Published:Updated:

இ.கம்யூ. கட்சியின் து.பொ.செ. ஆகாத டி.ராஜா! - கேரள மாநாட்டில் நடந்தது என்ன?

இ.கம்யூ. கட்சியின் து.பொ.செ. ஆகாத டி.ராஜா! - கேரள மாநாட்டில் நடந்தது என்ன?
இ.கம்யூ. கட்சியின் து.பொ.செ. ஆகாத டி.ராஜா! - கேரள மாநாட்டில் நடந்தது என்ன?

இ.கம்யூ. கட்சியின் து.பொ.செ. ஆகாத டி.ராஜா! - கேரள மாநாட்டில் நடந்தது என்ன?

கேரள மாநிலம், கொல்லத்தில் நடந்துமுடிந்துள்ள இந்திய கம்யூ. கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், 76 வயது சுதாகர் ரெட்டி. இது, அவருக்கு மூன்றாவது பதவிக்காலம்! 

பொதுச்செயலாளர் பதவியில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவிவகித்துவந்துள்ள நிலையில், 2012-ல் இப்பதவிக்கு வந்த சுதாகர், மீண்டும் பொதுச்செயலாளர் ஆகியுள்ளார். முன்னதாக, இவருக்கு அடுத்த நிலையில் துணைப் பொதுச்செயலாளராக இருந்துவந்த தொழிற்சங்கத் தலைவரும் நாடாளுமன்றவாதியுமான குருதாஸ்தாஸ் குப்தா, கட்சித் திட்டத்துக்கான நிரந்தர ஆணையத்தின் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார். இத்துடன், இந்த மாநாடானது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை காலியாக விட்டுள்ளது. 

மாநாட்டுக்கு முன்னர், தேசியச் செயலாளர்களில் ஒருவரான தமிழ்நாட்டின் டி.ராஜாவுக்கு து.பொ.செ. பதவி கிடைக்கும் என்று பேசப்பட்டது. அப்படி இல்லாவிட்டால், கட்சியின் மையச் செயலக உறுப்பினர்களாக உள்ள ஃபைசீ அல்லது அமர்ஜீத் கௌர் இருவரில் ஒருவரையும் ராஜாவையும் சேர்த்து, இரண்டு து.பொ.செ.கள் தேர்வுசெய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. காலியாக விடப்பட்டிருக்கும் து.பொ.செ. பதவி குறித்து கட்சியின் தேசிய கவுன்சில் முடிவு செய்யும் என இப்போதைக்கு இந்த விவகாரத்துக்கு ஒரு அரைப்புள்ளி வைத்துள்ளார், சுதாகர் ரெட்டி. 

இது ஒரு பக்கம் இருக்க, ஐதராபாத்தில் ஒரு வாரத்துக்கு முன்னர் நடந்துமுடிந்த மார்க்ஸிய கம்யூ.- சிபிஎம் கட்சியின் மாநாட்டின் ஒரு முழக்கத்தை, இ.கம்யூ. மாநாடும் வழிமொழிந்திருப்பது முக்கியமானதாகும். மார்க்ஸியக் கட்சிக்கு உள்ளேயே காங்கிரஸுடனான உறவு தொடர்பாக இரு வேறு கருத்துகள் நிலவிவந்ததைப்போல எல்லாம், இ.கம்யூ. கட்சிக்குள் ஒரு பிரச்னை இல்லை. ஒட்டுமொத்தக் கட்சியுமே காங்கிரஸையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற சக்திகளுடன் சேர்ந்து, பா.ஜ.க.வை எதிர்ப்பது எனத் தொடக்கம் முதலே ஏகமனதாகவே இருந்துவருகிறது, இ.கம்யூ. கட்சி. 

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் செயல்பாடு இருந்தாலும், கேரளம், திரிபுரா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் அக்கட்சிக்கு எதிராகச் செயல்படுவதும் தொடரும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது, இ.கம்யூ. மாநாட்டுக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுதாகர் ரெட்டி, இதை உறுதிப்படுத்தினார். 

இன்னோர் அம்சத்திலும் சிபிஎம் கட்சியைப் போன்ற ஒரு முடிவை இ.கம்யூ. கட்சி செயல்படுத்தியிருக்கிறது. இளைஞர்களை கணிசமான அளவில் கட்சியின் பொறுப்புகளுக்குக் கொண்டுவருவது என்ற சிபிஎம் கட்சியின் 2016 கொல்கத்தா சிறப்பு மாநாட்டு முடிவு, அக்கட்சியில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுவிட்டது. அதே பாணியை இ.கம்யூ. கட்சியும் பின்பற்றத் தீர்மானித்துள்ளது. 

பாஜகவின் கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடிக்குச் சவாலாக உருவாகியுள்ள ஓர் இளம் நட்சத்திரமான டெல்லி மாணவத் தலைவர் கன்னையாகுமார், நாடு முழுவதும் இளைஞர்களிடம் செல்வாக்கைப் பெற்றுள்ளார். அவருக்கு 126 பேரைக் கொண்ட தேசிய கவுன்சிலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவுக்கு இணையான இ.கம்யூ. கட்சியின் மையச் செயலகத்துக்குத் தமிழ்நாட்டின் டி.ராஜா உட்பட 11 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். முன்னதாக ஒன்பது பேர் மட்டுமே இருந்த இக்குழுவை விரிவாக்க இந்த மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டது. 

கேரள மாநிலச்செயலாளர் கணம் ராஜேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பினாய் விஸ்வம் இருவரும் மையச் செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். முன்னர் அதிலிருந்த கேரள மாநில முன்னாள் செயலாளர் பான்யன் ரவீந்திரன், 11 பேரைக் கொண்ட கட்சியின் கட்டுப்பாட்டு ஆணையத்துக்குத் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார்.  

பதவி உயர்வுகள் ஒரு பக்கம் இப்படிப் போக, தேசிய கவுன்சிலிலிருந்து கேரளத்தைச் சேர்ந்த நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் புதிதாக ஐந்து பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டவர்களில் சி. திவாகரன், சத்யன் மொகேரி இருவரும், கட்சியின் சிறுபான்மையின அடையாளமாக இருக்கும் கே.இ.இஸ்மாயிலின் தீவிர ஆதரவாளர்கள். இவர்களின் கோஷ்டிப் பூசல் அரசியலால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டதும் மறுக்கமுடியாதது. மாநிலச் செயலர் கணம் ராஜேந்திரனுக்குப் போட்டியாகக் கருதப்படும் இஸ்மாயில், தேசிய கவுன்சிலில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். சத்யன் மொகேரியின் நீக்கத்துக்கு மலபார் பகுதியைச் சேர்ந்த மாநாட்டுப் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

தேசிய கவுன்சிலிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான திவாகரன், இதைப் பற்றிக் கூறுகையில்,''தேசிய கவுன்சில் பதவியில் தொடரமுடியாததால் நான் மனம் உடைந்துபோய்விடவில்லை. கட்சியில் எனக்கு ஞானகுருக்கள் யாரும் இல்லை. அடுத்தவர்களின் ஆதரவுடன் தேசிய கவுன்சிலில் இடம்பெற நான் விரும்பவில்லை” என்றவர், ஒரு கட்டத்துக்கும் மேலே போய், ''நானொன்றும் இந்திய ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிடவில்லை” எனப் பகிரங்கமாகக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியது. 

தேசிய நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 31 உறுப்பினர்களில், தமிழ்நாட்டின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுப்பராயன், சி. மகேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தேசிய கவுன்சிலில் 10 பேர் உள்ளனர். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம், மையக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.  

அடுத்த கட்டுரைக்கு