Published:Updated:

"300 கோடியை வேணாம்னு சொல்ல முட்டாளா நாங்கள்?” - வெடிக்கிறார் பிரேமலதா

"300 கோடியை வேணாம்னு சொல்ல முட்டாளா நாங்கள்?” - வெடிக்கிறார் பிரேமலதா
பிரீமியம் ஸ்டோரி
"300 கோடியை வேணாம்னு சொல்ல முட்டாளா நாங்கள்?” - வெடிக்கிறார் பிரேமலதா

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: கே.ராஜசேகரன்

"300 கோடியை வேணாம்னு சொல்ல முட்டாளா நாங்கள்?” - வெடிக்கிறார் பிரேமலதா

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
"300 கோடியை வேணாம்னு சொல்ல முட்டாளா நாங்கள்?” - வெடிக்கிறார் பிரேமலதா
பிரீமியம் ஸ்டோரி
"300 கோடியை வேணாம்னு சொல்ல முட்டாளா நாங்கள்?” - வெடிக்கிறார் பிரேமலதா
"300 கோடியை வேணாம்னு சொல்ல முட்டாளா நாங்கள்?” - வெடிக்கிறார் பிரேமலதா

``பேசி ரொம்ப நாள் ஆச்சுல்ல. என்ன வேணாலும் கேளுங்க. பதில் சொல்ல நான் தயார். நான் சொல்லும் விஷயங்கள் சென்சேஷன் ஆகலாம்'' - டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸைத் தெளிவாகச் சொல்லிவிட்டுப் பேச அமர்கிறார் பிரேமலதா விஜயகாந்த். சட்டமன்றத் தேர்தல் தோல்வி, மாவட்டச் செயலாளர்களின் கட்சி மாற்றம், விஜயகாந்தின் உடல்நிலை, பணபேரம், ஜெயலலிதா ஆட்சி, எதிர்க்கட்சி தி.மு.க-வின் செயல்பாடுகள்... என எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார்.

``கடந்த சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகளும் தே.மு.தி.க-வைத் தங்கள் கூட்டணிக்கு அழைத்தன. ஒரே நேரத்தில் பல கட்சிகள் அழைத்ததால்தான் உங்களால் சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறிவிட்டீர்களா?''

கையை அசைத்து மறுக்கிறார்... ``ஒரு தடுமாற்றமும் இல்லை; கால தாமதமும் ஆகலை. தேர்தல் நடந்தது மே மாதத்தில். ஆனால், மீடியா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்தே
தே.மு.தி.க-வைப் பற்றி எழுதி எழுதிப் பெருசாக்கிட் டாங்க. அப்பவும் கேப்டன் அமைதியாத்தான் இருந்தார். `தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அப்போ எங்க நிலைப்பாட்டைச் சொல்றோம்'னு சொன்னார். ஆனால், எங்க கூட்டணி பற்றி அதிகம் பேசி, பெரிதுபடுத்தியது தி.மு.க தலைவர் கலைஞரும்தான். தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகே, எங்க ஸ்டாண்ட் என்னன்னு சொல்வது என நாங்க ரொம்பத் தெளிவா இருந்தோம்.''

``கருணாநிதி உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமலே `தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வரும்’னு எதை வைத்துச் சொன்னார்?''

``கலைஞர்தான், `பழம் நழுவி பாலில் விழுகப்போகுது’, `இதோ கனியப்போகுது’னு சொல்லிட்டே இருந்தார். அதிகாரபூர்வமா `மக்கள் நலக் கூட்டணி'யையும் பா.ஜ.க-வையும்தான் நாங்கள் நேரில் சந்தித்தோம். தி.மு.க-கூட ஒரு மீட்டிங்கூட நடக்கலை. கலைஞர் சொல்ற எல்லா விஷயங்களுக்கும் பதில் சொல்லிட்டேவா இருக்க முடியும்?’’

``எந்த நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடுவது என முடிவெடுத்தீர்கள்?''

