Published:Updated:

சாரதா நிதி நிறுவன மோசடி - நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாரதா நிதி நிறுவன மோசடி - நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்!
சாரதா நிதி நிறுவன மோசடி - நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்க மாநிலம் சாரதா நிதி நிறுவன மோசடி 2013-ம் ஆண்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிறுவனத்தின் சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆஜரானார். அவருக்கு வழக்கறிஞர் கட்டணமாக ரூ.1 கோடி கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியில் ஆட்சி மாறிய பிறகு, சாரதா நிறுவனத்தின் மோசடியை விசாரிக்கும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி நளினி சிதம்பரத்துக்கு 2016-ம் ஆண்டு செம்டம்பர் மாதம் சம்மன் அனுப்பினர். 

இந்தச் சம்மனை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சம்மன் மீதான மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தது. ஏப்ரல் 30-ம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இதற்கு முன் பிறப்பித்த சம்மனுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. புதிய சம்மன் அனுப்பலாம் என்று உத்தரவிட்டது. அதன்படி,  மே 7-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பி உள்ளது. இந்த சம்மன் படி, கொல்கத்தா அமலாக்கத்துறை அலுவலகத்தில் நளினி சிதம்பரம் ஆஜராக வேண்டும்.