Published:Updated:

“ஜனநாயக றெக்கை... ஒடிக்கும் ஜெ!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“ஜனநாயக றெக்கை... ஒடிக்கும் ஜெ!”
“ஜனநாயக றெக்கை... ஒடிக்கும் ஜெ!”

கொட்டும் கோர்ட்ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்

பிரீமியம் ஸ்டோரி
“ஜனநாயக றெக்கை... ஒடிக்கும் ஜெ!”

‘`எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அதிக அளவில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுவருகின்றன. அரசின் கொள்கை முடிவுகளை விமர்சனம் செய்தால், அதற்காக அவதூறு வழக்கு தொடரவேண்டிய அவசியம் என்ன? உடல்நலம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு, ஓய்வு எடுப்பது குறித்து கூறியதற்கு, குடிநீர் பற்றாக்குறை பற்றி பேசியதற்கு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனச் சொன்னதற்கு எல்லாம் அவதூறு வழக்கு தமிழ்நாட்டில் தொடரப்பட்டுள்ளது.

ஜனநாயகம் வேண்டும். அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் (தமிழ்நாடு முதலமைச்சர்) பொது வாழ்வில் இருப்பதால், சிலர் உங்களை விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அந்த விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். கொள்கைரீதியாக விமர்சிப்பது அவதூறு பேச்சுக்கள் ஆகாது.

ஆனால் நீங்கள் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளீர்கள். அரசியல் விரோதத்தைத் தீர்க்க, அவதூறுச் சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளீர்கள். தமிழ்நாட்டில் மட்டுமே அவதூறுச் சட்டம் இதுபோல் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருந்து இதுபோன்ற வழக்குகள் இங்கு வரவில்லை''

- டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒலித்திருக்கும் குரல்கள் இவை; மாண்புமிகு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் அடங்கிய பெஞ்ச் கொடுத்திருக்கும் அபாய எச்சரிக்கைகள் இவை.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து, பல்வேறு மாநிலங்களாகப் பிரிந்திருக்கும் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத விநோதமான ஒரு சட்ட அடக்குமுறை அ.தி.மு.க ஆட்சியில் தொடர்கிறது என்பதற்கு அப்பட்டமான உதாரணம்தான்...

213 அவதூறு வழக்குகள். இந்த வழக்குகள், 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை போடப்பட்டவை. ஆறு ஆண்டுகளில் 213 வழக்குகள் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது, ஊடகங்கள் மீது போடப்பட்டுள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்றால், தமிழ்நாடு நீங்கலாக மற்ற மாநிலங்களில் ஆளும் ஆட்சியைத் தவிர எந்தக் கட்சியுமே இல்லையா? எதிர்க்கட்சிகள் செயல்படுவதே இல்லையா? பத்திரிகைகள் எழுதுவதே இல்லையா? ஊடகங்களின் குரல் ஒலிப்பதே இல்லையா? அல்லது அவதூறுச் சட்டமே இல்லையா?

“ஜனநாயக றெக்கை... ஒடிக்கும் ஜெ!”

கட்சிகள் இருக்கின்றன. தலைவர்கள் இருக்கிறார்கள். பத்திரிகைகள் ஏராளமாக உள்ளன. ஊடகங்கள் பெருகிவிட்டன. இவை அந்த மாநிலங்களில் இருந்து வரும் விமர்சனங்களைப் பார்த்தாலே தெரிகிறது. ஆளும் கட்சியும் அதைக் கவனிக்கிறது; கண்டனம் செய்கிறது. விமர்சிப்பது அவர்களது ஜனநாயக உரிமை என நினைக்கும் பக்குவம் மற்ற மாநில அரசுகளுக்கு இருக்கிறது. அந்தப் பக்குவம் இங்கே இல்லை. 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டதற்கு, இன்னும் போடப்பட இருப்பதற்கு இதுதான் காரணம்.

