Published:Updated:

``தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்” அடித்துச் சொல்லும் வைகோ

``தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்” அடித்துச் சொல்லும் வைகோ
``தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்” அடித்துச் சொல்லும் வைகோ

``தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்” அடித்துச் சொல்லும் வைகோ

`தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்' என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வியாழக்கிழமை (12.4.18) கடலூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பயண நிறைவு விழாவில் பேசியிருக்கிறார்.

கடலூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பயண நிறைவு விழாவில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அதில் வைகோவின் பேச்சு மட்டுமே அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தனது வழக்கமான பாணியில் மைக் பிடித்த வைகோ, ``36 ஆண்டுகளுக்கு முன்னர் 1982-ம் வருடம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட மாநாடு கடலூர் கெடிலம் நதிக்கரையில் நடைபெற்றது. அப்போது எனது ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் முன்னிலையில் உரையாற்றினேன். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர், அன்புத் தம்பி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உரையாற்றுகிறேன். ஆயிரம் சக்திகள் ஒன்று திரண்டு வந்தாலும் எங்கள் அரசியல் படையெடுப்பை தடுக்க முடியாது என்ற வகையில், எந்தத் தேர்தல் வந்தாலும், யார் யாரோடு கூட்டு சேர்ந்தாலும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மலரும். அந்த உறுதியுணர்வோடு, இயற்கை எனக்கு வழங்கியிருக்கும் சொற்ப ஆற்றலை, 54 ஆண்டுகள் பொது வாழ்விலே நான் பெற்றிருக்கும் பட்டறிவை, முழுமையாக, தி.மு.க-வுக்கு வாளும் கேடயமுமாக இருந்து தன்னலம் கருதாமல், இது வேண்டும் அது வேண்டும் என்ற நிபந்தனை விதிக்காமல், கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் குள்ளநரிப் பேர்வழிகளை தகர்த்துத் தவிடு பொடியாக்குவோம்.

திராவிட இயக்கத்தை எந்தச் சக்தியாலும் இனி அழிக்க முடியாது. மலரப்போவது தி.மு.க-வின் ஆட்சி. ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது என் ஆருயிர் இளவல் தளபதி மு.க.ஸ்டாலின் என்பதை சூளுரைக்கும் நிகழ்ச்சியாக இந்தக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற இந்த நான்காண்டு காலத்தில், இந்த உபகண்டத்தில் எந்தப் பகுதியிலும் கண்டிராத எதிர்ப்பை, மக்கள் கொந்தளிப்பை தற்போது தமிழகத்தில் கண்டிருக்கிறார். வானிலேயே வந்து வானிலேயே திரும்பிச் சென்றிருக்கும் நரேந்திர மோடி அவர்களே.... ஏழரை கோடி தமிழ் மக்களின் எதிர்ப்பை முதல் முதலாக நீங்கள் பார்க்கிறீர்கள். 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தின் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள் என்று சொன்னபோதும் நீங்கள் நேரம் ஒதுக்கித் தரவில்லை. ஏழரை கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துவிட்டு எந்தத் தைரியத்தில் தமிழகத்துக்குள் நீங்கள் நுழைந்தீர்கள்?

நரேந்திர மோடியை நீ ஆதரித்தாயே... என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்கலாம். ஆம்… ஆதரித்தேன். ஆனால், ஆதரித்த 24 மணி நேரத்திலேயே, லட்சக்கணக்கானத் தமிழர்களைக் கொன்று குவித்தப் பாவி ராஜபக்‌ஷே பதவிப் பிரமாணத்துக்கு வருகிறார் என்றவுடன் மோடியிடம் நேருக்கு நேராகச் சென்று சொன்னேன். எங்கள் இருதயத்திலே ஈட்டியைச் சொருகிவிட்டீர்கள். நாளை நீங்கள் பிரதமராகப் போகிறீர்கள். நாளை மாலை உங்கள் முடிவை மாற்றாவிட்டால், உங்களுக்கு எதிராகக் கறுங்கொடி ஏற்றுவேன் என்று சொன்னேன். அந்தக் கொடிதான் இன்றும் கையில் கறுப்புக் கொடியாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, மோடி என்ன நினைக்கிறாரோ அது நடக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தமிழகத்துக்குப் பச்சைத் துரோகத்தை இழைத்துவிட்டார். நீதியைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார். தீபக் மிஸ்ரா அவர்களே மத்திய அரசைக் கண்டிப்பதுபோல அன்று என்ன ஒரு நாடகம் நடத்தினீர்கள். இதனைச் சொல்வதனால் என் மீது என்ன வழக்கு வந்தாலும் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. ஆனால், மோடி கூட்டமும் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும்  எடுபிடிக் கூட்டமும் இனி ஆட்சிக்கு வரக் கூடாது. இந்தியாவில் மலரப் போகும் மத்திய அரசை இனி தி.மு.க-வே தீர்மானிக்கும். இனி நரேந்திர மோடியால் பிரதமராக முடியாது. என்ன வைகோ ஸ்டாலினை இப்படித் தூக்கி வைத்துப் பேசுகிறான் என்று சிலர் நினைப்பார்கள். அப்படித்தான் பேசுவேன்… ஏனென்றால் தளபதி ஸ்டாலின் எங்கள் குடும்பப் பிள்ளை. என் அன்புத் தம்பி. ஸ்டாலின்தான் தமிழகத்தின் வருங்கால முதல்வர். அவ்வளவுதான்…” என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு