Published:Updated:

கொதிக்கும் சட்டசபை... குற்றவாளி யார்?

கொதிக்கும் சட்டசபை... குற்றவாளி யார்?
பிரீமியம் ஸ்டோரி
கொதிக்கும் சட்டசபை... குற்றவாளி யார்?

ப.திருமாவேலன், படம்: ஆ.முத்துக்குமார்

கொதிக்கும் சட்டசபை... குற்றவாளி யார்?

ப.திருமாவேலன், படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
கொதிக்கும் சட்டசபை... குற்றவாளி யார்?
பிரீமியம் ஸ்டோரி
கொதிக்கும் சட்டசபை... குற்றவாளி யார்?
கொதிக்கும் சட்டசபை... குற்றவாளி யார்?

மிழ்நாட்டில், சட்டமன்றம் ஒன்றுதான் கொஞ்சம் ரிப்பேர் இல்லாமல் இருந்தது. இப்போது அதன் புகழுக்கும் பங்கம் ஏற்படும் காரியங்கள் நித்தமும் நடக்க ஆரம்பித்துள்ளன.

‘சபையை நடத்தவிடாமல் தி.மு.க-வினர் தொல்லைதருகிறார்கள். சபை செயல்படாமல் தடுக்கவே அவர்கள் வருகிறார்கள்’ என்று சபாநாயகர் தனபால் சொல்கிறார்.

‘சபாநாயகர், எங்களைப் பேசவே அனுமதிப்பது இல்லை. நாங்கள் எதைப் பேசினாலும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறார். எங்களை விமர்சித்து ஆளும் கட்சியினர் பேசுவதை மட்டும் அப்படியே அவைக்குறிப்பில் ஏற்றிவிடுகிறார்’ என்று தி.மு.க பதில் சொல்கிறது.

மொத்தத்தில் தமிழ்நாட்டின் தெருக் களில் நடந்த கருணாநிதி - ஜெயலலிதா சண்டை இப்போது சட்ட மன்றத்துக் குள்ளும் நடக்கிறது. இது தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் நல்லது அல்ல; தமிழ்நாட்டுக்கும் நல்லது அல்ல. தமிழ்நாடு சட்டமன்றம் கொதிநிலையோடு இருந்திருப்பது எப்போதாவதுதான். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஒருசில நிகழ்வுகளே நினைவுக்கு வருகின்றன.

தி.மு.க-வை விட்டு எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டபோது தொடங்கியது இந்தக் கொந்தளிப்பு. எம்.ஜி.ஆருடன் சென்ற எம்.எல்.ஏ-க்கள் குறைவுதான். ஆனால், அன்று சபாநாயகராக இருந்த கே.ஏ. மதியழகனே, எம்.ஜி.ஆர் ஆதரவா ளராக மாறி கருணாநிதி கழுத்தில் கத்திவைத்தார். கருணாநிதி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து எம்.ஜி.ஆர் நடத்திய ஊர்வலத்தை அண்ணாசாலையில் நின்று சபாநாயகரே பார்வையிட்டார். `கருணாநிதி அமைச்சரவை மீது, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரவேண்டும்’ என்று எம்.ஜி.ஆர் பேசியபோது, அதற்கு `முதலமைச்சர் உடனே பதில் தர வேண்டும்’ என்று சபாநாயகர் மதியழகன் கட்டாயப்படுத்தினார். கில்லாடியான கருணாநிதி, `சபாநாயகர் மதியழகன் மீதே இந்தச் சபைக்கு நம்பிக்கை இல்லை’ என்று தீர்மானம் கொண்டுவந்தார்.

அந்த நாளில் (1972-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி) சபாநாயகர் மதியழகன் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகவும், துணை சபாநாயகர் விருதுநகர் பெ.சீனிவாசன் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆதரவாகவும் சட்டமன்றத்தை நடத்தினார்கள். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என்ற தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது. ‘சட்டமன்றமே செத்துவிட்டது’ என்று சொல்லி எம்.ஜி.ஆர் வெளியேறினார்.

