Published:Updated:

' அத்தனைக்கும் காரணம் அந்த அதிகாரிதான்!'  - சேப்பாக்கம் தாக்குதலை விவரிக்கும் களஞ்சியம்

' அத்தனைக்கும் காரணம் அந்த அதிகாரிதான்!'  - சேப்பாக்கம் தாக்குதலை விவரிக்கும் களஞ்சியம்
' அத்தனைக்கும் காரணம் அந்த அதிகாரிதான்!'  - சேப்பாக்கம் தாக்குதலை விவரிக்கும் களஞ்சியம்

அந்த நபர் போலீஸாரை அடித்ததை நாங்கள் யாருமே நியாயப்படுத்தவில்லை. அது பெரிய தவறு. சீமான் உள்ளிட்ட நாங்கள் எல்லோரும் அதற்கு வருத்தம் தெரிவித்தோம். அது நடக்கக்கூடாத ஒன்று.  ஆனால், அதனால்தான் தடியடி நடந்தது என்பது உண்மையல்ல என்கிறார் இயக்குநர் களஞ்சியம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் முற்றுகைப் போராட்டத்தில் போலீஸ் தடியடிக்கு ஆளானார் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவரும், இயக்குனருமான மு.களஞ்சியம். ' என் மீது தடியடி நடத்தியவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறேன்' எனக் கொதிக்கிறார் களஞ்சியம். 

' சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக் கூடாது' என்ற கோரிக்கையோடு இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், களஞ்சியம், பாடலாசிரியர் வைரமுத்து உள்பட திரையுலகப் பிரபலங்கள் களத்தில் குதித்தனர். கடந்த ஏப்ரல் 10ம் தேதி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸார் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் விளைவாக, போராட்டக் குழுவினர் மீது தடியடியை நடத்தினர் போலீஸார். இந்தத் தாக்குதலில் இயக்குநர் களஞ்சியமும் அவருடைய ஆதரவாளர்களும் கடுமையாகக் காயம் அடைந்தனர். பத்து நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு வளசரவாக்கத்தில் உள்ள வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார் களஞ்சியம். 

அவரிடம் பேசினோம். 
 
" காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடந்த அறவழிப்போராட்டமும் சரி, அங்கு நடந்த தடியடியும் சரி என்னுடைய வாழ்க்கையில் எப்போதுமே மறக்க முடியாது. நல்ல விஷயத்துக்காக நடந்த இந்தப் போராட்டத்தை இருட்டடிப்பு செய்யும் வேலைகள் நடந்தன. இந்தளவுக்கான இருட்டடிப்பு எமர்ஜென்சி காலத்தில்கூட நடந்திருக்காது. போலீஸ் தடியடி, போராட்டம் நடத்தியவர்கள் வன்முறை என்றளவிலேயே செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், என்ன நடந்தது என்பதை வெளியே கொண்டு வரவில்லை. புலனாய்வு என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே போய்விட்டது" என ஆதங்கப்பட்டவர், " தடியடி சம்பவத்திற்கு பிறகு கைது செய்யப்பட்ட தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டோம். சென்னை எழும்பூர் ராஜரத்தின ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டோம். அது திறந்தவெளி அரங்கம்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா, பெ.மணியரசன், சீமான், அமீர், வெற்றிமாறன், வ.கௌதமன், தனியரசு,தமீம் அன்ஸாரி உள்ளிட்ட பலரும் அமர்ந்து கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் எனது இடது பக்க மார்புப் பகுதியில் வலி அதிகமாகத் தொடங்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் மேலும் வலியைக் கூட்டியது. சரியாகப் பேச முடியவில்லை. உடனே அங்கிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை நிர்வாகி மருத்துவர் சிவக்குமாரிடம் சொன்னேன். என்னை சோதித்துப் பார்த்த அவர், ' இது சிக்கலான விஷயம், உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்' என எச்சரித்து அனுப்பி வைத்தார். மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகு, இடது பக்க விலா பகுதி, இடது தோள்பட்டையின் கீழ்பகுதியில் எல்லாம் வலுவான உள்காயம், வலது தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு’ என்றனர் மருத்துவர்கள். பத்து நாள்களுக்கும் மேலாக வலியிலும் வேதனையிலும் துடித்து, மருத்துவர்களின் பேருதவியால் சற்று மீண்டிருக்கின்றேன்' என்றவரிடம், 

‘ தடியடிக்குக் காரணமே, போலீஸாரை சிலர் அடித்ததுதானே?' என்றோம்.

