Published:Updated:

அறை எண் 2008-ல் ஜெயலலிதா!

அறை எண் 2008-ல் ஜெயலலிதா!
பிரீமியம் ஸ்டோரி
அறை எண் 2008-ல் ஜெயலலிதா!

ப.திருமாவேலன், படங்கள்: ஆ.முத்துக்குமார், மீ.நிவேதன்

அறை எண் 2008-ல் ஜெயலலிதா!

ப.திருமாவேலன், படங்கள்: ஆ.முத்துக்குமார், மீ.நிவேதன்

Published:Updated:
அறை எண் 2008-ல் ஜெயலலிதா!
பிரீமியம் ஸ்டோரி
அறை எண் 2008-ல் ஜெயலலிதா!
அறை எண் 2008-ல் ஜெயலலிதா!

மிழ்நாட்டு அரசியலோடு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட சம்பந்தம் அப்போலோவுக்கு உண்டு. முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., அப்போலோவில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது நடந்த தேர்தலில் (1984), அவருக்குப் பதிலாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்றவர்தான் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு அடுத்து இவர்தான் என்ற முத்திரையே அவருக்கு விழுந்தது. டெல்லியில் இருந்து வந்த பத்திரிகையாளர் ‘சண்டே’ அனிதா பிரதாப், ‘`நீங்கள் சென்ற இடம் எல்லாம் ஏன் இவ்வளவு கூட்டம் திரண்டது?” என்று ஜெயலலிதாவிடம் கேட்டார்.
‘`என்னை ஜெயலலிதாவாக மக்கள் பார்க்கவில்லை. பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களே நேரில் வந்து பேசுவதாகக் கருதினர்.

மருத்துவமனையில் இருக்கும் அவர் பற்றிய உண்மையான தகவல்களை என் மூலம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத் துடிப்பு மக்களிடம் இருந்தது” என்று மிக யதார்த்தமாகப் பதில் சொன்னார். அந்தக் காலத்தில் யதார்த்தமாகவும் ஈஸியாகவும்தான் இருந்தார்.

எம்.ஜி.ஆரின் உடல்நிலையை அறிந்து கொள்ள, ஜெயலலிதாவின் முகம் தேடி வந்தார்கள் அ.தி.மு.க ரத்தத்தின் ரத்தங்கள் அன்று. இன்று ஜெயலலிதாவின் உடல்நிலை அறிய, அப்போலோ வாசலில் தவம் கிடக்கிறான் தொண்டன். அரசியலில் புதிதாக எதுவும் நடப்பது இல்லை. பழசுதான் புதிது புதிதாக நடக்கிறது. நெல்லை மாவட்டம் புத்தனேரி சுப்பிரமணியம் எழுதிய ‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாட்டிய நாடகத்தை நடத்தி, அண்ணாவின் காஞ்சி இதழுக்கு நிதி திரட்டிக் கொடுப்பதற்காக அரசியல் ஆட்டம் தொடங்கிய ஜெயலலிதா - `காவிரி தர மாட்டோம்' என, கர்நாடகம் கோர தாண்டவம் ஆடும் நேரத்தில் அப்போலோவில் சிகிச்சையில் இருக்கிறார்.

எப்போதுமே அதிரடி பாலிட்டிக்ஸ் செய்யும் ஜெயலலிதா, சமீபகாலமாக முடங்கிப்போனார். அதற்கு அரசியல் காரணங்கள் எத்தனை இருந்தாலும், உடல்நிலைதான் உண்மையானது. 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இரண்டு மாத காலம் கொடநாட்டில் ஓய்வெடுத்த ஜெயலலிதா, ஒன்பது கிலோ எடை குறைந்தார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவரது உடல் எடை குறையவே இல்லை;  கூடிக்கொண்டேபோனது. பெங்களூரு சிறைவாசம், அவரது உடலையும் மனதையும் பாதித்தது.

‘ஜெயலலிதா, வருமானத்துக்கு மேல் சொத்து  சேர்க்கவில்லை’ என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கொடுத்த தீர்ப்பும், ‘ஜெயலலிதாவின் ஆட்சியே மேலும் ஐந்து ஆண்டு காலம் தொடர வேண்டும்’ எனத் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த தீர்ப்பும் ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அவரது வாழ்க்கையில் இதைவிட மகிழ்ச்சியான இரண்டு செய்திகள் இருக்க முடியாது. ஆனால், அந்த மகிழ்ச்சியை இரண்டு முறையுமே ஆடம்பரம் இல்லாமல்தான் அவர் வெளிப்படுத்தினார். அதற்குக் காரணம் அவரது உடல்நிலை.

அறை எண் 2008-ல் ஜெயலலிதா!

ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது. இதற்கான அனைத்து சிகிச்சைகளையும் அவர் துல்லியமாக எடுத்துக்கொண்டார். சர்க்கரைச் சிகிச்சை என்பது, அதை முற்றிலுமாக வெல்ல முடியாது; ஆனால், அதிகம் ஆகிவிடாமல் தவிர்க்க முடியும். அப்படித் தவிர்க்க, முதலில் உணவுக் கட்டுப்பாடு வேண்டும். அரிசியைக் குறைத்து, சப்பாத்தி எடுத்துக்கொண்ட ஜெயலலிதா, குளோப்ஜாமூன், ஐஸ்க்ரீம், சாக்லேட், கேரட் அல்வா போன்ற விஷயங்களை விடவில்லை. விரும்பியபோது சாப்பிட்டார். ஜெயலலிதாவை யாரால் தடுக்க முடியும்?

உடலில் சர்க்கரை கூடக்கூட, அது உடலின் உறுப்புகளைப் பாதிக்கும். அதில் முக்கியமானது சிறுநீரகம். அந்த உறுப்பின் செயல்பாடுகள் லேசாகப் பாதிக்கப்பட ஆரம்பித்தன. இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, அதிகம் நிற்பதில், நடப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் நடைப்பயிற்சியும் நின்றுபோய் உடல் எடையும் கூடும். உடல் எடை அதிகம் கூடியதால், மிகக் குறைந்த தூரம்கூட நடக்க முடியாத நிலைமை ஏற்படும். கடற்கரைச் சாலையில் காரைவிட்டு இறங்கி எம்.ஜி.ஆர் நினைவகம் வரை போய்விட்டு வந்த அவரால், தற்போது பத்து பதினைந்து அடி தூரம்கூட கைப்பிடி இல்லாமல் நடக்க முடியவில்லை. தலைமைச் செயலகம் வந்தால் ஒரு மணி நேரம், சட்டசபைக்குள் சென்றால் அரை மணி நேரம் என தனது நேரத்தைச் சுருக்கிக்கொண்டார். மரியாதை நிமித்தமான சந்திப்புகள் எல்லாம் இரண்டு மூன்று நிமிடங்களில் முடிந்தன. மொத்தத்தில் ஒரு நாளில் இரண்டு மூன்று மணி நேரம் மட்டுமே அதிகாரிகள், அமைச்சர்கள் பார்வையில் இருந்தார்.

அறை எண் 2008-ல் ஜெயலலிதா!

போயஸ் கார்டன் வீடுதான் தலைமைச் செயலகம்போல செயல்பட்டது. போயஸ் கார்டன் வீட்டின் ஓர் அறையே மருத்துவமனை போலவே வடிவமைக்கப் பட்டது. ஆம்புலன்ஸ் எப்போதும் தயாராகவே இருந்தது. இராமச்சந்திரா மருத்துவமனைக்கு இரண்டு மூன்று முறை ஜெயலலிதா சென்றுவந்தார். வெளிநாட்டு மருத்துவர்களின் ஆலோசனையும் தரப்பட்டது. அமெரிக்கா அல்லது சிங்கப்பூர் வந்து சிகிச்சை பெற மருத்துவர்கள் ஆலோசனை சொல்லி வந்தார்கள். இதை ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா மறுத்தார்.

