Published:Updated:

'மூன்றாவது அணி' - அரசியல் சதுரங்க ஆட்டத்தில் வெல்லப் போவது யார் ?

'மூன்றாவது அணி' - அரசியல் சதுரங்க ஆட்டத்தில் வெல்லப் போவது யார் ?
'மூன்றாவது அணி' - அரசியல் சதுரங்க ஆட்டத்தில் வெல்லப் போவது யார் ?

'மூன்றாவது அணி' - அரசியல் சதுரங்க ஆட்டத்தில் வெல்லப் போவது யார் ?

வ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அரசியல் சதுரங்கத்தில் 'மூன்றாவது அணி உருவாகுமா?' என்பதே பெரும் கனவுதான். அப்படி உருவானாலும் அந்த அணியில் குழப்பங்களுக்கும் பஞ்சமிருக்காது! அந்த வகையில், வரும் 2019 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் கணக்கை அனைத்துக் கட்சிகளும் இப்போதே வகுக்கத் தொடங்கிவிட்டன.  

நாயுடுவின் நமத்துப்போன மூன்றாவது அணி வியூகம்  

'ஆந்திராவுக்குத் தனி மாநில அந்தஸ்து' என்ற முழக்கத்தை முன் வைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடு, மூன்றாவது அணியை உருவாக்கும் தீவிர முயற்சியில் இறங்கினார். அவருடைய தீவிர முயற்சியை முறியடிக்கும் வகையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திர சேகரராவ் உள்ளிட்ட தலைவர்களின் நடவடிக்கைகள் இருந்ததால், அவரால் மூன்றாவது அணியை அமைக்க முடியாமல் போனது. 

கைகொடுக்குமா ராவின் கணக்கு... 

இந்த நிலையில்தான் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார். முன்னதாகக் கடந்த மாதம் ஐதராபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய சந்திரசேகர ராவ், ''காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி கட்சிகளுக்கு மாற்றாக, மக்களின் வாழ்வில் தரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் புதிய அணியை உருவாக்க வேண்டும். அதற்காக ஒரே கருத்துடைய தலைவர்களைத் தொடர்புகொண்டு பேசி வருகிறேன்" என்றார். அவருடைய இந்தக் கருத்தை மம்தா பானர்ஜி வரவேற்றார். அதேபோன்று ஐதராபாத் எம்.பி-யும் அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்தி ஹாதுல் முஸ்லிம் கட்சித் தலைவருமான ஒவைசியும் வரவேற்றார்.

 இதனைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ் மம்தா பானர்ஜியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டும், பின்பு நேரில் சந்தித்தும் மூன்றாவது அணி அமைப்பது குறித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில், மூன்றாவது அணி அமைப்பது குறித்து சந்திரசேகர ராவ் மம்தாவுடன் விரிவாக விவாதித்தாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் தேவகவுடா போன்றோரையும் சந்தித்துப் பேசியுள்ளார். 

இந்த நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலினைக் கடந்த 29- ம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார். அதுமட்டுமன்றி ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பங்கேற்றுவிட்டு கனிமொழியையும் அவர் சந்தித்துச் சென்றுள்ளார். ஸ்டாலின் மற்றும் கனிமொழி  உடனான சந்திரசேகர ராவின் இந்தச் சந்திப்பு அரசியல் களத்தில் அனைவரையும் உற்று நோக்கவைத்துள்ளது.  

 என்ன செய்யப் போகிறது தி.மு.க? 

காங்கிரஸ் - பி.ஜே.பி அல்லாத கூட்டணி என்பது 2019 - ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமா? அப்படி அமைந்தால், தி.மு.க, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி முன்றாவது அணிக்குப் போகுமா.... என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ராவ் சந்திப்பு மற்றும் காங்கிரஸுடன் தொடர்ந்து கூட்டணியில் உள்ள தி.மு.க நிலைப்பாடு ஆகியவை குறித்து, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியைத் தொடர்புகொண்டு பேசினோம், ''மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பே இல்லை' என்று ஏற்கெனவே எங்களுடைய தளபதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், பி.ஜே.பி-க்கு எதிராக ஒட்டுமொத்தக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சி இருக்கும். எனவே மூன்றாவது அணி அமைப்பதற்கான நடவடிக்கையாக இந்தச் சந்திப்பு நடைபெறவில்லை'' என்றார் .  

  இந்த இடியாப்பச் சிக்கல்களை எல்லாம் மீறி முன்றாவது அணி அமைந்தால், யாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவார்கள்? கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன.... என்பது  போன்ற கேள்விகளும்

எழுகின்றன. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் பேசியபோது, ''மூன்றாவது அணி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முயன்று கொண்டிருக்கிறார். அவருடைய இந்த முயற்சி வெற்றி பெறாது. தற்போது வகுப்பு வாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியான முயற்சியில் ஜனநாயகச் சக்திகள், மதசார்பற்றக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒரு நடவடிக்கை தொடர்ந்தால், அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாக இருக்கும்'' என்றார். 

 மாயாவதியின் ஓவர் கான்ஃபிடன்ட் ! 

சந்திர சேகர ராவ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் மூன்றாவது அணி நடவடிக்கையோடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் 'பிரதமர் பதவியை எப்படியும் பிடிக்க வேண்டும்' என்ற நோக்கில் ஓவர் கான்ஃபிடன்டாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் மூன்றாவது அணி அமைப்பது குறித்து தொடர்ந்து அவர் பேசி வருவதாகவும் கூறுகின்றார்கள். 'வரும் மக்களவைத் தேர்தலில் மாயாவதிக்கு அகிலேஷ் ஆதரவும், உத்தர பிரதேசத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் அகிலேஷ் யாதவுக்கு மாயாவதியின் ஆதரவும் இருக்க வேண்டும்' என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் அவர்களுடைய பேச்சுவார்த்தை தொடர்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

 இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவை சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசியுள்ளார். இதில் யாருக்கு அகிலேஷின் ஆதரவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எத்தனை மூன்றாவது அணி, எத்தனை தலைவர்கள், யார் பிரதமர் வேட்பாளர் ... என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் உள்ள நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் சதுரங்க ஆட்டத்தில் வெல்வது யார்? விழப் போவது யார்... என்பது போன்ற எதிர்பார்ப்புகளும் இப்போதே தொடங்கிவிட்டன!  

அடுத்த கட்டுரைக்கு