கட்சியை வழிபடுவது, கட்சித் தலைமையை வழிபடுவது, ஆட்சியை வழிபடுவது, ஆட்சித் தலைமையை வழிபடுவது - என்பது தமிழ்நாட்டில் முற்றிப்போன ஒரு நோய். ஜனநாயகத்தன்மைக்கும் இதற்கும் ஓர் அணுவும் தொடர்பு இல்லை. ‘நாங்கள் எப்போதும் எங்கள் தலைவர் செய்யும் எதையும் அங்கீகரிக்கிறோம்' என்பது ஜெர்மனியில் கொடிகட்டிப் பறந்த பாசிஸத் தன்மை. விமர்சனத்தையே நிராகரிப்பதுதான் இதன் அடிவேர். இந்தக் குணாம்சம்தான் அ.தி.மு.க ஆட்சியில் இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உணர்த்துகிறார்கள். ‘எதிர்க் கட்சிகளும் பத்திரிகைகளும் செய்யும் விமர்சனங்கள்... ஆட்சி, நிர்வாகம், அரசின் மீதான கொள்கை விமர்சனங்களே. இவற்றில், தனிநபர் விமர்சனம் இல்லை; தனிநபருக்கு எதிரான கருத்தும் இல்லை. பிறகு ஏன் அவதூறு வழக்கு போடுகிறீர்கள்?' என உச்ச நீதிமன்றம் கேட்கிறது.

ஒருவருடைய மதிப்பை, நற்பெயரைக் கெடுக்கும் செயலைத் தான் `அவதூறு' என்கிறது சட்டம். ஒருவரது நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற கருத்தோடு பேசுவது, எழுதுவது, சைகை காட்டுவது, காட்சிப்படுத்துவது இந்திய தண்டனைச் சட்டத்தின் 499, 500-வது பிரிவின்படி தண்டனைக்குரியது. அதே நேரத்தில் ஓர் அரசு ஊழியர் குறித்து எழுதும் போது தனிப்பட்ட நலனால் எழுதப்படுகிறதா, பொதுநல நோக்கத்தோடு எழுதப்படுகிறதா என்பது முக்கியமானது. ஒரு பொது ஊழியர் தவறு செய்கிறார், அந்தத் தவறைக் கண்டிப்பதன் மூலமாக பரந்துபட்ட பொதுமக்களுக்கு ஆதாயம் ஏற்படுகிறது என்றால், விமர்சிப்பதில் தவறு இல்லை என பல்வேறு தீர்ப்புகள் இருக்கின்றன. தனிப்பட்ட ஒரு மனிதரை விமர்சிப்பதற்கும், பொது வாழ்வில் இருக்கும் அரசு ஊழியரை விமர்சிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த வேறுபாட்டை அ.தி.மு.க அரசு உணரவில்லை. இதைத்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டுக்குள் நடந்துவந்த இந்த அவதூறு அடக்குமுறையை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டுபோனது விஜயகாந்த். சுப்பிரமணியன் சுவாமி மீதும் சில வழக்குகள் பாய்ச்சப்பட்டதும் அவரும் இதில் இணைந்துகொண்டார். விஜயகாந்த் மீது மட்டும் 48-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு வாய்தாக்களுக்கு அலைவதே பெரும் வேலையாகிப்போன எரிச்சலில்தான் விஜயகாந்த் உச்ச நீதிமன்றத்தை நாடினார். கடந்த ஆண்டு (2015) நவம்பர் மாதத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவருகிறது. விவாதத்துக்கு ஒவ்வொரு முறை வழக்கு வரும்போதும் நீதிபதிகள் தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்யத் தவறவில்லை. தமிழ்நாடு அரசும் வழக்கு போடுவதைத் தவறவிடவில்லை.

இதற்குக் காரணம், அவதூறு வழக்கை தன் கையில் கிடைத்த ஆயுதமாக ஜெயலலிதா நினைப்பதுதான். பண்ருட்டி ராமச்சந்திரன் தே.மு.தி.க-வில் இருந்தபோது (2013 ஜூன் 15) தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவதூறு வழக்குகள் பற்றி பேசினார். ‘அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். ‘வாபஸ் வாங்க மாட்டோம்' எனத் திட்டவட்டமாக மறுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சு, உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குப் போனதா எனத் தெரியவில்லை.