``இதுக்கு கொஞ்சம் விரிவா பதில் சொல்லணும். எதுக்காக தே.மு.தி.க ஆரம்பிக்கப்பட்டது? தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு மாற்றாக வரணும்னுதானே! இதில் நாங்க ஆரம்பம் முதலே உறுதியாத்தான் இருந்தோம். 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல், எம்.பி தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்னு எல்லாவற்றிலும் இதே நிலைப்பாட்டில்தான் தேர்தலைச் சந்திச்சோம். எப்போ இது மாறுச்சு? 2011-ம் நடந்த சட்டமன்றத் தேர்தலில். ஏன் மாறுச்சுன்னா... எல்லாருமே ஒட்டுமொத்தமா அ.தி.மு.க கூட்டணிக்குப் போங்கனு சொன்னதால் போனோம். ஆனால், அப்பவே கேப்டனுக்கு அந்தக் கூட்டணியில் பெரிய விருப்பம் கிடையாது. அவங்க ஆட்சிக்கு வந்ததும் சொன்னதைப் பண்ணலை. உடனே சட்டமன்றத்துல கேப்டன் மக்களுக்காகக் குரல்கொடுத்தார்.

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., பா.ம.க தனியா நின்னாங்க. வேற சாய்ஸ் இல்லையே. இதில் கேப்டன் முன்னாடி தெளிவா ரெண்டு பாதைகள் இருந்தன. ஒண்ணு பூ பாதை; இன்னொண்ணு முள் பாதை. கேப்டன் இறுதி முடிவு எடுக்கவேண்டிய சூழல். நாங்க ரொம்ப ஈஸியா போன தடவை அ.தி.மு.க-கூட இருந்தோம். இப்ப தி.மு.க-கூடப் போகலாம்னு ஒரு செகண்டுல முடிவு எடுத்துட்டுப் போயிருக்கலாம். ஆனா, இங்கே ஒரு மாற்றம் எப்போதான் வரும், இப்படியே இவங்க ரெண்டு பேர் கூடவும் மாறி மாறிப் போயிட்டே இருந்தா, தமிழ்நாடு என்ன ஆவது? இதுவே இப்படி யோசிச்சுப்பாருங்க... எங்க கூட்டணியில், 20-ல இருந்து 25 எம்.எல்.ஏ-க்கள் கிடைத்து, எங்க ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழல் வந்திருந்தால், `கேப்டன் போல ஒரு பிரில்லியன்ட் யாருமே இல்லை’னு சொல்லியிருப்பாங்க. அதனாலதான் மக்கள் நலக் கூட்டணிகூடச் சேர்ந்து ஒரு ரெவல்யூஷனரி முடிவை கேப்டன் எடுத்தார். எதை ஒன்றும் முயற்சி செய்தால்தான், அது நடக்குமா... நடக்காதானு தெரியவரும். இங்கே ஒரு ரெவல்யூஷனரி சேஞ்ச் நடக்கணும். அதுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதானே தே.மு.தி.க. அதனாலதான் மக்கள் நலக் கூட்டணியோடு கூட்டு சேர்ந்தோம். மாற்று அணிகூடச் சேர்ந்தோமே தவிர, வேற எந்த நோக்கமும் கிடையாது.’’

``கடந்த தேர்தலில் நீங்கள் கூட்டுவைத்த மக்கள் நலக் கூட்டணியை `அ.தி.மு.க-வின் `பி' டீம்’ என்றும்... `தி.மு.க-வுடன் கடைசி வரை பேரம் பேசிட்டிருந்தாங்க’ என தே.மு.தி.க மீதும் குற்றச்சாட்டுகள் பெருமளவில் வைத்தார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?''

``இவங்க நினைக்கிறது நடக்கலைன்னா... அடுத்தவங்க மேல சேற்றை வாரி இறைக்கிறதுதான் இங்கே காலங்காலமா நடந்திட்டிருக்கு. முதல்ல `வைகோ 500 கோடி ரூபாய் வாங்கிட்டார்’னு பரப்பிவிட்டாங்க. `70 எம்.எல்.ஏ-க்கள், 300 கோடி ரூபாய்’னு எங்களைப் பற்றி வதந்தி பரப்பினாங்க. காசுதான் முக்கியம்னு கேப்டன் நினைச்சிருந்தா... 300 கோடி ரூபாய், 70 எம்.எல்.ஏ-னு போயிருக்கலாமே. 300 கோடியை வேணாம்னு சொல்ல முட்டாளா நாங்கள்? (அமைதியாகிறார்) என்னைக்கு நாங்க கட்சி ஆரம்பிச்சோமோ, அப்போது இருந்தே இதை தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் திட்டமிட்டுப் பரப்புறாங்க. இப்படிச் சொன்னால் சோர்வு அடைஞ்சு ஒதுங்கிடுவோம்னு நினைக்கிறாங்க. ஆனா, கேப்டன் எப்போதுமே, மனசுல ஒண்ணு வெளியில இன்னொண்ணு பேச மாட்டார்.''

