Published:Updated:

மிஸ்டர் கழுகு : புஷ்பா புயல்!

மிஸ்டர் கழுகு : புஷ்பா புயல்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு : புஷ்பா புயல்!

6 மந்திரிகளுக்குச் சிக்கல்

மிஸ்டர் கழுகு : புஷ்பா புயல்!

"டெல்லியில் இருந்து சசிகலா புஷ்பா கொடுத்த பேட்டியைப் பார்த்தீரா?” என்றபடி உள்ளே வந்தார் கழுகார்.  தலையாட்டினோம்.

‘‘தன்மீது அடுக்கடுக்கான வழக்கு அஸ்திரங்கள் பாய ஆரம்பித்ததும், சாதி கேடயத்தை சசிகலா புஷ்பா எடுத்துவிட்டார். ‘அ.தி.மு.க என்பது அடிமைகள் கூடாரம். நான் அதில் இருக்க விரும்பவில்லை. தமிழ்நாட்டுக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தது ஒரு பெண்ணைக் கஷ்டப்படுத்துவதற்காகத்தானா?

அ.தி.மு.க-வில் ஆளை அடிப்பது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்று நடப்பது வழக்கமானதுதான். பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது பிரச்னையாக இருந்தது. நான் கட்டிவிட்டேன். அ.தி.மு.க-வில் அதேநேரத்தில் பலரும் இப்போது சந்தோஷமாக உள்ளார்கள். அதேநேரத்தில் பலர் பயந்துபோய் உள்ளனர். நான் அப்படிப் பயப்படும் குடும்பத்தில் இருந்தும் பயப்படும் சமுதாயத்தில் இருந்தும் வரவில்லை. என்னைக் கட்சியைவிட்டு நீக்கியதால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. அ.தி.மு.க-வுக்குத்தான் நஷ்டம்’ இப்படிக் கனலாகக் கக்கி இருக்கிறார் சசிகலா புஷ்பா.”

‘‘தைரியம்தான்!”

‘‘ஆனால், சசிகலா புஷ்பாவின் வளர்ச்சிக்குக் காரணமான அமைச்சர்கள், அதிகாரிகள் பயந்தும் மிரண்டும் கிடக்கிறார்கள்.”

‘‘அவர்கள் எண்ணிக்கை அதிகமா?”

‘‘இருக்காதா? சாதாரண பள்ளி ஆசிரியையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் சசிகலா புஷ்பா. அவரது கணவர் ஒரு எலெக்ட்ரீஷியன். அங்கிருந்து சென்னைக்குப் பயணம். இங்கும் பல பிரமுகர்கள் அவருக்கு உருகிஉருகி உதவி செய்துள்ளார்கள். தலைமைக் கழகத்தில்  வேலை பார்த்த பிலால் நிறைய உதவிகள் செய்துள்ளார். கார்டனுக்குள் நெடுநாட்களாக இருக்கும் ‘சாந்த சொரூபி’க்கும் இவருக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது. திருவான்மியூரில் இவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்கிறார்கள் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் சொல்லி நீர் செய்தியாக வெளியிட்டு இருந்தீர்.”

‘‘ஆமாம்.”

மிஸ்டர் கழுகு : புஷ்பா புயல்!

‘‘அந்தப் பிரமுகர் மூலமாக உளவுத்துறை அதிகாரிக்கு நெருக்கம் ஆனார். அந்த அதிகாரியைத் தேர்தலுக்கு முன்புதான் தூக்கினார்கள். அ.தி.மு.க-வில் ஒரு பாணி உண்டு. அரசியல்வாதிகளைக் காக்கா பிடிப்பதைவிட உளவுத்துறை அதிகாரிகளை முதலில் வளைத்துப் போடுவார்கள். அவர்கள்தான் செய்திகளை மேலிடத்துக்குக் கொண்டுபோகாமல் தடுப்பார்கள் என்பதால், இந்தக் குறுக்குவழியை அமைச்சர்கள்,

எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் கடைப்பிடிப்பார்கள். அதே பாதையில்தான் சசிகலா புஷ்பாவும் செயல்பட்டுள்ளார். அடுத்து, முதல்வரின் செயலாளர்களில் ஒருவரையும் தன் வசம் ஆக்கிவிட்டாராம். இவை சேர்ந்துதான் அவருக்குப் பதவி மேல் பதவியைத் தூக்கிக் கொடுத்துள்ளது.

ஏற்காடு இடைத்தேர்தல் நேரத்தில் ‘பணிவு’ மாண்புமிகு ஒருவரது அறிமுகம் கிடைத்துள்ளது. அதன்பிறகு மகளிர் அணி மாநிலச் செயலாளர் பதவி கிடைத்தது. மாநில நிர்வாகி ஆனபிறகு அடிக்கடி மாவட்டம் தோறும் விசிட் அடிக்கும் வாய்ப்பைப் பெற்ற அவர் அதிகமாகக் கூட்டங்களை நடத்திய நிர்வாகி என தலைமையிடம் நற்சான்று பெற்றாராம். அப்படி மாவட்டம்தோறும் சென்றபோது டெல்டா மாவட்ட அமைச்சரிடம் பழக்கம் ஏற்பட்டதாம்.  ஒருமுறை நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, ரினிவல் செய்யாத அடையாள அட்டையோடு வலம் வந்த அமைச்சர் ஒருவரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம் புஷ்பா. சரித்திரப் புகழ் பெற்ற கோட்டை உள்ள ஊர்க்காரர் அவர். பகையில் தொடங்கிய அவர்களது பழக்கம் நாளடைவில் படிப்படியாக நெருக்கத்தை  உருவாக்கிவிட்டதாம்.”

‘‘ஓஹோ!”

‘‘சசிகலா புஷ்பாவுக்கும் அமைச்சர் சண்முகநாதனுக்குமான நெருக்கம் முன்பே வெளிச்சத்துக்கு வந்தது. இப்போது பாலியல் புகார் சொல்லி இருக்கும் பானுமதி, ஜான்சிராணி ஆகிய இருவரும் தங்களை சசிகலா புஷ்பா வீட்டுக்கு வேலைக்கு அனுப்பியதே சண்முகநாதன்தான் என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்காகவே சி.த.செல்லப் பாண்டியன் மீது புகார்கள் அதிகமாகப் போய்க் குவிய சசிகலா புஷ்பா காரணமாக இருந்தாராம். ‘தூத்துக்குடி எம்.எல்.ஏ-வாக இருந்த சி.த.செல்லப்பாண்டியனிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியை எஸ்.பி.சண்முக நாதனுக்கு மாற்றும்படி செய்தார். அதோடு எஸ்.பி.சண்முகநாதன் மீது எழுந்த பாலியல் புகார்களை அமுக்கி அவர் மீது நடவடிக்கை எதுவும் வந்துவிடாதபடி பார்த்துக்கொண்டார். அதற்குக் கைமாறாக அடுத்து வரும் தேர்தலில் தூத்துக்குடி அல்லது வைகுண்டம் தொகுதியில் எம்.எல்.ஏ சீட் வாங்கித் தந்துவிட வேண்டும் என சண்முகநாதனிடம் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுவைத்திருந்தார் புஷ்பா’ என்றும் சொல்கிறார்கள் தூத்துக்குடி அ.தி.மு.க-வினர். பரஸ்பர உதவிகளை சசிகலா புஷ்பாவும் சண்முகநாதனும் செய்துள்ளார்கள்.”

‘‘ம்!”

‘‘வட சென்னை வட்டாரத்தில் மகளிர் விடுதி அமைக்க இடம் ஏற்பாடுசெய்த ஓர் அமைச்சரும், ‘நடிப்பு’க்குப் பெயர்போன இரண்டெழுத்து இன்ஷியல்கார அமைச்சர் ஒருவரும் புஷ்பா புயலில் சிக்கியவர்களாம். இந்த ஆறு அமைச்சர்களும் மிரண்டுக் கிடக்கிறார்களாம். ‘இது அமைதியா இருந்தாலேபோதும். தினமும் பேட்டி கொடுக்கிறேன் என்று அம்மாவைச் சீண்டிக்கொண்டே இருப்பதுதான் நமக்குச் சிக்கல்’ என்றாராம் ஓர் அமைச்சர். ‘நமக்குத் தெரிஞ்ச உண்மை எல்லாம் சொல்ல முடியாது. இது தெரிஞ்சா நம்மோட பேசின டேப் எதையாவது ரிலீஸ் செய்தாலும் செய்திடும்’ என்றாராம் இன்னொரு அமைச்சர். இரண்டு மூன்று அமைச்சர்கள் தனியாகச் சந்தித்துக் கொண்டால் இந்தக் கதையைத்தான் பேசுகிறார்களாம். அநேகமாக இவர்கள் தலைகள் விரைவில் உருளலாம். மேலும், பால்வளத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு மேலும் ஒரு சிக்கல் என்கிறார்கள்.”

‘‘அது என்ன?”

‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் வேட்பாளராக புவனேஷ்வரன் என்பவரைத்தான் அ.தி.மு.க தலைமை அறிவித்தது. உடனே, ‘புவனேஷ்வரன் மீது வழக்கு இருக்கிறது. அந்த வழக்கைத் துரிதப்படுத்த வேண்டும்’ என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ‘இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், புவனேஷ்வரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவு போட்டதாக வாட்ஸ் அப் மற்றும் ஊடகங்களில் தகவல் பரவியது. உடனே, புவனேஷ்வரனை மாற்றிவிட்டு அந்தத் தொகுதியில் ஏற்கெனவே இருந்துவரும் எஸ்.பி.சண்முகநாதனையே மீண்டும் அறிவித்தது அ.தி.மு.க தலைமை. ஆனால், நீதிமன்றம் அப்படியொரு உத்தரவைப் போடவில்லை என்றும் அந்தத் தகவல் வேண்டும் என்றே பரப்பிவிடப் பட்டது என்றும் அதற்குப் பயன்படுத்திய ஆவணங்கள் போலியானவை என்றும் எல்லாமே புவனேஷ்வரனை மாற்றுவதற்காகச் செய்யப்பட்ட சதி என்றும் பேசப்பட்டது.”

‘‘அப்படியா?”

‘‘அமைச்சர் சண்முகநாதனின் ஆதரவாளர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சொல்லப் படுவதால், அவரது  வேலையாகத்தான் இருக்கும் என்று சந்தேகம் எழுகிறதாம். எனவே, நீதிமன்ற உத்தரவின் பேரில் சைஃபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். சீக்கிரமே இந்த விவகாரத்தில் யார் யாரெல்லாம் குற்றவாளிகள் எனத் தெரியவரும் என்கிறார்கள்” என்றபடி அமைதியாக இருந்த கழுகாரிடம், ‘‘ஸ்டாலினின் வலது கரங்களில் ஒருவரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மகன் ரமேஷ்,

அ.தி.மு.க-வுக்குத் தாவப் போவதாகச் செய்தி றெக்கை கட்டிப் பறக்கிறதே?” என்றோம்.

‘‘குடும்பக் கோபத்தால் விலகி இருக்கும் ரமேஷை, அ.தி.மு.க-வில் சேர்த்து விளையாடப் பார்க்கிறார்கள் என்று விருதுநகர் தி.மு.க-வினரே சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். கடந்த ஒரு வாரமாகச் சென்னையில் முகாமிட்டிருக்கும் ரமேஷ், முதல்வர்  ஜெயலலிதாவுக்கு உருக்கமாக மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி இருக்கிறாராம். அதில், தனது தந்தையை துரோகி என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளாராம். அ.தி.மு.க-வில் சேர வேண்டுமென்றால், அந்த மாவட்ட அமைச்சர் மூலம்தான் கடிதம் கொடுக்க வேண்டும்... அதுதான் முறை. ஆனால், விருதுநகர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் மந்திரியுமான ராஜேந்திரபாலாஜியை கான்டக்ட் பண்ணாமல் வைகைச்செல்வன் மூலம் முயற்சித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ராஜேந்திரபாலாஜி செம கடுப்பாகி இருக்கிறாராம்.”

‘‘சாத்தூரார் சமீபத்தில்தானே பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடினார்?”

‘‘ஆமாம். தன்னுடைய பிறந்தநாள் விழாவை கடந்த 8-ம் தேதி விருதுநகரே அதிரும் வகையில் கொண்டாடினார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். எங்கு பார்த்தாலும் கொடி தோரணங்களுடன் விதவிதமான ப்ளெக்ஸ்கள். ஒன்றியச் செயலாளர்களும், நகரச் செயலாளர்களும் சீர் பொருட்களுடன் வந்து அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னார்கள். பிறந்தநாள் விழா நடந்துகொண்டிருந்தபோதே ரமேஷ் அ.தி.மு.க-வில் சேர்ந்துவிட்டதாக வதந்தி பரவ, கட்சியினர் சிலர் அப்செட் ஆகினர். ஆனால், அது பொய் என்று தெரிந்ததும் நிம்மதியானார்கள். அந்த நேரம் பார்த்து கே.கே.எஸ்.எஸ்.ஆர் வீட்டு வாசலில் போடப்பட்ட பந்தல் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கெட்ட சகுனம் என்று சிலரும், அண்ணாச்சிக்கு திருஷ்டி கழிந்துவிட்டது என்று சிலரும் சொன்னார்கள்.”

‘‘ரமேஷ் மனதைக் கலைத்தது யார்?”