வெளிநாடு சென்றால், தன்னுடைய உடல்நிலை குறித்த தகவல்கள் பரவும். அது பரவக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார். மேலும், அவர் முதலமைச்சர் ஆன பிறகு இந்தியாவைத் தாண்டி எங்குமே சென்றது இல்லை. சென்னை - ஹைதராபாத் - டெல்லி என ஒருகாலத்தில் இருந்தார். இப்போது சென்னையை விட்டால் கொடநாடு. இந்த இரண்டையும் தவிர அவர் வேறு எங்கும் போவது இல்லை. எனவே, கொடநாடு பங்களாவில் இரண்டு மாதங்கள் தங்கி சிகிச்சையும் ஓய்வும் பெறுவது என ஜெயலலிதா திட்டமிட்டார். செப்டம்பர் முதல் வாரம் சட்டசபைக் கூட்டத்தொடர் முடிந்ததும் செல்வதாகத் திட்டம்.  அதற்குள் காவிரி விவகாரம் தலைதூக்கியது. எனவே, போயஸ் கார்டனிலேயே இருந்துவிட்டார். கார்டனில் அவரால் இருக்க முடியவில்லை. அப்போலோ அழைத்துவிட்டது. இவர் இங்கு இருந்தபடி சிங்கப்பூர் அல்லது அமெரிக்கா செல்லலாம் அல்லது கார்டனுக்கே மீண்டும் திரும்பிவிடலாம். ஆனால், பழைய ஜெயலலிதாவைப் பார்ப்பது சிரமம்.

ஜெயலலிதாவின் உடல் பலவீனம் அடைவது, சசிகலா சொந்தங்களின் கை இன்னும் பலம் அடைவதன் சமிக்ஞை ஆகும். தொடக்க காலத்தில் நடராஜன், அதன் பிறகு திவாகரன், சுதாகரன், தினகரன், மகாதேவன், வெங்கடேஷ் என சசிகலா குடும்பத்தில் ஆட்சி செலுத்துபவர்களின் தலை மாறியதே தவிர, நிலை மாறவில்லை. 2011-ம் ஆண்டில் மொத்தப் பேருக்கும் செக் வைத்து ஜெயலலிதா வெளியேற்றினார். அப்போது சசிகலா உள்பட மன்னார்குடி சொந்தங்கள் அனைவருமே வெளியேறினார்கள். சில மாதங்களில் சசிகலா மட்டும் கார்டனுக்குள் வரவழைக்கப்பட்டார்.

அறை எண் 2008-ல் ஜெயலலிதா!

ராவணன், ராமச்சந்திரன் ஆகியோர் கழற்றிவிடப்பட்டார்கள். ஆனால், அடுத்து டாக்டர் சிவகுமார், விவேக் ஆகியோர் தலையெடுத்து விட்டார்கள். இப்போது இவர்கள்தான் கார்டனில் எல்லாம். சசிகலா அப்படியே இருக்கிறார். அவர் அணியும் கையுறைகள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கின்றன. பிராண்ட் ஒன்றுதான். மன்னார்குடி பிராண்ட். ஆக்கவும் அழிக்கவும் வல்லவர்கள் இவர்கள். வெற்றியே பெற்றாலும் ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக வாழப் பழகியதற்கும், தோற்றாலும் வைத்திலிங் கத்துக்கு ராஜ்யசபா பதவி வந்துசேர்ந்ததற்கும் மன்னார்குடி பிராண்ட்தான் காரணம்.

ஜெயலலிதா செய்த ஒரே நல்ல காரியம், இளவரசி மகன் விவேக் திருமணத்துக்குப் போகாதது. அவருடைய ஆசீர்வாதத்தில் நடந்த திருமணத்துக்கே ‘தங்கத் தம்பி’ போஸ்டர்கள் முளைத்தன. அம்மாவே நேரில் ஆஜராகி இருந்தால் தங்கமாகவே தம்பி கொண்டாடப் பட்டிருப்பார். ஜெயலலிதா இன்னும் உஷாராக இருந்தார் என்பதால், விவேக் தன் மனைவியுடன் வந்து ஆசீர்வாதம் வாங்கிய புகைப்படத்தையே அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

ஆட்சியைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் ஒரே சேனலாக இருப்பவர் ஷீலா பாலகிருஷ்ணன். முன்னாள் தலைமைச் செயலாளர்; இன்னாள் ஆலோசகர். ஜெயலலிதா சொல்வதை அதிகாரி களிடமும், அதிகாரிகள் நினைப்பதை ஜெயலலிதாவிடமும் சொல்ல இருக்கும் ஒரே வாசல் இவர்தான். நல்லதும் கெட்டதும் இவர் நினைத்தால்தான் உள்ளே போகும்; வெளியே வரும். சிறப்பு ஆலோசகர் என்ற பொறுப்பு தரப்பட்டிருந்தாலும் இவரே ஜெயலலிதாவின் அந்தரங்கச் செயலாளர்; அறிவிக்கப்படாத தலைமைச் செயலாளர். முக்கிய அதிகாரிகளை அழைத்து இவர் பேசுவார். அப்போது எடுக்கப்பட்ட முடிவை ‘மினிட்’டாகத் தயாரிப்பார். ஜெயலலிதாவுக்கு அனுப்புவார். அவர் அதில் என்ன எழுதி அனுப்புகிறாரோ, அது செயல் படுத்தப்படும். சிலபல மாதங்களாக நடக்கும் காட்சி இதுதான். இதுவே இனியும் தொடரப் போகிறது.

அறை எண் 2008-ல் ஜெயலலிதா!

சசிகலாவும் ஷீலா பாலகிருஷ்ணனும் ஜெயலலிதாவின் நிழல்கள்தான். நிழல், நிஜம் ஆகாது. நிழல் ஆள மக்கள் வாக்களிக்கவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, எம்.ஜி.ஆர் என்கிற தனிநபர் தொடங்கியதுதான். லட்சக்கணக்கான அவரது ரசிகர்கள்தான் இப்படி ஒரு கட்சியைத் தொடங்க அவரைத் தூண்டினார்கள். ‘தூக்கியெறிந்தது சர்வாதிகாரம்; வாரி அணைத்தது மக்கள் கூட்டம்’ என அன்று தலையங்கம் தீட்டியது ‘தென்னகம்’ இதழ். எனவே, அந்த மக்கள் கூட்டத்துக் கான கட்சியாக அ.தி.மு.க-வை நடத்தினார் எம்.ஜி.ஆர். தனக்கு எல்லாமுமாக இருந்த அண்ணன் சக்ரபாணி குடும்பத்தில் இருந்தோ, தனது அன்புவசப்பட்ட தத்துப்பிள்ளைகளில் நால்வரில் ஒருவரையோ தனது வாரிசாக எம்.ஜி.ஆர் அறிவித்திருக்கலாம். அவரை யாரும் எதிர்த்திருக்க மாட்டார்கள்; கேள்வி கேட்டிருக்கவும் முடியாது. ஆனால், அவர் ஆர்.எம்.வீரப்பனையும் ஜெயலலிதாவையும்தான் கூர்தீட்டிக்கொண்டே இருந்தார். நண்பனா... தோழியா என்பதில் வலிமையானது பிழைக்கும் என நினைத்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வலிமைபெற்று அ.தி.மு.க-வை சுமார் 30 ஆண்டுகாலம் தக்க வைத்திருந்தார். இன்று ஜெயலலிதாவின் சாய்ஸில் தோழி மட்டும்தான் இருக்கிறார். போட்டியாளர் இல்லை. இது அ.தி.மு.க-வுக்கு ஆரோக்கியமானது அல்ல. எனவே, இப்போது அதிகமாகக் கவலைப்பட வேண்டியது அ.தி.மு.க-வின் உடல்நிலைதான்.

அமெரிக்கா இருக்கிறது, சிங்கப்பூர் இருக்கிறது, பணம் இருக்கிறது, உலகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் இருக்கிறார்கள்; இங்கே அப்போலோவும் ராமச்சந்திராவும் இருக்கின்றன; 43 ஸ்பெஷலிஸ்ட்டுகள் நித்தமும் நிற்கவைக்கப்படும் செல்வாக்கு இருக்கிறது. எனவே, ஜெயலலிதாவின் உடல்நிலை சீராவது  எளிது. ஆனால், அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சலைத் தெளியவைக்கும் உண்மையான, சரியான, நல்ல, மருந்தை ஜெயலலிதாதான் கண்டுபிடிக்க வேண்டும்.

எங்கே இன்னொரு ‘ஜெயலலிதா?’