``ஆனால் தே.மு.தி.க + மக்கள் நலக் கூட்டணி மீது மக்களுக்குப் பெரிய நம்பிக்கை இல்லை என்பதைத்தானே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன?’’

``அப்படி அல்ல... மக்கள் இன்னும் மாறலை என்பதைத்தான் இந்த முடிவுகள் காட்டுது. யாருக்காக நாங்க இவ்வளவு தூரம் உழைக்கிறோம், கஷ்டப்படுறோம்? தமிழக மக்களுக்காகத்தானே. கேப்டன் சொன்ன மாதிரியே அரசியலுக்கு வந்தார். இதுவரைக்கும் அதே உறுதியோடு பயணிக்கிறார். அப்போ கேப்டனுக்கு மக்கள்தானே உறுதுணையா இருக்கணும்? ஆனால், மக்கள் இன்னமும் மாறலைங்கிறது பெரிய வேதனையா இருக்கு. நாங்க போகாத கிராமம் கிடையாது; ஊர் கிடையாது. அத்தனை மக்களையும் சந்திச்சிருக்கோம். கடைசியில் படித்தவர்களில் இருந்து பாமர மக்கள் வரை பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டாங்க. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கியதே அந்த ரெண்டு கட்சிகளும்தான். இங்கே மாற்றம் வராததுக்கு முக்கியக் காரணமே இதுதான்.’’

"300 கோடியை வேணாம்னு சொல்ல முட்டாளா நாங்கள்?” - வெடிக்கிறார் பிரேமலதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தி.மு.கவும் அதி.மு.கவும் ஓட்டுக்குப் பணம் தந்ததால்தான், உங்கள் கூட்டணி தோல்வியைச் சந்தித்தது என்கிறீர்களா?’’

``ஆமாம்... பணம் மட்டும்தான். தேர்தலுக்கு முன்பு யாருக்கும் பணம் தர மாட்டோம், வாங்கவும் மாட்டோம்னு நரசிம்மா கோயிலில் கேப்டன் உறுதிமொழி எடுத்துக்கிட்டார். இது மாதிரி ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஸ்டாலினையும் எடுக்கச் சொல்லுங்க பார்ப்போம். நாங்க ஒரு நேர்மையான அரசியலைச் செய்றோம்னு மக்களுக்குத் தெரியலையா... இல்ல அது மக்களிடம் இன்னும் போய் சேரலையோனு ஒரு சந்தேகம் எனக்கு இருக்கு.''

``தேர்தல் தோல்விக்குப் பிறகு தே.மு.தி.க-வில் இருந்த பல மாவட்டச் செயலாளர்கள் தொடர்ந்து கட்சி மாறிவருகிறார்களே?''

``அறுபது, எழுபது லட்சம் தொண்டர்கள் இருக்கும் கட்சியில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் பத்து பதினைந்து பேர் போவதால் ஒரு கட்சி என்னைக்கும் அழிஞ்சுபோனது கிடையாது. தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிஞ்சு வந்தார். அப்புறம் வைகோ பிரிஞ்சு வந்தார். அதனால் தி.மு.க அழிஞ்சுபோயிடுச்சா? தே.மு.தி.க-வுக்கு ஒரு சிறப்பு இருக்கு. இது எந்தக் கட்சியில் இருந்தும் பிரிந்துவந்த கட்சி அல்ல. கேப்டன் என்ற ஒருவருக்காக உருவான கட்சி. சொல்லப்போனால் இப்ப நாங்க ஹேப்பியாக இருக்கோம். நல்ல நிலைமைக்கு வரும்போது யார் நல்லவங்க கெட்டவங்கனு தெரியாம டிராவல் பண்ணிட்டே இருக்க முடியாது. கேப்டன் எப்போதுமே சொல்வார்... `ஒரு கட்சிக்கும் தலைமைக்கும் துரோகம் பண்ணிட்டுப் போனவங்க யாருக்குமே தனி வரலாறு கிடையாது'னு. அதுதான் உண்மை.

கட்சி மாற்றும் நாடகத்தை அதிகமா செய்றது தி.மு.க-தான். அதைப் பார்த்துட்டு அந்த அம்மாவும், எங்க கட்சிக்கும் நிறையப் பேர் வர்றாங்கனு காண்பிக்க நினைக்கிறாங்க. ஸ்டாலின் இன்னமும் தோல்வியில் இருந்து மீளலை.''

``கட்சியை விட்டு விலகிய பலரும், `கேப்டன் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இல்லை. பிரேமலதாதான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்’ என்கிறார்களே?''

``வாங்கினதுக்காகவும் போனதுக்காகவும் ஏதாவது சொல்லித்தானே ஆகணும். இதை நான் பெரிசா எடுத்துக்கலை. அவங்க சொல்றது உண்மையா... பொய்யானு அவங்களுக்கே தெரியும். இப்ப ராஜேந்திரநாத் ஆடியோ கிளிப்பிங் எல்லா சேனல்களிலும் போட்டாங்களே. அதுல என்ன நோக்கத்துக்காக வேற கட்சிக்குப் போனாங்கனு தெளிவா இருக்கே. அவங்களுக்காக நாம ஏன் பதில் சொல்லணும்? ஐ நோ மை லிமிட்ஸ். அதை நான் எப்போதும் தாண்ட மாட்டேன்.’’

``தே.மு.தி.க-வினர் பலரும் `இந்தத் தேர்தலில் கட்சிக்குச் செலவுசெய்து கடனாளி ஆகிட்டோம்’னு சொல்றாங்களே?’’

``இது தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வினரால் திட்டமிட்டுப் பரப்படும் வதந்தி. விலைக்கு வாங்கினவர்களை வைத்து இப்படிச் சொல்லவைக்கிறாங்க. கடனாளியானது தி.மு.க-வினர்தான். நினைச்சுப்பார்க்க முடியாத அளவுக்கு தி.மு.க செலவு செஞ்சிருக்கு. ஆட்சியைப் பிடிச்சுடலாம், மந்திரி ஆகிடலாம், மறுபடியும் சம்பாதிச்சுடலாம்னு ஒவ்வொருத்தரும் பல கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்காங்க. தங்கள் சக்திக்கு என்ன செலவுசெய்ய முடியுமோ... அதைத்தான் தே.மு.தி.க-வினர் செஞ்சாங்க. யாரும் எங்களால் கடனாளியாகவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த அளவு செலவு செய்த கட்சி தே.மு.தி.க-தான்.''

``மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க இப்போதும் அங்கம் வகிக்கிறதா?’’

``அது சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு. அது தேர்தலோடு முடிஞ்சுபோச்சு. இனிவரும் காலங்களில் கேப்டனின் நிலைப்பாடு என்ன என்பதை, தேர்தல் வரும்போது சொல்வார்.''

``தேர்தல் சமயத்தில் விஜயகாந்தை வைத்து நிறைய மீம்ஸ் செய்தார்கள். சோஷியல் மீடியாவில் தொடர்ந்து கிண்டல் செய்தார்கள். இவை எல்லாம்கூட தோல்விக்குக் காரணம் என நினைக்கிறீங்களா?''

``இந்த மீம்ஸ் எல்லாம் பாதிப்போனு நான்கூட சில நேரம் நினைச்சது உண்டு. ஆனா, அப்படிக் கிடையவே கிடையாது. மீம்ஸ் போடுறவங்க எல்லாம், சும்மா மொபைல் வெச்சுட்டு சுத்திட்டு இருக்கிறவங்க. இவங்க யாரும் ஓட்டுப்போடவே இல்லை. அது எந்த விதத்திலும் பயன் தராது. நாங்க அதை எல்லாம் பார்ப்பதுகூட கிடையாது. `காய்த்த மரம்தான் கல்லடிபடும்'னு சொல்வாங்க. அவங்க டைம்பாஸுக்கு ஏதோ பேசிட்டிருக்காங்க. அவ்வளவுதான்.''