`பொதுவாழ்வில் உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடுபவர்கள், அதுவும் ஒரு கட்சித் தலைவர் என்ற மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் நா காக்க வேண்டும். எங்கே பேசினாலும், எப்போது பேசினாலும், என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து, ஒவ்வொரு வார்த்தையையும் பேச வேண்டும். நாவிலே வரும் எல்லாவற்றையும் கொட்டிவிட்டால் இப்படி அவதூறு வழக்கை சந்திக்கத்தான் வேண்டும். என்னைப் பற்றி, என் அமைச்சர்கள் பற்றி பேசுவது எங்களது தனிப்பட்ட பிரச்னை அல்ல. 7.28 கோடி மக்களுக்காகப் பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் மீது அவதூறு சொல்லி, நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் சொல்லப்பட்ட அவதூறு உண்மை என்று ஆகிவிடும். ஒழுங்கு, நிதானம், கட்டுப்பாடு ஆகியவை இயற்கையாக இல்லாவிட்டால், அதை வரவழைக்க இப்படிப்பட்ட வழக்குகளைத் தொடரத்தான் வேண்டும்' எனப் பொங்கி எழுந்தார் ஜெயலலிதா.

‘நான் தனி ஆள் அல்ல' என்கிறார் ஜெயலலிதா. `தனிப்பட்ட முதலமைச்சர் மீதான விமர்சனம் அல்ல இது' என்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். பொதுப்படையான, பொது ஊழியர் மீது விமர்சனம் வைப்பது எல்லாம் அவதூறு என்பதுதான் இறுதியாக நிற்கப்போகும் கேள்வி. ஜெயலலிதா சொல்லும் ஒழுங்கு, நிதானம், கட்டுப்பாடு ஆகியவை தனிமனிதக் குணங்கள். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொல்வது பொதுப்பண்புகள்; ஜனநாயகத்தின் குணாம்சங்கள்.

‘விமர்சனம், எதிர்ப்பு, சகிப்புத்தன்மை, எதிர்பார்ப்பு போன்ற அனைத்தும் அடங்கியதே ஜனநாயகம். விமர்சனம் செய்வதற்காக ஜனநாயகத்தின் றெக்கையை வெட்டிவிடக் கூடாது. மக்களுக்காக, மக்களால், மக்களுக்கான அரசு என்பதுதான் ஜனநாயகம், அதைக் குலைக்க வேண்டாம்' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்.

`இந்தக் கேள்விகளுக்கு எல்லாம், ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இப்படி ஒரு நோட்டீஸ் ஜூலை
15-ம் தேதியே அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அது ஜெயலலிதாவுக்குக் கிடைக்கவில்லை எனச் சொல்லப்பட்டதால் கடந்த 24-ம் தேதி (ஆகஸ்ட்) இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பதிலுக்குப் பிறகே இறுதி முடிவை உச்ச நீதிமன்றம் எடுக்கும்.

“ஜனநாயக றெக்கை... ஒடிக்கும் ஜெ!”

இந்தத் தீர்ப்பின் மூலமாக ஒரு தெளிவு பிறக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதியரசர் கே.சந்துரு, ‘எது அவதூறு என்பதற்கே சரியான வரையறை இல்லை' என்று சொல்லியிருந்தார். முதலில் இது சிவில் வழக்காக இருந்தது. பின்னர் கிரிமினல் வழக்காகவும் பதிவாகும் வாய்ப்பு தரப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு 19-21) வழங்கிய எழுத்துரிமை பேச்சுரிமை கருத்துக்களை வெளியிடும் உரிமைக்கும், இந்தியத் தண்டனைச் சட்டம் (499 - 500)க்கும் இடையிலான முரண்பாடுகள் களையப்பட வேண்டும்.

‘சட்டத்தில் நல்ல சட்டம், கெட்ட சட்டம் என்பது இல்லை. எந்தச் சட்டத்தையும் யார் பயன்படுத்துகிறார்கள்; யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து சட்டத்தின் தன்மை மாறுகிறது' என்றார் டாக்டர் அம்பேத்கர். கத்தி யார் கையில் இருக்கிறது என்பதைப்போல!

இதற்கு உச்ச நீதிமன்றம் ‘செக்' வைக்க வேண்டும். சட்டத்தை தவறாகப் பயன்படுத்த முடியாத அளவுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அதுவரை அவதூறு வழக்குகள் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அதிகாரத்தின் ஆயுதமாகவே செயல்படும். ஆளும் கட்சியின் விளையாட்டுப் பொம்மைபோலவே உருட்டப்படும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு