Published:Updated:

`நான் வாழ்ந்து முடித்தவன்; எதைப் பற்றியும் கவலையில்லை' - தஞ்சையில் பொங்கிய வைகோ

கே.குணசீலன்
`நான் வாழ்ந்து முடித்தவன்; எதைப் பற்றியும் கவலையில்லை' - தஞ்சையில் பொங்கிய வைகோ
`நான் வாழ்ந்து முடித்தவன்; எதைப் பற்றியும் கவலையில்லை' - தஞ்சையில் பொங்கிய வைகோ

`மத்திய அரசுக்குத் துணைபோய், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீராத பழியைத் தேடிக்கொள்ள வேண்டாம்' என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

`நான் வாழ்ந்து முடித்தவன்; எதைப் பற்றியும் கவலையில்லை' - தஞ்சையில் பொங்கிய வைகோ

தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோ கிராஃபர்ஸ் அசோசியேஷன் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தஞ்சை தலைமைத் தபால் நிலையம் முன்பு இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்தில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு ஒருபோதும்
அமைக்காது. அமைக்கப்போவதும் இல்லை. கர்நாடகாவில் நடக்கும் தேர்தலைக் குறிவைத்து, மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்று கூறுவதைவிட, தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற நோகத்தோடு மத்திய அரசும் கர்நாடக அரசும் செயல்படுகிறது. இதனால், பா.ஜ.க அரசு கர்நாடகத் தேர்தலில் வெற்றிபெற்றாலும் தோல்வி அடைந்தாலும், மேலாண்மை வாரியத்தை அமைக்காது. பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர்தான். ஆனால், கொள்கை என்று வரும்போது அதில் நான் உறுதியாக நிற்பேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைய, தங்களை வறுத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கும் உங்களைக் கண்டு பெருமை அடைகிறேன். 

இதுபோல, மாணவர்கள் எழுச்சியுடன் பங்கேற்க வேண்டும். அதற்காகத் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. அமைதியான முறையில், அதே நேரத்தில் மத்திய அரசுக்கு அச்சம் தரும் வகையில் போராட வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிடாமல் செய்ய வேண்டும். தமிழகம் கொதிநிலையில் இருப்பதை மத்திய அரசு உணர வேண்டும். மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தினால், கோடிக்கணக்கில் வருமானம் வரும் என்று கூறுகின்றனர். விவசாயிகளை அழித்துவிட்டு, கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து என்ன லாபம். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, வரும் 26 -ம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு, போலீஸார் அனுமதி மறுத்தால், கோர்ட் அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசுக்குத் துணைபோய், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீராத பழியைத் தேடிக்கொள்ள வேண்டாம்'' என்று எச்சரிக்கை செய்கிறேன். 

என்னைக் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கோடுதான் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. நான் வாழ்ந்து முடித்தவன். எனவே, எதைபற்றியும் கவலைப்படவில்லை. தமிழக மக்களுக்காகப் போராடுவதை ஒருபோதும் கைவிட மாட்டேன். தோழமைக் கட்சிகள் கூடி எடுத்த முடிவின் அடிப்படையில், மனிதச்சங்கிலி போராட்டத்தில் மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என்று எல்லோரும் ஒன்று திரண்டு, மத்திய அரசுக்கு எதிராக எல்லோரும் கரம் கோத்து, அறவழியில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டம் வெற்றிபெறும்” என்றார்.