Published:Updated:

'எல்லாம் எங்களுக்குத் தெரியும்!'- ஓ.பி.எஸ் வழக்கில் மனுதாரரை வெளியேற்றிய நீதிபதிகள்!

'எல்லாம் எங்களுக்குத் தெரியும்!'-  ஓ.பி.எஸ் வழக்கில் மனுதாரரை வெளியேற்றிய நீதிபதிகள்!
'எல்லாம் எங்களுக்குத் தெரியும்!'- ஓ.பி.எஸ் வழக்கில் மனுதாரரை வெளியேற்றிய நீதிபதிகள்!

'எல்லாம் எங்களுக்குத் தெரியும்!'- ஓ.பி.எஸ் வழக்கில் மனுதாரரை வெளியேற்றிய நீதிபதிகள்!

'18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு அளிக்கும் வரை ஓ.பன்னீர்செல்வம் வழக்கில் தீர்ப்பு தரக் கூடாது’ என்ற  முறையீட்டை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்புக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். அப்போதைய ஓ.பி.எஸ் அணியில் 11 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். சசிகலா ஆதரவாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஆனார். ஆனால், அவரின் பக்கம் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் இல்லை என்றும், அதனால் ஆட்சி அமைக்க முடியாதென்றும் எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின. இதையடுத்து, சட்டமன்றத்தில் பழனிசாமி அரசு கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக பன்னீர்செல்வம் அணி வாக்களித்தது.  அ.தி.மு.க-வில் இருந்துகொண்டு முதல்வருக்கு எதிராகச் செயல்பட்ட பன்னீர்செல்வம் அணியின் 11 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இதையடுத்து, பன்னீர்செல்வம் - பழனிசாமி அணிகள் ஒன்று சேர்ந்தன. தினகரன் அணி உருவானது. தினகரன் பக்கம் 19 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். 19 எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று அப்போதைய பொறுப்பு ஆளுநரிடம் புகார் தெரிவித்தனர். அ.தி.மு.க-வில் இருந்துகொண்டு இப்படிச் செய்வது சட்டவிரோதம் என்று அ.தி.மு.க கொறடா, சபா நாயகரிடம் தெரிவித்தார். இதையடுத்து, தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்தார் தனபால். 

தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களும், எதிர்க்கட்சியினரும் நீதிமன்றத்தை நாடினர். மேலும், 'பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்டதால், அவர்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று வழக்கு தொடரப்பட்டது.  தினகரன் தரப்பு மற்றும் தி.மு.க தரப்பு வழக்குகளைத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் விசாரித்து முடித்து, 27-04-2018  (இன்று) பிற்பகல் 2.15 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. 

இந்நிலையில்,  'பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கக்கூடாது’ என பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன், உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடுசெய்தார். 

தேவராஜனின் முறையீட்டை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்,  'எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்குவது என எங்களுக்குத் தெரியும். ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கக் கோரும் வழக்கில் அறிவித்தபடி இன்று தீர்ப்பு வழங்கப்படும். வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்குவது உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. ஒரு வழக்கில் எப்போது தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளுக்குத் தெரியும். தீர்ப்பை இப்போது கொடுங்கள், நாளைக்குக் கொடுங்கள் என்று யாரும் நீதிபதிகளைக் கோர முடியாது’ என்று கடுகடுத்தனர். தேவராஜன் முறையீட்டால் நீதிபதிகள் கோபமடைந்தார்கள். தேவராஜன் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதால், நீதிமன்றத்திலிருந்து  சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களால் வெளியேற்றப்பட்டார்.
 

அடுத்த கட்டுரைக்கு