Published:Updated:

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை - முழு வடிவம்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை - முழு வடிவம்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை - முழு வடிவம்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை - முழு வடிவம்

மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர்களே,

வணக்கம்.

பதினான்காவது சட்டப்பேரவையின் ஆறாவது
கூட்டத் தொடராகிய, 2013 ஆம் ஆண்டின் இந்த முதல்
கூட்டத் தொடரில் உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி
அடைகிறேன். இந்த மாமன்றத்தில் இரண்டாவது முறையாக
உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றமைக்காக, தமிழ்நாட்டு
மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். நமது
அரசியல் அமைப்புச் சட்டத்தில் செறிந்துள்ள மக்களாட்சிக்
கோட்பாடுகளைக் கட்டிக்காக்கவும், பேணி வளர்க்கவும் பல
பெருந்தலைவர்கள் ஆண்டாண்டுகாலமாக ஆற்றிய பெரும்
பங்களிப்பின் காரணமாக, இந்த மாமன்றம் புகழின் உச்சியை
எட்டியுள்ளது. அண்மையில், இப்பேரவை அறுபது
ஆண்டுகளை நிறைவு செய்த வரலாற்றுத் தருணத்தை
நினைவு கொள்ளும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர்
செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தக்கதொரு விழாவை
ஏற்பாடு செய்து சிறப்பித்ததை நாம் கண்டோம். இந்த
அரியதொரு வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள்
அனைவரையும் வாழ்த்துவதோடு, இந்த போற்றத்தக்
மாமன்றத்தின் பரிணாம வளர்ச்சிக்கு பங்களித்த
பெருந்தலைவர்களையும், அனைத்து உறுப்பினர்களையும்
பெருமையோடும், நன்றிப் பெருக்கோடும் நினைவுகூற
விரும்புகிறேன். இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும்
எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொள்கிறேன். தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும்
முதன்மை மாநிலமாக்கிட வேண்டுமென்ற உறுதியான
தீர்மானத்துடன் இந்த ஆண்டை நாம் அனைவரும்
தொடங்குவோம்.

தளர்வுறாத துணிவு, அசையாத உறுதி,
திடமான முடிவு, தீர்க்கமான நடவடிக்கை ஆகியவற்றின்
உறைவிடமாகத் திகழும் மாண்புமிகு முதலமைச்சர் செல்வி
ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆற்றல்மிகு தலைமையின் கீழ்,
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், முன்னேற்றப்
பாதையில் நமது மாநிலம் பீடுநடை போட்டு வருகிறது.
தன்னிகரில்லா மக்கள் தலைவராகத் திகழும் மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள், தலைமைப் பண்பிற்கும், ஏழை
எளியோர் மீது கொண்டுள்ள எல்லையில்லா பரிவுக்கும்
எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அதே நேரத்தில்,
சமூக விரோத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி,
அமைதியும், நிலைத்தன்மையும் தவழும் சூழலை மாநிலத்தில்
மீட்டெடுத்து, வேகமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட
வழிவகை செய்துள்ளார். மக்களின் எதிர்பார்ப்புகளை
நிறைவு செய்யும் நோக்குடன், நன்கு வடிவமைக்கப்பட்ட
திட்டங்களின் மூலமாகவும், சிறந்த செயல்முறை உத்திகள்
மூலமாகவும் சீரிய நிர்வாகத்தை வழங்கிட அவர்
மேற்கொண்டுள்ள அயராத முயற்சிகளுக்கு, உலகெங்கிலும்
இருந்து பாராட்டுக்கள் குவிந்தவண்ணமிருக்கின்றன.
மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் மாநாடு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதன்முறையாக,
தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. சீரிய
நிர்வாகத்தை அளிக்கவேண்டும் என உறுதி பூண்டுள்ள
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாநாட்டின்
நிகழ்வுகளில் முழுமையாகப் பங்குகொண்டு, மாவட்ட
ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர்
முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் கூர்ந்து
கவனித்து நிர்வாக நலன் கருதி அவற்றை நிறைவு செய்யும்
வகையில், 343 அறிவிப்புகளையும் மாநாட்டிலேயே
அறிவித்தது இதுவரை இம்மாநிலம் கண்டிராத நிகழ்வாகும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
எடுத்துரைத்துள்ளவாறு, இந்த அரசானது “பங்கீட்டு
நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி” என்ற குறிக்கோளை
நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. அனைவரையும்
உள்ளடக்கிய முன்னேற்றத்தை அளிக்கக்கூடிய
திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலமாகவே இது
சாத்தியமாகும். உணவு, உடை, உறைவிடம் போன்ற
இன்றியமையா அடிப்படைத் தேவைகளை, அனைவரும்,
குறிப்பாக ஏழைகளும், ஒதுக்கப்பட்டோரும் நிறைவாகப்
பெற்று அவர்கள் கண்ணியத்துடனும், கௌரவத்துடனும்
வாழ வழி செய்வதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்
குறிக்கோள். மாண்புமிகு முதலமைச்சரின்
தொலைநோக்குடைய தலைமையின் கீழ் செயல்படும் இந்த
அரசு பொதுமக்கள் நலன் காக்கும் அரசாகத்
திகழவேண்டுமென்ற இலட்சியத்தை அடைய, பல
திட்டங்களைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகிறது. அதே
வேளையில் விரைவான பொருளாதார வளர்ச்சிக்குத்
தேவையான சூழலை உருவாக்க பல கட்டமைப்பு
மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதன் மூலமாக,
பொருளாதாரத்திலும், தொழில் துறைகளிலும் ஒரு பெரும்
வளர்ச்சியையும் நமது மாநிலம் காண உள்ளது. மாநிலத்தின்
அனைத்துப் பகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை
ஏற்படுத்தி, மேம்பாட்டின் பயன் அனைவரையும் சென்றடையச்
செய்யும் நோக்குடன் தீட்டப்படும் திட்ட செயல்முறையின்
ஓர் அங்கமாக மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி (ளுவயவந
க்ஷயடயnஉநன ழுசடிறவா குரனே) போன்ற புதுமையான
அணுகுமுறைகளை இந்த அரசு கடைபிடித்து வருகிறது.

