Published:Updated:

விரிசலைத் தொடங்கி வைத்த ராவணன்!  - கொங்கு லாபியின் சீக்ரெட் மூவ்

விரிசலைத் தொடங்கி வைத்த ராவணன்!  - கொங்கு லாபியின் சீக்ரெட் மூவ்

' விரிசலின் மையப்புள்ளியாக ராவணன் இருக்கிறார். திவாகரனை அவர் சந்தித்துவிட்டுச் சென்ற பிறகுதான், மோதல் முற்றத் தொடங்கியது' என்கின்றனர் மன்னார்குடி உறவுகள். 

விரிசலைத் தொடங்கி வைத்த ராவணன்!  - கொங்கு லாபியின் சீக்ரெட் மூவ்

' விரிசலின் மையப்புள்ளியாக ராவணன் இருக்கிறார். திவாகரனை அவர் சந்தித்துவிட்டுச் சென்ற பிறகுதான், மோதல் முற்றத் தொடங்கியது' என்கின்றனர் மன்னார்குடி உறவுகள். 

Published:Updated:
விரிசலைத் தொடங்கி வைத்த ராவணன்!  - கொங்கு லாபியின் சீக்ரெட் மூவ்

சிகலா குடும்ப மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.  ' விரிசலின் மையப்புள்ளியாக ராவணன் இருக்கிறார். திவாகரனை அவர் சந்தித்துவிட்டுச் சென்ற பிறகுதான், மோதல் முற்றத் தொடங்கியது' என்கின்றனர் மன்னார்குடி உறவுகள். 

'எங்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிறார் திவாகரன்' என தினகரன் ஆதரவாளரான வெற்றிவேலின் ஃபேஸ்புக் பதிவு, சசிகலா குடும்ப மோதலை வீதிக்குக் கொண்டு வந்தது. நேற்று பேட்டியளித்த திவாகரன், 'எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவு' எனத் தெரிவித்தது, மன்னார்குடி வட்டாரத்தை அதிர வைத்தது. இதற்கு இன்று பதில் கொடுத்த தினகரன், 'திவாகரன், எடப்பாடிக்கு ஆதரவாக பேசி வருவது, என்னைத் தாக்கி அவதூறாக விமர்சிப்பதன்மூலம் அவர் உடல் நலம் குன்றி உளறிக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. இதனை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம்' என்றார். அதேநேரம், திவாகரன் மகன் ஜெயானந்த், 'என் தந்தைக்குப் பதவி ஆசை இருந்திருந்தால் தினகரனுடன் ஒரு வருடத்துக்கு முன்பு சேர்ந்தே இருக்க மாட்டார். வந்தவரை அரவணைக்காமல் இருந்தால்கூட பரவாயில்லை, திட்டமிட்டுப் புறக்கணித்தால் அவர் எப்படி பொறுத்திருப்பார். சசிகலாமீது உள்ள களங்கத்தை தினகரன்தான் துடைத்தார் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சசிகலா மத்திய அரசாங்கத்துக்குப் பணியாமல் சிறை சென்ற அனுதாபம், சசிகலாவின் பக்கபலம் மற்றும் ஜெயலலிதா சசிகலாவை எடுக்கச் சொன்ன வீடியோ. இவை மூன்றும்தான் தினகரனை கரைசேர்த்தன. ஆர்.கே.நகரில் வென்ற துணிச்சலில் வெற்றிவேல் பேசுவது எதிர்காலத்தில் பாதகமாகிவிடும்’ என ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், குடும்ப மோதலின் மையப்புள்ளியாக ராவணனைச் சுட்டிக் காட்டுகின்றனர் மன்னார்குடி சொந்தங்கள். 

