Published:Updated:

நிர்மலா தேவிக்கு திடீர் மருத்துவ பரிசோதனை..!

அருண் சின்னதுரை
நிர்மலா தேவிக்கு திடீர் மருத்துவ பரிசோதனை..!
நிர்மலா தேவிக்கு திடீர் மருத்துவ பரிசோதனை..!

பேராசிரியை நிர்மலா தேவிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், செல்போன் போன்றவற்றின் விபரங்களை எடுத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், நிர்மலா தேவியுடன் பணியாற்றியவர்களை விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்து வருகின்றனர். அதன்படி இன்று நிர்மலா தேவியுடன் புத்தாக்க பயிற்சியில் இருந்த பெண் பேராசிரியையை விசாரித்தனர். மேலும் கரூரை சேர்ந்த ரயில்வே துறை பணியாளர்களான திவான், திவாகர் மற்றும் நிர்மலா தேவிக்கு தெரிந்த நபர்கள் என அனைவரையும் வரவழைத்து விசாரித்தனர். 

மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சி அளித்த இயக்குநர் கலைச்செல்வன், புத்தாக்க பயிற்சிக்கு சென்ற திருச்சியை சேர்ந்த பேராசிரியையிடமும் சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் நிர்மலா தேவியின் உடல் நலன் கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவர்கள் நேரில் வரமுடியாது என்பதால் நிர்மலாதேவியை போலீஸ் பாதுகாப்புடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறித்து பரிசோதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.