உலகெங்கும் சித்திரை மாதத்தின் முதல்
நாளே தமிழ்ப் புத்தாண்டு தினமாக நீண்ட நெடுங்காலமாக
கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியின்போது
வேண்டுமென்றே இந்த முறை மாற்றப்பட்டது. மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே இருந்த நடைமுறையை
மீண்டும் கொண்டுவந்ததுடன், 2012-ஆம் ஆண்டில் தமிழ்ப்
புத்தாண்டு கொண்டாட்டங்களில் தானும் பங்கு கொண்டு,
தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது,
அவ்வையார் விருது போன்ற புதியதாக அறிவிக்கப்பட்ட
விருதுகளையும் வழங்கினார். இந்த ஆண்டும் தமிழ்ப்
புத்தாண்டு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுவதோடு,
புதியதாக இந்த ஆண்டிலிருந்து கம்பராமாயணத்தின் உயரிய
கருத்துக்களை பரப்பும் சிறந்த அறிஞருக்கு ‘கம்பர் விருதும்’,
சிறந்த இலக்கியப் பேச்சாளருக்கு ‘சொல்லின் செல்வர்
விருதும்’ வழங்கப்படும்.

விடுதலைப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின்
தன்னலமற்ற தியாகத்த அங்கீகரித்து பெருமைப்படுத்துவதில் இந்த அரசு ஈடு
இணையற்றதாக விளங்குகிறது. வீரத்துடனும் தீரத்துடனும்
செயல்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார், தீரன் சின்னமலை,
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி
ஜீவரத்தினம், தியாகி சங்கரலிங்கனார் ஆகியோருக்கான
நினைவிடங்கள் இந்த அரசால் அமைக்கப்பட்டு வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, கர்னல் சர் ஜான்
பென்னிகுயிக் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்றிய
தன்னலமற்ற சேவையைப் பெருமைப்படுத்தும் வகையில்
அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைத்து மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் அதைத் திறந்து வைத்துள்ளார்கள்.
அதேபோல், கல்லணையைக் கட்டி காவேரிப் பாசனப்
பகுதியை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக மாற்றிய கரிகால்
சோழனுக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற
மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது.
தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டினை வளர்க்கும் பல்வேறு

நிறுவனங்களுக்கு தாராளமான நிதியுதவி வழங்கப்பட்டு
வருகிறது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு 100 கோடி
ரூபாயும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு
11.84 கோடி ரூபாயும், தரமணியில் உள்ள உலகத் தமிழ்
ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 3.23 கோடி ரூபாயும்
இந்த அரசால் வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் புகழ்பெற்ற
சரஸ்வதி மகால் நூலகத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு
வரும் பராமரிப்பு உதவித்தொகை 40 லட்சம் ரூபாயிலிருந்து
75 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இந்த நூலகத்தை
உலகத்தரத்திற்கு உயர்த்திடத் தேவையான நடவடிக்கைகள்
குறித்துப் பரிந்துரை செய்வதற்காக வல்லுநர் குழு ஒன்று
அமைக்கப்படும்.

