Published:Updated:

பல மணி நேரக் காத்திருப்பு... ஐந்தே நிமிடங்கள்! சிதம்பரத்தில் தொண்டர்களை ஏமாற்றிய தினகரன்!

தினகரனின் வருகையையொட்டி நகர் முழுவதும் மெகா சைஸ் பேனர்கள், மின் விளக்குகள் என நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

பல மணி நேரக் காத்திருப்பு... ஐந்தே நிமிடங்கள்! சிதம்பரத்தில் தொண்டர்களை ஏமாற்றிய தினகரன்!
பல மணி நேரக் காத்திருப்பு... ஐந்தே நிமிடங்கள்! சிதம்பரத்தில் தொண்டர்களை ஏமாற்றிய தினகரன்!

சிதம்பரத்தில் டிடிவி தினகரனின் 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' சார்பில் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டப வளாகத்தில் பல்வேறு கட்சியில் இருந்து தினகரன் கட்சியில் இணையும் விழா நேற்று இரவு  நடைபெற்றது. இதில் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். தினகரனின் வருகையையொட்டி நகர் முழுவதும் மெகா சைஸ் பேனர்கள், மின் விளக்குகள் என நகரத்தையே விழாக்கோலமாக மாற்றியிருந்தனர் அவரது ஆதரவாளர்கள். மாலை ஆறு மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் சரியாக மாலை ஐந்து மணி முதல் தொண்டர்கள் கூட்டம், கூட்டமாக வந்து மேடை முன்பு போடப்பட்டிருந்த நாற்காலிகளில் காத்திருந்தனர்.   

தினகரன் இதோ வந்துவிட்டார், அதோ வந்துவிட்டார் என அறிவித்தனரே தவிர நீண்ட நேரம் வரை அவர் வரவேயில்லை. அவர் மயிலாடுதுறையில் இருந்து வரும் வழியில் தொண்டர்களைச் சந்தித்து வருவதால் கால தாமதம் ஆவதாக பாட்டு கச்சேரியின் இடையே அறிவித்துக்கொண்டே இருந்தனர். ஒரு வழியாக 10.15 மணிக்கு வாண வேடிக்கைகள் முழங்க, தொண்டர்களின் பெரும் ஆராவாரங்களுக்கு இடையே திறந்த வேனில் தொண்டர்களை பார்த்து கும்பிட்டும், உற்சாகமாக கையசைத்த வண்ணம் வந்து மேடையேறினார் தினகரன். கட்சி மேற்கு மாவட்டச் செயலாளர் பாலமுருகன் வரவேற்புரைக்கு பின்பு தினகரன் பேசத் தொடங்கினார். முதலில் பல்வேறு கட்சிகளில் இருந்து 13 ஆயிரம் பேர் தங்கள் கட்சியில் இணைந்ததாகக் கூறி யார் தலைமையில் எந்தக் கட்சியில் இருந்து பிரிந்து வந்திருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டைப் படித்தனர். ஆனால் அவ்வளவு பேர் இருப்பார்களா என்பது சந்தேகமே.

பின்பு பேசிய தினகரன், "இந்த துரோக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் அம்மா அவர்களின் ஆட்சியை, நல்லாட்சியை, மக்களாட்சியை, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருகின்ற ஒரு ஆட்சியை, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கின்ற ஒரு ஆட்சியை, தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கின்ற ஒரு ஆட்சியை, மீனவர்களின் நலனைப் பாதுகாக்கின்ற ஒரு ஆட்சியை, புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சியை வழங்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் அம்மா ஆட்சியை அமைத்திட வேண்டும் என உறுதியுடன் கூறிக்கொள்கிறேன். கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் நமது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்" என ஐந்தே நிமிடத்தில் பேசி முடித்தார்.

அதன் பின்பு கட்சியில் இணைந்த தொண்டர்கள் சிலருக்கு கட்சித் துண்டினை அணிவித்து, நிர்வாகிகள் தந்த நினைவுப் பரிசுகளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டார். கட்சித் தொடங்கி தினகரன் முதன் முதன்முறையாக சிதம்பரம் வருகிறார் எனப் பல லட்சம் செலவு செய்து கூட்டத்திற்கு மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர் அக்கட்சி நிர்வாகிகள். அவரின் பேச்சைக் கேட்கவும், அவரை பார்க்கவும் மிக ஆர்வமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாலை 5 மணியில் இருந்து 10 மணி வரை ஐந்து மணி நேரம் காத்திருந்தனர். தினகரன் நிறைய பேசுவார் என எதிர்பார்த்து வந்த தொண்டர்களுக்கு அவர் அதிகம் பேசாமல் சென்றது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அங்கிருந்த பலரும் இதுதொடர்பாக புலம்பிக்கொண்டே சென்றதை நம்மால் பார்க்க முடிந்தது.