எம்.ஜி.ஆர் இறந்த பிறகு அடுத்த அதகளம் நடந்தது. ஜானகி ஓர் அணியாகவும், ஜெயலலிதா இன்னோர் அணியாகவும் பிரிந்து நடத்திய மோதல் சட்டமன்றத் துக்குள்ளேயே நடந்தது. ஜானகிக்கு அன்று 98 உறுப்பினர் ஆதரவு இருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நாளில் (1988-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி) இரண்டு தரப்புகளும் கடுமையாக மோதிக்கொண்டார்கள். மைக்குகள் பிடுங்கி வீசப்பட்டன. சிலரின் மண்டை உடைந்தது. பெரும்பான்மை பெற்று தீர்மானத்தை வெற்றிபெற வைத்தாலும், `தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது’ என்று சொல்லி ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி.

அடுத்த கொந்தளிப்பு, 14 ஆண்டுகள் வனவாசத்துக்குப் பிறகு  கருணாநிதி மீண்டும் முதலமைச்சராக ஆனபோது நடந்தது. நிதி அமைச்சர் பொறுப்பையும் சேர்த்துக் கவனித்த முதலமைச்சர் கருணாநிதி நிதிநிலை அறிக்கையை வாசித்தபோது (1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி) எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, ‘ஒரு கிரிமினல் நிதிநிலை அறிக்கையைப் படிக்கக் கூடாது’ என்றார். இரண்டு தரப்புகளும் மோதிக் கொண்டன. கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது.தலைவிரி கோலத்துடன் வெளியே வந்த ஜெயலலிதா, தனது சேலை உருவப்பட்டதாகச் சொன்னார்.

1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சரானபோது தி.மு.க சார்பில் மன்றத்துக்குள் இருந்தது பரிதி இளம்வழுதி மட்டும்தான். தனது வேட்டி எந்த நேரமும் உருவப்படலாம் என்பதால் பேன்ட் சட்டை அணிந்து சென்றார். அவர் தினமும் வெளிநடப்பு செய்தார்; அல்லது வெளியேற்றப்பட்டார். அன்றைய எதிர்கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியமும் இதே துயரங்களை அனுபவித்தார். அதன் பிறகு எந்தப் பெரிய கொந்தளிப்பு நிகழ்வுகளும் நடக்கவில்லை என்றாலும் வாதப்பிரதிவாதங்கள், வெளிநடப்புகள் தொடர்ந்தன.

2006-2011 காலகட்டத்தில் அ.தி.மு.க உறுப்பினர்கள் மொத்தமாக நீக்கப்பட்டபோது ஜெயலலிதா மட்டும் தனி ஆளாக சட்டமன்றத்துக்கு வந்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் விளாசிவிட்டுப் போனார். கடந்த முறை விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானபோது பழைய நிலைமை மீண்டும் திரும்பியது. பால் விலை உயர்வைப் பற்றி பேசப்போன விஜயகாந்த், சீண்டிவிடப்பட்டார். டென்ஷனான விஜயகாந்த், நாக்கைத் துருத்த... அதுவே அவரது சட்டமன்ற நடவடிக்கைகளின் கடைசி ஆனது. கடந்த முறை தி.மு.க-வுக்குப் பலம் இல்லாததாலும், தே.மு.தி.க-வும் இவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைக்காததாலும், சட்டமன்றத்தில் அ.தி.மு.க நினைத்ததைச் செய்ய முடிந்தது. ஆனால், அதில் இந்த முறை தடங்கல் ஏற்பட்டு விட்டது. 89  உறுப்பினர்களுடன் உள்ளே புகுந்த தி.மு.க., தனது கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து செஞ்சுரி அடித்திருப்பதால், ஜெயலலிதாவால் ஜீரணிக்க முடியவில்லை. தி.மு.க-வும் தனது படைபலத்தை தினம்தோறும் காட்டுகிறது.

தி.மு.க-வினர் கேள்விகள் கேட்பது மட்டும் அல்ல, அ.தி.மு.க அமைச்சர்களால் அதற்கு உரிய பதிலைத் தர முடியாததும் ஜெயலலிதாவை எரிச்சலில் ஆட்படுத்துவதைப் பார்க்க முடிகிறது.