“ஆமாம். அது தொடர்பாகத்தான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறேன். அந்த நபர் போலீஸாரை அடித்ததை நாங்கள் யாருமே நியாயப்படுத்தவில்லை. அது பெரிய தவறு. சீமான் உள்ளிட்ட நாங்கள் எல்லோரும் அதற்கு வருத்தம் தெரிவித்தோம். அது நடக்கக்கூடாத ஒன்று.  ஆனால், அதனால்தான் தடியடி நடந்தது என்பது உண்மையல்ல. அதற்கு முன்பாகவே என் மீதும் என்னைச் சுற்றியிருந்த தம்பிகள் மீதும் தடியடி தொடங்கிவிட்டது. அதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். சென்னை மெரினா கடற்கறையில் காவிரி மேலாண்மை வாரியம் கேட்டு மாணவர்கள் சார்பில் போராட்டம் நடந்தது. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நானும் அங்கே சென்று கலந்து கொண்டேன். அப்போது அங்கே வந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், 'ஏய்…நீ யாருய்யா. சினிமா ஆளுதானே. உனக்கு இங்க என்ன வேலை. இது ஸ்டூடண்ட் நடத்துற போராட்டம்தானே. ஒழுங்கா போயிடு. தேவையில்லாம நிக்காதே' என மட்டமான தொனியில் பேசினார். நான் ஒரு கட்சியின் தலைவர், ஓரளவு மக்கள்  அறிந்த இயக்குனர். மக்கள் நலப்போராட்டங்கள் பலவற்றிலும் கலந்து கொண்டிருக்கின்றேன். இதுவரை எந்த வன்முறையும் நடத்தியதில்லை. நான் வன்முறையாளனும் இல்லை. நூறு பிள்ளைகளுக்கு மேல் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றேன். இப்படியான என்னை அந்த அதிகாரி பேசிய முறை வேதனையைத் தந்தது. குடித்துவிட்டு தெருவில் அலம்பல் செய்துகொண்டிருக்கும் ஒருவரை விரட்டுவதைப்போல் அந்த அதிகாரி என்னிடம் நடந்து கொண்டார். 

' இதே பிரபல இயக்குனர்கள் என்றால் இவ்வளவு அலட்சியம் வருமா?' என அவரிடம் கேட்டேன். அது வாக்குவாதமாக மாறியது. இந்தநேரத்தில் அந்த அதிகாரி, மேலும் தரக்குறைவாக நடந்து கொண்டார். சரி, நம்மால் பிரச்னை வரக்கூடாது என நானே அங்கிருந்து கிளம்பிவிட்டேன். இதற்கு அடுத்துத்தான், அண்ணா சாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் நடந்தது. அதற்கு, முன்பாக சீமான் உட்பட பல தலைவர்களிடமும் அதிகாரிகள் பேசினார்கள். என்னிடமும்கூட ‘நீங்கள் பிரச்சனை ஏதும் செய்யவில்லை என்றால், எங்களால் எந்த அசம்பாவிதமும் நடக்காது. முழு ஒத்துழைப்பை தருகின்றோம்’ என்ற உத்தரவாதத்தை கொடுத்தோம். அவர்களும், ' நீங்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பது என்றால் நாங்கள் ஆர்ப்பாட்டம் முடியும்வரை, குறிப்பிட்ட நேரம் வரை அனுமதிக்கின்றோம். எங்களால் எந்த பிரச்சனையும் இருக்காது' என்றார்கள். எல்லாமும் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. போராட்டக்காரர்களுக்கான தடுப்பரண் அண்ணாசாலையிலேயே இருந்தது. அதற்கு முன்பு வந்திருந்த பல அமைப்பினரை அங்கேயே தடுத்து நிறுத்திக் கைது செய்து கொண்டிருந்தார்கள். பாரதிராஜா உள்ளிட்ட கலைஞர்களும் நாம் தமிழர் கட்சி மற்றும் எனது கட்சி தோழர்களும் பெரும் திரளாக வந்து சேர அண்ணாசாலை தடுப்பரணைத் தாண்டி திருவல்லிக்கேணி காவல் நிலையம் வரையில் திரளான கூட்டம் வந்துவிட்டது. 

அந்த இடத்தில், அதிவிரைவு அதிரடிப் படையினர் தடுப்பரண் போன்று, கயிறுகளை பிடித்துக்கொண்டிருந்தார்கள். அது தவிர ஏராளமான காவல்துறையினர் வேறு நின்றுகொண்டிருந்தார்கள். நான் முன்னால் கோஷமிட்டபடி இருந்தேன். அப்போதுதான், அந்த காவல்துறை உயர் அதிகாரி என்னை பார்த்தார். முன்பு மெரினா கடற்கறையில் தகாத முறையில் பேசினாரே, அவர்தான் அந்த இடத்திற்கு பொறுப்பாளராக இருந்தார். சற்று நேரத்தில் எல்லாம் தடியடி தொடங்கிவிட்டது. கண்மூடித்தனமான தடியடி. அப்போது தான் ஈரோட்டைச் சேர்ந்த என் கட்சியின் தம்பி ரமேஷ் என் மீது வந்து விழுந்து, எனக்கு விழுந்த அடிகளை எல்லாம் அவர் வாங்கிக் கொண்டார். ரமேசின் இடது பக்க விலா எலும்பு உடைந்து நுரையீரலில் குத்த, பலூன் போன்ற நுரையீரல் அப்படியே சுறுங்கி, மூச்சுத் தினறி விழுந்துவிட்டார். அவருக்குத்தான் பலத்த காயம். அவரது இடது பக்க விலாவில் ஓட்டை போட்டு நீண்ட குழாயை செருகி, ரத்தைத்தை எல்லாம் வெளியே எடுத்து, எப்படியோ பிழைத்திருக்கிறார். இந்தஇடத்தில் மருத்துவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். நான் தடியடி நடந்த இடத்திற்கு வருகிறேன். 

