Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்

ணு உலைகள் எந்த அளவுக்கு ஆபத்தானவை; அணு மின்சாரத்தைத் தவிர்த்துவிட்டால் எதிர்காலத்தில் வாழவே முடியாதா என்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உலகின் வெவ்வேறு பகுதிகளில் அணு உலைகளால் ஏற்பட்ட ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்று வாதிடுகின்றனர் ஓர் அணியினர். இதை எதிர்த்து, அணு உலைகள் பாதுகாப்பானவைதான் என்று அழுத்தமாக எதிர்வாதம் புரிகிறார்கள் மற்றோர் அணியினர்.

ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை சுனாமி தாக்குதலால் ஏற்படுத்தி இருக்கும் அணுக் கதிர்வீச்சு, எதிர்க்கும் அணியினரின் எதிர்ப்பைக் கடுமையாக்கி இருக்கிறது. தற்போது தமிழகத்தில் கூடங்குளத்தை மையம்கொண்டு இந்த எதிர்ப்பு நெருப்பு பலமாகவே கனன்றுகொண்டு இருக்கிறது.

'எதிர்ப்பாளர்களைத் தூண்டிவிடுவதில் அந்நிய சக்திகளின் பங்கு இருக்கிறது’ என்று அண்மையில் அணு சக்தித் துறைத் தலைவர் கூறி இருப்பது அதிர்ச்சியின் உச்சம். ஓர் அரசியல்வாதியின் அறிக்கையைப் போல வெளியாகி இருக்கும் இது, கூடங்குளத்தைச் சுற்றியுள்ள மக்களையும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் போராட்டக்காரர்களையும் கொச்சைப்படுத்தும் செயல்.

மேலும், 'அணு உலையைப் பாதியில் கைவிடுவது சாத்தியம் அல்ல... அப்படிச் செய்வதுதான் மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்கும்’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதை மிரட்டல் என்பதா அல்லது தன்னையும் அறியாமல் அணு சக்தித் துறைத் தலைவரே ஒப்புக்கொண்ட அதி பயங்கர உண்மை என்பதா?

அணு உலையை ஒரு முறை நிறுவிவிட்டால் அதன் பிறகு எத்தகைய ஓர் அபாயகரமான சூழல் வந்தாலும் அங்கிருந்து அகற்றவே இயலாத ஒன்று என்றல்லவா இதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது?! 'கூடங்குளம் அணு உலைக்கு சுனாமி ஆபத்து கிடையாது’ என்று இன்று கூறும் இதே விஞ்ஞானிகள், நாளையே ஒரு விபரீதம் நேர்ந்துவிட்டால் வேறு எப்படி எல்லாம் பேசுவார்கள்? விஞ்ஞானிகளே கேடயம்போல மாறி, அரசியல்வாதிகளைப் போல் செயல்பட்டால், அப்பாவி மக்கள் பாரபட்சமற்ற உண்மையை எங்கே தேடுவது?