கட்டுரைகள்
கவிதைகள்
Published:Updated:

தாத்ரியில் இருந்து உனா வரை - நிரந்தரத் தீர்வை நோக்கி - அ.முத்துக்கிருஷ்ணன்

தாத்ரியில் இருந்து உனா வரை - நிரந்தரத் தீர்வை நோக்கி - அ.முத்துக்கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
தாத்ரியில் இருந்து உனா வரை - நிரந்தரத் தீர்வை நோக்கி - அ.முத்துக்கிருஷ்ணன்

தாத்ரியில் இருந்து உனா வரை - நிரந்தரத் தீர்வை நோக்கி - அ.முத்துக்கிருஷ்ணன்

தாத்ரியில் இருந்து உனா வரை - நிரந்தரத் தீர்வை நோக்கி - அ.முத்துக்கிருஷ்ணன்

த்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில், கடந்த செப்டம்பர் 28, 2015 அன்று இரவு 10:30 மணிக்கு ஒரு பெரும் இந்துத்துவக் கும்பல் முகமது அக்லாக் அவர்களின்  வீட்டிற்குள் நுழைந்து, அவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்கிற ஜோடிக்கப் பட்ட  குற்றச்சாட்டைச் சுமத்தி, அவரை அடித்துக் கொன்றது. அதன் பின்னர் விசாரிக்க வந்த காவல்துறை, அக்லாக் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியைக் கைப்பற்றி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியது. அது ஆட்டு இறைச்சி என்று பரிசோதனை முடிவு வந்த பிறகு, `நாங்கள் அவர்களின் வீட்டிற்கு வெளியே உள்ள குப்பைத்தொட்டியில் இறைச்சியைக் கண்டெடுத்தோம்’ என்றது. மாட்டை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க நடத்தும் இந்த அரசியல், இந்தியாவை உலக அரங்கில் பெரும் தலைகுனிவுக்கு இட்டுச் செல்கிறது.

`தாக்குவதாய் இருந்தால் என்னைத் தாக்குங்கள், என் மீது உங்கள் துப்பாக்கித் தோட்டாக்களால் சுடுங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய பிறகுதான் தாக்குதல்கள் மேலதிகமாயின. இந்தப் பேச்சில் அப்படி என்ன செய்தியை பசுக் காவலர்கள் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை.
பசுவைக் காக்கிறோம் என்கிற பெயரில் புதிய புதிய வடிவங்களில் தலித் மற்றும் இஸ்லாமியர்களைத் தாக்கும் செயல் திட்டங்கள் அரங்கேறின. அதைக் கண்டு சங் பரிவாரத்தின் உறுப்பினர்கள், நாடு முழுவதும் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு வந்து, இந்தத் தாக்குதலை தங்கள் கைகளில் எடுக்கத் தொடங்கினார்கள். இப்படியான வன்முறைகளில் ஈடுபட்டு சட்டரீதியாகத் தண்டிக்கப்பட்டால், அது தங்களின் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிவைக்கும் என்கிற நம்பிக்கையை, கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் அழுத்தமாகப் பெற்றிருக்கிறார்கள். இந்தப் போக்கு, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அழுத்தமாகக் காணப்படுகிறது.

கடந்த ஜூலை 11 அன்று, குஜராத்தின் உனாவில் செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக  நான்கு இளைஞர்களை, பசுக் காவலர்கள் ஒரு வாகனத்தில் கட்டிவைத்து அடித்தார்கள். மத்தியப்பிரதேச மாநிலம் மண்டசோரில் பசு இறைச்சி வைத்திருந்ததாக, இரு இஸ்லாமியப் பெண்களைத் தாக்கினார் கள். இந்தக் காணொளிகள் தேசம் முழு வதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தினசரி இதுபோன்ற காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன. அதுமுதல் இந்த வன்முறைச் செய்திகள் ஒரு மோஸ்தராகவே மாறிவருகின்றன. வேடிக்கை என்ன வென்றால், இந்தியா முழுவதிலும் இந்தப் பசுக் காவலர்கள் பதிவேற்றம் செய்யும் காணொளிகளை உற்றுப் பார்த்தால், அதில் அவர்கள் தோலினால் செய்யப்பட்ட பெல்ட்டுகளை, செறுப்புகளையெல்லாம் அணிந்திருக்கிறார்கள். 

