Published:Updated:

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக மனிதச் சங்கிலி! களமிறங்கும் ஸ்டாலின் உள்ளிட்ட 9 தலைவர்கள்

பாலஜோதி.ரா
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக மனிதச் சங்கிலி! களமிறங்கும் ஸ்டாலின் உள்ளிட்ட 9 தலைவர்கள்
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக மனிதச் சங்கிலி! களமிறங்கும் ஸ்டாலின் உள்ளிட்ட 9 தலைவர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அனைத்துக் கட்சிகளின் சார்பில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடக்கிறது. மு.க.ஸ்டாலின் உள்பட 9 கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக மனிதச் சங்கிலி! களமிறங்கும் ஸ்டாலின் உள்ளிட்ட 9 தலைவர்கள்

புதுக்கோட்டை நகரில், ஸ்டாலின் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடக்கிறது. இதற்காக நேற்று இரவே புதுக்கோட்டை நகருக்கு அவர் வந்துவிட்டார். திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரகுபதிக்குச் சொந்தமான ஜெஜெ கல்லூரியில் தற்போது தங்கியுள்ளார் ஸ்டாலின். இன்று காலை 10 மணிக்கு மறைந்த புதுக்கோட்டை மாவட்ட கழகச் செயலாளர் முத்துசாமியின் திருஉருவப்படத்தைத் திறந்துவைத்துப் பேசுகிறார். இதற்காக திலகர் திடல் அருகில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டுள்ளது. அதனை முடித்துவிட்டு, மீண்டும்  கல்லூரிக்குச்செல்லும் ஸ்டாலின், அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்துகிறார். மாலை நடக்கவிருக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை திறந்த வேனில் பார்வையிட்டு, கீழராஜ வீதி பகுதியிலோ அல்லது பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலோ அவர் கலந்துகொள்கிறார்.

இதேபோல் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் நீங்கலாக ஏனைய கட்சித் தலைவர்கள் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் கலந்துகொள்கிறார்கள். சென்னையில் கி.வீரமணி, மார்க்ஸிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும் சிவகங்கையில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி, தஞ்சையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், கிருஷ்ணகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திருச்சியில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பங்கேற்கின்றனர்.

இதுதவிர, சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடக்கிறது. சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் ஜெ.அன்பழகன் தலைமையில் அண்ணாசாலை முதல் தேனாம்பேட்டை வரையிலும், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேகர்பாபு தலைமையில் பெரம்பூர் சர்ச் அருகிலிருந்து பிராட்வே வரையிலும், சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாதவரம் சுதர்சனம் தலைமையில் மூலக்கடை முதல் ஸ்டான்லி வரைக்கும் சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் மா.சுப்ரமணியன் தலைமையில் சைதாப்பேட்டையிலிருந்து மீனம்பாக்கம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள், கட்சிகளின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.