Published:Updated:

''அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியா.. இல்லையா..?''

''அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியா.. இல்லையா..?''
''அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியா.. இல்லையா..?''

பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி குறித்து முன்னுக்குப்பின் முரணாக வரும் அறிவிப்புகளால் அ.தி.மு.க. தொண்டர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். பி.ஜே.பி-யிலும் இதே குழப்பம் நிலவுகிறது. 

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவரோடு நட்பு பாராட்டினார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா. பிறந்த நாள்களின் போது ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லி வந்தார்கள். 2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது, சென்னை வந்து அந்த விழாவில் பங்கேற்றதுடன் ஜெயலலிதாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் மோடி. அதன்பிறகு 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு கட்சிகளும் எதிரெதிர்த் திசையில் நின்று போட்டியிட்டன. அப்போது, ஆரம்பக்கட்ட தேர்தல் பிரசாரங்களில் மோடியை விமர்சிக்காத ஜெயலலிதா, தேர்தலுக்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு பிரசாரக் கூட்டங்களில் மோடியை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் உள்ள 39 சீட்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்றால் ஜெயலலிதாதான் பிரதமர் என்றெல்லாம் பேசினார்கள். "மோடியா, லேடியா என்று பார்த்துவிடலாம்" என தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் பொங்கினார்கள். ஆனால், அந்தத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி., பா.ம.க தலா ஒரு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதர 37 மக்களவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க-வே வெற்றி பெற்றது. 

'நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்கும்' என்று சொன்னதற்காக, அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி மலைச்சாமியை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா. இப்படி, பி.ஜே.பி-க்கு எதிராக அதிரடி காட்டிய ஜெயலலிதா, மோடியை விட்டு விலகியே இருந்தார். ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்துச் சொன்னார். 'மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு டெல்லிக்கு வாருங்கள்' என்று ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், ஜெயலலிதா டெல்லி செல்லவில்லை. அதன்பிறகு, மத்திய அரசோடு ஜெயலலிதா நெருக்கம் காட்டவே இல்லை. ஜி.எஸ்.டி சட்டம், நீட் தகுதித் தேர்வு உள்பட மத்திய அரசின் பல்வேறு அறிவிப்புகளை கடுமையாக எதிர்த்தார் ஜெயலலிதா. இந்த எதிர்ப்புகள் எல்லாம், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதாவது 2016 டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் தலைகீழாக மாறிப் போனது. அதுவும், அ.தி.மு.க-வில் உள்கட்சி மோதல் ஏற்பட்டு மூன்று அணிகளாக உடைந்த பிறகு மத்திய பி.ஜே.பி. அரசோடு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு தெரிவித்தனர். 

சசிகலா குடும்பத்துக்கு எதிராக களம் இறங்கிய, ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியையும் இணைந்த பிறகு, அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்ற விழாவில், அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், இருவர் கைகளையும் பிடித்து சேர்த்து வைத்தார். அதன்பின்னர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'மோடி சொன்னதால்தான் எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்தேன்' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். 

'அ.தி.மு.க-வை பி.ஜே.பி ஆட்டிப்படைக்கிறது' என்று தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ''வருங்காலத்தில் பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம். யார் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்'' என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், மத்திய அரசுடன் இணக்கமான போக்கையே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு கடைபிடித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தபோது, அந்தக் கோரிக்கைக்காக அ.தி.மு.க ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்துடன் முடித்துக் கொண்டது. ஏப்ரல் 12-ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தபோது, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை அடங்கிய ஓர் மனுவை மட்டும் பிரதமரிடம் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

அதன் மறுநாளே, அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான, ''நமது புரட்சித்தலைவி அம்மா'' நாளிதழில், மோடிக்கு எதிரான விமர்சனத்தை தாங்கிய கவிதை ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. `நெருப்பாகும்.... வெறுப்பு' என்ற தலைப்பில் அந்தக் கவிதை எழுதப்பட்டு இருந்தது. இந்தக் கவிதையில், "நெடுவாசல் பிரச்னை, நீட் விவகாரம், வர்தா புயலுக்கு நிதி ஒதுக்காதது, தமிழக மீனவர்கள் பிரச்னை, பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து, ஹெச்.ராஜா, தமிழிசையின் பேச்சுக்குக் கண்டனம்..." என ஒட்டுமொத்த பி.ஜே.பி-க்கு எதிராகக் கடுமையான கருத்துகள் பதிவாகி இருந்தன. 'எது கேட்டு நின்றாலும் இழுத்தடிப்பு... ஹெச்.ராஜா, தமிழிசை ஏச்சுகளால் எங்கு பார்த்தாலும் ஏகக்கொதிப்பு...' போன்ற வரிகளும், `மத்திய அரசு மனப்போக்கை மாற்றுவதே சிறப்பு... இல்லையேல் அது ஒற்றுமை ஒருமைப்பாட்டில் உருவாக்கிவிடுமே வெடிப்பு... இனியாவது புரியட்டும் தாமரைக் கட்சிக்குத் தமிழினத்தின் தன்மானம் குன்றாத வியப்பு...' என்று அந்தக் கவிதை வரிகள் முடிந்திருந்தன. அந்தக் கவிதையை அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் சித்திர குப்தன் எழுதி இருந்தார்.

இப்படி, பி.ஜே.பி-க்கு எதிரான அஸ்திரத்தை எடுத்த அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில், அடுத்த பத்தே நாளில், 'அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி இரட்டைக் குழல் துப்பாக்கி' என்று இன்னொரு கட்டுரை வெளியாகி, இப்போது மீண்டும் பரப்பரப்பை கூட்டியிருக்கிறது. ஏப்ரல் 22-ஆம் தேதி, அ. திருமலை என்பவர் எழுதிய கட்டுரையில், ''எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அ.தி.மு.க - பா.ஜ.க உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர்குலைக்க முடியாது. இந்திய அரசியலில் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கி விட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை இரண்டு கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும்'' என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்த அறிவிப்பை அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ''பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கி அல்ல. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்'' என்றார்.  மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ''பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை வைத்து கூட்டணியை முடிவு செய்து விட முடியாது'' என்று சொல்லி இருக்கிறார். ஆனால், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ''இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொல்வது சரிதான்'' என்று கருத்து தெரிவித்துள்ளார். பி.ஜே.பி மூத்த தலைவர் இல.கணேசன், ''மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது அரசுகளின் உறவு சீராக இருக்கும். மக்களுக்கு நல்லது விரைவாக வந்து சேரும்'' என்று சொல்லி இருக்கிறார்.

கூட்டணி குறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் ஓர் கருத்து வெளியாவதும், அதைச் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் மறுப்பதும் அ.தி.மு.க-வில் இப்போது அடிக்கடி நிகழும் செய்தியாகி விட்டது. இதனால், அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல் தொண்டர்கள் குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள். உயர் பொறுப்புகளில் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இந்த குழப்பம் ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா இருக்கும்போது அ.தி.மு.க-வின் அரசியல் நிலைப்பாடு குறித்து இதுபோன்ற குழப்பமே இல்லாமல் அவரது செயல்பாடுகள் தெளிவாக இருக்கும். தொண்டர்களும் அவர் பின்னால் உறுதியாக நின்றார்கள். ரஜினி, கமல் ஆகியோரின் புதிய கட்சிகள் துளிர்விடும் நிலையில், அ.தி.மு.க தொண்டர்களை இழுக்க டி.டி.வி.தினகரன், மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில், அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற குழப்பமான சூழலால் தொண்டர்கள் மிகுந்த மனக்குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். 

அ.தி.மு.க - பி.ஜே.பி. கூட்டணி மலருமா...? இரட்டை இலைக்கு மத்தியில் தாமரை பூக்குமா, இல்லையா..? என்பதை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தான் தெளிவுபடுத்த வேண்டும்.