Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

படம்: சு.குமரேசன்

கழுகார் பதில்கள்!

படம்: சு.குமரேசன்

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

தீ.அசோகன், திருவொற்றியூர்.

‘‘ஜெயலலிதா கொடுத்த ஊக்கத்தினால்தான் இன்று அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் உயர்ந்துள்ளார்’’ என்று தமிழக சட்டசபையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் பேசி இருப்பது பற்றி?

இதைக் கேள்விப்பட்ட டொனால்டு ட்ரம்ப் விரைவில் சென்னை வர இருக்கிறாராம்.

ஜி.வி.மனோ, தூத்துக்குடி-3.

‘‘தமிழக அரசியலில் மூன்றாம் இடத்தில் காங்கிரஸ் உள்ளது’’ என்கிறாரே இளங்கோவன்?

முதல் மாணவன், 134 மதிப்பெண்கள் பெற்றுள்ளான். இரண்டாவது மாணவன், 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளான். மூன்றாவது மாணவன், 8 மதிப்பெண்கள் பெற்றுள்ளான். வரிசைப்படி பார்த்தால், மூன்றாவது இடம்தான். ஆனால், வாங்கிய மதிப்பெண்கள் மரியாதைக்குரியதா? இது ஏதோ இளங்கோவன் மட்டும் காரணம் அல்ல... அனைத்து காங்கிரஸ் பிரமுகர்களும் யோசிக்க வேண்டும்.

கழுகார் பதில்கள்!

அ.தி.மு.க-வுக்குச் சாதகமான தொகுதிகள், தி.மு.க-வுக்குச் சாதகமான தொகுதிகள் என்று இருப்பது மாதிரி காங்கிரஸுக்குச் சாதகமாகத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்போது மட்டும்தான் அந்தக் கட்சி வெல்ல முடியும்.

அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.

‘‘வயக்காட்டுப் பொம்மைகள் என்பது பயன்படுத்தக்கூடாத ஒவ்வாத வார்த்தை அல்ல’’ என்று முதலமைச்சர் ஜெயலலிதா சொல்லி இருக்கிறாரே?

அ.தி.மு.க உறுப்பினரைப் பார்த்து தி.மு.க உறுப்பினர் சட்டசபையில் இதனைச் சொல்லி இருந்தால், முதல்வர் இப்படிச் சொல்லி இருப்பாரா? நம்மை நோக்கி யார் எதைச் சொன்னால் தவறு என்போமோ, அதே வார்த்தையை மற்றவரை நோக்கி நாம் பயன்படுத்தக் கூடாது. எந்தக் கட்சி உறுப்பினராக இருந்தாலும் சட்டமன்றத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மாண்பு இதுதான்.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

தமிழக சட்டசபையில் நடக்கும் கூத்தைப்போல மற்ற மாநில சட்டசபைகளிலும் நடக்குமா?

எதிர்க் கட்சிகள் ஏறத்தாழ சமபலத்தில் உள்ள சட்டசபைகளில் இப்படித்தான் நடக்கிறது. உத்தரப்பிரதேசம், கேரளா ஆகிய மாநில சட்டசபைகளில் இதை அடிக்கடிப் பார்க்கிறோமே!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஜி.எஸ்.டி மசோதா விவகாரத்தில் வெற்றி காங்கிரஸுக்கா... பி.ஜே.பி-க்கா?

அனைத்துக் கட்சிகளும் சேர்ந்துதான் அந்த மசோதாவை வெற்றிபெற வைத்துள்ளார்கள். காங்கிரஸின் அங்கீகாரத்தையும் சேர்த்துப் பெற்று மசோதாவை நிறைவேற்றியது பி.ஜே.பி-யின் வெற்றிதான்.

சம்பத்குமாரி, பொன்மலை.