அரசியல் நிலைத்தன்மையுடன், சட்டம்
ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படுவது பொருளாதாரச்
செழுமைக்கு இன்றியமையாத் தேவையாகும். மாண்புமிகு
முதலமைச்சரின் விவேகமான தலைமையின் கீழ், சட்டம்
ஒழுங்கு சீரிய முறையில் பாதுகாக்கப்பட்டு, மாநிலம்
அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது. சாதிமத உணர்வுகளைத்
தூண்ட முயலும் எவரையும் இந்த அரசு அனுமதிக்காது.

நிலம் அபகரிப்போர், சமூக விரோத சக்திகள், பொது
அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய அமைப்புகள்
போன்றவை முழுமையாக ஒடுக்கப்பட்டுள்ளன. நில
அபகரிப்பு முழுமையாக தடுக்கப்பட்டு, அதில் ஈடுபட்ட
குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை திறம்படக் கையாளக்
காவல்துறைக்குத் தமது வழிகாட்டுதலை வழங்கி உறுதியான
ஆதரவையும், முழுமையான சுதந்திரத்தையும் அளித்துள்ள
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நான் வெகுவாகப்
பாராட்டுகிறேன். அவரின் உறுதியான, தீர்க்கமான முடிவின்
காரணமாக உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதிக்கு
குந்தகம் விளைவிக்கக்கூடிய ‘டேம் 999’, போன்ற
திரைப்படங்கள் உரிய தருணத்தில் தடைசெய்யப்பட்டதால்,
பெரும் பாதிப்புக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய சட்டம்
ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் மாநிலத்தில் எழாமல்
தடுக்கப்பட்டுள்ளன. இது போன்ற திரைப்படங்களைத்
தயாரிக்கும்போது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து,
அவர்களுடைய உணர்வுகள் புண்படாதவகையில்
உருவாக்கப்பட வேண்டும் என்று திரைப்படத்
தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன். நாகரிக

சமுதாயத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக
நடைபெறும் கொடுங்குற்றங்கள் அறவே நிறுத்தப்பட
வேண்டும். நமது நாட்டில் பிறபகுதிகளில் உள்ள காவல்
துறையினருக்கும், கொள்கைகளை வகுப்பவர்களுக்கும்
வழிகாட்டக்கூடிய வகையில், கடுமையானதும், செயல்படுத்தி
கண்காணிக்கக் கூடிய வகையிலும் அமைந்துள்ள,
மாவட்டந்தோறும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது
உள்ளிட்ட, 13 அம்ச திட்டத்தை நமது மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் துணிவுடன் எடுத்துரைத்துள்ளதை
நான் பாராட்டுகிறேன்.

நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
மாநிலத்தின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்கும்போதெல்லாம்,
காவல் துறையினர் திறம்படச் செயல்படுவதற்காக
அவர்களுக்கு போதிய கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள்,
தளவாடங்கள் ஆகியவை வழங்கப்பட்டு, அவர்கள் எந்தவித
அச்சமும் இன்றிக் கடமையாற்றி, பிரச்சினைகளைத் தீர்க்க
வழி ஏற்படுகிறது. இதனால் அவர்களது ஊக்கமும்
கட்டுப்பாடும் உயர்ந்தோங்குகிறது. காவல், சிறை,
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை
பணியாளர்களுக்கான படிகளை கணிசமாக உயர்த்தியும்,

தமிழ்நாடு காவலர் நல நிதியை உயர்த்தியும்
உத்தரவிட்டுள்ளதோடு, நாட்டிலேயே முதன்முறையாக
காவல் துறையினருக்காக மூன்று சலுகைவிலை
அங்காடிகளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
திறந்து வைத்தார்கள். இது தவிர, கூடுதல் வீட்டுவசதிக்காக
472.50 கோடி ரூபாய் அனுமதி அளித்துள்ளதோடு, 36,000
காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் மற்றும் சிறைத்
துறை பணியாளர்களுக்காக சொந்த வீடு கட்டித்தரும்
பொருட்டு ‘உங்கள் சொந்த இல்லம்' எனும்
பெருந்திட்டத்தையும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தொடங்கிவைத்தார்கள். இத்தகைய நடவடிக்கைகள்
அனைத்தும் காவல் துறையினரை ஊக்குவித்து அவர்கள்
தம் பணியில் மிகப்பெரும் பொறுப்புணர்வுடனும்
அர்ப்பணிப்புடனும் செயல்படத் தூண்டியுள்ளன.