‘‘சமீபத்தில் அ.தி.மு.க-வில் சேர்ந்த கருப்பசாமி பாண்டியன்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். முக்கியமானவர்களை அழைத்துச் சென்று ஜெயலலிதாவிடம் நல்லபெயர் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் கானா. சாத்தூராருக்கும் அவரது மகனுக்கும் பேச்சுவார்த்தை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு தூண்டிலைப் போட்டுள்ளார் கானா என்கிறார்கள். சாத்தூராருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இரண்டு பேர் அவரோடு இருக்கிறார்கள். ரமேஷ் மட்டும்தான் தனியாகப் போய்விட்டாராம். இதைக் கேள்விப்பட்டவர் ரமேஷிடம் சமாதானம் பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது.  ‘ஏற்கெனவே ஒருமுறை அ.தி.மு.க-வில் சேர்ந்தபோது ஜெயலலிதா காலில் விழும் படத்தைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி அவமானப்படுத்திய சம்பவத்தை கே.கே.எஸ்.எஸ்.ஆர் இன்னும் மறக்கவில்லை. அதனால்தான் மகனை அங்கு அனுப்பிவிடக் கூடாது என்று நினைக்கிறார்’  என்று ஒரு சாரர் சொல்கிறார்கள். ஆனால், சாத்தூராரின் எதிரிகள் வேறுமாதிரியும் சொல்கிறார்கள். ‘இது அண்ணாச்சியின் ஏற்பாடுதான். மகன்,

அ.தி.மு.க-வில் இருந்தால் அது தனக்கு உதவியாக இருக்கும் என்று ப்ளான் பண்ணிச் செயல்படுகிறார்’ என்கிறார்கள் அவர்கள். அரசியல் குடும்பங்களில் இந்தக் குழப்பங்கள் இருக்கத்தானே செய்யும்!” என்றபடி எழுந்த கழுகார்,

‘‘ஓட்டை போட்டு ரயிலில் இருந்து பணத்தை எடுத்தார்கள் அல்லவா? அந்த ரயிலைப் பார்க்க நள்ளிரவு நேரத்தில் தமிழக டி.ஜி.பி அசோக்குமார் வந்தாராம். ‘சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்தையும் ராத்திரிதான் வந்து பார்த்தார். இவர் டி.ஜி.பி-தானே. பகலில் வந்து பார்க்கலாமே?’ என்று போலீஸ் அதிகாரிகளே புலம்புகிறார்கள்” என்றபடி பறந்தார்.

அட்டை படம்: சொ. பாலசுப்ரமணியன்

ரயிலில் மட்டுமா ஓட்டை?

மிஸ்டர் கழுகு : புஷ்பா புயல்!

சேலத்தில் இருந்து சென்னைக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு 9 மணிக்குப் புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ், எழும்பூருக்கு அதிகாலை 4.16 மணிக்கு வந்தது. இந்த ரயிலில், சேலம் பகுதிகளில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து 226 மரப்பெட்டிகள் மூலம் 342.75 கோடி ரூபாய் (அழுக்கான நோட்டுக்கள்) சென்னை ரிசர்வ் வங்கிக்குக் கொண்டுவரப்பட்டன. இதன் பாதுகாப்புக்காக போலீஸாரும், வங்கி அதிகாரியும் அதே ரயிலில் வந்தனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் சீலிடப்பட்ட அந்தத் தனி ரயில் பெட்டியைத் திறந்தபோது ரயிலின் மேற்கூரையில் துளை இருந்தது. அதன்பிறகு போலீஸார் பெட்டிகளைத் திறந்து பார்க்க, 5.74 கோடி ரூபாய் கொள்ளைப்போனது தெரியவந்தது.

மிஸ்டர் கழுகு : புஷ்பா புயல்!

‘‘வட மாநில கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஓடும் ரயிலில் மேற்கூரையில் துளையிட வாய்ப்பில்லை. கொள்ளைச் சம்பவத்தில் ரயில் ஊழியர்களுக்கும், பணத்தை மரப்பெட்டியில் அடைத்த தனியார் பார்சல் சர்வீஸில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருக்கலாம்” என்று சொல்கிறார்கள். ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக மேற்கூரையைத் துளையிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. காலியான கோச், ஈரோட்டில் ஒருநாள் நின்றுள்ளது. அதன்பிறகு கோவைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிறகு சேலம் வந்துள்ளது. இதில் எந்த இடத்தில்வைத்து ஓட்டைப் போட்டார்கள் என்பதுதான் கேள்வி.

மிஸ்டர் கழுகு : புஷ்பா புயல்!

ரயில்வே கொள்ளைச் சம்பவ வழக்கை எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயராஜ் விசாரித்தார். எஃப்.ஐ.ஆரில் அவருடைய செல்போன் நம்பர் 9003131708 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டால் தவமணி என்ற டெய்லர் எடுத்துப் பேசுகிறார். அவரிடம் விசாரித்தபோது ராஜன் செல்லப்பாவின்  குடும்ப டெய்லர் என்று தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சகாயராஜ் நம்பர் 9003161708. கொள்ளைச் சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில்கூடச் சரியாக நம்பரைப் போடத் தெரியாத போலீஸ். எல்லா இடத்திலும் ஓட்டை!