Published:Updated:

"மௌனம் கலைத்தாலும்....!" மோடியைத் தொடர்ந்து கண்டிக்கும் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ்

"மௌனம் கலைத்தாலும்....!" மோடியைத் தொடர்ந்து கண்டிக்கும் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ்
"மௌனம் கலைத்தாலும்....!" மோடியைத் தொடர்ந்து கண்டிக்கும் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ்

நாட்டில் நடைபெற்ற பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கு மெளனம் காத்த பிரதமர் மோடிக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்த வெளிநாட்டினர் குறித்த கட்டுரை.

ம்மு - காஷ்மீர், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் சமீபகாலமாக நடைபெற்ற பாலியல் சம்பவங்கள் பற்றி, தொடக்கத்தில் பிரதமர் மோடி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் கடைப்பிடித்தார். பின்னர் ஸ்வீடன் உள்பட மூன்று நாடுகளுக்குச் சென்ற பிரதமர், பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார். மோடியின் மௌனம், பின்னர் தாமதமான கருத்துக்கு உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

“வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்வது இந்தியர்களான நம் அனைவரின் கடமையாகும். புதிய இந்தியாவை உருவாக்குவதிலும், வளர்ச்சியிலும் சரிநிகர் சமமானவர்கள் பெண்கள். அவர்களுக்கு வலிமையும், சக்தியும் கிடைக்க வேண்டும். பெண்கள் தன்னை மட்டும் முன்னேற்றிக்கொள்ளாமல்  இந்த நாட்டையும், சமூகத்தையும் புதிய கோணத்துக்கு முன்னேற்றும் திறன் படைத்தவர்கள். மகளிர் மேம்பாடு என்ற நிலையில் இருந்து, மகளிர் தலைமையிலான வளர்ச்சி என்ற பாதையை நோக்கி இந்தியா செல்கிறது" என்று பிரதமர் மோடி, கடந்த பிப்ரவரி மாதம் வானொலியில் பிரதமர் ஆற்றிய 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். 

“நிச்சயம் நீதி கிடைக்கும்!" 

பிரதமரின் இந்த உரை நிகழ்த்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்புணர்வும், காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவமும் இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதுபோன்ற பாலியல் சம்பவங்களைக் கண்டித்து, நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தலைநகர் டெல்லியில் மெழுகுவத்தி ஏந்திப் பேரணி நடத்தியதுடன், “பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார். ஆனாலும், இந்த விஷயத்தில் தொடக்கத்தில் மெளனமாக இருந்த பிரதமர் மோடி, “தவறு செய்தவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது; முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவின் மகள்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும் என்று உறுதி கூறுகிறேன். இந்தச் சமூகம், பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவதற்கு எதிராகவும், பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். இந்த மாற்றம், நம் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும்" என்று சூசகமாகப் பேசியிருந்தார். 

`நியூயார்க் டைம்ஸ்' விமர்சனம்!

பிரதமரின் மெளனம் குறித்தும், பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் பி.ஜே.பி-யினருக்குத் தொடர்பு இருப்பதை வெளிக்காட்டாமல் அவர் பேசிய பொதுவான கருத்து குறித்தும் `நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக அந்த இதழ் தலையங்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடி எந்தவொரு சம்பவத்திலும் உடனுக்குடன் ட்விட் செய்து, தன்னைத்தானே புத்திசாலியானவர் எனக் காட்டிக்கொள்ளும் மனிதர். அவருடைய கட்சியான பி.ஜே.பி-யின் அடிப்படையாக இருக்கும் தேசியவாதிகள் மற்றும் மதவாத சக்திகளால், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆபத்தை எதிர்கொள்ளும்போது, அந்த விஷயங்கள் பற்றிப் பேசுவதற்கு, அவர் பேச்சை இழந்துவிடுகிறார். ஜம்மு - காஷ்மீர் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில் குழந்தைக்கு நீதி வேண்டி ஏராளமான இந்தியர்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் பி.ஜே.பி-யினருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தும், பிரதமர் மோடி பூடகமாகவே பேசினார். பி.ஜே.பி-யினர் சம்பந்தப்பட்ட பிற வழக்குகளிலும் மோடி அமைதியாகவே இருக்கிறார்" என்று தொடர்ந்து  செய்தி வெளியிட்டுக்கொண்டு இருக்கிறது.

