Published:Updated:

`தமிழக அரசு பா.ஜ.க-வின் 'பி டீம்'- முதல்வர் பழனிசாமி மீது திருநாவுக்கரசர் பாய்ச்சல்

சி.ய.ஆனந்தகுமார்

"பலவீனமான, பெரும்பான்மை இல்லாத தமிழக அரசு, பி.ஜே.பியின் 'பி டீம்' அரசாக இருக்கிறது" என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

`தமிழக அரசு பா.ஜ.க-வின் 'பி டீம்'- முதல்வர் பழனிசாமி மீது திருநாவுக்கரசர் பாய்ச்சல்
`தமிழக அரசு பா.ஜ.க-வின் 'பி டீம்'- முதல்வர் பழனிசாமி மீது திருநாவுக்கரசர் பாய்ச்சல்

``பலவீனமான, பெரும்பான்மை இல்லாத தமிழக அரசு, பி.ஜே.பியின் 'பி டீம்' அரசாக இருக்கிறது" என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாவட்டத் தலைவர்கள், மாநில துணை அமைப்புகளின் தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத் தலைவர்கள் ஜவஹர், திருச்சி கலை, வழக்கறிஞர் கோவிந்தராஜன் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் ஜோசப் லூயிஸ், ரெக்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போதே, அங்கு வந்த திருச்சியின் முன்னாள் மேயர் சுஜாதா, இந்நிகழ்ச்சிக்காக தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறி மாவட்டத் தலைவர் ஜவஹரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து திருநாவுக்கரசர், சுஜாதாவை அழைத்து சமாதானம் செய்து வைத்தார்.

இப்படியான சூழலில், பேசிய திருநாவுக்கரசர், ``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. தனது தோழமைக் கட்சிகளுடன் நடத்தும் மனிதச் சங்கிலி போராட்டத்திலும் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரியம் அமைத்த பின், அதன்படி கர்நாடகா அரசு செயல்படாவிட்டால், அதை எதிர்த்துப் போராட தமிழக காங்கிரஸ் கட்சித் தயாராக உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து, செய்ய வேண்டியதை மத்திய அரசு செய்யவில்லை.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கக்கோரி துணை ஜனாதிபதியிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஏற்கெனவே அந்தத் தலைமை நீதிபதி மீது உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்காலத்தில் நீதிமன்றம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில், காவிரி பிரச்னைக்குத் தீர்வு காண, மத்திய அரசு முயற்சி செய்யவில்லை. நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படும் மத்திய அரசு, பிரச்னையை திசை திருப்புகிறது. பலவீனமான, பெரும்பான்மை இல்லாத தமிழக அரசு, பி.ஜே.பியின் 'பி டீம்' அரசாக இருப்பதாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால், 'நீட்' தேர்வைத் தள்ளி வைக்க முடியவில்லை. அ.தி.மு.க. அரசை பயன்படுத்திக்கொள்ளும் பி.ஜே.பி அரசிடம் இருந்து, தமிழக மக்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுத்தர முடியவில்லை என்பதே உண்மை.

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்தும் தீர்ப்பு வழங்குவதில் காலதாமதம் ஆகிறது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பல விஷயங்கள் காத்திருக்கின்றன. இந்த வழக்கில் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் நீதிமன்றத்துக்கு உத்தரவிட முடியாது. ஆனால், வேண்டுகோள் விடுக்கிறோம். இது மக்கள் விரும்பும் அரசு அல்ல. தீர்ப்பு வழங்கக் காலதாமதம் செய்யக்கூடாது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது. கூட்டுறவுச் சங்கத் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். மணல் குவாரிகள் முறையாகத் திறக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டால் ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பயன்பெறும். இந்தத் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள காமராஜர் தொண்டர் ஒருவர் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும். அதற்கு காங்கிரஸ் அடித்தளத்தைப் பலப்படுத்த வேண்டும். கட்சியில் கோஷ்டி பூசல் கிடையாது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை காங்கிரஸ் கட்சி விரைவில் அமைக்கும்.