" சசிகலாவை மீண்டும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக்குவேன் என்ற முழக்கத்தோடு களமிறங்கியிருக்கிறார் ராவணன். அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் திவாகரனைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகே, விவகாரம் விஸ்வரூபமெடுத்தது" என விவரித்த மன்னார்குடியின் முக்கிய உறவினர் ஒருவர், ``கொங்கு மண்டல பொறுப்பாளராக ராவணன் இருந்த காலத்தில்தான், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்களுக்குப் பெரிய பொறுப்புகள் தேடி வந்தன. இவர்களை வளர்த்துவிட்டது ராவணன்தான். இன்றளவும் கொங்கு லாபியைக் கையில் வைத்திருக்கிறார் ராவணன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். இதையடுத்து வந்த நாள்களில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்தது. இந்த சம்பவத்தால் கொதித்த ராவணன், ' எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் நம் கையில் இருக்கும்போதே, டெல்லியில் அணிவகுப்பை நடத்திக் காட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் நம்முடைய வலிமையை மத்திய அரசு உணர்ந்திருக்கும். அப்படிச் செய்யத் தவறியதன் விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்' எனப் பேசினார். 

இதன்பின்னர், சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்கப் பத்து முறை முயற்சி செய்தார். இறுதியாக, அவரைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. இந்தச் சந்திப்பில் சில விஷயங்களைச் சுட்டிக் காட்டினார். அவருடைய முயற்சிகளுக்கு சசிகலாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார். இதன் ஒரு பகுதியாகக் கடந்த வாரம் திவாகரனை சந்தித்துப் பேசினார் ராவணன். இந்தச் சந்திப்பில், சசிகலாவை இருட்டடிப்பு செய்துவிட்டு, தினகரன் செயல்படுவது குறித்துப் பேசியிருக்கிறார். குடும்ப உறவுகளை முற்றாகப் புறம் தள்ளுவதோடு மட்டுமல்லாமல், சசிகலாவை ஓரம்கட்டிவிட்டு அமைப்புக் கூட்டம் நடப்பது பற்றியும் பேசியிருக்கிறார். இதையடுத்து, தன்னைப் பற்றி தினகரன் தரப்பினர் தவறாகப் பேசி வருவது குறித்தும் வேதனைப்பட்டிருக்கிறார் திவாகரன். இந்த சந்திப்புக்குப் பிறகுதான், நேரடியான மோதலைத் தொடங்கிவைத்தார் திவாகரன்" என்றார் விரிவாக. 

`` இன்னும் சில நாள்களில் 18 தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களின் வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குச் சிக்கலை உண்டாக்கும் வகையில் தீர்ப்பு வரலாம் என்பதால், தினகரன் தரப்பில் உள்ளவர்களை வளைக்கும் முயற்சியில் கொங்கு மண்டல லாபி இறங்கியது. 'இந்த ஆட்சிக்கு எந்தவிதச் சிக்கலும் வரக் கூடாது' என்ற அடிப்படையில் சில ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கெனவே, கொங்கு மண்டலத்தில் கோலோச்சிய ராவணனையே, இந்த ஆபரேஷனுக்குத் தலைமை தாங்க வைத்தனர். இந்த முயற்சி குறித்துப் பேசிய திவாகரன் தரப்பினர், 'எங்கள் பக்கம் 30 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். அவர்கள் உங்களைத்தான் ஆதரிப்பார்கள்' என ஆட்சித் தலைமைக்கு நம்பிக்கை அளித்துள்ளனர்.

'மன்னார்குடி குடும்பத்தின் தொழில்களுக்கு எந்தவிதச் சிக்கல்களும் வந்துவிடக் கூடாது' என்ற அடிப்படையிலும் சில பேச்சுவார்த்தைகள் நடந்தன. அனைத்தும் சுமுகமாக முடிந்துவிட்டன. 'தினகரன் நடத்தும் கட்சியில் அவர் குடும்பத்தினர் மட்டும்தான் இருப்பார்கள்' என அதை ஒரு லெட்டர் பேடு கட்சி என்ற அடிப்படையில் திவாகரன் விமர்சித்ததும் இதன் எதிரொலியாகத்தான். அரசியல்ரீதியாக தினகரனின் செல்வாக்கை உடைக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த முயற்சிக்குத் திரைமறைவில் இருந்து, லகானை செலுத்திக் கொண்டிருக்கிறார் ராவணன். தினகரனுக்கும் ராவணனுக்கும் எந்தக்காலத்திலும் செட் ஆகாது. அரசியல்ரீதியாக ராவணனின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் திவாகரன். அந்த அடிப்படையில் ஆட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் ராவணன்!" என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர்.