கிறிஸ்டியன் லகார்டே கண்டனம்!

அதேபோல், சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியன் லகார்டேவும், குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்புணர்வு குறித்து பிரதமர் மோடிக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் என்ன நடக்கிறது? காஷ்மீர் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து, கொல்லப்பட்ட சம்பவம், இந்தியாவில் பெண்கள் நலனுக்கானப் பெரும் புரட்சியை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் பிரதமர் மோடி முதல் அனைத்து அதிகாரிகளும் பெண்கள், குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துச் செயல்படுவார்கள் என நம்புகிறேன். இப்போதுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம்" என்று அதில் தெரிவித்திருந்தார். 

பிரதமர் மோடிக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வலுக்கும் நிலையில், அதை மறுத்துப் பேசும் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள், “ஒருநாடு வளம்பெற வேண்டுமானால், அங்குள்ள பெண்கள் சுதந்திரமாகவும், கல்வியறிவோடும் இருக்க வேண்டும் என்பதுதான் பிரதமரின் எண்ணம். அதற்காக, பெண்களுக்கான பல சிறப்புத் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். அவருடைய சிந்தனைகளெல்லாம் மக்கள் மீதும் நாட்டின் வளர்ச்சியின் மீதும் இருக்கிறது. மோடியின் ஆட்சியில் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மக்களும் ஒன்றே. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் உயர வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு'' என்கிறார்கள்.

ஆனால், பெண்கள் அமைப்பினரோ,  “மோடியின் ஆட்சியில் நாட்டுக்கே பாதுகாப்பு இல்லாதபோது, நாட்டில் உள்ள பெண்கள் பாதுகாப்போடு இருந்துவிட முடியுமா? நம் நாட்டில் பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே செல்கிறது. இறப்பு விகிதமோ கூடிக்கொண்டே இருக்கிறது. இதுகுறித்து ஒருமுறைகூட இந்த அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இப்போதும் பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில் பால்ய விவாஹம் நடக்கிறது. பெண் குழந்தைகளின் சேமிப்புக்காக முன்னெடுக்கும் நடவடிக்கையைக் கொஞ்சமேனும் அவர்களின் கல்விக்காக மாற்றியமைத்திருக்கலாம். மதத்தை முன்னிறுத்தும் எந்த ஆட்சியிலும் பெண்ணுரிமை பின்னுக்குத் தள்ளப்படும்'' என்கின்றனர். 

மத்திய அரசின் உறுதிப்பாடு!

இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்தில் பேசிய பிரதமர் மோடி, “மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி அரசு, மக்களின் குரலை அறிந்து அதற்கேற்பச் செயல்படுகிறது. அதன்படி, இந்த மிருகத்தனமான செயலுக்கு (பாலியல் வன்புணர்வுக்கு) முடிவுகட்ட மரண தண்டனை அளிக்கும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இது, மத்திய அரசின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. பொதுவாக, பெற்றோர் தங்களது மகள்கள் மீது மிகவும் விழிப்புடன் இருப்பார்கள். அதே சமயத்தில், அவர்கள் தங்கள் மகன்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். அவர்கள் வழிதவறிச் செல்லும்போது, தடுத்து நிறுத்த வேண்டும். இதன்மூலம், கெட்ட குணங்களை முளையிலேயே கிள்ளி எறிய முடியும். தங்கள் மகன்களைப் பொறுப்பானவர்களாக ஆக்க வேண்டும். பெண்களை மதிக்கும் உணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், நமது நாட்டில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலை உருவாகும். இந்த நோக்கத்துக்காக ஒரு சமூக இயக்கம் தொடங்கப்பட வேண்டும்'' என்றார். 

இனிமேலாவது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது நடைபெறும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல்ரீதியான துன்புறுத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்...

அடுத்த கட்டுரைக்கு