பாக் ஜலசந்திப் பகுதியில் பாரம்பரியமாக மீன்
பிடிப்பதையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தமிழக
மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரின்
துன்புறுத்தலாலும் கொலைவெறித் தாக்குதல்களாலும்
தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சினையின்
தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர்
அவர்களை உடனடியாக இதில் தலையிட்டு, மீனவர்
பிரச்சினைக்குத் தீர்வுகாண இலங்கை அரசிடம்
வலியுறுத்தக் கோரி, 2011 ஆம் ஆண்டின் மே மாதம் முதல்
இதுவரை 12 முறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
கடிதம் எழுதியுள்ளார்கள். தமிழக மீனவர்களின் இன்னல்கள்
குறித்து மத்திய அரசு பாராமுகம் காட்டி வரும் நிலையில்,
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு
ஏற்படும் அல்லல்கள், முடிவில்லாத் துயரமாக தொடர்வது
குறித்து இந்த அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. நமது
மீனவர்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டிவரும்
அலட்சியப் போக்கு இந்த அரசை மிகவும் வருத்தம் அடைய
செய்துள்ளது. இந்தியக் குடிமக்களான அப்பாவித் தமிழ்நாடு
மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவும், இதுபோன்ற
சமயங்களில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவும்,
இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என மத்திய அரசை
நான் வலியுறுத்துகிறேன்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை
மீறல்களும், தமிழின மக்களின் மீது நடத்தப்பட்ட இனப்
படுகொலையும் மிகவும் கண்டனத்திற்கு உரியவையாகும்.
இப்பிரச்சினையை சர்வதேச அரங்குகளில் மத்திய அரசு
எடுத்துரைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை மறு
குடியமர்த்தி அவர்களது துயரங்களைத் துடைப்பதற்காக
இலங்கை அரசு எடுத்துவரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள்
எதிர்பார்த்த அளவில் அமையவில்லை. முகாம்களில்
குடியிருந்துவரும் தமிழர்கள் தமது சொந்த இடங்களில்
மீண்டும் குடியமர்த்தப்பட்டு, சிங்களர்களுக்கு சமமான
அரசியல் சட்ட உரிமைகளோடும், சுய மரியாதையோடும்,
கண்ணியத்தோடும் வாழ அனுமதிக்கப்படும் வரை இலங்கை
அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும்
என்றும், இதற்காக இந்திய அரசு மற்ற நாடுகளோடு
இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
2011-ஆம் ஆண்டு ஜுன் திங்கள் எட்டாம் நாள்
இந்தப் பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை மீண்டும்
நான் வலியுறுத்துகிறேன்.

மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளின்
நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டிற்கு உரிய
பங்கினைப் பெற்றிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
அயராது போராடி வருகின்றார்கள். பல சுற்றுப்
பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், எதிர்காலத்தில் வறட்சி
சூழ்நிலைகளில், நீரினை சரிசம விகிதப்படிப் பங்கிடுவதற்கு
காவேரி நடுவர் மன்றம் உத்தரவிட்டும், கிடைக்கின்ற காவேரி
நீர் முழுவதையும் கர்நாடக அரசு பயன்படுத்திக்கொண்டு,
காவேரிப் பாசன பகுதி விவசாயிகளின் துயர நிலையைச்
சிறிதும் கருத்தில் கொள்ளாமல், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை
வழங்க மறுத்து, தொடர்ந்து பிடிவாதம் செய்துவருகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை
அணுகி, தக்க நேரத்தில் தொடர்ந்து எடுத்த முயற்சிகளின்
காரணமாக கர்நாடக அரசு 63.55 டி.எம்.சி. அடி நீரை
விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும்,
இடர்பாடு காலங்களில் சரிசம விகிதாச்சார முறைப்படியான
பங்கீட்டிலும் 31.4 டி.எம்.சி. அடி அளவிற்கு தமிழகத்திற்கு
கிடைக்க வேண்டிய நீர் விடுவிக்கப்படவில்லை. இதன்
விளைவாக, இந்த ஆண்டில் காவேரிப் பாசனப் பகுதியில்,
உணவு உற்பத்தியில் தமிழகம் பெரும் பின்னடைவை
சந்தித்துள்ளது. எனவே காவேரிப் பாசனப் பகுதியில் ஏற்பட்ட
பயிர் பாதிப்பிற்கான இழப்பீட்டுத் தொகையை கர்நாடக
அரசிடமிருந்து பெற ஏதுவாக இந்த அரசு உச்ச
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது.
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை அரசிதழில்
வெளியிட வேண்டுமென்ற மாண்புமிகு முதலமைச்சர்
அவர்களின் தொடர் கோரிக்கையை மேலும் காலம்
தாழ்த்தாமல் மத்திய அரசு ஏற்குமென நான் நம்புகிறேன்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையைப்
பொறுத்தவரையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட
அதிகாரமளிக்கப்பட்ட குழு, கட்டமைப்பிலும், நீர்வள
அளவிலும், நில அதிர்வுகளைத் தாங்கக்கூடிய வகையிலும்
இந்த அணை பாதுகாப்பாக விளங்குவதாக
தெரிவித்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் நமது
நிலைப்பாட்டினை உறுதிசெய்து, சாதகமான ஆணை
வழங்குமென தமிழக அரசு நம்புகிறது.

நீர்ப் பயன்பாட்டிற்கு விலை நிர்ணயம்
செய்யப்பட வேண்டுமென்றும், இதற்காக தனி அதிகார
அமைப்பு அமைக்கப்பட வேண்டுமென்றும் 2012-ஆம்
ஆண்டு வரைவு தேசிய நீர்வளக் கொள்கை
வலியுறுத்துகிறது. மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும்
பெரும் வரம்பு மீறலாக இதனை தமிழக அரசு கருதுகிறது.
நீர்வளம் மாநிலங்களின் அதிகாரத்திற்குட்பட்டதாகும்.
எனவே, தங்களது நீர்வளம் குறித்த முடிவுகளை
எடுப்பதற்கான சுதந்திரம் மாநிலங்களுக்கே உரியதாகும்.
இதுபோலவே, வரைவுக் கொள்கையில்
உத்தேசிக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு
மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட
வேண்டுமென்றும் இக்கொள்கை கூறியுள்ளது. நீர் விலை
நிர்ணய முடிவுகளைப் பின்பற்றுவதையொட்டி மட்டுமே
மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்படும் என்ற சூழ்நிலைக்கு
இது வித்திட்டுவிடக்கூடாது. நீர்வளம் போன்ற இயற்கை
ஆதாரங்களுக்கு, குறிப்பாக விவசாயப் பயன்பாட்டிற்கான
தண்ணீருக்கு விலை நிர்ணயிப்பது இலட்சக்கணக்கான
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய
உணர்வுபூர்வமான பிரச்சினை என்பதால், இது குறித்து மிகக்
கவனமான அணுகுமுறையையே இந்த அரசு பின்பற்றும்.
மாநிலங்களுக்கிடையே பாயும் நதிகளை இணைக்கும்
திட்டத்தைப் பொறுத்தவரையில், நாட்டின் நலனைக் கருத்தில்
கொண்டு, தேசிய நீர் இணைப்புத் திட்டத்தை
செயல்முறைக்கு கொண்டுவரும் வகையில், தீபகற்ப
நதிகளை இணைக்கும் திட்டத்தை உடனடியாகத் தொடங்க
வேண்டுமென்ற கோரிக்கையை இந்த அரசு மீண்டும்
வலியுறுத்துகிறது. மத்திய அரசு இதுகுறித்து உறுதியான
நடவடிக்கைகள் எதையும் எடுக்காத சூழ்நிலையிலும், மாநில
அரசின் நிதியைப் பயன்படுத்தி மாநிலத்திற்குள் பாயும்
நதிகளை இணைக்கும் திட்டத்தினை, சிறப்பு முன்னுரிமை
அளித்து இந்த அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

பொருட்கள் மற்றும் சேவைகள் வரியைப் பொறுத்தவரை,
மாநிலங்களின் நிதி சார்ந்த தன்னாட்சி அதிகாரங்கள்
பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி
செய்ய வேண்டும். அண்மையில் நடைபெற்ற தேசிய
வளர்ச்சிக் குழு கூட்டத்தில் இந்தப் பிரச்சினை குறித்து
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே
எடுத்துரைத்துள்ளார்கள். ஒரு தீவிர மாற்று
அணுகுமுறையாக, மதிப்புக் கூட்டு வரி, மத்திய கலால் வரி,
மாநிலத்திற்கு உட்பட்ட சேவை வரி ஆகியவற்றுக்கான
மாற்று வரிகளை விதித்து, வசூலித்து, பயன்படுத்துவதற்கான
உரிமையை மாநிலங்களுக்கு வழங்க முன்வரவேண்டும்.
மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவை
வரி, சுங்க வரி, பொருளாதாரத்தோடு சேர்ந்து அதிக வளர்ச்சி
தரக்கூடிய நேரடி வரிகள் ஆகியவற்றை மத்திய அரசு தன்
கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். மாநிலங்களுக்கு
நம்பிக்கை ஏற்படக்கூடிய சூழலை மத்திய அரசு
ஏற்படுத்தாமல், பொருட்கள் மற்றும் சேவை வரி முறையை
அமல்படுத்த இயலாது. மாநிலங்களின் நிதித் தேவைகள்
மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், கூட்டாட்சித்
தத்துவத்தைக் கருத்தில் கொண்டும், பரந்த நோக்கோடு
இப்பிரச்சினைகளை அணுகி, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்
கூடிய ஒரு தீர்வினை எட்டும்படி மத்திய அரசை நான்
மீண்டும் வலியுறுத்துகிறேன்.

தற்போதுள்ள நலத் திட்டங்களில் காணப்படும்
அனைத்துக் குறைபாடுகளுக்கும் மத்திய அரசின்
நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டம் தீர்வாக அமையாது. நோபல்
பரிசு பெற்ற புகழ்மிக்க பொருளாதார அறிஞர்,
ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் அவர்கள், "வளர்ச்சியென்பது
ஒட்டுமொத்தப் பொருளாதார நிலையில் மாற்றம்
ஏற்படுத்துவது மட்டுமல்ல; மக்களின் வாழ்வினை
மாற்றுவதேயாகும்" எனக் கூறியுள்ளார். மக்களின் வாழ்வு
நிலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென்ற உன்னதக்
குறிக்கோளையும், வறுமை ஒழிப்பையும் ஏழைகளுக்கு பணப்
பரிமாற்றம் செய்வதால் மட்டுமே சாதித்துவிட முடியாது.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் பொது விநியோகத்
திட்டம், விலையில்லா மடிக்கணினி வழங்கிடும் திட்டங்கள்
போன்றவை பல்வேறு சமூக நோக்கங்களை மையமாகக்
கொண்டவை. இந்த நோக்கங்களை மாதந்தோறும் பணம்
அளிப்பதன் மூலம் மட்டுமே எய்திட இயலாது. எனவே,
சமூகப் பாதுகாப்பு உதவித் தொகைகள், மாணவர்களுக்கான
கல்வி உதவித் தொகை போன்ற ஒரு சில திட்ட உதவிகளை
வங்கிகள் மூலமான பணப்பரிமாற்ற முறையில் நேரடியாக
அளிப்பதற்கு மட்டும் இந்த அரசு ஆதரவளிக்கும்.
பொது விநியோகத் திட்டம், உர மானியம் போன்றவற்றில்,
நிர்வாக வசதியைவிட, தக்க நேரத்தில் அப்பொருட்கள்
கிடைப்பதையே முக்கியமாகக் கருத வேண்டியுள்ளதால்,
இதுபோன்ற திட்டங்களில் நல உதவிகளை பணமாக மாற்றி
வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியையும்
இந்த அரசு கடுமையாக எதிர்க்கும். மேலும், மாநில அரசு
மூலமாக வழங்கப்படாமல், நேரடிப் பணப் பரிமாற்றம் என்ற
போர்வையில் மத்திய அரசே பயனாளிகளுக்கு நேரடியாக
பணம் வழங்குவதற்கான எந்த ஒரு முயற்சியும் இந்த
அரசுக்கு ஏற்புடையதல்ல. முறையான பொறுப்புடைமையை
உறுதிசெய்ய வேண்டுமெனில், மத்திய
அரசின் அனைத்து உதவிகளும் மாநில அரசின் மூலமாகவே
வழங்கப்பட வேண்டும். இதுபோன்றே, சில்லரை வணிகத்தில்
அந்நிய முதலீட்டுக்கு அனுமதியளிக்கும் முடிவானது, சுய
தொழில் செய்யும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை
பெருமளவில் பாதிக்கும். இதனால் மத்திய அரசின் இந்த
முடிவிற்கு இந்த அரசு, தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துக்
கொள்கிறது.

எனது முந்தைய உரையில் அறிவித்தவாறே,
பெரும் கட்டமைப்புத் திட்டங்களை வகுத்து
செயல்படுத்துவதை ஒருங்கிணைக்கவும், விரைவுபடுத்தவும்,
தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தை இந்த அரசு
அமைத்துள்ளது. கட்டமைப்பு மேம்பாட்டில் அதிகரித்துவரும்
தனியார் துறையினரின் பங்கேற்பினை வழிமுறைப்படுத்தி
கண்காணிக்க தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகள்
ஒளிவுமறைவின்மை (பொதுத்துறை-தனியார் பங்கேற்பு)
விதிகள் 2012-யினை அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு
கட்டமைப்பு மேம்பாட்டுச் சட்டமும் அதற்குரிய விதிகளும்
வெளியிடப்பட்டுள்ளன. திட்டங்களுக்கு விரைவான
ஒப்புதல் அளிக்க வகைசெய்யும் அமைப்பு முறையினை
ஏற்படுத்தி, மாநிலத்தில் உலகத் தரத்திலான கட்டமைப்பினை
உருவாக்கிட இந்தச் சீர்திருத்தங்கள் முதற்படிகளாகும்.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிடும்
பாதையில் முன்னேறிடத் தேவையான திட்டங்களை
விரித்துரைக்கும் 2023 தொலைநோக்கு திட்ட ஆவணத்தின்
இரண்டாவது தொகுப்பை அரசு விரைவில் வெளியிடும்.