அ.தி.மு.க-வினர் எந்தப் பிரச்னையைப் பேசினாலும் கருணாநிதியைக் கரித்துக்கொட்டுகிறார்கள். தெருவில் கொட்டினால், அது காற்றோடு போய்விடும். சட்டமன்றத்தில் கொட்டும்போது அது அவைக் குறிப்பில் ஏறியாகவேண்டியுள்ளது. அதாவது வரலாற்றில் இடம்பெறுகிறது. எனவேதான் அவைக்குறிப்பில் எதை ஏற்றுவது, எதை ஏற்றாமல் விடுவது என்ற விவாதமே சபையில் அதிகமாக நடக்கின்றன.

கொதிக்கும் சட்டசபை... குற்றவாளி யார்?

`அவைக் குறிப்பில் ஏற்றலாமா... கூடாதா என்ற விவாதமே வராத வார்த்தைகளைத்தான் பேச வேண்டும்’ என்று, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாதான் அறிவுறுத்த வேண்டும். ஜெயலலிதாவை அ.தி.மு.க உறுப்பினர்கள் புகழ்ந்து பேசுவதும், பாமாலை தொடுப்பதும், பாட்டுக்கள் பாடுவதும்கூட அவர்கள் விருப்பம். அவர்கள் தலைவிக்கு அதைச் செய்ய இவர்கள் கடமைப்பட்டவர்கள். அதைத் தலைவியும் எதிர்பார்க்கிறார். அதற்காக கருணாநிதியையும் தி.மு.க-வையும் விமர்சிக்கும் களமாக சட்டமன்றத்தை மாற்ற நினைப்பது, அதன் மாண்பைக் குலைக்கிறது.

சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினரைப் பேச அனுமதிப்பதும் அனுமதி மறுப்பதும் வெளியேற்றுவதும் சபாநாயகரின் உரிமைதான். ஆனால், ஒரு கட்சியின் உறுப்பினர்களை மொத்தமாக வெளியேற்றியதும் சஸ்பெண்ட் செய்ததும் தனக்கு அதிகாரமே இருந்தாலும் அதுதான் அழகா? அதுவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டுபோனது சபாநாயகருக்கு சறுக்கலே.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்பது கட்சிப் பதவி அல்ல... ஆட்சிப் பதவி. கேபினெட் அந்தஸ்து அதற்கு உண்டு. தேசியக் கொடி பறக்கும் வாகனத்தில் பயணம் செய்யும் தகுதி படைத்தவர் எதிர்க்கட்சித் தலைவர். அவரையே தூக்கிவீசியது மாண்பை வீசியதற்கு சமம். இதன் மூலம் ஜெயலலிதா மகிழ்ச்சி அடைவார் என்றால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஜெயலலிதா பக்குவம் அடையவில்லை என்றே பொருள். தி.மு.க உறுப்பினர்களில் ஒன்பது பேர் நீங்கலாக மற்றவர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருப்பதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

`சட்டமன்றமா... நீதிமன்றமா..?’ என்ற பெரும் கேள்விக்குள் போய் நிற்கிறது இது. `சட்டமன்றத்தை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியுமா?’ என்ற சட்டக் கேள்விக்கு, இதுவரை விடை காணப்படவே இல்லை. `சபாநாயகரின் செயல்கள் சரியில்லை என்றால் நீதிமன்றத்தைத்தானே நாட வேண்டும்?’ என்று மு.க.ஸ்டாலின் கேட்டுள்ள கேள்வி, இந்திய அளவில் விவாதிக்கவேண்டிய ஒன்று. இவை எல்லாம் இன்றோடு முடியும் விஷயமே இல்லை. இன்னும் ஐந்து ஆண்டுகள் சட்டமன்றத்தில் கொந்தளிப்புகளும் கூப்பாடுகளும் இருக்கப்போகின்றன என்பதைத்தான் இது காட்டுகின்றன. இதை நினைத்தால்தான் நெஞ்சு அடைக்கிறது.

கொதிக்கும் சட்டசபை... குற்றவாளி யார்?

சட்டமன்றம் என்பது ஆட்சி நடத்தும் இடம்... அரசியல் நடத்தும் இடம் அல்ல. திட்டங்களுக்கு ஒப்புதல் வாங்கும் இடம்... திட்டு வாங்கும் இடம் அல்ல. கொள்கையை விவாதிக்கும் இடம்... கூப்பாடுபோடும் இடம் அல்ல. ஜெயலலிதா வேறு விஷயங்களைச் சம்பாதித்துவிட்டார். இனியாவது நல்ல பெயரைச் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டும்!