Published:Updated:

`விசாரணைக்கு நிர்மலா தேவி ஒத்துழைத்தார்' - சந்தானம் பேட்டி

`விசாரணைக்கு நிர்மலா தேவி ஒத்துழைத்தார்' - சந்தானம் பேட்டி
`விசாரணைக்கு நிர்மலா தேவி ஒத்துழைத்தார்' - சந்தானம் பேட்டி

`விசாரணைக்கு நிர்மலா தேவி ஒத்துழைத்தார்' - சந்தானம் பேட்டி

`சிறையில் 4 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் நிர்மலா தேவி நல்ல ஒத்துழைப்பு அளித்தார். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்படும்’ என்று விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகூறி தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவியை காவல்துறையினர் கைது செய்தனர். ஒரு பக்கம் தமிழக அரசு நியமித்த சி.பி.சி.ஐ.டி விசாரணை, மறுபக்கம் ஆளுநர் அமைத்த சந்தானம் விசாரணைக் குழு தனித்தனியே நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மதியம் சாத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நிர்மலாதேவியை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சந்தானம் 2-ம் கட்ட விசாரணை தொடர்ந்து வருகிறார். அதன்படி நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த இன்று  காலை 9.20க்கு சிறைக்குள் சென்றார். சிறையை விட்டு வெளியேவரும் சந்தானம் இதுதொடர்பாக தகவல் கொடுக்கலாம் என்று பத்திரிகையாளர்கள் சிறையின் வெளியே காத்துக்கிடந்தனர். நிர்மலா தேவியிடம் விசாரணைக்குப் பிறகு சந்தானம் வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இன்று காலை முதல் தற்போது வரை சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் நிர்மலா தேவி நல்ல ஒத்துழைப்பு அளித்தார். சிறை கண்காணிப்பாளர் அலுவலக அறையில் நிர்மலா தேவியை விசாரித்தேன். மீண்டும் இன்று மாலை 3 மணிக்கு நிர்மலா தேவியிடம் இரண்டாம் கட்ட  விசாரணை தொடங்கும்'' என்று தெரிவித்தார்.

இதனிடையே, மாணவிகளைத் தவறாக வழிநடத்த நிர்மலா தேவியைத் தூண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த சாத்தூர் நீதிமன்ற நீதிபதி கீதா, அவரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதேநேரம், சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிந்து கருப்பசாமி சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அவரிடம் விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு