஓட்டுகள் எங்களது கட்டமைப்பு வலுவாக இருப்பதைக் காட்டி இருக்கிறது.’’

‘‘அ.தி.மு.க ஆட்சி எவ்வாறு இருக்கிறது? உங்களின் பிரதான நோக்கமான, ‘அவினாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும்’ என்று சட்டசபையில் அமைச்சர் உறுதி அளித்திருக்கிறாரே?’’

‘‘தற்போதைய ஆட்சி எப்படி நடக்கிறது என்பதற்கு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரே உதாரணம். எதிர்க் கட்சி எழுப்பும் ஆக்கபூர்வமான கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயங்கும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதைச் செய்வதால் தலைமையிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாகச் சபையின் மாண்பினை உறுதிப்படுத்த வேண்டிய சபாநாயகர்கூட ஒரு தலைபட்சமாகத்தான் செயல்படுகிறார். ஆட்சிமன்றத்தின் வெளியேயும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. மக்களின் எந்தவிதக் கோரிக்கைக்கும் இந்த அரசு செவி சாய்க்கவில்லை. அவினாசி - அத்திக்கடவு திட்டத்தைப் பொறுத்தவரை, ‘மத்திய அரசு நிதி தரவில்லை. வனம் மற்றும் நீர்வளத் துறை அனுமதி தரவில்லை’ என்று சொன்னதையே திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். முதலில் 1,800 கோடி ரூபாயும், தற்போது 3,500 கோடி ரூபாயும் கேட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இந்த அரசு அந்தத் திட்டத்தை நிறைவேற்றுமா என்பதே சந்தேகம்தான். இதை மக்களிடம் வாக்குறுதியாக சொல்லி ஓட்டு வங்கியை உயர்த்திக்கொள்கிறார்கள்.’’

‘‘ஸ்டாலின் கொங்கு மண்டலத்தின் மீது அதிக கவனம் செலுத்துவதுபோலத் தெரிகிறதே?’’

‘‘ஒரு கட்சி, அது பலவீனமடைந்து இருக்கும் இடத்தில் அதன் தலைவர்கள் கவனம் செலுத்துவது தவறு இல்லையே. தேவர் ஜெயந்தி விழாவில் அ.தி.மு.க., தி.மு.க என இரண்டு கட்சிகளும்தான் அதிக கவனம் செலுத்துகின்றன. கட்சியைப் பலபடுத்த அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்று சொல்ல முடியுமா? இந்த முறை பல தலைவர்கள்  தீரன் சின்னமலை விழாவுக்கு வந்திருந்தார்கள். அதுபோல எதிர்க் கட்சித் தலைவரான ஸ்டாலின் வந்திருக்கிறார். அடுத்த வருடம் முதல்வர் வந்தாலும் வரலாம். அது மகிழ்வுக்குரியது.’’

‘‘உள்ளாட்சித் தேர்தலில் கொ.ம.தே.க-வின் திட்டம் என்ன?’’

‘‘முதல்கட்டமாக எல்லாப் பதவிகளுக்கும் வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்து வருகிறோம். கூட்டணி குறித்த முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிற நிலையில், அதைப்பற்றிப் பேச எதுவும் இல்லை.’’

‘‘தீரன் சின்னமலை விழாவில், சில கட்சிகளுக்கு போலீஸ் அனுமதி மறுத்திருப்பதாகத் தகவல்கள் வருகிறதே?’’

‘‘தீரன் சின்னமலையைப் பொறுத்தவரை அவரை ஏதோ குறிப்பிட்ட சாதி தலைவராகப் பார்க்கிறார்கள். அதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களில் ஒருவர். அவரை எல்லோருக்கும் பொதுவானவராகப் பார்க்கவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.’’

- மா.அ.மோகன் பிரபாகரன், படம்: வீ.சதீஷ்குமார்