தாத்ரியில் இருந்து உனா வரை - நிரந்தரத் தீர்வை நோக்கி - அ.முத்துக்கிருஷ்ணன்

தலித்துகளின் மீதான தாக்குதல்கள் இந்தியா முழுவதிலும், இந்திய வரலாறு நெடுகிலும் நடந்துவருகிறது. ஆனால், இந்து மதம் பிறப்பின் அடிப்படையில் மனிதர் களைத் தனித்தனியான அடுக்குகளில் பிரித்துவைத் திருப்பதால், ஒருவர் தாக்கப் படுவதை மற்றவர் கண்டுகொள்ளாமல் இருக்கும் மனோபாவம், மதத்தால் கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இன்றுவரையும்கூட அந்த மனநிலை இம்மி பிசகாமல் தொடர்கிறது.

காலங்காலமாக அடக்குமுறைகளை மனமில்லாமல் சகித்துவந்த தலித்துகள், கடந்த நூற்றாண்டு முதலே தங்களின் உரிமைப் போராட்டத்தைத் தொடங்கி பல வடிவங்களில் நடத்திவருகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் தலித் அரசியல் கட்சிகள் பல தோன்றினாலும் அங்குள்ள தலித்  மக்களின் பிரச்னைகளை அவை தீர்க்கவில்லை. மாறாக, பல கட்சிகள் மைய நீரோட்டத்தின் எல்லா அழுக்குகளையும் பலவீனங்களையும் உள்வாங்கிக்கொண்டு சட்டமன்ற - நாடாளுமன்ற சீட்டுக்களுக்காகத் தங்களின் வரலாற்றுக் கோரிக்கைகளை, வரலாற்றுப் பயணத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலையில் இறங்கின. இந்தியாவின் மைய நீரோட்ட ஊடகங்களும்கூட தொடர்ச்சியாக தங்களின் மத, சாதிய சார்புகளின்படியே இயங்கிவருகின்றன. குஜராத்தில் நடந்த படேல் ஜாதிப் போராட்டங்களை பெரும் புரட்சிபோல் சித்தரித்து, தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் இடத்தை ஒதுக்கி, தினசரி செய்திப் படங்கள் வெளியிட்டு மகிழ்ந்தன. ஆனால், அதே சமயம் தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் அவர்களின் போராட்டங்களுக்கு, கோரிக்கைகளுக்கு ஒரு தேசிய, மாநில அல்லது வட்டார அந்தஸ்துகூட கிடைக்காமல் பார்த்துக்கொண்டனர்.

இந்தமுறை குஜராத்தில் தலித்துகள், தங்களின் சகோதரர்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை இனியும் சகிப்பதில்லை என முடிவெடித்தனர். இந்தக் கோபத்தின் அலை இத்தனை கம்பீரமாக உருவாகக் காரணமாக இருந்தவர் ஜிக்னேஷ் மேவானி. அவரது பேச்சும் நிதானமும் இந்தப் போராட்டத்தை அவர் கையாண்டவிதமும் அவரை குஜராத் தலித் எழுச்சி நாயகனாகப் பரிணமிக்கச் செய்தது.

வழக்கறிஞராக, பத்திரிகையாளராக களம் கண்ட ஜிக்னேஷ் மேவானி, தனது மனசாட்சியின் குரல் அழைத்துச் சென்ற வழியே தனது அரசியல் புரிதலை விசாலப்படுத்திக்கொண்டே சென்றார். பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் காரல் மார்க்ஸை ஆழமாக உள்வாங்கி வாசித்திருக்கிறார். தேவைப்படும் இடங்களில் எல்லாம் இந்த இரு பெரும் பிதாமகன்களின் வரிகளை மனப்பாடக் குறிப்புகளாக தனது பேச்சின் ஊடே சொல்லியபடி செல்கிறார். அவர் தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்களைவைத்து கேள்விகளைத் தொடுக்கிறார். பா.ஜ.க தலைவர்களின் வெத்துப் பேச்சுக்களை கட்டுடைக்கிறார். 2009-ம் ஆண்டில் மேவானி, குஜராத்தின் பத்து கிராமங்களில் மேற்கொண்ட பயணம்தான் அவரது வாழ்வைப் புரட்டிப் போட்டுள்ளது. எப்படி நிலத்தில் இருந்து ஒரு தலித் முற்றிலுமாக அந்நியமாக வாழ்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட அவர், நிலத்தை தலித்துகளுக்கு மீட்டுத் தரும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார்.

தாத்ரியில் இருந்து உனா வரை - நிரந்தரத் தீர்வை நோக்கி - அ.முத்துக்கிருஷ்ணன்

இந்தமுறை அகமதாபாத்தில் இருந்து, தெற்கு குஜராத்தின் உனா நகரம் நோக்கி இந்த சுயமரியாதை யாத்திரை கிளம்பும் வரை ஜிக்னேஷ் மேவானி என்னும் பெயரை இந்த தேசம் அறிந்திருக்கவில்லை. இந்த அகிம்சைக் கொள்கைகொண்ட யாத்திரையை அவர் ஓர் அறிவுப்பூர்வமான தளத்தில் நிகழ்த்திக் காட்டியவிதம் அவரை   தேசத்துக்கு அடையாளம் காட்டியது. இந்த சுயமரியாதை யாத்திரை முன்வைத்த கோஷங்கள், கோரிக்கைகள்தான் இத்தனை பெரும் ஜனத்திரளை ஒன்றிணைத்தது. `எங்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களைத் தாருங்கள், எங்களுக்கு நிலத்தைப் பிரித்துத் தாருங்கள்’ என்று மேவானி பேசத் தொடங்கிய போதுதான், நம்பிக்கையின் அலை குஜராத்தின் எல்லைகள் கடந்தும் வீசத் தொடங்கியது. ஒவ்வொரு கூட்டத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் இணையத் தொடங்கினார்கள், ஒவ்வொரு கூட்டத்திலும் ஓர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. `இனி நாங்கள் செத்த மாட்டைத் தூக்க மாட்டோம்; சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்ய மாட்டோம்; மலத்தை சுத்தம் செய்ய மாட்டோம்’ என்று ஆயிரக்கணக்கானவர் களின் குரல்கள் ஒன்றிணையும்போது, மக்களின் முகங்களில் வைராக்கியமும் கோபமும் ஒன்றிணைந்தன.

மக்கள் பல்லாயிரக்கணக்கில் இணைந்த போதும் அரசியல் கட்சிகளின் சார்பில்லா மல், தலித்துகளின் நலனுக்காக வேலை செய்யும் 3,000 அமைப்புகளின் கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவை ஜிக்னேஷ் மேவானி, தோழமை அமைப்புகளோடு இணைந்து ஜூலை 31 அன்று நடந்த மகா சம்மேளனத்தில் உருவாக்கினார். பல தொழில்முறை அரசியல் கட்சியினர் ஒவ்வொரு கிராமத்தில் வரவேற்றபோதும் அவர்களை கட்சி சார்புகளற்று, தனி நபர்களாக இந்தப் போராட்டத்தின் கோரிக்கை கருதி இணையச் சொன்னார். `அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வந்து எங்கள் வீடுகளில் தேநீர் குடிப்பது, உணவு உண்பதை நிறுத்திக்கொண்டு, காலங்காலமாக நாங்கள் முன்வைத்து வரும் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த முனைய வேண்டும்’ என்றார்.

இந்த யாத்திரை தொடங்கியது முதலே குஜராத் அரசை நோக்கி கேட்கப்பட்ட  கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் திணறிய முதல்வர் ஆனந்திபென், உடல்நிலை சரியில்லை என சால்ஜாப்பு ராஜினாமா கடிதம் கொடுத்தார். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள்கூட பத்திரிகை
யாளர்களைப் பார்ப்பதையே தவிர்த்தனர்.

தாத்ரியில் இருந்து உனா வரை - நிரந்தரத் தீர்வை நோக்கி - அ.முத்துக்கிருஷ்ணன்

தலித் எழுச்சி யாத்திரை தொடங்கி அதில் லட்சக்கணக்கானவர்கள் இணையத் தொடங்கியவுடன், குஜராத் அரசு தனது தந்திர வேலையைத் தொடங்கியது. முதலில், குஜராத்தில் இருந்து தவறான தகவல்களைப் பரப்பும் பெரும் இணையதளப் படைக்கு இந்த யாத்திரை குறித்த தவறான வதந்திகளைப் பரப்பும் பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்து, `இந்த யாத்திரை முழுவதும் சிவப்புப் போராளிகள் இருக்கிறார்கள்; ஆயுதம் ஏந்திய நக்சலைட்டுகள் இருக்கிறார்கள்’ என்று தினமும் ஒரு வதந்தியை குஜராத் ஊடகங்களில் கிளப்பிவிட்டன.

இந்த யாத்திரை நெடுகிலும் மக்கள் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தார்கள். `மாட்டின் வாலை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு நிலத்தை திருப்பிக் கொடுங்கள்’, `பசு மாடு உங்கள் தாய் என்றால், காளை மாட்டையும் உங்கள் தந்தையாக நடத்துங்கள்’, `மாற்று வாழ்
வாதாரங்கள் ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் கடமை’, `சகிக்க முடியாது, சகிக்க முடியாது, இனியும் சகிக்க முடியாது’, `மாடு உங்கள் தாய் என்றால், அதை நீங்களே இனி பராமரியுங்கள்’, `மலம் அள்ள மாட்டோம் மோடி, எங்களுக்கு டிஜிட்டல் இந்தியாவில் வேலை கொடு’, `எங்களுடன் `ஒரு மன் கீ பாத்’ உரையாடலை மோடி நடத்தத் தயாரா?’ என்று விண்ணைப் பிளக்கும் கோஷங்கள். காலங் காலமாக இந்தச் சமூகத்தில் ஒரு அந்நிய மான வாழ்க்கையை வாழும் தலித்துகளின் நியாயம் கோரும் யாத்திரை யாக மாறியது.

இந்த 350 கிலோ மீட்டர் யாத்திரை நெடுகிலும் இதில் பயணித்தவர்கள் பல நெருக்கடிகளைச் சந்தித்தனர். வழி நெடுகிலும் அவர்களுக்குக் குடிதண்ணீர் முதல் உணவு வரை பெரும் பிரச்னையா கவே இருந்தது. `எங்களிடம் பணம் இருந்தும் பல உணவுவிடுதிகளில் எங்களை உள்ளேவிட மறுத்தார்கள். தேநீர் கடைகளுக்குக்கூட நாங்கள் எங்கள் டம்ளர்களுடன்தான் சென்றோம்’ என்றார்கள்.

உலகில் மாட்டுக்கறி ஏற்றுமதியில், பிரேசிலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் முன்னணி மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்களை நடத்தும் பல முதலாளிகள் இந்துக்களே. இந்தியாவில் இயங்கும் `அல் கபீர்’, `அரேபியன் எக்ஸ்போர்ட்’ என்கிற இரு நிறுவனங்கள்தான் ஏற்றுமதியில் முதன்மையான நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின்  இஸ்லாமியப் பெயர்களை வாசிக்கும்போதே இவை இஸ்லாமியர்கள் நடத்தும் நிறுவனங்கள்தான் என்ற முடிவுக்கு வருகிறோம். நமது பொதுப்புத்தி அப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிறுவனங் களை நடத்தும் இருவரும் இந்துக்களே. இவர்கள் ஏன் தங்களின் நிறுவனங்களுக்கு முஸ்லிம் பெயர்களை வைத்தார்கள் என்கிற கேள்வி இந்த இடத்தில் முக்கியமானது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைவிட, பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களின் மாட்டிறைச்சி ஏற்றுமதி பெரிய அளவில் அதிகரித் துள்ளது என்பதை அந்த நிறுவனங் களின் ஆவணங்கள்  நிறுவுகின்றன.

தாத்ரியில் இருந்து உனா வரை - நிரந்தரத் தீர்வை நோக்கி - அ.முத்துக்கிருஷ்ணன்

செத்த மாட்டின் தோலுரித்த தலித் இளைஞர்களைத் தாக்கி சித்ரவதை செய்வது, மாட்டிறைச்சி உண்டார் கள் என்று தலித் மற்றும் இஸ்லாமியக் குடும்பங் களின்  மீது பசுவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்வது என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அமைப்புகள் மகிழ்ந்து வரும் வேளையில், மாட்டுக்கறி ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் அல் கபீர், அரேபியன் எக்ஸ்போர்ட் நிறுவனங்களின் முதலாளிகளான சதீஷ் மற்றும் சுனில் ஆகிய இந்துக்களிடம் இருந்து பா.ஜ.க கட்சி, கோடிகளில் நன்கொடைகள் பெறுவதாக சொல்லப்படுகிறது. தாத்ரி சம்பவத்தில் முன்னணியில் இருந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சிங், அல்-துவா என்கிற மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் நடத்திவந்தார் என்கிற செய்தி உங்களுக்கு இரட்டை வேடத்தின் முழுச் சித்திரத்தை வழங்கும்.

உனாவை நோக்கிச் சென்ற விடுதலைப் பேரணி மாட்டிறைச்சி, பசுப் பாதுகாப்பு என்கிற பெயரில் நடக்கும் அருவருப்பான அரசியலைக் கடந்து இந்த தேசம் ஒரு நிரந்தரத் தீர்வை நோக்கி முன்நகரவேண்டிய காலம் வந்துவிட்டது என்கிற செய்தியை அழுத்தமாக அறிவித்திருக்கிறது. ரோஹித் வெமுலாவின் தாய் சுதந்திரத் தினத்தன்று உனாவில் தேசியக்கொடியை ஏற்றியது இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. ரோஹித் வெமுலாவின் தாய், தேசியக் கொடியை ஏற்றியத் தருணத்தில் 1947-ல் இந்தியாவுக்குக் கிடைத்தது அரசியல் விடுதலை மட்டும்தான்; சமூக விடுதலை இன்னும் கிடைக்கவில்லை என்பதை இந்த உலகுக்கு அறிவித்தது. ரோஹித் வெமுலாவுக்கு செலுத்தப்பட்ட அர்த்தப்பூர்வமான அஞ்சலிகளில் ஒன்று இது. இந்தியா முழுவதும் உள்ள தலித் செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்களின் பெரும் சங்கமமாகவும் உனா உருமாறியது. நூற்றாண்டுகளின் இழிவை அழித்தொழிக்க வேண்டும் என்கிற நிரந்தரப் பயணத்தை அம்பேத்கர் வழியில் உனா முன்மொழிந்துள்ளது. 20 நாட்களே நடந்த தலித்துகளின் ஒத்துழையாமையில் இதுவரை குஜராத் மற்றும் ராஜஸ்தானில் 550 மாடுகள் வரை செத்து மடிந்திருக்கின்றன. பசுப் பாதுகாப்பு இயக்கத்தினர் அந்தத் திசைகளுக்குக்கூடச் செல்லவில்லை என்பதுதான் நம் காலத்து வரலாறு!