`` `விஜயகாந்தின் உடல் நிலை சரியில்லை’, `சரியாகப் பேச முடியவில்லை’ எனச் சொல்கிறார்களே... உண்மை நிலை என்ன?''

``கேப்டனைப் பற்றி வேறு என்ன சொல்ல முடியும்? `இந்தத் துறையில் இவ்வளவு கொள்ளை அடிச்சுட்டார்’னு சொல்ல முடியுமா, `இவ்வளவு சொத்துக்குவிச்சுட்டார்’னு சொல்ல முடியுமா? கேப்டன் பெயரை எப்படியாவது கெடுக்கணும். அதுக்காக ரெண்டு விஷயங்களைக் கையில் எடுக்கிறாங்க. ஒண்ணு மீம்ஸ் பண்றது, ரெண்டாவது ஹெல்த் சரியில்லைனு சொல்றது. அவர் அடிக்கிறாரு, திட்டறாருன்னு கூடுதலா சொல்வாங்க. கேப்டனைப் பற்றி சொல்றதுக்கோ, எழுதுறதுக்கோ ஒண்ணுமே கிடையாது என்பதால் பரப்பப்படும் வதந்திகள் இவை. கேப்டன் சூப்பரா இருக்கார். தினமும் கட்சி ஆபீஸுக்குப் போறார். அவரது அரசியல் வேலைகளையும் தொடர்ந்து செய்துட்டிருக்கார்.''

``உங்கள் மீதும் விஜயகாந்த் மீதும் பல அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றனவே...''

குறுக்கிடுகிறார்... ``எல்லாரும் மக்கள் காசைக் கோடிக் கோடியா கொள்ளை அடிச்சுட்டு சொத்துக்குவிப்பு வழக்குல நீதிமன்றத்துக்குப் போறாங்க. நாங்க மக்கள் காசை கொள்ளையடிச்சுட்டு நீதிமன்றத்துக்குப் போகலையே. மக்களுக்காகப் பேசியதால் நீதிமன்றத்துக்குப் போறோம். அவங்களால் எங்க நேர்மையைப் பொறுத்துக்க முடியலைன்னா, உடனே அவதூறு வழக்கு போடுறாங்க. அதுக்கு எல்லாம் பயப்படுற ஆட்களா நாங்க? மீடியா, செய்தி சேனல்கள், ஏன் செய்தி வாசிப்பவர் மேலகூட அவதூறு வழக்கு போடுறது ரொம்ப ஓவர். இதுக்கு கடிவாளமே இல்லாமல் போயிகிட்டே இருந்தது. தைரியமாகக் கடிவாளம் போட்டுத் தடுப்பது மாதிரி உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் சொன்ன தீர்ப்புக்கு, இந்த நேரத்துல என் நன்றிகளை விகடனில் பதிவுபண்றேன். `எந்த மாநிலத்துலயும் இவ்வளவு அவதூறு வழக்குகள் கிடையாது. இதுக்கு ஜெயலலிதா நிச்சயமா ரெண்டு வாரங்கள்ல பதில் சொல்லியே ஆகணும்’னு ஒரு நல்ல தீர்ப்பு வந்திருக்கு. ஜெயலலிதாவைப் பற்றி நாங்க பெர்சனலாவா பேசினோம்? ஆட்சியின் குறைகளைப் பற்றி பேசினால் அதைத் தாங்கும் மனப்பான்மைகூட இல்லைன்னா என்ன பண்றது? அ.தி.மு.க-வுக்கும் ஜெயலலிதாவுக்கும் சகிப்புத்தன்மை இல்லை என்பதைத்தான் அவர் தொடுத்த அவதூறு வழக்குகள் காட்டுகின்றன.''

"300 கோடியை வேணாம்னு சொல்ல முட்டாளா நாங்கள்?” - வெடிக்கிறார் பிரேமலதா

``தமிழ்நாடு சட்டமன்றம் எப்படி நடக்கிறது. ஆளும் கட்சிக்கு இணையான எதிர்க்கட்சி இருப்பதால்...''

நிறுத்தச் சொல்கிறார்... ``காலேஜ்ல ஜூனியரை சீனியர் எப்படி ராக்கிங் பண்ணுவாங்களோ... அப்படித்தான் சட்டமன்றத்துல ராக்கிங் நடந்துட்டிருக்கு. இதுக்காகவா இவ்வளவு எம்.எல்.ஏ-க்கள் ஒரு சட்டமன்றத்துக்குப் போனாங்க? அவங்க தொகுதியை மேம்படுத்துறதைப் பற்றி யாரும் ஆரோக்கியமா விவாதம் பண்ணலை. பலரையும் பெர்சனலாப் பேசுறது, புகழ் பாடுறது, இவங்க அவங்களைத் திட்டுறது, அவங்க இவங்களைத் திட்டுறதுன்னு சட்டமன்றம் நடந்துட்டிருக்கு. மக்கள் வரிப்பணம் வேஸ்ட் ஆஃப் டைமா போயிட்டிருக்கு.''

``தமிழக எம்.பி சசிகலா புஷ்பா தன்னை ஜெயலலிதா அடித்ததாக நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார். ஒரு பெண் அரசியல்வாதியாக இதை எப்படிப் பார்க்கிறீங்க?''

``இது அவங்க உள்கட்சி விவகாரம். அங்கே என்ன நடந்ததுனு நமக்குத் தெரியாது. ஆனா, ஓப்பனாக பார்லிமென்ட்லயே `என் உயிருக்கு ஆபத்து இருக்கு. என்னை அரெஸ்ட் பண்ணி வெச்சிருந்தாங்க, அடிச்சாங்க, வம்பாக எழுதி வாங்கினாங்க'னு சொல்லியிருக்காங்க. இது ஃபைனலி `the cat is out of the bag'-னுதான் சொல்வேன். இப்படித்தான் நடக்குதுனு இலைமறை காயாக பலர் சொல்ல, கேள்விப்பட்டிருக்கோம். இது வரைக்கும் யாரும் அதை வெளியே சொன்னது கிடையாது. இப்போ ஒருத்தர் சொல்லிட்டார்... (லேசாகச் சிரிக்கிறார்) சசிகலா புஷ்பா பார்லிமென்ட்லயே சொன்ன அந்தத் தைரியத்துக்காக நான் பாராட்டுறேன்.''

``மத்தியில் மோடி ஆட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

``எல்லாருமே நான் பேசுறது நல்லாயிருக்குனு சொல்வாங்க. நான் ஒபாமா, மோடி, அப்துல் கலாம்னு இவங்க மூணு பேரோட பேச்சை ரசிச்சிருக்கேன். அவங்க பேச்சு எல்லாம் மனசை டச் பண்ணும். மோடி நிறையச் சொல்றார். ஆனா, செயல்படுத்துவதில் ரொம்ப ஸ்லோவா இருக்கார். உலகத் தலைவர்களை எல்லாம் சந்திக்கிறார். ஆனா, அது எல்லாம் செயல்வடிமாக மாறலை. அது மாறணும்.''

``சமீபத்தில் நீங்கள் பார்த்த படம்?''

`` `கபாலி'. படம் நல்லாயிருக்கு... நல்லாயில்லை என்பது வேற விஷயம். ஆனா, என் ஆதங்கம் எல்லாம் இந்தப் படத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள்? ஓவர் நைட்ல எல்லா வெப்சைட்களையும் லாக் பண்றாங்க. படத்துல வெட்டுக்குத்து வன்முறைகள் இருந்தும் வரிவிலக்கு கொடுக்கிறாங்க... ஏன்? `ஜாஸ் சினிமாஸ்' நிறுவனம் `கபாலி'யை ரிலீஸ் செய்ததுதான் காரணமா? எல்லா படங்களுக்குமே இந்த மாதிரி செய்தால், திரையுலகம் நல்லாயிருக்குமே. பக்கத்தில் உள்ள சில மாநிலங்களில் எல்லா படங்களுக்குமே வரிவிலக்கு உண்டு. சினிமா துறை நல்லா இருக்கணும். இதுதான் கேப்டனின் கருத்தும்கூட.''