Published:Updated:

`வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது வாங்கிவிட்டார்' - வைகோவுக்கு எதிராகப் பாயும் தமிழிசை

சகாயராஜ் மு
`வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது வாங்கிவிட்டார்' - வைகோவுக்கு எதிராகப் பாயும் தமிழிசை
`வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது வாங்கிவிட்டார்' - வைகோவுக்கு எதிராகப் பாயும் தமிழிசை

`வைகோவின் எல்லை தாண்டிய விமர்சனங்களுக்கு தகுந்த எதிர்ப்பைக் காட்டிய உடன்குடி பா.ஜ.க-வினரின் உணர்வு நியாயமானதே' என்று தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, வன்முறையைத் தூண்டும் வைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பா.ஜ.க சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்புக் கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரசாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதெல்லாம் அவ்வப்போது வாங்கிவிட்டு அதை மறைக்க இன்று ஒரு போலி ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரசார யாத்திரை என்ற பெயரில் வழக்கம் போல் மோடி எதிர்ப்பு பிரசாரம் நடத்தி வரும் வைகோ, மோடியை நாக்கில் நரம்பில்லாமல் இழிவான சொற்களால் தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதைக் கேட்டு பொங்கி எழுந்த பா.ஜ.க-வினர் உடன்குடியில் அவர் வழியில் கூடிநின்று அறவழியில் கறுப்புக்கொடியும் கறுப்பு பல்லூன்களும் ஏந்தி நின்றபோது அங்கு வந்த  வைகோ வெந்த புண்ணில் வேல் பாச்சுவதுபோல் தன் தலைமை பண்பை மறந்து தன்னிலை இழந்து காவல்துறையினரை நீங்கள் விலகி நில்லுங்கள் என் தொண்டர்கள் அவர்களைப் பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்லி பா.ஜ.க-வினரை அடியுங்கடா என்று சொன்னதை தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்தோம். அங்கே மோடியை  இழித்துப் பேசியதோடு வன்முறையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து இருக்கிறார். அவருடன் காரிலிருந்து கொண்டுவந்த இரும்புக் கம்பிகளால் எங்கள் தம்பிகளை காயம் ஏற்படும் வகையில் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.

பா.ஜ.க உடன்குடி ஒன்றிய நிர்வாகிகள் நெல்லையம்மாள், சங்கர் குமார், மெய்யழகன், துரைராஜ், விஜய சங்கர், சக்திவேல், ராமலிங்கம், பசுபதி சிவாசிங் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பா.ஜ.க தொண்டர்களைக் கைதுசெய்து ஒரு மண்டபத்தில் வைத்திருந்தபோது அங்கு வந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த மண்டபத்தை அப்படியே கொளுத்துங்கடா பா.ஜ.க காரனை எல்லோரையும் எரிக்க வேண்டும் என்று வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசி இருக்கிறார். வைகோவின் உடன் செல்லும் வன்முறைக் கும்பல் வாகனத்தில் கத்தி, கம்பு, கற்கள் என்ற ஆயுதங்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள். அவருடைய பிரசார யாத்திரை வன்முறை யாத்திரை ஆவதால் அதை தமிழக அரசு உடனே தடை செய்ய வேண்டும். 

உலக நாடுகளால் வன்முறையாளர் வைகோ என்று முத்திரை குத்தப்பட்டு மலேசியா போன்ற நாடுகளில் இன்றும் நுழைய அனுமதி இன்றி திரும்பிப் போ என்று திருப்பி அனுப்பப்பட்ட வைகோ, உலகெங்கும் ஓய்வின்றி சுற்றிச் சுற்றி வந்து எம் தாய் நாட்டின் பொருளாதாரத்தையும், முதலீட்டையும், வேலைவாய்ப்பையும், பெருக்க பெரும்பணி செய்து வரும் பிரதமர் மோடியை விமர்சிக்க தகுதியற்றவர். வந்தவரை வரவேற்கும் தமிழர் பண்பாட்டை சீர்குலைத்து திரும்பிப் போ என்று சிலர் கறுப்புக்கொடி காட்டினாலும் என் பணியும், சேவையும் தமிழகத்துக்கு என்றும் கிடைக்கும் என்று  உறுதியோடு உங்கள் கறுப்புக் கொடி எதிர்ப்பையையும் மீறி தமிழகம் வந்துவிட்டு சென்ற பாரதப் பிரதமரை கோழை என்று விமர்சிக்க கடந்த காலங்களில் இலங்கைக்கு கள்ளத் தோணியில் ஒளிந்துகொண்டு சென்று வந்த வைகோவுக்கு பிரதமரை விமர்சிக்க தகுதி இல்லை. அவரின் எல்லை தாண்டிய விமர்சனங்களுக்கு தகுந்த எதிர்ப்பை காட்டிய உடன்குடி பா.ஜ.க-வினரின் உணர்வு நியாயமானதே. எங்கள் தொண்டர்களையும், பொதுமக்களையும் தாக்கிய வைகோ கட்சினரையும் அதன் பின் நிகழ்வாக உடன்குடியில் மீண்டும் வன்முறையைத் தூண்டி வரும் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.