Published:Updated:

பரபரப்பான கர்நாடகத் தேர்தல் பிரசாரம்: பி.ஜே.பி மேடையில் ரெட்டி சகோதரர்கள்..!

பரபரப்பான கர்நாடகத் தேர்தல் பிரசாரம்: பி.ஜே.பி மேடையில் ரெட்டி சகோதரர்கள்..!
பரபரப்பான கர்நாடகத் தேர்தல் பிரசாரம்: பி.ஜே.பி மேடையில் ரெட்டி சகோதரர்கள்..!

ர்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகளின் பிரசாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பி.ஜே.பி., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. என்றாலும் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி-க்கு இடையேதான் நேரடியான போட்டி காணப்படுகிறது.

இதனிடையே, பி.ஜே.பி. தேர்தல் பிரசார மேடையில் சுரங்க ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ரெட்டி சகோதரர்கள் பங்கேற்றது அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா, கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி நடைபெற்ற பேரணியில் பேசியபோது, சுரங்க முறைகேட்டில் தொடர்புடைய பெல்லாரியைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டியுடன் பி.ஜே.பி-க்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று அறிவித்தார். ஆனால், அமித் ஷாவின் அந்தப் பேச்சுக்கு மாறாக, ஜனார்த்தன ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவரும், அவரின் கூட்டாளியுமான பி. ஶ்ரீராமுலு, சித்ரதுர்கா மாவட்டம் மொலக்கல்முரு தொகுதியில் பி.ஜே.பி. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஶ்ரீராமுலு வேட்புமனுத்தாக்கல் செய்யச் சென்றபோது, ஜனார்த்தன ரெட்டியும் கலந்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அலுவலர் அறைக்குள் வேட்பாளருடன் சென்ற ஐந்து பேரில் ஜனார்த்தன ரெட்டியும் இடம்பெற்றிருந்தார். மேலும் பி.ஜே.பி. முதல்வர் பதவிக்கான வேட்பாளரான பி.எஸ். எடியூரப்பா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ஶ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில், அவர்களுடன் ஒரே மேடையில் ஜனார்த்தன ரெட்டியும் அமர்ந்துள்ள காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதுடன், பத்திரிகைகளில் புகைப்படமாகவும் வெளியாகி மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், எடியூரப்பா மற்றும் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரின் காலில் விழுந்து ஜனார்த்தன ரெட்டி ஆசிபெறுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காலில் விழுந்த ரெட்டியை எடியூரப்பா தட்டிக் கொடுத்துப் பாராட்டும் காட்சிகளும் வேகமாகப் பரவி வருகின்றன.

ஜனார்த்தன ரெட்டியின் சொந்த மாவட்டமான பெல்லாரிக்குள் அவர் நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில், பி.ஜே.பி. மூத்தத் தலைவர்களுடன் அவர் காட்டிவரும் நெருக்கம் வாக்காளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஜனார்த்தன ரெட்டியின் சகோதர்களான சோமசேகர ரெட்டி, கருணாகர ரெட்டி ஆகிய இருவருக்கும் பெல்லாரி மாவட்டத்தில் பி.ஜே.பி. சார்பில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பளித்துள்ளது. 

கருணாகர ரெட்டியுடன், ஜனார்த்தன ரெட்டி தற்போது தொடர்பில் இல்லை என்று கூறப்பட்ட போதிலும், பெல்லாரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வசமுள்ள பல தொகுதிகளைக் கைப்பற்ற பி.ஜே.பி., ரெட்டி சகோதரர்களின் உதவியை நாடியிருப்பதாகவே கூறப்படுகிறது. இதன்மூலம் ரெட்டி சகோதரர்களை அரசியல்ரீதியாக பி.ஜே.பி. ஒதுக்கிவிடவில்லை என்றே தெரிகிறது.

மேலும் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், மத்திய பி.ஜே.பி. அரசு பழைய 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது, நாடு முழுவதும் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் இல்லத் திருமணங்களை நடத்த அல்லாடிக் கொண்டிருந்தன. இந்தியா முழுவதும் மக்கள் தங்களின் அன்றாடத் தேவைக்காக வங்கிகளிலும், ஏ.டி.எம். வாசல்களிலும் வரிசைகட்டி நின்றுகொண்டிருந்தபோது, ஜனார்த்தன ரெட்டி இல்லத் திருமணம் மட்டும் மிகவும் ஆடம்பரமான முறையில் நடந்தேறியது நாட்டு மக்களை முகம்சுளிக்க வைத்தது. 500 கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இந்த திருமணம் பற்றிய ஆடம்பர புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. அந்தத் திருமணத்தில் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட பி.ஜே.பி. பிரபலங்கள் கலந்துகொண்டதும் மிகுந்த ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

மன்னர் காலத்து சேரியட் வண்டிகள், வெளிநாட்டு நடனக் கலைஞர்கள், ஹெலிகாப்டர் தளம், வி.ஐ.பி-க்களுக்காக பல்வேறு ஹோட்டல்களில் 1,500 அறைகள், இரண்டாயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டது என பல்வேறு ஆடம்பர வைபவங்களுடன் ரெட்டி வீட்டுத் திருமணம் நடந்தேறியது. இந்தியா முழுவதும் வங்கிகளிலேயே பணம் இல்லாதபோது, ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணத்தை மட்டும் எவ்வாறு ஆடம்பர விழாவாக, எந்தவிதப் பணப்பிரச்னையும் இல்லாமல் நடத்த முடிந்தது என்ற கேள்வி அப்போது எழுப்பப்பட்டது. 

2008-ம் ஆண்டு எடியூரப்பா தலைமையிலான பி.ஜே.பி. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதற்கு, ரெட்டி சகோதரர்கள் உதவியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோமாக சுரங்கத் தொழில் செய்ததாக ரெட்டி சகோதரர்கள் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியிருந்தது. என்றாலும் தொடர்ந்து பி.ஜே.பி-யினர் ரெட்டி சகோதரர்களுடன் நெருக்கம் காட்டி வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தீவிரப் பிரசாரம் நடைபெறும் நிலையில், ரெட்டி சகோதரர்களுடன் எடியூரப்பா மற்றும் பி.ஜே.பி-யினர் நெருக்கம் காட்டி வருவது, ஏதோ அவர்களுக்குள் பேரம் உறுதியாகி விட்டதையே காட்டுகிறது. 

'ரெட்டி சகோதரர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை' என்று அமித் ஷா சொன்னபோது, அதை மறுத்தார் ஜனார்த்தன ரெட்டி. பி.ஜே.பி-யுடன் எப்போதும் நெருக்கமான தொடர்பு தங்களுக்கு உண்டு என்று அறிவித்தார் அவர்.

கர்நாடக மாநிலத் தேர்தலைப் பொறுத்தவரை, தலித் மக்களின் வாக்கு சதவிகிதம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஏற்படுத்தும் என்று

தெரிகிறது. ரெட்டிக்கு நெருக்கமானவரான ஶ்ரீராமுலுவைப் பொறுத்தவரை, வால்மீகி நாயகர் எனும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராவார். இந்த சமூகத்தினர் பெல்லாரி மட்டுமல்லாது, சித்ரதுர்கா, கடக், கோப்பல், ரெய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தில் உள்ளனர்.

ஶ்ரீராமுலுவைப் பகைத்துக்கொண்டு கர்நாடகத்தில் பி.ஜே.பி. அரசியல் செய்ய முடியாது என்பதாலேயே அவருக்கு நெருக்கமான ரெட்டி சகோதர்களை ஒரே மேடையில் அமர்த்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக பி.ஜே.பி-யின் முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஶ்ரீராமுலுவைப் பொறுத்தவரை, 2011-ம் ஆண்டு பி.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, 2013-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 3 இடங்களில் வெற்றிபெற்றார். தேர்தல் முடிவடைந்து ஓராண்டுக்குப் பின் பி.ஜே.பி-யில் இணைந்தார். தற்போது ஶ்ரீராமுலுவைத் தவிர்த்தால், அவர் கட்சியை உடைக்கக்கூடும் என்று கருதியே அவருக்குப் போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பதுடன், ரெட்டி சகோதரர்களையும் அனுசரித்து அரசியல் செய்கிறது பி.ஜே.பி. என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

எந்தச் சூழ்நிலையை வேண்டுமானாலும் பி.ஜே.பி. தனதாக்கிக் கொள்ளட்டும்; கர்நாடக மாநில மக்கள், தங்களை யார் ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் என்பது இன்னும் மூன்று வாரத்துக்குள் தெரிந்துவிடும்...!