Published:Updated:

சத்த சபை - 131 கேங் Vs 89 கேங்

சத்த சபை - 131 கேங் Vs 89 கேங்
பிரீமியம் ஸ்டோரி
சத்த சபை - 131 கேங் Vs 89 கேங்

ப.திருமாவேலன், படம்: ஆ.முத்துக்குமார்

சத்த சபை - 131 கேங் Vs 89 கேங்

ப.திருமாவேலன், படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
சத்த சபை - 131 கேங் Vs 89 கேங்
பிரீமியம் ஸ்டோரி
சத்த சபை - 131 கேங் Vs 89 கேங்
சத்த சபை - 131 கேங் Vs 89 கேங்

ருணாநிதியின் உடன்பிறப்புகளை, ‘வயக்காட்டுப் பொம்மைகள்' என்கிறார்கள் அவர்கள். ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தங்களை, ‘கொத்தடிமைகள்' என்கிறார்கள் இவர்கள்.

`கற்பில் சிறந்தவர் அவரா... இவரா?' என பட்டிமன்றம் வைத்து எதிர் அணி புனிதத்தை அசிங்கப்படுத்துவதுபோலத்தான், நித்தமும் நடக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம். பட்டிமன்றம் நடப்பது தெருவில், அங்கே என்ன கூத்து வேண்டுமானாலும் அடிக்கலாம்; தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தும் போகலாம். ஆனால், `பொம்மை - அடிமை' சண்டை நடக்கும் இடம் மாண்புமிகு அவை. மக்களைக் காப்பாற்றுவதைவிட மாண்பு காப்பாற்றுவதே இந்த அவைக்கு முதல் வேலை. ஆனால், ஆளுக்கு ஆள் ஒவ்வொரு நாளையும் அசிங்கப்படுத்து கிறார்கள்.

ஜெயலலிதாவைப் போற்றுவது, கருணாநிதியைத் தூற்றுவது - இந்த இரண்டு நோக்கங்களுக்காகத்தான் தமிழ்நாடு சட்டமன்றமே கூடுகிறது. அ.தி.மு.க சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்கள் சேவகர்களா அல்லது அரசவைக் கவிஞர்களா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அனைவரும் எண்சீர் விருத்தப் பாவலர்களாகவே பறந்துவந்துள்ளார்கள்.

இந்திய மண்ணில்
செந்தமிழ் நாட்டில்
பைந்தமிழ் தாயின்
அரசாங்கம் - அதைத்
தேடித் தேடி
வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும்
தெய்வாம்சம்!
எத்தர்களை வென்ற இடம்...


இப்படி கும்மிடிப்பூண்டி கே.எஸ்.விஜயகுமார் பாடும்போது, ‘இது ஏதோ ஒரு பாடல் ஆயிற்றே!' என நெற்றி சுருக்கினால், ‘திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்...' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. முருகனிடம் பழம்தான் பறிபோனது என்றால், இப்போது பாட்டும் பறிபோய்விட்டது. திண்டுக்கல் சீனிவாசனும் காமராஜும் பாடும்போது தங்களது சிந்தனையில் உதித்ததுபோலவே உச்சரிக்கிறார்கள். இதுதான் தி.மு.க-வினருக்கு எரிச்சல் தருகிறது.

கே.என்.நேரு, கருணாநிதியைப் புகழ்ந்து பேசினார். உடனே அ.தி.மு.க-வினர் ஆக்ரோஷமாகக் கூச்சல்போடுகிறார்கள். `நான் பேசுறதைக் கேட்க உங்களுக்கு வயிறு எரியுதுல்ல... அப்படித்தான் எங்களுக்கும் எரியும்’ என்கிறார் மீசையை முறுக்கி.

தங்கள் தலைவியைப் புகழ்கிறார்கள். புகழட்டும், அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், எதிரே இருப்பவர்களை வேண்டும் என்றே சீண்டும்போதுதான் சட்டமன்றம் சந்தைக்கடை ஆகிறது.

உங்களுக்கு பரமக்குடியில் முத்தையாவைத் தெரியுமா? பரமக்குடியிலேயே பலரும் மறந்திருப்பார்கள். அவர்தான் அந்தத் தொகுதியின் ஆளும் கட்சி உறுப்பினர். அவர்தான் தி.மு.க உறுப்பினர்களைப் பார்த்து, ‘வயக்காட்டுப் பொம்மைகள்' என வர்ணித்தவர். ‘89 வயக்காட்டுப் பொம்மைகளுக்கு, குருவிகள் பயப்படலாம்; சீறும் சிங்கம் பயப்படாது’ எனச் சொன்ன பிறகு, பரமக்குடி முத்தையா பிரபலம் ஆகிவிட்டார். ‘அண்ணன் மந்திரியாகப்போகிறார்' என அவரது அடிப்பொடிகள் பரமக்குடியில் இருந்து பற்றவைக்கிறார்கள். இந்த வார்த்தையை நீக்கச் சொன்னது தி.மு.க. ஆனால் சபாநாயகர் தனபால் இதற்குச் சம்மதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு சொல்லைச் சொன்னார். அது அவைக் குறிப்பில் ஏறவே இல்லை.

வெளிநடப்பு செய்த ஸ்டாலின், ‘131 கொத்தடிமைகள்’, `131 சோற்றால் அடித்த பிண்டங்கள்’... என நான் சொன்னேன்’ என்றார். ஒரு பக்கம் பொம்மைகள்... இன்னொரு பக்கம் அடிமைகள்; பிண்டங்கள். தமிழ் மகா ஜனங்களே... நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறீர்கள் பாருங்கள்!

சத்த சபை - 131 கேங் Vs 89 கேங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசியல்ரீதியான ஒரு வாக்குவாதம் நடக்கும்போது, உணர்ச்சி மேலீட்டால் வார்த்தைகள் தடித்துவிடுவது தவிர்க்க முடியாதது. ஆனால் இங்கே, கேள்வி கேட்பவர்கள், மானியக் கோரிக்கையில் பேசுபவர்கள் அதற்குத் தொடர்பு இல்லாத அரசியல் விமர்சனங்களைச் செய்வதால்தான் எப்போதுமே கொதிநிலையில் இருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம்.

இதை சபாநாயகரால் தடுக்க முடியாவிட்டால், முதலமைச்சராவது வழிநடத்த வேண்டும். ‘வயக்காட்டுப் பொம்மை என அவர் யாரையும் தனிப்பட்டுக் கூறவில்லை. உங்களைச் சொன்னார் என ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்? வயக்காட்டுப் பொம்மை என்பது சபைக் குறிப்பில் இருந்து நீக்கும் அளவுக்கு ஒவ்வாத வார்த்தை அல்ல’ என முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

‘பொம்மைகள்' என்ற வார்த்தை சபைக்கு ஒவ்வாத சொல்தான். அது கடந்த காலத்தில் நீக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இப்படிச் சொன்ன பிறகு சபாநாயகரால் என்ன செய்ய முடியும்?

அமைதியாகிவிட்டார். ஆனால் தி.மு.க கொந்தளித்தது.

தமிழ்நாடு வரலாற்றில் ஆகஸ்ட் 3-ம் நாள் முக்கியமானது. சபை நடவடிக்கைகளை அப்படியே நிறுத்திவிட்டு, சபை ஒத்திவைக்கப் படுவதாக சபாநாயகர் அறிவித்தார். சமீபகால வரலாற்றில், அவை நடவடிக்கைகள் முடியாமல் ஒத்திவைக்கப்பட்டதும் இல்லை; ஆளும் கட்சியினர் வெளியேறிய பிறகு எதிர்க்கட்சியினர் பத்து நிமிடங்களுக்கு மேல் சபைக்குள் இருந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதும் இல்லை. ஜானகி - ஜெயலலிதா பிரச்னையின்போது இத்தகைய உள்ளிருப்புப் போராட்டம் நடந்தது. ‘பொம்மை' என்ற சொல்லுக்காக இத்தகைய அவமானத்துக்குரிய நிகழ்வுகள் அவசியமா? அந்த ஒரு வார்த்தைக்குள்தான் அ.தி.மு.க-வின் அத்தனை கௌரவமும் அடங்கியிருக்கிறதா அல்லது தி.மு.க-வைச் சீண்டி வெளியே அனுப்புவதுதான் உள்நோக்கமா? இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துவது மாதிரியே ஒரு விவாதம் நடந்துள்ளது.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சபையில் பேசினார்... ‘1971-ல் கருணாநிதிதான் மதுவிலக்கை ரத்துசெய்தார். அப்போது என்னென்ன எல்லாம் சொன்னீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்’ எனச் சொன்னார். இதற்கு மேல் விமர்சனம் செய்யவில்லை, நிறுத்திக்கொண்டார். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து,

‘ `அனைவருக்கும் தெரியும்’ என அமைச்சர் சொன்னார். ஆனால், இன்றைய இளைஞர்களுக்கு அதெல்லாம் தெரியாது. எனவே, அமைச்சர் அதைத் தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும்’ எனத் தூண்டினார். உடனே தி.மு.க-வினர் கூச்சலிட ஆரம்பிக்கிறார்கள்.

‘அமைச்சரை இதெல்லாம் பேசு’ என உத்தரவிட முடியுமா? என்ற கோணத்தில் விவாதம் மாறுகிறது. உடனே முதலமைச்சர், `என்னால் அமைச்சருக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்து சொல்ல முடியாது. எனவே உங்கள் மூலமாகச் சொல்கிறேன்’ என சபாநாயகரைப் பார்த்துச் சொல்கிறார். உடனே அமைச்சர் பி.தங்கமணி, பழைய கதைகளைச் சொல்ல முயற்சிக்க... தி.மு.க உறுப்பினர்கள் எழுப்பும் சத்தம் அதிகமாகிறது. இதைத் தொடர்ந்து முதலமைச்சரே அதைச் சொல்ல ஆரம்பிக்கிறார். தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்கிறார்கள்.

இதற்குப் பிறகு ஜெயலலிதா சொன்னதுதான் முக்கியமானது. ‘முன்னர் எல்லாம் உறுப்பினர்களை வெளியேற்றுவது ரொம்பக் கஷ்டம். ஆனால், இப்போது ரொம்ப எளிது. கச்சத்தீவு, பூரண மதுவிலக்கு எனச் சொன்னால் போதும் உடனே வெளியே கிளம்பிவிடுவார்கள்’ என்ற ஜெயலலிதா... சபாநாயகரைப் பார்த்து, ‘தங்களுடைய பணியை நான் எளிதாக்கிவிட்டேன்’ என்கிறார். இதற்கு சபாநாயகர் தனபால், ‘முதலமைச்சருக்கு நன்றி’ என்கிறார். முதலமைச்சர் சிரிக்கிறார்.

தி.மு.க-வினர் வெளியேறிவிட்டால் சபையை ‘நிம்மதி'யாக நடத்தலாம் என்ற விருப்பம்தான் இதில் தெரிகிறது. எதிர்க்கட்சி வரிசையில் ஏராளமானவர்கள் இருக்கும் துன்பத்தை அ.தி.மு.க அனுபவிப்பது இதன் மூலம் தெரிகிறது. அவர்களுக்குப் பதில் கொடுக்க, கடந்த காலத்தில் கோலோச்சிய நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, வளர்மதி போன்றோர் இப்போதைய அமைச்சரவையில் இல்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

89 பேர்... கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்து ஏறத்தாழ 100 பேர் இருப்பதால், இவர்களது சத்தம் அதிகமாகவே கேட்கிறது; சபாநாயகர் தனபால் பல நேரங்களில் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது. அவர் அதிரடி அரசியல்வாதி அல்ல; சாந்தமான அரசியல்வாதியாக வலம்வந்தவர். தி.மு.க உறுப்பினர்கள் தன்னை மிரட்டுவதாக, சபையிலேயே வருத்தப்பட்டார்.

ஜெ.அன்பழகன் தன்னை ஒருமையில் அழைத்ததாகவும், ரங்கநாதன் தன்னை நோக்கி அநாகரிகமான முறையில் சைகை காட்டுவதாகவும், பொன்முடி ஒருமையில் பேசியதாகவும் சபாநாயகர் சொல்கிறார். ‘தனிப்பட்ட முறையில் என்னை மதிக்கவில்லை என்றாலும், சபாநாயகர் என்ற பதவிக்காகவாவது அவர்கள் கண்ணியம் காக்க வேண்டும்’ என்பது சபாநாயகர் பேச்சின் சாராம்சம். ‘ஒரு நிமிஷம் எங்களுக்குப் பேச வாய்ப்பு கொடுங்கள் என்பதைக் கேட்க, ஒரு விரலைக் காட்டுகிறார்கள். இதில் தவறான அர்த்தம் ஏன் வருகிறது? இதைச் சொல்ல அவர்களுக்கு மைக் இருக்காது. அதனால் சைகையில்தான் காட்டவேண்டியுள்ளது’ என்கிறார்கள் தி.மு.க-வினர். தவறுகள் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. ரங்கநாதனை, முதலில் தி.மு.க தலைமை கண்டிக்க வேண்டும்.

சத்த சபை - 131 கேங் Vs 89 கேங்

சபாநாயகர் மீது விமர்சனம் இருந்தாலும், அவருக்கான மரியாதை தரப்படத்தான் வேண்டும். தி.மு.க-வினரைப் பார்க்க ஆளும் கட்சிக்குப் பிடிக்காவிட்டாலும் அவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான். இந்த இரண்டு கசப்பு மாத்திரைகளையும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் விழுங்கித்தான் ஆக வேண்டும். மக்கள் ஏற்கெனவே ஏராளமான கசப்பு மாத்திரைகளைச் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களைக் காக்காவிட்டாலும் பரவாயில்லை, சபையின் மாண்பையாவது காப்பாற்றுங்கள்!

சத்த சபை - 131 கேங் Vs 89 கேங்

ஆட்சி வேண்டுமானால் அ.தி.மு.க-வுக்குச் சொந்தமானதாக இருக்கலாம். சட்டமன்றம் எந்தத் தனிப்பட்டவருக்கும் சொந்தமானது அல்ல. பொதுச் சொத்து... பொதுமக்கள் மேடை!