Published:Updated:

``விஜயகாந்த் பாலிட்டிக்ஸ் பேசவில்லை.. பெர்சனல் பேசுகிறார்!" ஸ்டாலின் குறித்த விமர்சனத்துக்கு தி.மு.க பதில்

``விஜயகாந்த் பாலிட்டிக்ஸ் பேசவில்லை.. பெர்சனல் பேசுகிறார்!" ஸ்டாலின் குறித்த விமர்சனத்துக்கு தி.மு.க பதில்
``விஜயகாந்த் பாலிட்டிக்ஸ் பேசவில்லை.. பெர்சனல் பேசுகிறார்!" ஸ்டாலின் குறித்த விமர்சனத்துக்கு தி.மு.க பதில்

``விஜயகாந்த் பாலிட்டிக்ஸ் பேசவில்லை.. பெர்சனல் பேசுகிறார்!" ஸ்டாலின் குறித்த விமர்சனத்துக்கு தி.மு.க பதில்

``இனி ஒருபோதும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது" என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்தப் பேட்டி ஒன்றில் 'காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தி.மு.க தலைவர் கருணாநிதி கூட்டியிருந்தால், முதல் ஆளாக நான் பங்கேற்றிருப்பேன். ஏற்கெனவே, நடந்த அனைத்துக் கட்சி கூட்டங்களனைத்தும் ஸ்டாலினை மையப்படுத்தியே நடைபெற்றன. அதுபோன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு நாங்களும் ஸ்டாலினுடைய புகழையே பாட வேண்டுமா? ஸ்டாலின் என்ன கருணாநிதியா? ஸ்டாலினை எனக்கு எப்போதும் பிடிக்காது. என் மனச்சாட்சி அவரை ஏற்றுக்கொண்டதில்லை.

குறிப்பாக, 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, குறைந்தது 60 தொகுதிகளை தி.மு.க. தர வேண்டும் என எங்கள் கட்சி விரும்பியது. ஆனால், 40 தொகுதிகளை மட்டுமே கொடுக்க தி.மு.க முன்வந்தது. மேலும் அதிகாரப்பகிர்வு என்ற எங்களுடைய நிபந்தனையையும், ஸ்டாலின் ஏற்கவில்லை. அது நடந்திருந்தால் இப்போது நானும், அவரும் அமைச்சர்களாக இருந்திருப்போம். அதனால் இனி ஒருபோதும் ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது" என்று தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் இந்தப் பேட்டி, தமிழக அரசியல் களத்தை உற்று நோக்க வைத்துள்ளது. அவருடைய இந்தக் கருத்து பற்றி தி.மு.க-வில் உள்ள முக்கியத் தலைவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.

தி.மு.க. முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கூறுகையில், "எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் யாருமே பாராட்டிப் பேச மாட்டார்கள். அந்த வகையில் விஜயகாந்தும் அதையே செய்துள்ளார். கலைஞர் இருக்கும்போது, எதிராக ஒரு கூட்டணி அமைத்து 'தி.மு.க-வுக்கு வாக்களிக்காதீர்கள்' என்று முழங்கியவர்தான் விஜயகாந்த். தற்போது, கருணாநிதி இருந்திருந்தால், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருப்பேன் என்று அவர் பேசியிருப்பது வெறும் பிதற்றல். விஜயகாந்தும் அவருடைய கட்சியும் செல்லரித்துப் போன ஒன்று. அப்படிச் செல்லாத அரசியல்வாதியாகியுள்ள விஜயகாந்தின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய பேச்சுக்கு உயிர் கொடுக்கத் தேவையில்லை" என்றார். 

இதுகுறித்து தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி, ``தலைவருக்குப் பிறகு தி.மு.க. எனும் மாபெரும் கட்சியை தளபதியால் மட்டுமே வழி நடத்த முடியும் என்பதை அறிந்து, கட்சித் தொண்டர்கள் அனைவரும் அவரின் பின்னால் அணிவகுத்து, மு.க.ஸ்டாலினை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத்தேர்தலில் ஸ்டாலின் தன்னுடைய செயல் திறனை நிரூபித்துக் காட்டியுள்ளார். முந்தைய சட்டப்பேரவையில் தி.மு.க-வுக்கு 23 எம்.எல்.ஏ-க்கள் இருந்த நிலையில், இப்போது 89 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இந்த அளவு எம்.எல்.ஏ-க்கள் உயர்ந்ததற்கு தளபதியின் கடினமான உழைப்பே காரணம். 

விஜயகாந்தால் அமைச்சராக முடியவில்லை என்பதால், ஸ்டாலின் முதலமைச்சர் ஆக மாட்டார் என அவர் ஆரூடம் கூறுவதை ஏற்க முடியாது. அரசியல்ரீதியாகப் பேசாமல் ஸ்டாலின் குறித்து தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் பேசியுள்ளார். ஸ்டாலினைப் பொறுத்தவரை அனைத்துத்தரப்பு மக்கள் மீதும் அன்பும், அக்கறையும் கொண்டுள்ளார்.  நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக, கடினமான உழைப்பை அவர் விதைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் கடின உழைப்பே முதலமைச்சர் பதவியில் அவரை அமர வைக்கும். கடந்த தேர்தலிலேயே அவர் முதலமைச்சர் ஆகியிருப்பார். பல தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் தோல்வியடைந்ததால், போதிய எண்ணிக்கை இல்லாமல், அது இயலாமல் போய் விட்டது. வரும் தேர்தலில் அதுபோன்ற சிறுபிரச்னைகளை முறியடித்து தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் என்பதை விஜயகாந்துக்கு சொல்லிக் கொள்கிறேன். தே.மு.தி.க. என்ற கட்சியே விரைவில் காணாமல் போய்விடும்; பொறுத்திருந்துப் பாருங்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு