Published:Updated:

ஆள்வது பா.ஜ.க-வா, சுப்ரீம் கோர்ட்டா?

ஆள்வது பா.ஜ.க-வா, சுப்ரீம் கோர்ட்டா?
பிரீமியம் ஸ்டோரி
ஆள்வது பா.ஜ.க-வா, சுப்ரீம் கோர்ட்டா?

ப.திருமாவேலன், படம்: க.பாலாஜி

ஆள்வது பா.ஜ.க-வா, சுப்ரீம் கோர்ட்டா?

ப.திருமாவேலன், படம்: க.பாலாஜி

Published:Updated:
ஆள்வது பா.ஜ.க-வா, சுப்ரீம் கோர்ட்டா?
பிரீமியம் ஸ்டோரி
ஆள்வது பா.ஜ.க-வா, சுப்ரீம் கோர்ட்டா?
ஆள்வது பா.ஜ.க-வா, சுப்ரீம் கோர்ட்டா?

காவிரி கைவிரித்துவிட்டால், நெல், புல் ஆகிவிடும்; வாழை, தலை சாய்ந்துவிடும்; தென்னை, தன்வினை என வருந்தும்; மா, ‘அம்மா' எனக் கத்தும்; கரும்பு, வெறுப்பு அடைந்துவிடும்; மஞ்சள், வஞ்சிக்கப்பட்டதாக வேதனைப்படும். பல்வேறு ஆறுகள் ஓடியதால், திருமேனி செழித்த தமிழ்நாட்டின் உண்மை நிலவரம் இதுதான்.

ஜூன் 12-ம் நாள் திறக்கப்பட்டிருக்க வேண்டும் மேட்டூர் அணை. மூன்று மாதங்கள் கடந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ‘கனத்த இதயத்துடன்' கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ள 15 டி.எம்.சி தண்ணீரை வைத்து சுமார் 25 லட்சம் ஏக்கர் பரப்புப் பாசனம் பெற வேண்டுமானால், தமிழ்நாட்டு விவசாயிகளின் கையில் மந்திரக்கோல் இருந்தால் மட்டும்தான் சாத்தியம். உரக்கக் கத்துவதற்கு தொண்டைக் குழியிலும், உணர்ச்சிவசப்பட்டு அழுவதற்கு கண்ணுக்குழியிலும்கூட நீர் இல்லாமல் வறண்டுபோய்விட்ட விவசாயிக்கு, மந்திரக்கோல் எங்கு இருந்து கிடைக்கும்?

மைசூர் மன்னராட்சிக்கும் - அன்றைய சென்னை ராஜதானி பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி (1924) தமிழ்நாட்டுக்குத் தரவேண்டியது 576.68 டி.எம்.சி தண்ணீர். இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில், 389 டி.எம்.சி-யாக அது குறைக்கப்பட்டது. காவிரி ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, அதை 205 டி.எம்.சி ஆக்கியது. இறுதி அறிக்கை 192 டி.எம்.சி-யாகக் குறைத்தது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வைத்துள்ள கோரிக்கை 50 டி.எம்.சி தண்ணீரையாவது விடுங்கள் என்பது. உச்சத்தில் உட்கார்ந்தபடி நீதிபதிகள் போட்ட உத்தரவு 15 டி.எம்.சி. இதைத்தான் கனத்த இதயத்துடன், திறந்துவிட்டிருக்கிறார் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா. ‘இங்கே எங்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லை என்கிறபோது, தமிழ்நாட்டு விவசாயத்துக்கு எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும்? உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, சீராய்வு மனு போடப்போகிறோம்' என்றும் சித்தராமையா சொல்லியிருக்கிறார். உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்காவிட்டால் நீதிமன்றக் கண்டனம் வந்துவிடும் என்பதால் திறந்துவிட்டுவிட்டார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக, இப்படி தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிராக கன்னட இனவெறியைத் தூண்டும் கும்பல் நடத்தும் ‘பந்த்', சித்தராமையா அரசின் ஆசீர்வாதத்துடன்தான் நடக்கிறது.

ஆள்வது பா.ஜ.க-வா, சுப்ரீம் கோர்ட்டா?

`9-ம் தேதி பந்த்' என, கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வட்டாள் நாகராஜ் அறிவிக்கிறார். கன்னட சேனா, கர்நாடக ரக்‌ஷண வேதிகே, டாக்டர் ராஜ்குமார் ரசிகர் மன்றம், ஜெய் கர்நாடகா என 2,000-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சேர்ந்து பந்த் நடத்தின. கர்நாடக விவசாயிகளும் கன்னடப் பள்ளி நிர்வாகங்களும் சேர்ந்து நடத்தியது இது. உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து நடத்திய ‘பந்த்'துக்கு யாரும் கோரிக்கை வைப்பதற்கு முன்னதாக, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கிறார் கர்நாடக முதலமைச்சர்.

‘இது முறை இல்லாத தீர்ப்பு' எனக் கண்டிக்கிறார் இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடா. காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த கருணாநிதியும், கபிஸ்தலம் கருப்பையா மூப்பனாரும் இல்லாவிட்டால் இந்தியப் பிரதமர் ஆகியிருக்க முடியாத தேவகவுடா, ‘தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் முப்போகம் விளைகின்றன. எங்களுக்கு இரண்டு போகம்தான். நாங்கள் ஏன் தண்ணீர் தர வேண்டும்?' என்கிறார். இவரை எல்லாம் பிரதமர் ஆக்கிய பாவம் கருணாநிதியைச் சும்மாவிடுமா? இவர் ஜெயலலிதாவுக்கும் நெருக்கமான நண்பர்!

ஆள்வது பா.ஜ.க-வா, சுப்ரீம் கோர்ட்டா?

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒரு மாநிலம் பந்த் நடத்த முடியுமானால், அதற்கு ஒரு மாநில அரசே உதவிகள் செய்யுமானால், என்ன பொருள்? இதை எல்லாம் கண்காணிக்கவேண்டிய, அதிகாரபூர்வ நிர்வாக இயந்திர அமைப்பு தோல்வி அடைந்துவிட்டது. ஆம், ‘இரண்டாவது பட்டேல்' என வர்ணிக்கப்படும் நரேந்திர மோடியின் அதிகாரம் செல்லுபடியாகாமல் போனதன் சாட்சியம்தான் கர்நாடகாவின் ஆணவமும் அங்கு நடக்கும் அராஜகமும். உலகப் பிரச்னைகள் அனைத்துக்கும் கருத்துச் சொல்லும் மோடி, இந்தியப் பிரச்னைகளுக்கு எந்தக் கருத்தும் சொல்வது இல்லை. இதில் காவிரி விவகாரமும் விதிவிலக்கு அல்ல.

13.5.2013-ம் நாளுக்குள் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும். ஆனால்,
2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் நாள் வரை அமைக்கப்படவில்லை; அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு கோரிக்கைவைத்த பிறகு, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுவை ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள் உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது, பல் இல்லாத குழு; சும்மா கண்துடைப்புக்காகக் கூடும் குழு. மற்றபடி காவிரி ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை அமல்படுத்தத் தேவையான எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோதும் சரி, அவர்களை வீழ்த்திவிட்டு மோடி ஆளும்போதும் சரி எடுக்கப்படவே இல்லை. ‘இது நம்முடைய வேலை அல்ல' என மன்மோகனும் நினைத்தார்; மோடியும் நினைக்கிறார். ஏக இந்தியாவில்தான் கர்நாடகமும் தமிழ்நாடும் இருக்கிறது என்பதை மறக்கிறார்கள்.

‘மூத்திரத்' தண்ணீர் அளவுக்கு வருவதுகூட உச்ச நீதிமன்றத்தின் தயவால்தான். 33 ஆண்டுகளுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டியது, காவிரி நீர்ப்பாசன விவசாய நல உரிமைப் பாதுகாப்புச் சங்கம். ஏழு ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, `1990-க்குள் பிரச்னையைத் தீர்க்க வேண்டும்' என உச்ச நீதிமன்ற நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகுதான் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் காவிரி கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆள்வது பா.ஜ.க-வா, சுப்ரீம் கோர்ட்டா?

காவிரி ஆணையத்தின் இறுதி உத்தரவு, 2007-ம் ஆண்டில் வந்தது. அதை மத்திய அரசிதழிலில் மத்திய அரசு வெளியிடவில்லை. அதற்கும் உச்ச நீதிமன்றம் போனோம். ‘அரசிதழில் வெளியிடக் கூடாது என்று கர்நாடக அரசே சொல்லாதபோது ஏன் வெளியிடவில்லை?' என்று உச்ச நீதிமன்றம் கேட்டது. இந்தத் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று நல்ல நாள் குறித்துக் கொடுத்தார்கள். அதன் பிறகுதான் வெளியிட்டார்கள். தற்காலிக மேற்பார்வைக் குழு அமைக்கலாம் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் உத்தரவாகப் போட்ட பிறகுதான் அந்தக் குழுவும் அமைக்கப்பட்டது. இப்போது `15 டி.எம்.சி தண்ணீர் விடலாம்' என்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகுதான் தண்ணீர் விடுகிறார்கள் என்றால், இந்தியாவை ஆள்வது பாரதிய ஜனதா கட்சி, நரேந்திர மோடி எனச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?

இரண்டு மாநிலப் பிரச்னையைத் தீர்க்க முடியாமல் 200 நாடுகளுக்குப் போய் என்ன பயன்? ‘மன்மோகன் சிங்கைப் பார்த்தால் யாருக்கும் பயம் வராது. அதனால்தான் நாட்டில் இவ்வளவு பிரச்னைகள்' எனப் பேசி ஆட்சிக்கு வந்த மோடி, பேசாமல் இருக்கக் காரணம், இரண்டு மாநிலங்களில் இருந்தும் அடையவேண்டிய அரசியல் ஆதாயம். கர்நாடக மக்களைப் பகைத்துக்கொள்ள முடியாது. அங்கேயாவது ஆட்சிக்கு வரும் பலம் உண்டு. தமிழ்நாட்டில் என்ன இரண்டு சதவிகிதம்கூட தாண்டவில்லை என்ற அலட்சியம். அன்று `காங்கிரஸைத் தோற்கடித்த தமிழ்நாடு' என்ற வெறுப்பு, இந்திரா காந்திக்கு இருந்தது. அதனால்தான் கருணாநிதி தாக்கல் செய்த வழக்கைக் கட்டாயப்படுத்தி வாபஸ் வாங்கவைத்தார். இப்போது ஜெயலலிதா தாக்கல் செய்யும் மனுக்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் மோடி. தேசியக் கட்சிகளுக்குக் கசப்பு மாத்திரையாகவே தமிழ்நாடு எப்போதும் ஆகிவிட்டது. இந்த வெறுப்பை காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் அதிகமாக்கிக்கொண்டே போவதால் யாருக்கு இழப்பு? அவர்களின் அதிகாரக் குவியலுக்குத்தான் சரிவு.

ஆள்வது பா.ஜ.க-வா, சுப்ரீம் கோர்ட்டா?

‘நகத்தால் கீறி அறுக்கவேண்டிய கொப்புளத்தைக் கண்டுகொள்ளாமல்விட்டால், பெரிய கத்தி வைத்துத்தான் உடைக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்ற நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா எழுதினார். காவிரிப் பிரச்னை வழக்கில்தான் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதை எழுதினார். இன்று முற்றிவிட்டது. எகிப்துக்கும் சூடானுக்குமான நைல் நதிப் பிரச்னையும், ஜெர்மனிக்கும் பிரான்ஸுக்குமான ரைன் நதிப் பிரச்னையும் எப்போதோ தீர்க்கப்பட்டு விட்டன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான சிந்து பிரச்னையில் எப்போதோ ஒப்பந்தம் ஆகிவிட்டது. ஆனால் காவிரி, தலைவிரிகோலமாகக் கிடப்பதற்குக் காரணம் ஒரு பக்கம் கன்னட வெறி. இன்னொரு பக்கம் தேசியக் கட்சிகளின் வாக்கு வெறி. தமிழர் வெறுப்பும் அரசியல் அரிப்பும் சேர்ந்து தமிழ் பூமியைப் புண்ணாக்கிவிட்டது.

தண்ணீர் முதலில் பாயவேண்டியது நிலத்தில் அல்ல; சிலர் மனத்தில். தாமதமானால் விரிசல்விடுவது நிலத்தில் அல்ல... நாட்டில்!