Published:Updated:

மோடி - தேவகவுடா பரஸ்பர பாராட்டு; என்னதான் நடக்கிறது கர்நாடகத்தில்?

மோடி - தேவகவுடா பரஸ்பர பாராட்டு; என்னதான் நடக்கிறது கர்நாடகத்தில்?
மோடி - தேவகவுடா பரஸ்பர பாராட்டு; என்னதான் நடக்கிறது கர்நாடகத்தில்?

மோடி - தேவகவுடா பரஸ்பர பாராட்டு; என்னதான் நடக்கிறது கர்நாடகத்தில்?

ர்நாடக மாநிலச் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் பத்து நாள்களுக்கும்  குறைவான தினங்களே எஞ்சியுள்ள நிலையில், காங்கிரஸ், பி.ஜே.பி. மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பி.ஜே.பி. சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் வேட்பாளர் பி.எஸ். எடியூரப்பா உள்ளிட்டோரும், காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரும் மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைப் பொறுத்தவரை, முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி தலைமையில் அக்கட்சி தேர்தலைச் சந்திக்கிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளது.

கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கோ, பி.ஜே.பி-க்கோ ஆட்சியமைக்கக்கூடிய அளவு பெரும்பான்மை இடங்கள் கிடைக்காது என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைவதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் பரவலாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதுபோன்ற கணிப்புகளை மதச்சார்பற்ற ஜனதா தளம் மறுத்துள்ளது. தங்கள் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.

இதற்கிடையே உடுப்பியில் அண்மையில் பி.ஜே.பி. தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் (ஜே.டி.எஸ்) தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி. தேவகவுடாவைப் புகழ்ந்து பேசியது, கடும் விமர்சனங்களை எழுப்பியது. அதற்குப் பதிலளிக்கும் வகையில், தேவகவுடாவும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்திருப்பது தேர்தல் களத்தில் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

மோடியைப் பாராட்டிய தேவகவுடா...

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக, தான் தொடர்வதற்கு பிரதமர் மோடியே காரணம் என்று தேவகவுடா தெரிவித்துள்ளார். 
முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிப் பேசிய மறுதினமே மோடியை தேவகவுடா புகழ்ந்து பாராட்டியிருப்பது, கோடை வெயிலின் அனலை விடவும் அதிகளவு தகிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தூண்டுதலின் காரணமாகவே மக்களவை உறுப்பினர் பதவியில், தான் தொடர்வதாக தேவேகவுடா கூறினார். என்றாலும், தான் இவ்வாறு கருத்துதெரிவிப்பதால், கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை உருவாகும்நிலையில், ஜே.டி(எஸ்) - பி.ஜே.பி இடையே பரஸ்பர அடிப்படையில் கூட்டணி உருவாகும் என்றரீதியில் இந்தக் கருத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார் அவர். 

``2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன், பி.ஜே.பி. தனிப் பெரும்பான்மை பெற்றால், என்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறினேன். அதன்படி, தேர்தலுக்குப் பின் நான் என் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன். ஆனால், நான் ராஜினாமா செய்யாமல் இருப்பதற்கு என்னை இணங்கச் செய்தது மோடிதான். மூத்த தலைவர்களின் அனுபவமும், சேவையும் நாட்டுக்குத் தேவை என்று அப்போது என்னிடம் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி மிகவும் புத்திசாலியான அரசியல்வாதி. கர்நாடக அரசியலில் நிகழ்ந்து வருவதை அவர் நன்றாக உணர்ந்துள்ளார். என்னைப்பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்ன சொன்னார் என்பதையும் மோடி தெரிந்து வைத்துள்ளார். அந்தச் சூழ்நிலையில் என் மீதுள்ள மரியாதைக்கு அப்பாற்பட்டு அவர் என்னைப் புகழ்ந்தார். அதற்காக, நான் பிரதமர் மோடியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கவில்லை என்று கருதக் கூடாது" என்றார் தேவகவுடா.

என்றாலும், தொங்கு சட்டசபை உருவானால், ஜே.டி.(எஸ்)-ன் நிலைப்பாடு பற்றி தேவகவுடா வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. கர்நாடகத் தேர்தலில் தங்கள் கட்சி அறுதிப் பெரும்பான்மை வெற்றிபெறும் என்றும், தேர்தலுக்கு முன் வெளியாகும் கருத்துக்கணிப்புகளில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பி.ஜே.பி. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, அதுதொடர்பான விசாரணையை எதிர்கொண்டுள்ளார் என்றும், முதல்வர் சித்தராமையா அரசு லோக் ஆயுக்தாவை முடக்கி விட்டு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஊழல் தடுப்பு அமைப்பை உருவாக்கியதாகவும் அவர் குறைகூறியுள்ளார். 

சித்தராமையா குற்றச்சாட்டு

இதற்கிடையே முதல்வர் சித்தராமையா பேசுகையில், ``ஜே.டி. (எஸ்) தலைவர்களின் பிரசாரத்தின்போது பி.ஜே.பி. தலைவர்களை விமர்சிப்பதில்லை. அதேபோல் பி.ஜே.பி.-யினரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் பற்றி பேசுவதில்லை. எனவே, அவர்களுக்கு இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. " என்று குற்றம்சாட்டியுள்ளார்.

என்ன சொல்கிறார் குமாரசாமி?

தேவகவுடாவை பிரதமர் மோடி பாராட்டிப் பேசியிருப்பது பற்றி கருத்துத் தெரிவித்த ஜே.டி.(எஸ்) முதல்வர் வேட்பாளரும், தேவகவுடாவின் மகனுமான ஹெச்.டி. குமாரசாமி, ``என் தந்தையை பிரதமர் மோடி பாராட்டிப் பேசியிருப்பதால் எங்கள் கட்சிக்கும், பி.ஜே.பி-க்கும் உடன்பாடு என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுபோன்ற எந்தவித உடன்பாடும் கிடையாது. தேர்தலுக்குப் பின் தொங்கு சட்டசபை அமைந்தால், பி.ஜே.பி-யுடன் எங்கள் கட்சி கூட்டணி அமைக்காது. ஏற்கெனவே பிரதமராக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே என் தந்தையை மோடி பாராட்டியிருக்கலாம். முன்னாள் பிரதமர் என்ற அடிப்படையிலும், பிரதமராக இருந்த காலத்தில் என் தந்தை நாட்டிற்காக என்னவெல்லாம் செய்தார் என்பதை அறிந்ததாலும் மோடி அவ்வாறு பேசியிருக்கலாம். என் தந்தை பிரதமராகப் பதவி வகித்தகாலத்தில் ஒருபோதும் பிரிவினை அரசியலை அவர் ஆதரித்ததில்லை. நாட்டின் நலனையே அவர் முக்கியமாகக் கொண்டு செயல்பட்டார். கர்நாடகத்தில் காங்கிரஸ் அல்லது பி.ஜே.பி. இல்லாமல் நாங்கள் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைப்போம்" என்றார்.

தேவகவுடாவை மோடி பாராட்டுவதும், மோடியால்தான் மக்களவை உறுப்பினராக நீடிக்கிறேன் என்று தேவகவுடா கூறுவதும், ஜே.டி.(எஸ்) - பி.ஜே.பி. இடையே ரகசிய உடன்பாடு ஏதும் கிடையாது எனக் குமாரசாமி தெரிவிப்பதுமாக கர்நாடக தேர்தல் களம், அனல் தெறித்துக் கொண்டுதான் உள்ளது. பரபரப்பு நிறைந்த கர்நாடகத் தேர்தல் களத்தில் பளபளக்கப் போவது யார்? எந்தக் கட்சி ஆட்சியமைக்கும் என்பதை அம்மாநில மக்கள்தான் முடிவு செய்யப் போகிறார்கள்...

அடுத்த கட்டுரைக்கு