Published:Updated:

என்ன ‘நத்தம்’ இந்த நேரம்?

என்ன ‘நத்தம்’ இந்த நேரம்?
பிரீமியம் ஸ்டோரி
என்ன ‘நத்தம்’ இந்த நேரம்?

ப.திருமாவேலன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

என்ன ‘நத்தம்’ இந்த நேரம்?

ப.திருமாவேலன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
என்ன ‘நத்தம்’ இந்த நேரம்?
பிரீமியம் ஸ்டோரி
என்ன ‘நத்தம்’ இந்த நேரம்?
என்ன ‘நத்தம்’ இந்த நேரம்?

விசுவநாதன், நத்தத்தில் புளி வியாபாரம் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால், அவரைப் பற்றி கட்டுரை எழுதவேண்டிய அவசியம் இருந்திருக்காது. வியாபாரிகள் தங்கள் லாபத்தை மறைப்பதும், அதைக் கண்டுபிடித்து வருமான வரித் துறை ரெய்டு போவதும் கிரிமினல்களைத் தேடும் வழக்கமான வேட்டைதான்!

ஆனால், நத்தம் விசுவநாதன் வீட்டில் நடந்திருப்பதும், கடந்த ஒரு வாரமாக மணல் போடாமலேயே அவர் வறுத்தெடுக்கப்படுவதும் வழக்கமானவை அல்ல; அதிர்ச்சிகரமானவை. அவர் உறுப்பினராக இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இப்போது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. இந்த ரெய்டு நடக்கும்போது, அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் ஊடகத் தொடர்பாளர் பதவியும் நத்தம் விசுவநாதனிடம் இருந்தன. 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கின்றன என்றதும், பைத்தியக்காரனுக்குத் தேள் கொட்டியதுபோல் பதறிப்போய் அவரது இரண்டு பதவிகளும் அவசர அவசரமாகப் பறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்னமும் கட்சியைவிட்டு அவர் நீக்கப்படவில்லை. நத்தம் விசுவநாதனை நீக்க முடியுமா என்ன? இன்று அவரை வேண்டாத பொருளாக நினைக்கலாம். ஆனால், அவர் ஒருசில மாதங்கள் வரை வேண்டிய பொருட்கள் எல்லாம் கொடுத்தவர் ஆச்சே!

2001-2006 ஆட்சிக் காலத்து அ.தி.மு.க அமைச்சரவையில், 22 நாட்கள் அமைச்சராக இருந்தவர். 2011-2016 ஆண்டு அ.தி.மு.க அமைச்சரவையில் மொத்த நாட்களும் அமைச்சர். முந்தைய அமைச்சரவையில் 22 நாட்களுக்கு மேல் தொடர முடியாத சூட்சுமங்களை எல்லாம் தெரிந்துகொண்டு நடந்ததால், முழுக் காலமும் அமைச்சராக இருந்தார் அடுத்த முறை. அதுவும் அசைக்க முடியாத அமைச்சராக!

ஜெயலலிதா நம்பியது நான்கு பேர். ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர்தான் அவர்கள். முதலில் இந்த நால்வரில் கே.பி.முனுசாமி இருந்தார். அவர் போனதும் எடப்பாடி கே.பழனிசாமி வந்தார். எடப்பாடிக்கும் நெருக்கடி வர, சில மாதங்களில் பழனியப்பன் நுழைந்தார். ஆனால், மற்ற மூவரும் அப்படியே தொடர்ந்தனர். எனவே, ஜெயலலிதாவின் மூன்று முகங்களில் ஒரு முகம் நத்தம் விசுவநாதன். கட்சிக்குள் எந்தப் பிரச்னை எழுந்தாலும் விசாரணை நடத்தும் அதிகாரிகள் இந்த நால்வர்தான். வசூல் செய்வது - பதுக்குவது - பிரித்துக் கொடுப்பது ஆகியவை கிளைத் தொழில்கள். தேர்தல் நேரத்தில் சொல்லியா தரவேண்டும்? எல்லா காரியங்களும் தடங்கல் இல்லாமல் நடக்கும்.

என்ன ‘நத்தம்’ இந்த நேரம்?

கரூரில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் அன்புநாதன் என்கிற பணநாதன் மாட்டினார். ஆம்புலன்ஸை பணம் கொண்டுபோகப் பயன்படுத்தியது அ.தி.மு.க-வின் பரிணாமச் சிந்தனை. பணம் எண்ணும் இயந்திரமும் இருந்தது. எண்ணிக்கை இல்லாத பணம் இருந்தால் மெஷின் வேண்டும்தானே? இந்தப் பணத்துக்கு மொத்தமாகக் கணக்குச் சொல்ல, அன்புநாதனால் முடியவில்லை. அவரிடம் இருக்கிறதே தவிர, அது அன்புநாதன் பணம் அல்ல. அவரிடம் பதுக்கிவைக்கப்பட்டது. `அன்புநாதனுக்கு கொடுத்தது நத்தம் விசுவநாதன்' என்பது, வருமான வரித் துறை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறையின் சந்தேகம். நத்தம் விசுவநாதன் பார்த்த புளி வியாபாரத்தால் வந்த பணம் அல்ல அது. ‘நத்தம் விசுவநாதன் என்கிற நான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால் உண்மையான பற்றும் மாறாத நம்பிக்கையும் கொண்டிருப்பேன்...' என்று பதவி ஏற்றுக்கொண்டார் அல்லவா, அந்த அமைச்சர் பதவி மூலமாகத்தானே செழிப்படைந்திருக்க முடியும்?

தான்   நல்லபிள்ளை   எனக்  காட்டிக்கொள்வதற்காக, இன்று நத்தம் விசுவநாதனை அவர் வகித்த பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார் ஜெயலலிதா. நத்தம், தவறு இழைத்துவிட்டார் என்பது இப்போதுதான் ஜெயலலிதாவுக்குத் தெரியுமா? இதற்கு முன்னர் வரை சொக்கத்தங்கமாக இருந்தாரா நத்தம்? தமிழ்நாடு அமைச்சரவையில் பல்லாயிரம் கோடி ரூபாய் சர்ச்சைகளில் தனது பதவிக்காலத்தில் அதிகம் சந்தேகங்கள் கிளப்பப்பட்டவர் அவர்தான். அப்போது எல்லாம் ஜெயலலிதா என்ன செய்தார்?

1. உடன்குடி அனல்மின் திட்ட விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து மூக்கு உடைபட்டுக்கொண்டே இருந்தார் நத்தம் விசுவநாதன். நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காகப் போடப்பட்டதுதான் உடன்குடி மின் திட்டம். முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டத்துக்கான விதை ஊன்றப்பட்டது. ஆட்சி (2011) மாற்றம் வந்ததும் அந்தத் திட்டம் வழக்கம்போல் கிடப்பில் போடப்பட்டது. `தமிழ்நாடு மின்சார வாரியமே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும்' என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் பிறகு டெண்டர் விட்டார்கள். இந்த டெண்டரைக் கைப்பற்ற, சீன அரசுக்குச் சொந்தமான ‘தெற்கு சீன மின்சக்தி வடிவமைப்பு நிறுவனம்’ முயற்சித்தது. பலரும் போட்டிபோட்டார்கள். இவர்களது விதிமுறைகளை, சீன நிறுவனம்தான் நெருக்கி வந்திருந்தது. அவர்களுக்கே டெண்டர் கிடைத்திருக்கவேண்டிய சூழலில், டெண்டரை ரத்துசெய்தார்கள். 2012-ம் ஆண்டில் டெண்டர் விட்டு, அந்த டெண்டரை மூன்று ஆண்டுகள் கழித்து 2015-ம் ஆண்டு ரத்துசெய்த விநோதமும் நடந்தது. விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு, ஐந்து மாதங்கள் கழித்து ரத்துசெய்த கொடுமையும் நடந்தது. இதுபோன்ற டெண்டர் நடவடிக்கைகள் மின்சார வாரியத்தில்தான் நடக்கும். ஆனால், தலைமைச் செயலகத்தில் வைத்து டெண்டர் நடவடிக்கைகளைச் செய்தார்கள். ‘10 பைசா பிரயோஜனம் இல்லாத இந்த டெண்டரை ரத்துசெய்யச் சொன்னதுதான் மேலிடத்தின் உத்தரவா?’ என அப்போதே எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்டார்கள்.

இந்தக் கேள்விகளை எல்லாம் எழுப்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது அந்த சீன நிறுவனம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணா, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வாசகத்தைச் சொல்லி, நத்தம் விசுவநாதனின் நடவடிக்கையைக் கண்டித்தார். ‘அரசாங்கம் என்பது, நேர்மையாகவும் சமமாகவும் நடந்துகொள்ள வேண்டும். நேர்மைக்கும் பாரபட்சமற்றத் தன்மைக்கும் எதிராக நடந்துகொள்வது, அரசியலமைப்புச் சட்டம் சுட்டிக்காட்டும் கருத்துக்களுக்கு எதிரானது' எனக் கண்டித்தார். `புதிய டெண்டர் மீது, எந்த மேல் நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது' என நீதிபதி அறிவித்தார். நத்தம் மீது மட்டும் அல்ல, இந்த ஆட்சி மீது விழுந்த கரும்புள்ளி இது!

2. இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஆரஞ்சு நிற நியான் விளக்குகளை மாற்றி, வெள்ளை நிற எல்.இ.டி பல்புகளைப் பொருத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. மற்ற மாநிலங்களில் இது துரிதமாக அமல் ஆக, தமிழ்நாட்டில் மட்டும் சுணக்கமாக இருந்தது. ‘நாங்கள் குறைந்த விலைக்குத் தரும் பல்புகளை வாங்குங்கள்’ என மத்திய அரசு நிறுவனமான இ.இ.எஸ்.எல் சொன்னது. ஆனால், அதற்கு தமிழ்நாடு அரசு இணங்கவில்லை. ‘தமிழகம் இதற்கு இணங்கி வரவில்லை’ என மத்திய அரசு அதிகாரிகளே சொன்னார்கள். மத்திய அரசின் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, இதோ நாங்களே அமல்படுத்தப்போகிறோம் எனக் கிளம்பினார்கள். 30 ஆயிரம் எல்.இ.டி விளக்குகள் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொருத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த டெண்டர் முறைகேடுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய சந்தேகங்களை அப்போதே தி.மு.க கிளப்பியது. ‘25 கோடி ரூபாய் கொடுத்து மத்திய அரசு நிறுவனத்தில் வாங்கவேண்டிய விளக்குகளை, 145 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது ஏன்?' எனக் கேட்டது தி.மு.க. நத்தம் விசுவநாதன் வகையறா மீது படிந்த இரண்டாவது சந்தேக ரேகை இது!
3.மின்சாரத் துறைக்கான நிலக்கரியை, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வாங்கினார்கள். அதில் பெரிய அளவு ஊழல் விளையாடியதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை ஆதாரங்களைத் திரட்டியுள்ளது. இந்த முறைகேட்டில் மின்சார வாரியத்தின் முன்னாள் தலைவரும், ஜெயலலிதாவால் தலைமைச் செயலாளர் ஆக்கப்பட்ட ஞானதேசிகனும் சிக்குகிறார்கள். அதனால்தான் சில வாரங்களுக்கு முன்னர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

4. காற்றாலை மின்சாரத்தை, குறைந்த விலை கொடுத்து வாங்கத் தயாராக இல்லாத தமிழ்நாடு அரசு, அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதில் அடைந்துவரும் லாபங்களை, கருணாநிதி, ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதாரங்களுடன் தொடர்ந்து அறிக்கைகள் மூலமாக வெளிப்படுத்திவருகிறார்கள்.

என்ன ‘நத்தம்’ இந்த நேரம்?

5. சென்னையில் உள்ள சில ரியல்எஸ்டேட் நிறுவனங்களில் நத்தம் விசுவநாதனின் மகன் அமர்நாத் செய்துள்ள முதலீடுகள்.

6. ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,000 ஏக்கர் நிலத்தில், அதானி குழுமம் சோலார் மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்க உள்ளது. இப்படி அவர்கள் தொழில் தொடங்க இருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அந்த மாவட்டத்தில் ஏராளமான நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி அதானி குழுமத்துக்கு அதிக விலைக்கு விற்பனை செய்த காரியங்களை, நத்தம் மகன் அமர்நாத் செய்துள்ளதாக செய்தி பரவியது.

7. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராகவும் இருந்ததால், சாராய ஆலைகளுடன் ஏற்பட்ட நெருக்கம்.

8. லண்டன், நியூயார்க் ஆகிய வெளிநாட்டு நகரங்களில் உள்ள இரண்டு ஹோட்டல்கள்.

9. வடமாநில வர்த்தகங்கள்.

10. தமிழ்நாட்டில் உள்ள நத்தம் விசுவநாதனின் பினாமிகள்.

- இப்படிப்பட்ட ஊழல் வளையங்களை அமைத்துக்கொண்டு, கடந்த ஐந்து ஆண்டு காலத்தை நத்தம் விசுவநாதன் நகர்த்தியதாக வருமான வரித் துறை, வருவாய் புலனாய்வு, அமலாக்கத் துறை ஆகியவற்றுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவைதான் இத்தனை நெருக்கடிகளுக்குக் காரணம். சொந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டபோது, அ.தி.மு.க தரப்பு அதிகாரபூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை. ‘மிடாஸ்’ சீனிவாசன் வீட்டில் ரெய்டு நடந்தபோது, தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். இப்போது நத்தத்துக்காகப் பேச யாரும் இல்லை. கமல்ஹாசன் ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக, அவரைக் கண்டித்து பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தையும் காணவில்லை. ஜெயலலிதாவும் மெளனமாக இருக்கிறார். நத்தம் மீதான சந்தேக ரேகைகள் எல்லாம், அவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது நடந்த விஷயங்களை மையமாக வைத்துத்தான் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா?

570 கோடி ரூபாய் கன்டெய்னர் விவகாரத்தில் ஜெயலலிதா மீதே சந்தேகம் எழுந்ததே. அதற்கே இதுவரை அதிகாரபூர்வமாகப் பதில் தராத ஜெயலலிதா, நத்தம் விசுவநாதனுக்காக மட்டும் பேசிவிடுவாரா? காவிரி விவகாரத்தில் கர்நாடகம் கோரதாண்டவம் ஆடியபோது, ஒரு கடிதம் அனுப்பியதைத் தவிர எதுவும் செய்யாமல் மெளனம் காத்தவர் ஜெயலலிதா.

உண்மையில், அவருக்கு என்னதான் ஆச்சு?