அந்த அதிகாரியின் உத்தரவைக் கேட்ட காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கிவிட்டார்கள். பலர் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிவந்து சீமானிடம் கதறினார்கள். சிலரை போலீஸ் வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு ஓடினார்கள். பல பெண்களுக்கு ரத்தக் காயம். அந்த சமயத்தில்தான் சீமான் சற்று முன்னே வந்து கலவர நிலையை சாந்தப்படுத்தும்விதமாக தள்ளுமுள்ளில் இருந்த தம்பிகளை தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினார். அப்போதுதான், அங்கேயிருந்த ஓர் இளைஞர் அந்தக் காவலரை அடிக்கும் சம்பவமும் நடந்தது. காவலரை தாக்கிய சம்பவத்தை யாருமே நியாயப்படுத்தவில்லை. ஆனால் அப்படியான சூழலுக்கு காவல்துறையின் சில அதிகாரிகள்தான் வித்திட்டார்கள். நாங்கள் யாருமே வன்முறையாளர்கள் அல்ல. யாருக்கும் பாதிப்பில்லாத அறவழிப்போராட்டத்தை தான் இதுவரையில் நடத்தி வந்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு பார்த்தால் நாம் தமிழர் கட்சி ஏதோ வன்முறை கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சி தோழர்களையும் கைது செய்கிறார்கள். ஏதோ ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டு இப்படி நகர்கிறார்கள். அந்த ‘மர்மம்’தான் என்ன என்று தெரியவேண்டும்" என்றவர், 

" எனவேதான், இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்போகிறேன். சாமானிய மக்களின் ஒரே நம்பிக்கை நீதிமன்றங்கள்தான். அதில், அந்த காவல் அதிகாரியை விசாரிக்கக் கோரிக்கை விடுக்க இருக்கிறேன். அன்றைக்கு அங்கிருந்த உளவுத் துறை போலீஸார் வீடியோ எடுத்துள்ளனர். அதையெல்லாம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். யார் மூலமாக அந்த கலவரம் தொடங்கியது. எதற்காக தடியடி நடத்த தொடங்கினார்கள் என்பதை எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும். ஓர் அதிகாரியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பால் அந்த தடியடி நடந்ததா.. அல்லது வேறு காரணங்களுக்காக, சில கட்சிகளை, தலைவர்களை வன்முறையாளர்கள் என முத்திரை குத்த திட்டமிட்டு அப்படி  நடந்ததா என்ற உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். ‘நாங்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டித்தான் குரல் கொடுக்கின்றோம்” என்று கூறும் தமிழக அரசுதான், அதே கோரிக்கைக்காகப் போராடிய எங்கள் மீது மோசமான ஒரு தடியடியை நடந்தியது.

இதற்கு சட்டப்போராட்டமே தீர்வைத் தரும். உச்ச நீதிமன்றம் என நீண்டாலும் பரவாயில்லை. இதை விடுவதாக இல்லை. அந்த அதிகாரிகளை நீதிமன்றத்தில் நிறுத்துவேன். எதற்காக அந்த தடியடி நடத்தபட்டது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன். விடப்போவதில்லை. அதேநேரம், சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் என்னைச் சந்திக்க வருவார் என்று சற்றும் எதிர்பாக்கவில்லை. சென்னை காவல்துறை வரலாற்றில் இதுவரை அப்படி நடந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அடிபட்ட காவலர்களைத்தான் அதிகாரிகள் சந்திக்கச் செல்வார்கள். முதன்முறையாக பாதிக்கப்பட்ட என்னையும் ரமேஷையும் சந்திக்க வந்திருந்தார். அது, அவருக்குள் இருந்த மனிதநேயத்தைக் காட்டியது. நடந்த சம்பவத்தை அவரிடம் விளக்கினேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டவர், ' நான் அலுவல்ரீதியாக வரவில்லை. தனிப்பட்ட முறையில் தான் சந்திக்க வந்திருக்கிறேன். உங்கள் தரப்பில் ஒரு நியாயம் இருப்பதைப் போன்று, போலீஸ் தரப்புக்கும் ஒரு நியாயம் இருக்கும்' எனக் கூறிவிட்டு என்னை ஆறுதல்படுத்திவிட்டுச் சென்றார்" என விவரித்து முடித்தார் இயக்குநர் களஞ்சியம். 
 

அடுத்த கட்டுரைக்கு