Published:Updated:

"தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தது திமுக தான்" -அமைச்சர் உதயகுமார் சாடல்

பாலஜோதி.ரா
"தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தது திமுக தான்" -அமைச்சர் உதயகுமார் சாடல்
"தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தது திமுக தான்" -அமைச்சர் உதயகுமார் சாடல்

"கே.சி.பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கப்படுவதற்கு முன்பு என்ன பேசினார். இப்போது என்ன பேசிக்கொண்டிருக்கிறார்  என்பதை அவர் முதலில் நினைத்துப் பார்க்க வேண்டும்" என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.

புதுக்கோட்டையில்  நேற்று(21-04-2018) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக  தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். "கிராம நிர்வாகம் செயல்பாடு என்பது மிக முக்கியமானது. அது முறையாகவும் தடையின்றியும் செயல்பாட்டால்தான் மற்ற அனைத்து நிர்வாகமும் முறையாகச் செயல்படும். தமிழகத்தின் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கென்றே  கடந்த வாரம்  தமிழக முதல்வர் சிறப்புக் கூட்டத்தை நடத்தி போர்க்கால நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, தமிழக அரசு முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கோடைக்காலத்தில் தமிழக மக்கள் தண்ணீரின்றி தவிக்கக்கூடாதென்பதில் இந்த அரசு அதிக அக்கறையுடன் இருக்கிறது. 

காவிரி  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைக் காவு கொடுத்தது திமுகதான். இது வரலாற்று உண்மை. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு தற்போது நடைப்பயணம், மறியல், மனிதசங்கிலி என்று பல்வேறு போராட்டங்களை ஸ்டாலின் செய்து வருவது  ஜனநாயகக் கேலிக்கூத்தாகும். அஸ்தமமான தனது அரசியல் வாழ்க்கையை இதுபோன்ற போராட்ட  விளம்பரங்களால் சரிசெய்து விடலாம் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். ஆனால், அது  ஒருபோதும் பலிக்கப்போவதில்லை. தற்போதைய  தமிழக அரசு காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிச்சயமாக மீட்டெடுக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. வருவாய்த்துறை, டிஎன்பிசிக்கு இதற்கான  பட்டியலை அளித்துள்ளது. விரைவில் தேர்வு நடக்கும். தற்போது கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி கே.சி. பழனிச்சாமி கடந்த 15 ஆண்டுகளாக எந்தக் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றதில்லை. அவர் இப்போது பேசுவதற்கு முன்பு, கட்சியில் இருந்த போது என்ன பேசினார். எப்படியெல்லாம் பேசினார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நடிகர் எஸ் வி சேகர் பிரச்னையில் ஒட்டுமொத்த  பத்திரிகையாளர்கள் தரப்பு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமென விரும்புகிறதோ அதை  இந்த அரசு நிச்சயமாகச் செய்யும்" என்றார்.