Published:Updated:

``பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை கல்லூரிகள் பின்பற்றுவதில்லை!" சீர்குலையும் கல்வித்துறை

``பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை கல்லூரிகள் பின்பற்றுவதில்லை!" சீர்குலையும் கல்வித்துறை
``பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை கல்லூரிகள் பின்பற்றுவதில்லை!" சீர்குலையும் கல்வித்துறை

``பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை கல்லூரிகள் பின்பற்றுவதில்லை!" சீர்குலையும் கல்வித்துறை

முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவரிடம் அண்மையில் பேசியபோது அவர் தெரிவித்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ``காலையில் பால்பாக்கெட் வாங்கி வருவது முதல் இரவு உறங்கப் போவதற்கான கொசுவத்திவரை வாங்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் மதிப்பெண்ணில் கைவைத்து விடுவார் எங்களுடைய நெறியாளர். இப்படியான நிலை மாணவர்களுக்கு மட்டும்தான்... மாணவிகளுக்கோ வேறுமாதிரியான சிக்கல் இருக்கிறது. இதுதான் இன்றைய பல ஆய்வு மாணாக்கர்களின் நிலை" என்றார். அந்த மாணவரின் ஆதங்கத்தை உறுதிசெய்யும் வகையில் அமைந்திருக்கிறது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவியின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை. 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரியில் பணியாற்றும் நிர்மலா தேவி என்ற உதவிப் பேராசிரியை, அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பல்கலைக்கழகத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களின் பாலியல் ஆசைக்கு இணங்கும் தொனியில் செல்போனில் பேசியுள்ளார். தற்போது இந்தப் பிரச்னை மிகப்பெரிய அளவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கல்லூரி வாசலில் ஏராளமான பெற்றோரும், பொதுமக்களும் திரண்டு, பேராசிரியை நிர்மலாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   

``நான் சொல்கிறபடி நடந்தால், நல்ல மதிப்பெண் மற்றும் பணமும் கிடைக்கும். எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று அவர் பேசும் 20 நிமிட ஆடியோ வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளது. அவருடைய இந்தப் பேச்சு கல்வித்துறையினர் மத்தியில் மட்டுமல்லாது, பொதுமக்களிடமும் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாணாக்கர்களின் அறிவுக்கண்ணைத் திறக்கச் செய்ய வேண்டிய ஒரு பேராசிரியையின் இதுபோன்ற செயல்பாடு காரணமாக, மாணவ-மாணவிகளின் எதிர்காலம் மற்றும் அவர்களின் கல்வி குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்துக் கல்வியாளர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் என்னச் சொல்கிறார்கள் என்று சிலரிடம் பேசினோம். 

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. அனந்த கிருஷ்ணன் பேசுகையில், ``முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பில் பயிலும் மாணவர்கள், கல்வி நிறுவனங்களில் இருக்கக்கூடிய உயர் அதிகாரிகளையும் பேராசிரியர்களையும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. இந்த நிலையை சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு, மாணவர்களை, அவர்களின்

தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுபோன்ற சில மோசமான ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்குக் காரணம் 'கல்வித்துறை என்பது இந்தச் சமூகத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு ஆதாரம். அதில் எனது பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது' என்ற எண்ணம் அதுபோன்றவர்களுக்கு இல்லாததே. அப்படிப்பட்டவர்களால், இதுபோன்ற சீர்கேடுகள் அதிகரிக்கின்றன.

கல்வித்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் வரக் கூடியவர்கள் அறிவாளிகளாக இருந்தால் மட்டும் போதாது. `இந்த நாட்டின் வளர்ச்சியில் நம் பணியின் பங்களிப்பு நிறைவு தரக் கூடியதாகவும், வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச் செல்லக் கூடியதாகவும் இருக்க வேண்டும்' என்ற சமூக எண்ணம் அவர்களுக்கு அடிப்படையிலேயே இருக்க வேண்டும். மேலும் அந்தக் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களுக்கான பொறுப்புடைமை, நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் அறிவுறுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும் விதிமுறைகளை இதுபோன்ற பேராசிரியர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க ஒரு அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும். ஆனால், அதுபோன்றதொரு அமைப்பை எந்தக் கல்லூரியும் இதுவரை ஏற்படுத்தவில்லை.

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளில் சொல்லப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளையே இங்குள்ள கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. குறிப்பாக, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் மற்றும் அதுதொடர்பாக வேறு சில பிரச்னைகள் இருந்தால், அவற்றைத் தீர்ப்பதற்குரிய அமைப்பை ஒவ்வொரு கல்லூரியிலும் ஏற்படுத்த வேண்டும் எனப் பல்கலைக்கழக விதிமுறைகளில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அதுபோன்ற எந்த அமைப்பையும் பல்கலைக்கழகங்களோ அல்லது கல்லூரிகளோ ஏற்படுத்துவதில்லை. கல்வித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றால் தவறுசெய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்" என்றார்.

மகளிர் உரிமைக்காகப் போராடிவரும் பெண்ணியவாதியான ஓவியா கூறுகையில், "கல்வித்துறையில் இதுபோன்ற நடவடிக்கைகள்

சாதாரண மனிதர்களின் வாழ்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. பணம், செல்வாக்கு போன்றவை இல்லை என்றால் பொறியில் சிக்கிய எலியைப் போன்ற நிலைதான், சாதாரண மனிதர்களின் நிலை என்பதை பிரதிபலிக்கிறது அந்தப் பேராசிரியையின் பேச்சு. மேலும், 'யார் வேண்டுமானாலும் சாதாரண மனிதர்களின் வாழ்கையை சூறையாடி விடலாம்' என்ற நிலையையும் உருவாக்கியுள்ளது இச்சம்பவம். இது இந்தச் சமூகத்துக்கு மிகவும் ஆபத்தானது.

ஒரு நாட்டின் தரம் என்பது, அந்த நாட்டில் வசிக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கை நிலை எதுவாக இருக்கிறதோ அதை வைத்தே மதிப்பிடப்படும். அப்படியான எளிய மனிதர்களின் வாழ்கையை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு கல்வித்துறைக்கு உள்ளது. அப்படிப்பட்ட கல்வித்துறையில் உள்ள உயர் அதிகாரிகள், ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை நிர்ணயித்தால் இங்குள்ள சாதாரண மக்களின் நிலை என்னவாகும்? உயர் மட்டத்தில் இருப்பவர்களை பொறுத்தவரை பணம், பதவி என இந்த இரண்டையுமே மையமாக வைத்துச் செயல்படுகிறார்கள். அந்தப் பணத்தையும் பதவியையும், எப்படியாவது பெற்றே தீர வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக உள்ளது. அதனால் எளிய மக்களின் வாழ்வையோ அல்லது இந்த நாட்டின் தரத்தைப் பற்றியோ கவலைப்படாதவர்களாக இருக்கிறார்கள். 

அப்படியான சமூகப் பொறுப்பில்லாதவர்களின் மோசமான நடவடிக்கையே இப்படியான புற்றுநோய் கல்வித்துறையில் படரக் காரணம். அதனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அடிப்படையையே சீர்திருத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு