Published:Updated:

அவசரகதியில் ஒரு அவசர சட்டம்...அள்ளித் தெளிக்கும் ப.சிதம்பரம்!

அவசரகதியில் ஒரு அவசர சட்டம்...அள்ளித் தெளிக்கும் ப.சிதம்பரம்!
அவசரகதியில் ஒரு அவசர சட்டம்...அள்ளித் தெளிக்கும் ப.சிதம்பரம்!
அவசரகதியில் ஒரு அவசர சட்டம்...அள்ளித் தெளிக்கும் ப.சிதம்பரம்!

"குப்பையைக் கூடையில் போடு.... பிரச்னையை அமுக்க கமிஷனைப் போடு...!" என்பது  இந்திய ஆளும் வர்க்கம் 60 ஆண்டுகளாக கடைபிடிக்கும் எழுதப்படாத விதி. ஆனால்,  ஆளும் வர்க்கத்தின் இந்த தந்திர விதியை சுக்குநூறாக உடைத்துப்போட்டு விட்டது வர்மா  குழு.

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பையும்  அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியதை அடுத்து, பெண்களுக்கு எதிரான பெண்களுக்கு  எதிரான குற்றங்களைத் தடுக்க சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கை வலுப்  பெற்றது. அதற்கான பரிந்துரைகளை அளிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற முன்னாள்  தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் என்பவரால் அமைக்கப்பட்டது வர்மா  குழு.

இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுமே நீதிபதி வர்மா, எழுப்பிய முதல் கேள்வி,  அடுத்து நாடாளுமன்றம் எப்போது கூடுகிறது என்பதுதான். மத்திய அரசு தரப்பில் பிப்ரவரி  23 ஆம் தேதி கூடுவதாக தகவல் சொல்லப்பட்டதும், அவ்வளவு நாட்கள் கூட எனக்குத்   தேவையில்லை என்று கூறியதுடன், ஒரே மாதத்தில் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டார்.

சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமும் விரிவான கலந்தாய்வு நடத்தி 80 ஆயிரம்  யோசனைகளைப் பெற்று, அவற்றை ஆராய்ந்து முடித்த வர்மா குழு, 200 பக்க  அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது. குழுவின் பரிந்துரைகள் அனைவரின்  பாராட்டுதலுக்கும் உரியதாக அமைந்திருந்தது.

குறிப்பாக நாகரீக சமுதாயத்தில் மரண தண்டனை கூடாது என்று பலர்  வலியுறுத்துவதையே வர்மா குழுவும் தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தது.  அதேபோல், சிறுவர்களுக்கான வயதை 18 ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும்  என்பதையும் குழு நிராகரித்ததுடன், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில்  ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டயையையும் (வாழ்நாள் முழுவதும் சிறையில்  இருக்கும்படி) தனிமைச் சிறையையும் பரிந்துரைத்தது.

அத்துடன் வர்மா குழுவின் பரிந்துரையில், காவல்துறை, சிறப்பு அதிரடிப் படை,  அரசியல்வாதிகளுக்கும் ஆப்பு அடிக்கும் வகையில் சில பரிந்துரைகள் இருந்தன.  அதாவது, பாலியல் புகார்களை பதிவு செய்யாத போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும், பணியில் இருக்கும் போது பாலியல்  புகார்களில் சிக்கும் அதிரடிப் படை வீரர் மற்றும் அவர் இடம் பெற்றுள்ள குழுவின்  தலைவர் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்த வேண்டும்  என்று வர்மா குழுவின் பரிந்துரை குறிப்பிட்டது.

உச்சக்கட்டமாக கிரிமினல் வழக்குகளில் சிக்கி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு  ஆளானவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் வகையில், மக்கள்  பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் வர்மா குழு  பரிந்துரைத்தது.

ஆனால், இவையெல்லாம் நடைமுறைக்கு வந்தால், நாடு உருப்பட்டுவிடும், அது நமக்குப்  பிரச்னையை

அவசரகதியில் ஒரு அவசர சட்டம்...அள்ளித் தெளிக்கும் ப.சிதம்பரம்!

உண்டாக்கிவிடும் என்று மத்திய அரசாங்கத்தை நடத்துபவர்கள்  நினைத்தார்களோ என்னவோ, அவசர சட்டம் என்ற பெயரில் வர்மா குழுவின்  பரிந்துரைகளில் இல்லாத அம்சங்களை உள்ளடக்கி அவசர சட்டம் ஒன்றை இயற்றி,  அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றுவிட்டார்கள்.

அதுவும் நாடாளுமன்றம் தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், இந்த  வேலையை மத்திய அரசு செய்துள்ளது. ஏன் இந்த அவசரச் சட்டம்? வர்மா குழுவின்  பரிந்துரைகள் என்ன ஆனது? எதிர்கட்சிகளின் விவாதத்திற்கு வராமல் அப்படி இந்த  அவசர சட்டத்தை இயற்ற வேண்டிய காரணம் என்ன? என்பது போன்ற பல  கேள்விகளுக்கு பிரதமர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது பற்றி பேச  வேண்டிய சட்டத்துறை அமைச்சரும் வாயே திறக்கவில்லை.

ஆனால், பத்திரிகையாளர்களை எட்டிக்காயாகப் பார்க்கும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,  இந்த விவகாரத்தில் தானாக முன் வந்து விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள  விளக்கத்தில்,  தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டத்தில் வர்மா குழுவின்  பரிந்துரைகள் முற்றிலும் ஏற்கப்படவில்லை என்றாலும், அவரது ஆலோசனைகள் எதுவும்  நிராகரிக்கப்படவும் இல்லை என்று கூறியுள்ளார்.

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சட்டத்தில் கடுமையான விதிகள் இருப்பதாக அரசு  நம்புகிறது. எனவே இந்தச் சட்டம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்  நடைபெறுவதை தடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தன் மீது தனிப்பட்ட முறையில்  சுமத்தப்பட்டுள்ள எந்த குற்றச்சாட்டுகள் பற்றியும் வாயே திறக்காத சிதம்பரம், எதற்காக  இதில் தானாக முன் வந்து விளக்கம் அளிக்கிறார் என்பதே சந்தேகத்திற்குரியதாக  உள்ளது.

அது தவிர அவசரச் சட்டத்தை அமல்படுத்தினாலும் அதற்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல்  தேவை.நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் கூட உள்ள நிலையில், இந்த சட்டத்தை அவையில் முதல் நடவடிக்கையாக வைத்து  நிறைவேற்றலாமே.

ஏனென்றால், இது எதிர்க்கட்சிகள் ஆட்சேபிக்கும் விவகாரம் கூட அல்ல. மேலும், வர்மா  குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இந்திய குற்றவியல் சட்டத்தில் திருத்தம்  செய்வதற்கும் யாரும் தடையாக இருக்கப் போவதும் இல்லை. பிறகு ஏன் இந்த  அவசரம்? என்று கேட்டால் சிதம்பரத்திடம் அதற்குப் பதில் இல்லை.

இது போன்று அவசர கோலத்தில் மத்திய அரசு சட்டங்களை இயற்றி உள்ளது, வர்மா  குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்துவிட்டதையே காட்டுகிறது.

ஆனால் தனது துறை சார்ந்த விஷயமில்லை என்றபோதிலும், மத்திய அமைச்சரவையில் நம்பர் டூ என்கிற கோதாவில், மன்மோகன் அரசின் எல்லா மக்கள் விரோத நடவடிக்கைகளையும் கருத்து சொல்லி நியாப்படுத்துவதுபோன்றே, பாலியல் வன்கொடுமை அவசர சட்ட விஷயத்திலும், வர்மா கமிஷன் பரிந்துரைகள் எதுவும் ஏற்கப்படாமல் இல்லை என்பதுபோன்று இதையும் பூசி மெழுகி நியாயப்படுத்துகிறார் சிதம்பரம் என கொதிக்கிறார்கள் இடதுசாரிகளும், சமூகப்போராளிகளும்!

- ஜோ. ஸ்டாலின்