Published:Updated:

விவசாயிகளுக்கு இழப்பீடு இல்லை: ஆளுநர் உரை ஏமாற்றம்- வைகோ கருத்து

Vikatan Correspondent
விவசாயிகளுக்கு இழப்பீடு இல்லை: ஆளுநர் உரை ஏமாற்றம்- வைகோ கருத்து
விவசாயிகளுக்கு இழப்பீடு இல்லை: ஆளுநர் உரை ஏமாற்றம்- வைகோ கருத்து
விவசாயிகளுக்கு இழப்பீடு இல்லை: ஆளுநர் உரை ஏமாற்றம்- வைகோ கருத்து

சென்னை: விவசாயிகளுக்கு இழப்பீடு இல்லாத ஆளுநர் உரை ஏமாற்றம் அளிப்பதாக  உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் நேற்று ஆற்றிய உரை குறித்து கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ," காவிரி பாசனப் பகுதிகளில், நடப்புப் பருவத்தில் 5  இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியும், 16 இலட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியும் முற்றாக  அழிந்து விட்டது. பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் பெரும்  பாதிப்பு அடைந்து உள்ளனர். தற்கொலை செய்யக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள  விவசாயிகளின் வேதனையைப் போக்கிட உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கிட  வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, ஆளுநர் உரையில் அறிவிப்பு இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றது.

##~~##
கடந்த காலங்களில் ஏற்படாத கடும் துயரத்துக்கு ஆளாகி, நொறுங்கிக் கிடக்கும்  விவசாயிகளுக்கு, மறுவாழ்வு தரும் கடமையில் அரசு தவறி விட்டது என்பதைத்தான்  காட்டுகின்றது.
கர்நாடக மாநிலம் மீது உச்சநீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்ற  அறிவிப்பு மட்டும் உடனடித் தீர்வு ஆகாது. இதுவரை 13 விவசாயிகள் தற்கொலை செய்து  கொண்டு மடிந்ததை, தமிழக அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர்களின்  குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க எந்த அறிவிப்பும் இல்லை.
கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயிகள் உற்பத்தி செய்து உள்ள நெல்,  குவிண்டால் 1-க்கு ரூ. 1800/- என்றும், கரும்பு டன் 1-க்கு ரூ. 3500 எனவும் விலை  நிர்ணயம் செய்திட வேண்டும் என்ற விவசாயிகளின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை. விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், வேளாண்மைத்  துறையில் 5 சதவீத வளர்ச்சியை எவ்விதம் எட்ட முடியும்?
தமிழ்நாட்டின் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு, வறட்சி பாதித்த மாநிலமாக  அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட, தமிழக அரசு ஆளுநர் உரையில்  குறிப்பிடவில்லை. விலைவாசி உயர்வு குறித்தும் தமிழக அரசு கவனத்தில்  கொள்ளவில்லை.
இலங்கை அரசு நடத்திய தமிழ் இனப் படுகொலைகள், மனித உரிமை மீறல்களை,  சர்வதேச அளவில் இந்திய அரசு கொண்டு செல்ல வேண்டும் என்றும், இலங்கை மீது  பொருளாதாரத் தடை விதிக்க தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை  மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், ஆளுநர் உரையில் வலியுறுத்தி இருப்பது  வரவேற்கத் தக்கது ஆகும்"  என்று கூறியுள்ளார்.