தே.மு.தி.க-வைவிட்டு வேறு கட்சிகளில் தஞ்சம் புகும் அந்தக் கட்சிப் பிரமுகர்கள் அனைவரும்

கூறும் ஒரு காரணம், ‘நாங்கள் எங்களது சொந்தக் காசை செலவு செய்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். இனி கேப்டனை நம்பினால் பிழைக்க முடியாது’ என்பதுதான். அப்படியானால், இவர்கள் அனைவரும் பிழைப்புக்காகத்தான் அரசியலுக்கு வந்தார்களா?

வேறு எதற்காக? இதை இவர்கள் சொல்லித்தான் நமக்குத் தெரியவேண்டுமா? தேசபக்தி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் காலம் இது. பாவம் சுதந்திரப் போராட்ட வீரர்கள்.

கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.

‘‘தமிழக மின்துறையைக் குட்டிச்சுவர் ஆக்கியதே தி.மு.க-தான்’’ என்கிறாரே ஜெயலலிதா?

இதையே இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குச் சொல்லப் போகிறார்? கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர் ஜெயலலிதா. கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய மின்திட்டங்களை எவ்வளவு கொண்டு வந்தோம், அதனால் எவ்வளவு கூடுதல் மின்சாரம் நமக்குக் கிடைத்தது, தமிழ்நாடு மின்வாரியம் எத்தனை ஆயிரம் கோடி கடனை அடைத்தது, கடன் வாங்குவதை எவ்வளவு குறைத்தது, மின்வெட்டு எவ்வளவு குறைந்துள்ளது, புதிதாக எத்தனை லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்புத் தரப்பட்டு உள்ளது, மின்வாரியத்தை எப்போது லாபம் தரும் நிறுவனமாக மாற்றுவோம்... என்பது போன்ற ஆக்கபூர்வமான கேள்விகளுக்கு முதல்வரோ, அதற்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர் பி.தங்கமணியோ பதில் சொல்ல வேண்டும்.

ஸ்ரீராம், சேலையூர்.

சசிகலா புஷ்பா விவகாரத்தில் ஆள் தெரியாமல் ஜெயலலிதா பதவி கொடுத்துவிட்டாரா அல்லது கருணாநிதி தனது விளையாட்டை ஆரம்பித்துவிட்டாரா?

சசிகலா புஷ்பா விவகாரத்துக்கும் கருணாநிதிக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா தகுதி வாய்ந்தவர்களுக்கு அந்தப் பதவியைத் தரவில்லை என்பதுதான் உண்மை. மாநிலங்கள் அவை என்பது அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை ஆகிய தனித்திறமைகள் கொண்ட மனிதர்கள் அலங்கரிக்கும் அவை. அங்கு ஒரு கட்சி அனுப்பிவைக்கும் நபர்கள் ஓரளவு அறிவாற்றலும், வாதத்திறமையும், தனித்திறனும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால், ஏனோ கட்சித் தலைமைகள் அப்படிப்பட்ட ஆட்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது இல்லை. மற்ற மாநிலங்கள் எப்படியோ? இங்கே கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாநிலங்கள் அவைக்கு அப்படிப்பட்ட நபர்களை அதிகம் அனுப்புவது இல்லை. இதனால் மாநிலங்கள் அவையில் தமிழகம் குறித்த எண்ணங்கள் பதிவு செய்யப்படாமலேயே போகிறது.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

இந்தியாவில் எப்போதாவது நாடு முழுக்க மதுவிலக்கு இருந்திருக்கிறதா?

இல்லை.

ச.பால்துரை, தங்கம்மாள்புரம்.

சாதியின் பெயர் தாங்கி பள்ளிகள், ஊர்கள், தெருக்கள் இருக்கும்போது சமத்துவம் என்பது உயிரற்ற சவம்தானே?

சாதிப் பெயர்களைப் பொது இடங்களுக்கு வைக்கக் கூடாது என்று எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் இருக்கிறது. ஆனால், அது அமல் ஆவதுதான் இல்லை.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!