பொருளாதார வளர்ச்சியில், பதினொன்றாவது
ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான
9 சதவீதத்திற்கு மாறாக 8.05 சதவீத வளர்ச்சியையே நமது
மாநிலம் எய்தியுள்ளது. கடந்த கால ஆட்சியில், வேளாண்மை
மற்றும் தொழில் துறைகளின் குறைவான வளர்ச்சியானது
மாநிலத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டை அத்திட்ட
காலத்தில் வெகுவாக பாதித்தது. பன்னிரெண்டாவது
ஐந்தாண்டு திட்ட காலத்தில், தேசிய அளவில் 8 சதவீத
வளர்ச்சியை மட்டுமே எய்த இயலும் என மதிப்பிடப்பட்டுள்ள
நிலையில், நமது மாநிலம் 11 சதவீத வளர்ச்சி என்ற உயர்
இலக்கை நிர்ணயித்துள்ளது. வேகமான, நிலைக்கத் தக்க,
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இத்திட்ட
காலத்தில் எட்டுவதை உறுதிசெய்து, இந்த உயர் இலக்கை
எட்டிடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த
அரசு மேற்கொள்ளும். 1.85 லட்சம் கோடி ரூபாயென கடந்த
ஆண்டு மதிப்பிடப்பட்ட பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத்
திட்ட ஒதுக்கீட்டை தற்போது 2.11 லட்சம் கோடி ரூபாயென
இந்த அரசு உயர்த்தியுள்ளது என்பதை அறிவிப்பதில் நான்
பெருமை கொள்கிறேன். இது பதினொன்றாவது
ஐந்தாண்டுத் திட்ட கால ஒதுக்கீட்டை விட 148 சதவீதம்
கூடுதலாகும். 2013-2014 ஆம் ஆண்டிற்கான ஆண்டுத்
திட்ட ஒதுக்கீடு 28,000 கோடி ரூபாயிலிருந்து 37,000 கோடி
ரூபாயாக உயர்த்தப்படும். இது 32 சதவீதம் கூடுதலாகும்.
நிதிநிலையைத் திறம்பட நிர்வகித்து, பன்னிரெண்டாவது
ஐந்தாண்டுத் திட்ட காலம் முழுவதற்கும் வளர்ச்சிப்
பணிகளுக்குத் தேவையான நிதி ஆதாரங்கள் கிடைப்பதை
இந்த அரசு உறுதி செய்யும்.

முன்னுதாரணமாகத் திகழக்கூடிய ஒளிவு
மறைவற்ற, திறமையான நிர்வாகத்தை அளிப்பதற்கு இந்த
அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது. சிறந்த
வழிமுறைகளை உருவாக்கியும், தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தியும், நிர்வாகத்தில் ஒளிவு மறைவற்ற தன்மையை
உறுதி செய்வதற்கும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும்
இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. திட்டங்களுக்கான
(ஞசடிதநஉவள) மதிப்பீடுகளைத் தயாரித்தல், ஒப்பந்தப்புள்ளி
பெற்று முடிவு செய்தல், பணிகளைச்
செயல்முறைப்படுத்துதல், அளவீடு செய்தல், இவற்றுடன்
இறுதியாக பணம் வழங்குதல் வரையிலான அனைத்து
நிலைப் பணிகளையும் கணினிமயமாக்கி
ஒருங்கிணைக்கக்கூடிய வகையில், ஒட்டுமொத்த திட்ட
வடிவமைப்பு, செயலாக்கம், மேலாண்மை முறையை வகுத்து
இந்த அரசு செயல்படுத்தும். இணையதளம் மூலமாகவே
ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிப்பதற்கான முறையையும்
நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் இந்தத்
திட்டத்தில் ஓர் அங்கமாக இடம்பெறும். இந்த நடைமுறை
பல்வேறு துறைகளின் திட்ட மேலாண்மைத் திறனை
மேம்படுத்தி, திட்டங்களின் செயல்பாட்டை விரைவுபடுத்த
உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மக்கள் தொகைப் பதிவு
ஆவணத்திலிருந்து பெறப்படும் குடிமக்களின் உயிரியத்
தகவலுடன் கூடிய தனிநபர் பற்றிய தகவல் தொகுப்போடு,
ஆதார் எண்களை ஒருங்கிணைத்து, மாநில குடியிருப்போர்
தகவல் தொகுப்பு மையம்
ஒன்றினை இந்த அரசு விரைவில் ஏற்படுத்தும். அனைத்துத்
துறைகளும் இந்த ஒருங்கிணைந்த தகவல் தொகுப்பை
பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இத்தகவல் அமைப்பு
செயல்படும். திட்டப் பயன்கள் முழுமையாக பயனாளிகளைச்
சென்றடைவதை உறுதி செய்யவும், சேவைகளைத் திறம்பட
அளிப்பதற்கும், பொறுப்புகளைச் சரியாக வரையறுத்து, சீரிய
முறையில் திட்டங்களைச் செயல்படுத்துவதைக்
கண்காணிப்பதற்கும் அரசுக்கு இது பேருதவியாக இருக்கும்.
ஆதார் அடிப்படையில், மக்களுக்கான சேவைகளை எளிதாக
அளிப்பதற்கும், நலத் திட்ட உதவிகளை நேரடியாகப்
பயனாளிகளுக்கு வழங்குவதற்கும் இந்த ஒருங்கிணைந்த
தகவல் அமைப்பு பயன்படுத்தப்படும்.

கடந்த அரசால் சீர்செய்யப்படாமல் விட்டுச்
செல்லப்பட்ட பெரும் பிரச்சினையாக மின்தட்டுப்பாடு
உள்ளதால், அதைக் களைய மாண்புமிகு முதலமைச்சர்
அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டுவரும் இந்த அரசு
தீவிர முனைப்புடன் அனைத்து விதமான முயற்சிகளையும்
எடுத்துவருகிறது. மாநிலத்தின் தினசரி மின் பயன்பாடு 2012
ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் 180 மில்லியன்
யூனிட்டுகள் என்ற அளவிலிருந்து 2013 ஆம் ஆண்டு
ஜனவரித் திங்களில் 210 மில்லியன் யூனிட்டுகளாக
உயர்ந்துள்ளது. மின் நிர்வாக நிலைமையைச் சீர்படுத்த இந்த
அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் பற்றிய
விரிவானதொரு அறிக்கையை, இப்பேரவையில் 31.10.2012
அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே
அளித்துள்ளார்கள். மேட்டூர் அனல்மின் உற்பத்தித்
திட்டத்தின் 600 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட
மூன்றாவது அலகு, சோதனை உற்பத்தியை ஏற்கெனவே
தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான நிறுவனமும், தேசிய அனல்மின் உற்பத்தி
நிறுவனமும் இணைந்து செயல்படுத்திவரும் வல்லூர் மின்
உற்பத்தித் திட்டத்தின் 500 மெகாவாட் திறனுள்ள முதல்
அலகு 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்படத்
தொடங்கியுள்ளது. தலா 500 மெகாவாட் உற்பத்தித் திறன்
கொண்ட, இந்த கூட்டுமுயற்சித் திட்டத்தின் இரண்டு மற்றும்
மூன்றாவது அலகுகள் முறையே 2013 ஆம் ஆண்டு மார்ச்
மற்றும் அக்டோபர் திங்கள் முதல் செயல்படத் தொடங்கும்.
வட சென்னையில் அமைக்கப்பட்டுவரும் தலா 600
மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அலகுகள் 2013 ஆம்
ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதம் முதல் செயல்படத்
தொடங்கும். மின் உற்பத்தி நிலையங்களை திறம்பட
இயக்கியும், மின்சார சந்தைகள் மற்றும் இதர
ஆதாரங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கியும் தற்போது
மின்தடை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

மண்டலங்களுக்கு இடையே மின்சாரம்
கடத்தும் திறனுக்கான இணைய ஒப்பந்தப்புள்ளியில்
பங்கெடுத்து, 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச்
மாதம் வரை 500 மெகாவாட் அளவிற்கு மின்வழிப்
பாதையைப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி
மற்றும் மின்பகிர்மான நிறுவனம் வெற்றிகரமாக ஒப்பந்தம்
பெற்றுள்ளது. தென்மண்டலத்திற்கு வெளியே ஏற்கெனவே
முன்பதிவு செய்யப்பட்டு, மின்வழித்தட தொடர் இணைப்பு
கிடைக்காததால் பயன்படுத்த இயலாதிருந்த மின்சாரத்தைத்
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான நிறுவனம்
பெற்று பயன்படுத்த இது வழிவகுத்துள்ளது. இத்தோடு,
அதிக மின்சாரம் தேவைப்படும் மாலை மற